மௌன நீரூற்றால் புரட்சி-2 (Post No.4974)

Written by S NAGARAJAN

 

Date: 3 MAY 2018

 

Time uploaded in London –  17-33   (British Summer Time)

 

Post No. 4974

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 4-5-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு ஒன்பதாம் கட்டுரை

மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி!–2

.நாகராஜன்

 

 

 

ஜனாதிபதி கென்னடியையே பதில் சொல்லச் செய்யும் அளவுக்கு ராக்கேல் கார்ஸனின் சைலண்ட் ஸ்பிரிங் உருவாகக் காரணம் என்ன?

ராக்கேல் சிறுமியாக இருந்த போது அவரது படுக்கை அறை ஜன்னல் வழியே ஒரு மைல் தூரத்தில் உள்ள குதிரைகளை வெட்டித் தள்ளும் ஒரு கசாப்புத் தொழிற்சாலையைப் பார்த்த வண்ணம் இருப்பார்.அதிலிருந்த புகைபோக்கியிலிருந்து எழும் புகை வானத்தை மறைக்கும்.

 

 

மாலை நேரத்தில் வெட்டப்பட்ட உபயோகமற்ற மாமிசக் குவியலிலிருந்து எழும் நாற்றமும், குதிரை மாமிசத்தினால செய்யப்பட்ட உரத்தின் நாற்றமும் கிராமம் வரை வந்து அனைவரையும் வாந்தி எடுக்கச் செய்யும். ஆகவே மாலை நேரங்களில் கிராம மக்கள் வீ டுகளின் கதவுகளைத் திறப்பதே இல்லை.

 

 

இந்த அவலத்தினால் ராக்கேலின் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டதில் வியப்பில்லை.

தனது சைலண்ட் ஸ்பிரிங் நூலை அவர் அமெரிக்க இல்லத்தரசிகளை நோக்கி இலக்கு வைத்தார்.லட்சக்கணக்கில் அவற்றை வாங்கிய அமெரிக்கப் பெண்மணிகள் அவர் பக்கம் தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்தினர்.

அவர்கள் ஜனாதிபதி கென்னடியிடம் ஒரு கேள்வியை முன் வைத்தனர்.

 

 

1962, ஆகஸ்ட் மாதம் அவர்கள் ஜனாதிபதியிடம் அரசு DDT  பற்றி ஏதேனும் செய்யப் போகிறதா இல்லையா என்று கேட்டனர்.

அவர் உடனடியாக இப்படி பதிலளித்தார்:

“ஆம்.செய்யப் போகிறோம். குறிப்பாக மிஸ் கார்ஸனின் புத்தகத்தால் தான். ஆனால் இதை அவர்கள் (கமிட்டி) பரிசீலித்து வருகிறார்கள்”.

கென்னடியின் அறிவியல் குழு 1963 மே மாதம் 15ஆம் தேதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

 

“சைலண்ட் ஸ்பிரிங் வெளிவரும் வரை பொதுவாக உரங்களில் விஷத் தனமை இருப்பது பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் சுற்றுப்புறச்சூழல் கேட்டை ரசாயன உரங்களைக் கட்டுப்படுத்துவன் மூலமே தடுத்து நிறுத்த முடியும்.”

வணிக நோக்கில் இது வணிகர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் அவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

1972இல் அமெரிக்க அரசு விவசாயத்தில் DDT உபயோகத்தைத் தடை செய்தது.

 

 

அமெரிக்காவின் தேசீயச் சின்னமான கழுகு ஒரு லட்சத்திலிருந்து 500 ஜோடிகளாகக்க் குறைந்தது ஏன்?

 

 

இரசாயன உரத்தினால் தான். அபாயகரமான உரம் அதன் முட்டைகளைக் குஞ்சு பொறிக்க விடாமல் பொறிப்பதற்கு முன் முட்டைகளை உடைத்து விட்டதால் இந்த அபாயம் ஏற்பட்டது!

 

என்றாலும் கூட மலேரியாவைத் தடுப்பதற்கு DDT அனுமதிக்கப்பட்டது. இதையும் ராக்கேல் எதிர்த்தார்.

 

இதற்கிடையில் அவரது உடல் நிலை இதய நோய்களுள் ஒன்றான ஆஞ்ஜினா (ANGINA) வியாதியால் பாதிக்கப்பட்டது.

அவருக்கு மார்பகப் புற்று நோயும் வந்து சேர்ந்தது.

1964இல் கான்ஸர் உடல் முழுவதிலும் பரவி விடவே அவர் தலைமயிர் எல்லாம் உதிர்ந்து தலை வழுக்கையானது. எலும்புகள் பலஹீனமாக ஆகி விடவே அவர் வீல் சேரிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1964 மார்ச் மாதம் கான்ஸர் கல்லீரலைத் தாக்கி அவரை வெகுவாகப் பாதித்தது.

 

 

அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் ஒரு ரேடியோ ஆக்டிவ் பதியத்தை அவர் உடலில் பதியம் செய்தனர்.

 

 

இது போன்ற உடல் நிலையில் தான் அவர் அமெரிக்க கமிட்டி முன்னர் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

DDT போன்ற இரசாயன உரங்கள் முதலில் பூச்சிகளைக் கொல்லும். பின்னர் உணவுச் சங்கிலித் தொடரினுள் புகுந்து உணவையே நச்சாக்கும். அதனால் பறவைகள், மீன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்தொழியும். ஏனெனில் அவை இப்படிப்பட்ட நச்சு உணவுகளை உட்கொள்ள வேண்டிய சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு உருவாவதால் தான்! ஆகவே இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்றார் அவர்.

 

 

‘மக்கள் விஞ்ஞானி’ என்ற பெயருடன் புதுமையாக மலர்ந்த அவர் மக்களுக்காக அரிய உண்மைகளைப் புள்ளி விவரங்களுடன் தொகுத்து வழங்கினார்.

 

 

நடக்க முடியாமல் அவர் தன் இருக்கைக்கு மெதுவாகத் திரும்பியது அனைவரையும் உருக்கியது.

தலை வழுக்கை தெரியாமல் இருக்க ஒரு ‘விக்’கை அவர் அணிந்திருந்தார்.

 

 

தனது வியாதி பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆகவே அவரது கான்ஸர் பற்றி இறுதி வரை மக்களுக்குத் தெரியவில்லை.

 

1964ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அவர் காலமானார்.

அவரது அஸ்தியின் ஒரு பகுதி மேரிலாந்தில் அவரது தாயாரின் கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்னொரு பகுதி ஷீப்ஸ்காட் பே என்ற இடத்தில் தெளிக்கப்பட்டது.

 

மனித குல சரித்திரத்தில் முக்கியமான காலகட்டங்களிலெல்லாம் ஒரு புத்தகம் வெளியாகி அது வரலாறையே மாற்றுவது வழக்கம் என்று அலாஸ்காவைச் சேர்ந்த செனேட்டர் எர்னஸ்ட் க்ரூயநிங் அவரைப் போற்றிப் பாராட்டினார்.

 

ராக்கேலின் வழியில் சென்ற அறிஞர் அல்கோர் ‘யாருக்கும் பிடிக்காத உண்மை’ என்ற தலைப்பில் பல உண்மைகளை முன் வைத்தார். அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

 

இன்று சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் அம்சங்கள் முன்பை விட ஏராளமாகப் பெருகி விட்டன. ஆனால் ராக்கேல் கார்ஸன் போல அயராது பாடுபட்டு அந்த அம்சங்களை ஒழிக்க ஆள் தான் இல்லை.

 

‘தி நன் ஆஃப் நேச்சர்’ – இயற்கையின் கன்யாஸ்தீரி என்று அன்புடன் அழைக்கப்பட்ட கார்ஸனின் புகழ் என்றும் இலங்கும்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஜெர்மனியைச் சேர்ந்த பெண்மணியான மரியா மெரியன் (Maria Merian -1647-1717) பூச்சிகளை ஆராய்ந்த ஒரு அபூர்வமான விஞ்ஞானி.

அவரது கண்டுபிடிப்புகளுக்கு முன்னர் அனைவரும் பட்டாம்பூச்சி பூமியிலிருந்து தானாகவே சேற்றிலிருந்து பிறக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.

 

ஒவ்வொரு பூச்சியையும் அது எப்படி பிறக்கிறது எப்படி வாழ்கிறது என்று அவர் ஆராய்ந்தார். அவர் தனது கண்டுபிடிப்புகளை எல்லாம் அந்தக் காலத்திய விஞ்ஞான மொழியான லத்தீனில் எழுதாமல் ஜெர்மானிய மொழியில் எழுதியதால் அவரைப் பற்றிப் பலரும் அறிய வாய்ப்பில்லாமல் போனது.

 

என்றாலும் கூட சுயமாக பெரிய அளவில் நிதி திரட்டி பூச்சிகளை ஆராயக் களம் புகுந்தார். அவைகளை வகைப் படுத்தினார். பட்டியலிட்டார். அத்துடன் அவர் ஒரு ஓவியராகவும் திகழ்ந்ததால் செடிகள், பூச்சிகள், மிருகங்கள் ஆகியவற்றின் படங்களையும் வரைந்தார்.

 

அவை இன்றளவும் உள்ளன. அவரது பட்டியல் இன்றளவும் விஞ்ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகத் திகழ்கிறது.

பூச்சிப் பெண்மணி என்று புகழ் பெற்ற அவரை உலகம் இப்போது பாராட்டுகிறது!

***

 

Leave a comment

2 Comments

  1. ராக்கேல் கார்ஸன் நவீன கால ரிஷிகளுள் முக்கியமானவராவார். உலக இயக்கத்தைப் பற்றிய அரிய, அடிப்படை உண்மை ஒன்றை அறிந்து வெளியிட்டார், இங்கு உயிர்வகைகள் உணவாலும் ஐம்பூதங்களாலும் பிரிக்கமுடியாதபடி இணைந்திருக்கின்றன, ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. எனவே ஒரு உயிரினத்திற்குச் செய்யும் தீமை நாம் எண்ணிகூடப் பார்க்கமுடியாத விதத்தில் பிற உயிர்களுக்கும் ஊறுசெய்கிறது என்ற அரிய உண்மையைக் கண்டு வெளியிட்டார். இது நாம் ஹிந்துக்கள் ஒருவாறு அறிந்த உண்மைதான், [ ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம் ப்ருதக் பூதான் அனேகஶக; த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஶ்வ புகவ்யய:, ஆக்கைக்கே இரை தேடி அலமந்து காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே etc], ஆனால் இதை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து மேலை உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் விளக்கியவர் கார்ஸனே ஆகும்.
    அவர் எழுத்துக்கள் பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றன, ஆனால் “அறிஞர், விஞ்ஞானிக”ளிடையே இக்கருத்தை நிலை நாட்டுவது எளிதாக இருக்கவில்லை. முதலில் அவர் பெண் என்பதால் ஆண்வர்க்க விஞ்ஞானிகள் அசட்டை செய்தனர். அவர் Ph.D பட்டம் பெறாததால் அவர் உண்மை விஞ்ஞானி அல்ல என்றனர். அவர் படித்து, ஆராய்ச்சி செய்தது நீரியல் உயிரினங்களைப் பற்றி ( marine biology) ஆனால் சொல்லும் கருத்தோ biochemistry பற்றியது, இதை ஏற்கமுடியாது என்றனர்.ஆனாலும் காலப்போக்கில் அவர் கருத்துக்களைத் தள்ளிவிடமுடியவில்லை.

    இந்த நிலையில் அவர் கருத்துக்கள் பத்திரிகைகளில் வெளிவந்து பொது மக்கள் ஆதரவு பெறவே, கெமிக்கல் கம்பெனிகள் கச்சை கட்டி அவருக்கு எதிராகக் கிளம்பின. எல்லாவித வியாபார தந்திரங்கள், உத்திகள், தில்லுமுல்லுகளும் கையாண்டனர். அமெரிக்க அரசினரும் அதிகார வர்கமும் பெருமளவில் அவர்கள் பக்கமே இருந்தன; நீதித்துறையும் முதலில் அவர்களுக்கே சாதகமாக இருந்தது. ” இந்தப் பெண்மணி பார்க்க இவ்வளவு நன்றாக இருந்தும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? இவர் ஒரு கம்யூனிஸ்டுதான்” என்று கூட நீசத்தனமாக ஜனாதிபதி ஐஸன்ஹோவருக்கு எழுதினர்! பின்னால் கென்னடி அவர் புத்தகத்தைப் படித்து ஓரளவு நம்பிக்கை கொண்டாலும் இந்த கெமிகல் கம்பெனி-அதிகாரவர்கம்-அரசியல் பிடி ஆகியவற்றின் கூடுச்சதிக்கு எதிராக அவரால் எதுவும் செய்ய இயலவில்லை! Examining how to prevent the misuse of chemicals/pesticides என்பதுதான் அவரது நிலையாக இருந்தது; அவற்றைத் தடைசெய்ய அவர் முயலவில்லை. DDT மீதான தடை 1972 ஜனவரியில் வந்தது. அப்போதும் அவர்கள் அதன் ஏற்றுமதியைத் தடைசெய்யவில்லை! இதுதான் அமெரிக்க கம்பெனிகளின் பண பலத்தின் ஆழமும் வீச்சும்!
    இவ்வளவையும் மீறி இன்று கார்ஸனின் கருத்துக்கள் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. ஆனாலும் அவற்றை நடைமுறையில் கொண்டுவரவில்லை! அவர்காலத்தில் ஒரு DDT, இன்றோ ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் உணவுத்துறையில் ஊடுருவி விட்டன. உணவுத்துறையே சில கெமிகல் கம்பனிகளின் ஏகபோகமாகிவிட்டது.
    விஞ்ஞானம் என்பது உண்மையை அறியும் சாதனமாக இல்லை. இன்று ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் கம்பெனிகளின் அடிமைகளாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் ஆராய்ச்சி செய்ய எடுத்துக்கொள்ளும் விஷயமும், அதற்கான நிதியும் கம்பெனிகளே அங்கீகரிக்க வேண்டும்! அன்றைய புகையிலைக்கு எதிரான போராட்டம் முதல் இன்றைய உலக உஷ்ணமயமாதல் வரை எந்த விஷயத்திலும் விஞ்ஞானிகள் இருகட்சிகளாகப் பிரிந்தே நிற்கிறார்கள். இதில் அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் ஒரு மாஃபியா கும்பல் போன்றுதான் செயல்படுகிறார்கள்.

    இந்தியாவில் சுற்றுச் சூழல்-உயினங்கள் பாதுகாப்பு, food security போன்ற விஷயங்களில் நமது அரசினரோ, அதிகார வர்கமோ உண்மையான ஈடுபாடு கொள்ளவில்லை. பொது மக்களும், படித்த வர்கத்தினரும் கூட அதிக அக்கறை காட்டுவதில்லை. மோடி அரசும் Development என்ற பெயரில் மேலும் தீவிர அழிவுப் பாதையில்தான் செல்கிறது. இந்த நிலையில் ராக்கேல் கார்ஸனின் பணிகள் பற்றி நம் மக்களுக்குச் சொன்னது அரிய சேவை.

    கழுகுகள் உணவில் கலந்த ரசயனத்தினால் அமெரிக்காவில் மட்டும் மடியவில்லை. இங்கும் தான். திருக்கழுக்குன்றதில் இரு கழுகுகள் நடுப்பகலில் வந்து அர்ச்சகர் கையால் உணவேற்றது நாம் 1970கள் வரையில் கண்கூடாகக் கண்டது; 1990க்குப் பிறகு இக்கழுகுகள் வருவதில்லை! காரணம் அந்தப் பகுதியில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களே! மயில்களும், யானைகளும் இவ்வாறே மடிகின்றன. பெருமாள் வாகனம், முருகன் வாகனம் என்றெல்லாம் சொல்லி என்ன பயன்? கொல்லி ரசாயனங்களின் ஆதிக்கத்தைத் தடுக்கவோ, குறைக்கவோ இயலவில்லை!
    அமெரிக்கர்களுச் சொரணையூட்ட ஒரு ராக்கேல் கார்ஸன் போதுமான தாக இருந்தது! நமக்கு எத்தனை பேர் தேவையோ!

  2. மிக அருமையான கருத்துக்கள். நன்றி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: