ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்! (Post No.4985)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 7 MAY 2018

 

Time uploaded in London –  6-51 AM   (British Summer Time)

 

Post No. 4985

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்!

 

ச.நாகராஜன்

 

சங்க இலக்கியத்தில் ஜாதி பேதமே இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட நான்கு புலவர்களைப் பற்றிய சில குறிப்புகளை இங்கே காணலாம். உலகத்தார் அனைவரையும் ஒன்று படுத்தும் ஒரு பெரும் சக்தியாக தமிழ் விளங்குவதையும் உணரலாம்.

சங்க இலக்கியம் முழுவதையும் படித்தால் பொன்னான தமிழ்நாடு நம் கண் முன்னே தவழும்.

அதை மீண்டும் கொணர முயல்வோமாக!

இதோ புலவர்கள் நால்வர்.

 

கபிலர்

புலனழுக்கற்ற அந்தணாளன் என்று போற்றப்படும் பெரும் புலவர் இவர்.

இவர் அந்தணர் (புறம் 200)

குறிஞ்சித்திணை பாடுவதில் இணையற்ற ஆற்றலுடையவர்.

ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பாட்டு நூறும், கலித்தொகையில் குறிஞ்சி 29 பாட்டும் இவர் பாடியனவாகும்.

இதனைப்,

“பெருங்கடுங்கோன் பாலை குறிஞ்சி கபிலன்

மருதனிள நாகன் மருத – மருஞ்சோழ

னல்லுத் தான்முல்லை நல்லந் துவனெய்தல்

கல்விவலார் கண்ட கலி”

என்ற வெண்பாவால் அறியலாம்.

அகநானூறில் 203ம் பாடல் தவிர ஏனைய பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித் திணைக்கு உரியவையே.

இவர் மழவர் பெருமகனாகிய நள்ளியையும், பேரூரினையும் புகழ்ந்து பாடியுள்ளார். (அகம் 238; 382)

குறுந்தொகையில் ஓரியினது கொல்லிப்பாவையினையும், காரியினது முள்ளூர்கானத்தையும் புகழ்ந்துள்ளார். (குறுந்: 100;198)

நற்றிணையில் காரி மாவூர்ந்து நிரைகவர்தலையும், அவன் ஓரியைக் கொன்ற வரலாற்றினையும் கூறியுள்ளார். (நற் 291;320)

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியருளினார்.

செல்வக்கடுங்கோ ஆழியாதனைப் புகழ்ந்து இவர் பாடிய பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

இன்னா நாற்பதும் கபிலம் என்னும் நூலும் இவர் இயற்றிய மற்ற நூல்களாகும்.

இவர் பாணருடன் வாது செய்தவர்.

புறநானூற்றில் பாரி வள்ளலைப் பலபடியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். (புறம் 105;106)

பாரிவள்ளல் தன் மகளிரை மூவேந்தருக்கு மணம் செய்து கொடுக்க மறுத்தமை காரணமாக மூவேந்தரும் அவனைப் பகைத்து அவன் பறம்பு மலையை முற்றுகை இட்ட போது உள்ளே உணவின்றி வருந்திய அனைவரையும் காப்பதற்காக கிளிகளால் நெற்கதிரைக் கொணரச் செய்தார். (அகம் 78;303)

மூவேந்தரும் பறம்பு மலையைக் கைப்பற்றுவது இயலாத காரியம் என்று கண்டு மனம் தளர்ந்த காலத்து, அவர்களை இவர் இகழ்ந்து பாடியுள்ளார். (புறம் 109;110)

பாரி அவ்வேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்ட பின்னர், அவன் மகளிரை அழைத்துச் சென்று பார்ப்பார் பால் அடைக்கலம் வைத்தார். (புறம் 113; 236)

இந்தப் பாரி மகளிர் தம் தந்தையின் மலையைச் சூழ்ந்து கொண்ட பகை வேந்தரது படையின் அளவு எந்தெந்த திசையில் எவ்வெவ்வளவு இருக்கிறதென்று உயர்ந்த குவடுகளில் ஏறி நின்று எண்ணிச் சொன்னார்கள் என்னும் குறிப்புத் தோன்ற இவர் பாடியுள்ளார். (புறம் 116)

பின்னர், அம்மகளிர்களை அழைத்துக் கொண்டு போய், அவர்களை மணந்து கொள்ளும்படி விச்சிக்கோனையும் இருங்கோவேளையும் அவர் புகழ்ந்து பாடினார். (புறம் 200;201)

அவர்கள் மறுத்தவுடன் அவர்களைச் சபித்து விட்டு மீண்டார்.

கடைசியாக அம்மகளிருள் ஒருத்தியைத் திருக்கோவலூர் மலையனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டுப் பெண்ணையாற்றினிடையே ஒரு பாறையில் தீ வளர்த்து அதில் புகுந்தார் என்று திருக்கோவலூர் சாஸனம் ஒன்றால் வெளியாகிறது. (ஆதாரம் : செந்தமிழ் தொகுதி-4; பகுதி-5 பக்கம் 232)

 

தித்தன்

தித்தன் ஒரு அரசன்.

இவன் தித்தன் வெளியன் எனவும் வீரைவெளியன் தித்தன் எனவும் கூறப்படுவான். (அகம் 152;188;226)

இவன் சிறந்த வீரன் மட்டுமன்றி பெரும் புலவனும் ஆவான். (அகம் 188)

இவனது தலைநகர் உறையூர்.

இவ்வூரைப் பகைவர் கைப்பற்றாவண்ணம் அரண்வலி மிகுந்த புறங்காடு உடையதாகவும் படைகாவல் உடையதாகவும் செய்து காத்து வந்தான். (அகம் 122; தொல்.பொருள் நச் 60)

இவனுக்குக் கற்பில் சிறந்தவளும் பேரழகியாயுமுள்ள ஐயை என்னும் பெயருடைய ஒரு மகள் இருந்தாள். ஒரு சமயம் வடுக அரசனான கட்டி என்பான் பாணனொடு சேர்ந்து கொண்டு தித்தனோடு போர் புரிய நினைத்து உறையூருக்கு அருகில் வந்து இருக்கும் போது, உறையூரின் கண் இத்தித்தனது நாளவைக்கண் ஒலிக்கப் பெறும் தெண்கிணைப்பாடு கேட்டு அஞ்சிப் போர் புரியாமல் ஓடினான். (அகம் 226) இவன் மகன் பெயர் போர்வைக்கோப்பெருநற் கிள்ளி.

 

மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார்

இவர் வணிக மரபினர். (தொல் பொருள் மரபு 74)

அறுவை வாணிகன் என்றால் வஸ்திர வியாபாரி. (Cloth Merchant) திருவள்ளுவரின் திருக்குறளைச் சிறப்பித்துப் பாடியுள்ளோரில் இவரும் ஒருவர். பாலைத் திணையைத் தவிர ஏனைய எல்லாத் திணையையும் புனைந்து இவர் அகநானூற்றில் பாடியுள்ளார்.

படுத்த யானை முதுகினைக் காற்றிலசையும் வழைத்தாறு தடவும் என்பது இவரது அழகிய கூற்று. (அகம் 302)

 

ஆவூர் மூலங்கிழார்

இவர் சோழநாட்டில் பிறந்தவர். (புறம் 33) வேளான் மரபிணர்.

இவரது மகன் தான் பெரும் புகழ் படைத்த பெருந்தலைச் சாத்தனார் ஆவார்.

இவர் காவிரியைப் புகழ்ந்து பாடியுள்ளார். (அகம் 341)

யாகம் பண்ணாத பார்ப்பானுக்கு சங்கறுக்கைத் தொழிலாகுமென்று இழித்துக் கூறுவதாலும் (அகம் 24),  யாகம் பண்ணிய கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து பாடியுள்ளமையாலும் (புறம் 1660 இவர் வைதிக மதத்தில் (இந்து மதத்தில்) பெரும் பற்றுள்ளவர் என்பது அறியப்படுகிறது.

 

***

Leave a comment

3 Comments

  1. nparamasivam1951

     /  May 7, 2018

    மிக அரிய செய்தி. உங்களின் உண்மை வெளிக் கொணர்தல், தமிழின் பெயரால் ஏமாற்றும் திராவிட உடன்பிறப்புகளை கதிகலங்க வைத்துள்ளன. எனது முக நூலில் பகிரலாமா?

  2. தாராளமாக! அதற்குத் தானே எழுதுவதே! நன்றி. நாகராஜன்

  3. nparamasivam1951

     /  May 8, 2018

    நன்றி சார். 🙏

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: