WRITTEN by London Swaminathan
Date: 20 May 2018
Time uploaded in London – 16-46 (British Summer Time)
Post No. 5030
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
ஒரு ஊரில் ஒரு மஹா தரித்திரன் இருந்தான்; எதைத் தொட்டாலும் விளங்கவில்லை. பிச்சை எடுத்துப் பிழைக்க வேண்டியதாயிற்று. ஒரு நாள் பிச்சை எடுக்கப் போன போது ஒரு வீட்டில் இருந்து மசாலா வாசனை அடித்து. கதவு மூடி இருந்த போதும் எச்சில் இலைக்காக திண்ணையில் காத்திருந்தான். அப்போது ‘சொய்ங்’ என்று சப்தம் ஒலித்தது.
ஆஹா! மசாலா தயாரன பின்னர் தோசை ‘ரெடி’ ஆகிறது. கொஞ்சம் ‘வெயிட்’ பண்ணுவோம் என்று காத்து இருந்தான். மீண்டும் சொய்ங்ங்ங்’ சப்தம்; ஓஹோ இரண்டு தோசை ‘ரெடி’ என்று கணக்குப் போட்டான். இப்படி பத்து முறை சப்தம் கேட்கவே பத்து தோசை தயார்; ஒன்றிரண்டு கேட்டுப் பார்ப்போம் என்று கதவைத் தட்டினான்.
‘அம்மா, தாயே, வயிறு காயுது; ஏதேனும் கொஞ்சம் கஞ்சித் தண்ணி வாருங்களேன்’ என்றான் பய பக்தியோடு.
அந்த அம்மாளோ வழக்கம் போல ‘இல்லை’ பாட்டுப் பாடினாள்.
மசாலா தோசை
என்ன தாயே! இல்லை என்று சொல்லலாமா? பத்து தோசையில் ரெண்டு தோசையாவது போடலாமே! என்றான்.
அந்த அம்மாளுக்கு ஆயிரம் ‘வாட்’ ‘ஷாக்’ அடித்தது.
அடப் பாவி மகனே! இவன் பெரிய சாமியாரோ அல்லது ஜோஸியனோ கர்ரெக்டா சொல்லிப்புட்டானே ! பத்து தோசை என்று எண்ணி, பய பக்தியோடு இரண்டு தோசைகளைப் பரிமாறி சூடான காப்பியும் கொடுத்து அனுப்பினாள்.
குழாய் அடிக்கு தண்ணீர் பிடிக்கப்போன போது 100 சதவிகிதம் பலன் சொல்லக்கூடிய ஜோஸியர் தன் வீட்டுக்கு வந்த செய்தியை ஒவ்வொரு வீட்டுப் பெண்மணியிடமும் சொல்லித் தீர்த்தாள்.
‘கழுதை கெட்டால் குட்டிச் சுவர்’
அதிர்ஷ்ட தேவதை நமது பிச்சைக்கார ஜோஸியர் மீது கடைக் கண் பார்வையைச் செலுத்தவே கழுதை காணவில்லை என்று ஒரு வண்ணான் அந்த புதிய ஜோஸியர் வீட்டு வாசலில் நின்றான். அவருக்குப் பிழைக்கும் வழி புரிந்துவிட்டது.
“அன்பா! இன்று இரவு சக்கரம் போட்டு பூஜை செய்து கண்டு பிடிப்பேன் ; பொழுது விடிந்ததும் வா” என்றான்.
அன்றிரவு முழுதும் ஜோஸியர் கழுதையைத் தேடி ஓட இவர் அதிர்ஷ்டம்! கழுதை கிடைத்தும் விட்டது!
‘கழுதை கெட்டால் குட்டிச் சுவர்’ என்பது பழமொழி அல்லவா!
“பொழுது விடிந்தது யாம் செய்த தவத்தால் புன்மை யிருட்கணம் போயின யாவும்” என்று திருப்பள்ளி எழுச்சி பாடும் நேரத்தில் கழுதை தேடும் வண்ணானும் வந்தான்;
அன்பனே! தெருக்கோடி வீட்டின் குட்டிச் சுவர் அருகே போ; உன் கழுதை உனக்காக காத்திருக்கும் என்றான். என்ன அதிசயம்! கழுதையும் கிடைத்தது.
அந்த வண்ணான், தான் போகும் வாடிக்கையாளர் வீடுகளில் எல்லாம் மஹா ஜோஸியரின் புகழைப் பரப்பினான். அவன் அரண்மனைக்கும் வண்ணான். ராஜா காதிலும் செய்தி விழுந்தது.
மன்னாதி மன்னன்
ராஜாவுக்குக் கொஞ்சம் நாளாகப் புதுக் கவலை. அரண்மனை வைர நகைகளைக் காணோம்; அந்த நேரத்தில் இந்த சகல நோய்களுக்கும் கைகண்ட மருந்து போல மஹா ஜோஸியர் தகவலும் வரவே சிறந்த காவலர்களை அழைத்து பறந்து போய் , சிறந்த ஜோஸியரை உடனே அழைத்து வருக என்று கட்டளை இட்டனன்.
ராஜா வீட்டு சேவகர்களைக் கண்டவுடன் கூஜா தூக்கும் போலி ஜோஸியருக்கு உதறல் எடுத்தது. சேவகர்களும் திருட்டைக் கண்டு பிடிக்க உங்களை ராஜா அழைத்தார் என்று சொல்லி குதிரையில் ஏற்றிக் கொண்டு சிட்டாய்ப் பறந்தனர். ஜோஸியர் பயத்தில் ‘திருடன், திருடன்’ என்று உளறத் துவங்கினார். இரண்டு சேவகர்களும் குதிரையை நிறுத்தி தண்ணீர் குடிப்பது போல அந்தப் பக்கம் போய் காதோடு காதாகப் பேசினர்.
“ஏய், ஜோஸியர் அய்யா. நம்மைத் திருடன் என்று கண்டுபிடித்து விட்டார். அவர் வழி எல்லாம் திருடன் திருடன் என்று நம்மைத் திட்டிக்கொண்டே வருகிறார். உண்மையிலேயே இவர் பெரிய ஜோஸியர்– ஆகையால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு உண்மையை சொல்லி விடுவோம் என்று ஜோஸ்யர் காலில் விழுந்து செப்பினர்
“ஐயா, நாங்கள்தான் அரண்மனை நகைகளைத் திருடினோம்; நீங்களும் எங்களைத் திருடர்கள் என்று கண்டு பிடித்து விட்டீர்கள்– இன்றிரவே நகைகளை ஒப்படைக்கிறோம் ; எங்களை மட்டும் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்; ‘ப்ளீஸ்’” என்று கெஞ்சிக் கூத்தாடினர்.
அவரும், “அன்பர்களே! மன்னித்தேன், மறந்தேன். புறப்படுவோம்” என்றார்.
ராஜாவின் அரண்மனையில்
“ஓய் ஜோஸியரே! என்னமோ பெரிய ஜோஸியர் என்று சொல்லுகிறார்கள்– களவு போன நகைகளைக் கண்டு பிடியுங்கள் தவறினால் தக்க தண்டனை உண்டு; கண்டு பிடித்தாலோ நீர் தான் ஆஸ்தான ஜோஸீயர்” என்றார் மன்னன்.
ஜோசியருக்கு ஏற்கனவே நகை பற்றித் தெரிந்து விட்டதால்
“ராஜாதி ராஜனே! என் ஜோதிடம் பொய்யாகுமா? இன்றிரவே பூஜை போட்டு நாளையே நகை கிடைக்க வழி வகை செய்வேன்” என்றார்.
சேவகத் திருடர்களும் இரவோடு இரவாக ஜோஸியரிடம் நகைகளைக் கொண்டு வந்தனர்.அவர் ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் அவைகளைப் புதைக்கச் சொன்னார்.
மறு நாள் காலையில் மன்னர் அவையில் அனைவரும் ஆர்வத்துடன் காதுகளைத் தீட்டிக் கொண்டு நிற்க ஜோஸியர், இந்த மரத்துக்கு அடியில் அந்த நகைகள் உள்ளன. அவை எல்லாம் குட்டிச் சாத்தான் செய்த வேலைகள் என்றார். அரசனும் சேவகர்களை அனுப்ப நகையும் கிடைத்தது.
கம்பளிப் பூச்சி
ஆனால் மந்திரிமார்களுக்கு ஒரு சம்ஸயம்; அதாவது சந்தேஹம்; இந்தப் பயலோ பூர்வீகத்தில் பிச்சைக்கரன் என்று நமது உளவாளிகள் சொல்லுகின்றனர். இவனுக்கு ஆஸ்தான ஜோதிடர் பட்டமா? இவன் வண்டவாளத்தை ரயில் தண்டவாளத்தில் விடுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்தனர். அவர்களில் ஒரு அமைச்சர் ஒரு கம்பளிப் பூச்சியைக் கையில் வைத்து மூடிக்கொண்டு
“ஓய், ஜோஸியரே! நீவிர் மஹா பெரிய ஜோஸியர் என்றால் எங்கள் கையில் இருப்பது என்ன என்று விளம்புங்கள்?” என்றனர்.
அவருக்கு நடுக்கம் ஏற்பட்டது.
அடக்கடவுளே!
“அங்க தப்பி, இங்க தப்பிச்சுக் கொண்டு அகப்பட்டுக் கொண்டேனே கம்பளி முத்தன்” என்று சொல்லிக் கொண்டே தன் கம்பளிச் சால்வையை மேலே போட்டுக் கொண்டு ஓடுவதற்குத் தயாரானார். அவர் சொன்னது தன் கம்பளியை;
மந்திரிகள் நினைத்தார்கள்,
அட ஆண்டாவா! என்ன அற்புத மன சக்தி; இந்த மஹானுக்கு!! கையில் மூடி வைத்து இருந்த கம்பளிப் பூச்சியைக் கூட ஞான திருஷ்டியில் கண்டு வி ட்டாறே என்று ஜோஸியர் காலில் விழுந்து ஆஸீர்வாதம் பெற்றனர்.
அரசனிடம் போய், அவருக்குக் கூடுதல் மான்யம் தருவதற்கு சிபாரிசும் செய்தனர்.
‘அதிர்ஷ்டம் இருந்தால் குதிரை தானாகவே கு…………………. அடியில் புகுந்து தூக்கிக் கொண்டு போய் சவாரி செய்யும்!’ —என்பது தமிழ்ப் பழமொழி
–சுபம்-