அட்லாண்டிஸ் மகா மர்மம் – அதிசயத் தகவல்கள்! – 1 (Post No.4893)

Date- 8 April 2018

 

British Summer Time- 7-19 am

 

Written  by S Nagarajan

 

Post No.4893

 

Pictures are taken from various sources; thanks.

 

 

 

23-3-2018 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு நான்காம்)  கட்டுரை

அட்லாண்டிஸ் மகா மர்மம்அதிசயத் தகவல்கள்! – 1

.நாகராஜன்

 

அட்லாண்டிஸ் என்னும் மர்மத் தீவு அட்லாண்டிக் பெருங்கடலின் மத்தியில் உள்ளது.

இந்த அட்லாண்டிஸ் என்னும் அற்புதத் தீவு திடீரென்று மறைந்து போனது. அது தான் மர்மம். மிக பிரம்மாண்டமான அதிசயக்கத்தக்க நாகரீகத்தைக் கொண்டிருந்த மக்கள் அட்லாண்டிஸ் மக்கள்! கனவு தேசம் என்றே அதைச் சொல்லலாம். அந்த நாகரிகத்தின் ஞானம் மட்டும் இருந்தால் போதும் உலகம் அமைதியின் சொர்க்கமாகத் திகழும்! ஆகவே தான் லட்சியவாதிகள், மாயாஜால நிபுணர்கள், புது யுகம் காண விழைவோர் ஆகியோர் இதைப் பற்றி ஆராய்கின்றனர்.

ஆயிரக் கணக்கான புத்தகங்கள் இது வரை அட்லாண்டிஸ் பற்றி வெளியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கில் பத்திரிகைக் கட்டுரைகளும் இணையதளக் கட்டுரைகளும் சுவாரசியமான தகவல்களை அள்ளி வீசுகின்றன.

இதை ஆராய்வதிலேயே தன் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்டோர் ஏராளம். தன் இன்னுயிரை விட்டவர்களும் கூட உண்டு!

அட்லாண்டிஸ் பற்றிய முதல் தகவலைத் தருபவர் கிரேக்க தேசத்து அறிஞரான பிளேட்டோ! தனது டயலாக்ஸ் – உரையாடல்கள் – என்ற நூலில் அட்லாண்டிஸ் பற்றி அவர் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவுக்கு முன் 330ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூல் இது!

அகழ்வாராய்ச்சி நிபுணரான பேராசிரியர் கென் ஃபெடர் (Ken Feder – Encyclopedia of Dubious Archaeology) தனது என்சைக்ளோபீடியா ஆஃப் டியூபியஸ் ஆர்கலாஜி என்ற நூலில், “அட்லாண்டிஸ் எல்லோரும் நினைப்பது போல ஒரு அருமையான இடம் இல்லை.மாறாக செல்வம் நிரம்பிய தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய, ராணுவத்தில் பலம் வாய்ந்த ஒரு நாடு. இதனால் லஞ்ச லாவண்யம் பெருகிய நாடாகவும் அது திகழ்ந்தது” என்கிறார்! ஏதன்ஸின் புகழ் பாட பிளேட்டோ அட்லாண்டிஸைப் பயன்படுத்திக் கொண்டார். அட்லாண்டிஸ் இன்று இருக்குமானால்

நம் அனைவரையும் கொன்றிருக்கும் அல்லது அடிமைகளாக ஆக்கி இருக்கும். மற்றவர் யாரும் எழுதாத அட்லாண்டிஸ் பிளேட்டோவின் கற்பனையில் விளைந்த ஒன்று என்கிறார் பேராசிரியர்.

அட்லாண்டிஸ் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பல கொள்கைகளை வகுத்துள்ளனர். அவற்றில் சில:-

அட்லாண்டிஸ் நாகரிகம் சுமார் 9000 வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஒரு பிரம்மாண்டமான கடற்படையை அது கொண்டிருந்தது!  ஒரே நாளில் அது கடலுக்கடியில் மூழ்கியது!

பல நூற்றாண்டுகளாக சரித்திர ஆசிரியர்களும், விஞ்ஞானிகளும், அகழ்வாராய்ச்சியாளர்களும் அட்லாண்டிஸ் உண்மையில் இருந்ததென்றால் எந்த இடத்தில் இருந்தது என்று விவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

I

இக்னேஷியஸ் டானெலி (Ignatius Donnelly)  என்பவர் 1882ஆம் ஆண்டு எழுதியுள்ள புத்தகத்தில்  (Atlantis, the Antedivluvian World) இன்னொரு அதி முன்னேறிய நாகரிகம் ஒன்று தான் அட்லாண்டிஸுக்கு அனைத்தையும் வழங்கி இருக்க வேண்டும் என்கிறார். பிளேட்டோ சொன்ன இடத்திலேயே இது மூழ்கி இருக்கலாம் என்று கூறும் அவர் பிளேட்டோ குறிப்பிடும் ஹெர்குலிஸ் தூண்கள் எனப்படும் இரு தூண்கள் ஜிப்ரால்டர் ஜலசந்தியின் நுழைவாயிலைக் குறிப்பதாக இருக்கலாம் என்கிறார். இன்னும் சிலர் அட்லாண்டிஸை பெர்முடா ட்ரை ஆங்கிள் விழுங்கி இருக்கலாம் என்கின்றனர். டானெலியின் வழியைப் பின்பற்றி சார்லஸ் பெர்லிட்ஸ் என்பவர் 1970களில் அட்லாண்டிஸ் பஹாமா தீவுகளுக்குச் சற்றுத் தள்ளி இருக்கிறது என்கிறார்.

பெர்முடா ட்ரை ஆங்கிள் மர்மமான இடம். பல நூறு கப்பல்கள் காணாமல் போன இடம் இதுவே. இந்தக் கொள்கையை ஆதரிப்போர் பிமினி என்ற கடற்கரையில் மனிதன் அமைத்தது போல உள்ள பல கட்டுமானங்களைச் சுட்டிக் காண்பிக்கின்றனர்.

இது ஒரு கொள்கை.

இன்னும் ஒரு கொள்கை இது:

 

சார்லஸ் ஹாப்குட் என்பவர் 1958ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இதற்கு பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முன்னுரை தந்துள்ளார். இந்தப் புத்தகத்தின் பெயர் ‘எர்த் ஷிப்டிங் தி க்ரஸ்ட்’ (Earth Shifing the Crust) இதில் பூமியின் மேலோடு 12000 ஆண்டுகளுக்கு முன்னால் இடம் பெயர்ந்தது என்றும் அது அண்டார்டிகாவை இடம் பெயரச் செய்து விட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கண்டமே முன்னேறிய நாகரிகத்தின் இடம் என்பது அவரது கருத்து. பூமியின் மேலோடு பெயர்ச்சியின் காரணமாக இந்த அருமையான நகரம் பனிக்கட்டிகளுக்கு அடியில் அமுங்கி விட்டது என்கிறார் அவர். இதைப் பல விஞ்ஞானிகளும் ஆதரிக்கின்றனர்.

இன்னும்  பல கொள்கைகள் உள்ளன. அவற்றை அடுத்துப் பார்ப்போம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அமெரிக்க விண்வெளி வீராங்கனையான பெக்கி விட்ஸன் குழந்தைகளை விண்வெளி ஆர்வம் ஊட்டி உத்வேகப்படுத்த அவர்களைச் சந்திக்கிறார்.

சமீபத்தில் ஒரு சனிக்கிழமை அன்று குழந்தைகள் வரவழைக்கப்பட்டனர்.

செவ்வாய் கிரகம் பற்றி முதன் முதலில் விஞ்ஞானிகள் அறிந்தது எப்படி என்ற கேள்வி முதலில் எழுப்பப்பட்டது.

உடனடியாக இரு குழந்தைகள் பளீரென்று ‘க்யூரியாஸிடி’ என்று பதிலளித்து அனைவரையும் திகைக்க வைத்தன.

செவ்வாய்க்கு கொண்டு போக வேண்டிய முக்கிய பொருள் என்ன என்று கேட்ட போது குழந்தைகள், “தண்ணீர், தண்ணீர் தான் மிக அளவில் வேண்டும்” என்று பதில் அளித்தனர்.

பெக்கி விட்ஸன் நீரை மறு சுழற்சி செய்து பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கும் போது குழந்தைகள் மௌனமாக உன்னிப்பாக அவர் சொல்வதைக் கேட்டன.

ரீ சைக்ளிங் என்ற வார்த்தை அவர்களது ஆழ் மனதில் நன்கு பதிந்து விட்டது.

விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் பற்றி அவர்கள் கேட்ட கேள்விக்கு வீராங்கனை, “இதற்கு விஞ்ஞான முன்னேற்றமே காரணம்” என்றார்.

கூட்ட இறுதியில் எத்தனை பேர் செவ்வாய் கிரகம் செல்ல ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்ட போது அனைவரும் ஒரே குரலில் நாங்கள் அனைவரும் செல்ல ஆசைப்படுகிறோம் என்று கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்தியாவிலும் இப்படிப்பட்ட உத்வேகக் கூட்டம் நடக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவது நியாயம் தானே!

***

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: