இந்தியாவில் உலகின் உயரமான சிலை! (Post No.5005)

Written by S NAGARAJAN

 

Date: 13 MAY 2018

 

Time uploaded in London –  9-15 AM   (British Summer Time)

 

Post No. 5005

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 11-5-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு பத்தாம் கட்டுரை

இந்தியாவில் அமைக்கப்படும் உலகின் உயரமான சிலை!

.நாகராஜன்

 

 

இந்தியாவின் முதல் துணை பிரதம மந்திரியாக இருந்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு (தோற்றம் 31-10-1875 மறைவு 15-12-1950) குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

 

597 அடி உயரமுள்ள இந்தச் சிலை தான் உலகின் உயரமான சிலை. இந்தச் சிலையை அமைப்பதன் மூலம் இந்தியாவின் கௌரவம் உலக அரங்கில் உயர்கிறது.

 

 

சிலையின் அஸ்திவாரத்தையும் சேர்த்தால் மொத்த உயரம் 790 அடி ஆகும்!

இந்தச் சிலைக்கு ஏகதா சிலை அல்லது யூனிடி சிலை (Unity Statue) என்று பெயர்.

 

இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சிறந்த நிர்வாகியான சர்தார் வல்லபபாய் படேல் இந்தியாவில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஓரிழையில் பிணைத்து பலமான இந்தியா உருவாகக் காரணமாக இருந்தார்.

 

அவரது எளிய இனிய பேச்சுத் திறன் ஒரு புறமும், தேவைப்பட்டால் ராணுவத்தை இறக்கி ஏக இந்தியாவை உருவாக்குவேன் என்ற அவரது திட மனதும் அவரைச் சாதனையாளராக்கி நமது இந்திய சரித்திரத்தில் அழியா இடம் பெறச் செய்து விட்டது.

இந்தச் சிலையை அமைக்கப் பெரிதும் காரணமாக இருப்பவர் நமது பிரதமர் நரேந்திர மோடி.

 

31-10-2013இல் அவர் குஜராத் முதல் மந்திரியாக் இருந்தபோது இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

 

சர்தார் படேலின் 143வது  பிறந்த தினமான 31-12-2018 அன்று இதைத் திறக்க வேண்டும் என்ற முனைப்புடன் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மைக்கேல் க்ரேவ்ஸ் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன் என்ற நிறுவனம் இதன் வடிவமைப்பு மற்றும் நிர்மாணிப்பை மேற்பார்வையிட்டு வருகிறது.

ராம் வி.சுதார் என்பவர் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார்.

வரலாறு காணும் மிகப் பெரிய கலைப் பொக்கிஷம் என இது இப்பொழுதே புகழப்படுகிறது.

 

குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தீல் சர்தார் சரோவர் அணை அருகே சாது பெட் என்ற பெரிய தீவில் இது அமைக்கப்பட்டு வருகிறது. இதை அமைக்கும் நிபுணர்களில் ஒருவரான ஜேம்ஸ் விஸ்னியூஸ்கி (James Wisneewski)  ‘இந்தச் சிலை முடிந்த பின்னர் இதைப் பார்க்கும அனைவரும் பிரமித்துப் போவர். இந்தச் சிலை தண்ணீரில் நடப்பது போல இருக்கும்’ என்று கூறுகிறார். இந்தத் தீவில் ஒரு மியூஸியம். ஒரு தோட்டம், ஒரு ஹோட்டல், வருவோரை வரவேற்க ஒரு வரவேற்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இடம் பெறும்.

 

சிலை அமைக்கப்படும் இடத்தின் பரப்பளவு சுமார் 20000 சதுர மீட்டர்.

இதைச் சுற்றி 12 கிலோமீட்டருக்கு ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்படும்.

இந்த அற்புதமான சிலையை அமைக்க ஆகும் உத்தேச செலவு ஆரம்பத்தில் 2083 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறைந்த பட்ச தொகையாக 2989 கோடி ரூபாயில் இதைக் கட்ட லார்ஸன் அண்ட் ட்யூப்ரோ அமைப்பு ஒத்துக் கொண்டு டெண்டரைப் பெற்றது.

 

இந்தப் பணத்தில் பெரும் பங்கை குஜராத் அரசே ஏற்கிறது.

சிலைக்குத் தேவையான ரெய்ன்ஃபோர்ஸ்ட் சிமெண்ட் மட்டும் 75000 கியூபிக் மீட்டர் ஆகும்.

5700 மெட்ரிக் டன் ஸ்டீல், 185000 டன் ஸ்டீல் கம்பிகள், 22500 டன் வெங்கலத் தகடுகள் சிலை அமைக்கத் தேவைப்படுகிறது.

ஸ்டீலினாலும் ரெய்ன்ஃபோர்ஸ்ட் கான்கிரீட்டினாலும் அமைக்கப்படும் சிலையின் மீது வெண்கலப் பூச்சு இருக்கும்.

 

அறிவியல் வியக்கும் ஒரு சிலையாக அமையும் இந்தச் சிலை இருக்கும் இடத்திற்கும் பிரதான நகர் பகுதிக்கும் இடையே ஒரு பாலமும் அமைக்கப்படும். சிலையை அடைய 5 கிலோ மீட்டர் படகு சவாரி செய்ய வேண்டும்.

 

சிலையில் 500 அடி உயரத்தில் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியாக ஒரு மையம் இருக்கும். அங்கு ஒரே சமயத்தில் 200 பேர் இருந்து அழகிய காட்சிகளைக் கண்குளிரக் காணலாம்.

 

இங்கிருந்து சாத்புரா, விந்த்யாசல மலைத் தொடரைப் பார்த்து மகிழலாம்.

உலகின் உயரமான சிலை அமைக்கப்படுவதைப் பார்த்து வியக்கும் வெளிநாட்டின் பிரபல பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இது பற்றிய செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

 

ராஷ்ட்ரீய ஏகதா திவஸ் – தேசிய ஒருமைப்பாடு தினம் – என்று படேலின் பிறந்த தினத்தை இந்திய அரசு 2014ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறது. வருகின்ற 2018, அக்டோபர் 31ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தினமாக அமையப் போகிறது!

 

கடுமையான சோதனைகளை எதிர்த்து இந்தியாவை ஓரிழையில் இணைத்துச் சாதனை புரிந்த சாதனை மனிதருக்குச் சரியான நினைவுச் சின்னமாக அமையும் இது உலகின் அதி உன்னதமான உயரமான சிலை என்ற பெருமையைப் பெறுவது சரிதானே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஃப்ராங்க் நெல்ஸன் கோல் (Frank Nelson Cole 1861-1921) அமெரிக்க கணித சங்கத்தில் நெடுங்காலம் செயலாளராக இருந்தவர். பெரிய கணித மேதை. சங்கத்தின் பத்திரிகையையும் அவரே நிர்வகித்து வந்தார். தீர்க்கவே முடியாத கணித சிக்கல்களை அவர் தீர்த்ததால் அவருக்கு கணித வரலாற்றில் தனிப் பெயர் உண்டு.

1903ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூயார்க்கில் அமெரிக்க கணித கழகத்தில் ஒரு ஆய்வுப் பேப்பரை கோல் சமர்ப்பிக்க இருந்தார். சிக்கலான பேப்பர் அது. தலைவர் கோலை தனது பேப்பரை சமர்ப்பிக்க வருமாறு அழைத்தார். கோல் அதிகம் பேசாத மனிதர். சில வார்த்தைகளே எப்போதும் பேசுவார். தனது ஆய்வுப் பேப்பரைப் படிப்பதற்கு பதிலாக நேராக போர்டுக்குச் சென்று எழுதலானார். 2 என்ற எண்ணை அதன் 67வது மடங்கிற்குக் கொண்டு சென்று அதை எழுதிய கோல் அதிலிருந்து கவனமாக ஒன்றைக் கழித்தார். பார்ப்பவர்கள் ஆர்வத்துடன் என்னதான் அவர் செய்கிறார் என்று பார்த்த வண்ணம் இருந்தனர்.

பின்னர் கோல் மீக நீண்ட எண்கள் இரண்டை எழுதி அதைப் பெருக்கலானார். எண்கள் இது தான்:  193,707,721 X 761,838,257,287

இதன் விடையும் 2இன் 67வது மடங்கில் வரும் எண்ணில் ஒன்றைக் கழித்தால் வரும் விடையும் ஒன்றாக இருந்தது.

இதைப் பார்த்த கணித அறிஞர்கள் கரகோஷம் செய்து கோலைப் பாராட்டினர். ஆய்வுப் பேப்பரைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று.

இதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்ட போது மூன்று வருடங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையாக உழைத்தேன் என்று அவர் பதில் கூறினார்.

அவரது மேதா விலாசம் வெளிப்பட்ட தருணங்களில் இது மகத்தான தருணம்!

***

Leave a comment

Leave a comment