Written by London Swaminathan
Date: 3 May 2018
Time uploaded in London – 6-39 am (British Summer Time)
Post No. 4972
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமாயணத்தைத் தமிழில் தந்தான் கம்பன்; இதன் மூலம் இலக்கிய உலகை வென்றான். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யூபம், வேதம் முதலிய ஸம்ஸ்க்ருதச் சொற்களை சங்கப் புலவர்கள் அப்படியே பயன் படுத்தியது போலவே கம்பனும் ஓம், உபநிஷதம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பாடலில் பயன்படுத்துகிறான்; அக்காலத்தில் வேத வேள்விகளும் ஓம் என்னும் வேதத்தின் முதல் சொல்லும் வேதத்தின் முடிவான (வேதம்+ அந்தம்= வேதாந்தம்) உபநிஷதமும் தெய்வத் தமிழ்நாட்டில் எவ்வளவு பிரஸித்தம் என்பதற்கு இவைகள் சான்று பகருகின்றன.
கம்பன் பாடிய இரணிய வதைப் படலத்தில் (யுத்த காண்டம்) இந்து மத தத்துவங்கள் அனைத்தும் பிரஹலாதன் வாயின் வழியாகத் தரப்படுகின்றன. அதில் சில பாடல்கள்:
அளவையான் அளப்பரிது அறிவின் அப்புறத்து
உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ
கிளவி ஆர் பொருள்களான் கிளக்குறாதவன்
களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார்.
பொருள்
இறைவனின் நிலை கண்கூடாகத் தெரியக்கூடிய பிரமாணங்களைக் கொண்டு அளவிட முடியாதது; அறிவுக்கும் எட்டாத தொலைவில் இருக்கிறது. ஐயனே! உபநிடதங்கள் சொல்கின்ற சொற்களால் கூறமுடியாதவனான அவனுடைய மாயத் தன்மையை அறியவல்லவர் யாவர்? அந்த மெய்மையைக் கண்டவர் எவருமிலர்.
(இதிலுள்ள ‘சொற்களால் கூற முடியாத’ என்பது கூட உபநிஷத வாக்கியம் ஆகும்)
இன்னொரு படலில் வேதம் சொல்லுவோர் ஓம் என்ற சொல்லுடன் துவங்குவர் என்பதை ‘சிந்தையின்……. முந்தை ஓரெழுத்து என வந்து’ என்று ஓம் என்னும் ஓரெழுத்தின் புகழைப் பாடுகிறார்.
அடுத்தொரு பாடலில் ஓம் என்ற சொல்லை அப்படியே பயன்படுத்துகிறார். இதோ அந்தப் பாடல்:
ஓம் எனும் எழுத்து அதனின் உள் உயிர்
ஆம் அவன் அறிவினுக்கு ஆறிவும் ஆயினான்
தாமு மூவுலகமும் தழுவிச் சார்தலால்
தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான்
ஓர் எழுத்தாக உள்ள ஓம் என்னும் பிரணவத்தினுள்ளே பொருந்திய அ, உ , ம் என்ற மூன்றினுள் அகார உயிராகத்திகழும் அந்த இறைவன் (அகர முதல எழுத்தெல்லாம்-குறள்) அந்த உயிர்களின் அறிவுக்கு எல்லாம் உள் நின்று உணர்த்தும் ஞானமாகவும் விளங்குகின்றான்; பரந்த மூவுலகங்களையும் பரவிப் பொருந்துவதால் புகையும் நெருப்பும் போல பல இடங்களிலும் பரவும் தன்மை கொண்ட வனாயும் உள்ளான்.
விறகில் தீயினன், பாலில் படு நெய் போல் உள்ளவன் என்று தேவாரமும் சொல்லும். ஆங்கிலத்தில் ஆண்டவனை எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன் (Omnipresent, Omniscient, Omnipotent) என்பர். அதை எல்லாம் கம்பன் பாடல் வடிவில் இங்கே கூறுகிறான்.
இங்கே நாம் பார்க்க வேண்டியது இரண்டே விஷயங்கள்தாம்:
1.கம்பனின் வேதாந்த அறிவு; மாண்டூக்ய உபநிஷதம் ‘ஓம்’ எனும் பிரணவாகாரத்தின் புகழ்பாடும்; அதைக் கம்பன் படித்து உணர்ந்து இருக்க வேண்டும்
2.கம்பன் காலத்தில், ‘ஓம்’, ‘உபநிஷதம்’ போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
இரணிய வதைப் படலம் முழுவதையும் படித்து இன்புறுக.
வாழ்க தமிழ்; வளர்க கம்பன் புகழ்