Bharatiyar- Tamil drama acted by Ramanan; Directed by Raman; pictures posted by Manion CGS
Compiled by S NAGARAJAN
Date: 13 April 2018
Time uploaded in London – 7-17 AM (British Summer Time)
Post No. 4909
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
பாரதி போற்றி ஆயிரம் – 76
பாடல்கள் 632 முதல் 641
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு எட்டாம் அத்தியாயமான பாப்பா பார்வையில் பாரதி தொடர்கிறது.
எட்டாம் அத்தியாயம்: பாப்பா பார்வையில் பாரதி
19 முதல் 28 வரை உள்ள பாடல்கள்
பாப்பா தனக்கொரு பாட்டு – நீ
பாடிக் கொடுத்ததைக் கேட்டு
பாப்பாக்கள் அத்தனை பேரும் – இங்கு
பயனடை தோம்வந்து பாரும்
சிட்டுக் குருவியைப் போல – இங்கு
சிறுவர்கள் திரிந்திட வேண்டும்
வட்டமிடும் பறவை கண்டு – மனம்
மகிழ வேண்டுமெனச் சொன்னாய்
காக்கைக் கும்கருணை காட்டு – நீ
கோழியு டன்விளை யாடு
ஊக்க முளகுதிரை மாடு – ஆடு
உறுதியாய் எம்தோழர் என்றாய்
பிள்ளையாய் இருந்திடும்போதே – நாங்கள்
பிறவுயிரை நேசிக்கக் கற்று
வள்ளலார் ஜீவகா ருண்யம் – எங்கள்
வாழ்வோடு ஒன்றவழி சொன்னாய்
நேரம் பிரித்துவொரு நாளில் – எங்கள்
நிகழ்வுகள் வகுத்துநீ தந்தாய்
சாரமுள பட்டியல் அன்றோ? – அதில்
தேர்ந்திங்கு நடந்திடல் என்றோ?
தீமையை எதிர்கொள்ள வேண்டும் – எனும்
தீரத்தை எமக்கு நீ தந்தாய்
ஊமைபோல் இருந்திடு வோமோ? – வரும்
உலுத்தரை விட்டுவைப் போமோ?
துன்பத்தில் சோர்ந்திடு வோமோ – வெறும்
சோம்பலில் மூழ்கிவிடு வோமோ?
அன்பினைத் துறந்திடு வோமோ? – தெய்வ
அருளினை மறந்திடு வோமோ?
தமிழ்தனை வணங்கிட வேண்டும் – நாம்
சார்ந்த பாரதம் காக்க வேண்டும்
அமிழ்தில் இனியதிந்த தேசம் – எனும்உன்
அரியவா சகம்போற்ற வேண்டும்
அன்று நீ சொன்னவை யாவும் – முன்பு
அந்தபாப் பாக்கள் கேட் டிருந்தால்
இன்றுபெரி யவரான பின்னால் – இங்கு
இத்தகைய தீமையிருந் திராது
இந்நாளில் நாங்களுன் பாட்டைக் – கேட்டு
எம்வாழ்வில் அதுபோல் நடப்போம்
எந்நாளும் எம்தலை முறைகள் – அதனை
ஏற்றுனைப் போற்றநீ வாழ்க!
பாப்பா பார்வையில் பாரதி முற்றும்
xxx
பாரதி போற்றி ஆயிரம் – 77
பாடல்கள் 642 முதல் 653
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஒன்பதாம் அத்தியாயமான சித்தர் பார்வையில் பாரதி இடம்பெறுகிறது.
ஒன்பதாம் அத்தியாயம்: சித்தர் பார்வையில் பாரதி
1 முதல் 12 வரை உள்ள பாடல்கள்
பதினெட்டு சித்தர்கள் இந்த நாட்டில்
பாங்குடனே வாழ்ந்ததாய்ச் சொல்வா ருண்டு
அதிலென்ன கணக்கென்று அதற்கும் மேலே
அங்குமிங்கு மாய் சித்தர் பலபே ருண்டு
அதிசயங்கள் எனவுலகம் வியந்து போற்றும்
அட்டமா சித்திகளும் பெற்றா ருண்டு
அதிலொருவன் எனயானும் இங்கு வந்தேன்
அருட்கவி பாரதியே உன்னைக் கண்டேன்
அத்வைத நிலைகண்ட நீயும் அந்நாள்
யானுமொரு சித்தனென சொல்லிக் கொண்டு
எத்தனைபேர் அன்றதனை ஏற்றுக் கொண்டார்
ஏற்கனவே பித்தனென்றார் இதையேற் பாரா?
உத்தமனே உனக்குள்ளே இருந்த ஆன்ம
ஒளிச்சுடரை உணர்ந்தவர்கள் சிலரே யன்றோ?
இத்தரையில் குருவெனவே உனக்குற் றோரை
யாவருக்கும் அருள்கிடைக்க உரைத்தா யன்றோ?
தத்துவத்தை யாவருக்கும் உரைப்ப தற்கு
தகுதிமிக்க ஞானியர்கள் பலபேர் வந்தார்
எத்தனைநாள் விரிவாக உரைத்த போதும்
ஏதுமே புரியவில்லை என்றார் பல்லோர்
அத்தனென உனக்கமைந்த குள்ளச் சாமி
அரியநற் தத்துவத்தை உரைக்கக் கேட்டு
சத்தான அதன்பொருளை யாவ ருக்கும்
சாற்றினாய் உயர்ராமா நுசனைப் போல
குட்டிச்சு வர்தன்னை கிணற்றில் காட்டி
குழப்புதற்குப் பரிதியையும் காட்டி நின்றால்
வெட்டித்த னமென்றதை நினைத்தி ருப்பார்
வித்தகனே நீயன்றோ பொருளு ணர்ந்தாய்
சுட்டெரிக்கும் பரிதியது கிணற் றினுள்ளே
சுடராகத் தெரிதல்போல் நம்முள்ளத்தில்
திட்பமுடன் சிவமென்னும் சுடரைக் கண்டு
சிந்தனையற் றுச்சுவர்போல் இருப்போம் என்றாய்
அன்பினையே சிவமென்றார் திருமூ லர்தாம்
அதற்கிலக் கணமாம் கோவிந்த சாமி
என்றுமுன் கல்விநலம் சிறப்ப தற்கு
எந்தையென நீமகிழ வந்த தாலே
துன்பமெலாம் தீர்ந்திட்டாய் ஞானந் தன்னை
தெளிவுறவே உணர்ந்திட்டாய் பாத்தி ரந்தான்
இன்னருளை ஏற்குமெனில் கொடுப்ப தற்கு
ஏற்றகுரு தேடிவரல் இயல்பே யன்றோ?
குவளைக்கண்ணன் கொணர்ந்த யாழ்ப்பா ணத்தார்
குருவெனவே அமைந்ததிலே நிறைவு கண்டாய்
இவருந்தன் இல்லத்தில் நுழைந்த தாலே
ஈடற்ற வீடின்றே உற்றே னென்றாய்
தவறாமல் யாவரையும் உரைத்து நீயும்
தகுதியுள்ள சீடனென உணர்த்து கின்றாய்
அவரைப்போல் தத்துவத்தில் நிறைவு பெற்று
அரியதொரு சித்தனென உயர்ந்து நின்றாய்
மனத்தினில் புகுந்துள்ள அசுர சக்தி
மாண்பிழக்கச் செய்துவிடும் மனிதர் தம்மை
சினத்தினை முதலில் நாம் துறந்தால் போதும்
சீரிய நற்குணங்கள் நமக்குள் மேவும்
தினந்தினம் சினத்தினில் மூழ்கி மூழ்கி
திசைமாறிச் சென்றோர்க்கு உய்வே யில்லை
அனலாக நமைஎரிக்கும் அதனை விட்டால்
ஆன்மநெறி வாய்க்குமென்றார் உனைப்போ லுண்டோ?
சித்தத்தில் பற்றனைத்தும் நீங்கி னோனே
சித்தனாவான் ஆனால்நீ புதுமைச் சித்தன்
எத்தினமும் மாறாத காதல் மாண்பை
இங்கும்நீ உரைத்ததினால் வியந்தார் பல்லோர்
முத்திரையாய் ஆடவர்க்கும் கற்புண் டென்றே
மொழிந்ததினால் திகைத்திட்டார் ஆண்க ளெல்லாம்
வித்தகனே உனைப்போல வாழ்வோ டொன்றி
வியன்ஞானம் உரைத்தவர்தாம் எவரும் உண்டோ?
ஓரட்சரம் ஈரட்சரம் ஐந்து எட்டு
ஒலிக்கின்ற நவாட்சரம் என்றே நம்முள்
யாரட்சரம் பெரிதெனவே போட்டி யிட்டு
எத்தெய்வத் தையுமிகழல் முறையோ நன்றோ
பாரதனில் பலபெயரில் வழங்கிட் டாலும்
பாங்குடைய தெய்வமெலாம் ஒன்றே யன்றே
தாரகமாய் சாமிநீ என்று ரைக்கும்
தத்வமஸி என்பதனை ஏற்றா யன்றோ?
கனகலிங்கம் தனக்குநீயும் போட்ட பூணூல்
காலமெலாம் சமுதாயம் சொல்லி வந்த
அனலாக சுட்டெரித்த சாதித் தீயை
அணைப்பதற்கு வார்த்திட்ட மழைநீரன்றோ?
இனமென்றும் மதமென்றும் சாதி யென்றும்
ஏனிங்கு மானிடர்கள் பிரிந்து நின்றார்
அனவருளும் இறைவனுளான் அறீவீ ரென்ற
அத்வைத நிலையதனில் கண்டா யன்றோ?
பட்டினால் உத்தரியம் தந்தே உன்னைப்
பான்மையுடன் அணிகயென உரைத்த போது
மட்டற்ற பட்டுப்பூச் சிகளைக் கொன்றே
வடித்திட்ட உடையன்றோ பட்டின் ஆடை
இட்டமுடன் இதையணிந்தால் அவைதாம் வந்தே
எமதுயிரை உடுத்தனையோ என்றே கேட்கும்
தொட்டாலே பாவமென்று உரைத்தா யன்றோ?
தெய்வநிலை அதிலுன்னுள் உணர்ந்தா ரன்றோ?
சித்தரென்போர் தமக்கெங்கும் சமாதி யுண்டு
திருக்கோயில் அவர்க்கென்றே அமைவ துண்டு
இத்தரையில் நான்சாகா திருப்பே னென்றே
இயம்பியவன் பூதவுடல் தனக்கு இங்கே
எத்துமடை யாளமில்லை என்ற போதும்
ஏற்றதத் துவமோடு தமிழ றிந்தோர்
சித்தமெலாம் நீயிருக்கும் கோயி லாக
சித்தனென நிலைபெற்றாய் என்றும் வாழ்க!
சித்தர் பார்வையில் பாரதி முற்றும்
தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.
கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
***