கண் திருஷ்டியும் அறிவியலும்! – 2 (Post No.5041)

Written by S NAGARAJAN

 

Date: 24 MAY 2018

 

Time uploaded in London –  4-35 AM   (British Summer Time)

 

Post No. 5041

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 25-5-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பன்னிரண்டாம்) கட்டுரை

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 2

.நாகராஜன்

 

திருஷ்டியை அறிவியல் ரீதியில் விளக்கம் கொடுக்க முன்வந்த முதல் அறிஞர் பிரபலமான ப்ளூடார்க் தான்! மனிதனின் கண்களிலிருந்து வெளிவரும் ஆற்றல் சில சமயங்களில் மிருகங்களை அல்லது குழந்தைகளைக் கூடக்  கொல்லும் ஆற்றல் படைத்தது என்று அவரது சிம்போஸியாக்ஸில் (Symposiacs) அவர் விளக்குகிறார். அவர் மேலும் இது பற்றி விளக்குகையில், “சிலருக்கு இன்னும் அதீதமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது. அவர்கள் பார்வையினாலேயே சாபம் இட வல்லவர்கள்’ என்கிறார்!

ஐஸிஸ் தன் கண் பார்வையினாலேயே பிப்ளாஸ் நகர மன்னனின் மகனைக் கொன்றாள் என்றும் ப்ளூடார்க் கூறுகிறார்.

இதே போல கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெலியோடோரஸ், “ அருமையான ஒன்றை பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தானானால் சுற்றி இருக்கும் சூழ்நிலையையே அவன் மாற்றுகிறான்; உயிரைப்  போக்கும் அளவு மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறான், அத்துடன் தனது விஷத்தைக் கண் மூலம் தனக்கு அருகில் இருக்கும் அனைத்தின் மீதும் பாய்ச்சுகிறான்” என்கிறார்.

இஸ்தான்புல் பசெஷெய்ர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியரான யில்டிரன் என்பவர் பி.பி.சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “இன்று சிரியா என்று அழைக்கப்படும் பழையகால மெஸபொடோமியாவில் கண்டு பிடிக்கப்பட்ட தாயத்து மிக மிகப் பழமையானது” என்கிறார். அதாவது திருஷ்டி பற்றிய எண்ணமும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதும் ஆதிகாலப் பழக்கம் என்கிறார் அவர்.

பல வித மணிகளினால் ஆன மாலை, ருத்ராட்ச மாலை போன்றவையும் தீய திருஷ்டிகளை விலக்கும் ஆற்றல் படைத்தவை என நம்பப்படுகின்றன!

துருக்கியில் வாழ்ந்த பழங்குடியினர் தங்களது சுவர்க்க தேவதையான் தெங்ரி நீல நிறத்துடன் இருப்பதால இளநீல வண்ணத்தை கொண்ட தாயத்துகளையும் கோபால்ட், தாமிரம் ஆகியவற்றையும் பயன்படுத்தினர். இன்றும் துருக்கியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண் திருஷ்டி டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்!

இத்தாலியில் திருஷ்டிக்குப் பெயரான மால் ஓச்சியோ (Mal Occhio) என்பதையே தலைப்பாகக் கொண்டு  அகடா டே சாண்டிஸ் ஒரு டாகுமெண்டரி திரைப்படத்தை எடுத்தார். அதில் திருஷ்டியினால் தலைவலி, வயிற்றுவலி போன்றவை வந்து அவஸ்தைப் படுவோர் அதைப் போக்க செய்ய வேண்டிய சடங்கை விளக்குகிறார். பல அறிஞர்களைச் சந்தித்து கண் திருஷ்டி பற்றிய அவர்களது கருத்தையும் கேட்டு திரைப்படத்தில் அதை அவர் தந்துள்ளார். முடிவான கருத்து என்னவென்றால் இதை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது என்பது தான்!

நியூயார்க்கில் வாழும் மரியா பராட்டா (Maria Barattaa Ph.D)ஒரு உளவியல் நிபுணர்.

அவர் இத்தாலியைச் சேர்ந்தவர். சைக்காலஜி டு டே இதழில் கண் திருஷ்டி பற்றி உளவியல் ரீதியாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் ஒரு சுவையான சம்பவத்தை விவரிக்கிறார்.

தனது 92 வயதான இத்தாலிய அப்பாவிடம் தனக்கு வயிறு சரியில்லை என்றும் ‘’மால் ஓச்சியோ” இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்ல, அவர் உடனே, “எதையாவது கண்டதைச் சாப்பிட்டிருப்பாய்” என்று பதில் கூறியவர், “எதற்கும் இருக்கட்டும்” என்று திருஷ்டியைப் போக்கும் பிரார்த்தனை மந்திரத்தையும் மகளுக்காக உச்சரித்தாராம்.

இந்தியாவில் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கம் போலவே இத்தாலியிலும் அவ்வப்பொழுது திருஷ்டி சுற்றிப் போடுவது வழக்கம்!

இத்தாலிய நம்பிக்கையின் படி தாயத்துகளை நீங்களாக வாங்கிப் போட்டுக் கொள்ளக் கூடாது; யாராவது ஒருவர் தான் அதை உங்களுக்குத் தர வேண்டும்!

வரலாற்றை அலசிப் பார்த்தால் பல பிரபலங்கள் தீய திருஷ்டிப் பார்வையைக் கொண்டவர்களாக இருப்பது தெரியவரும்.

இந்தப் பட்டியலில் ஆங்கிலக் கவிஞர் பைரன், போப் ஒன்பதாம் பயஸ், போப் பதிமூன்றாம் லியோ, இரண்டாம் கெய்ஸர் வில்லியம், மூன்றாம் நெப்போலியன் உள்ளிட்ட பலர் இடம் பெறுகின்றனர்.

போப் ஒன்பதாம் பயஸ் கையில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த ஒரு நர்ஸை ஜன்னல் வழியே பார்த்தார். சில விநாடிகளிலேயே அந்தக் குழந்தை இறந்து விட்டது. இது அனைவருக்கும் பரவியது. இதன் பின்னர் அவர் செய்யும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் கெட்ட விளைவுடனேயே முடிந்தது. அவர் 1878ஆம் ஆண்டு மறைந்தார்.

இதே போல போல் போப் பதிமூன்றாம் லியோ பார்வையும் மற்றவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துமாம். அவர் போப்பாக இருந்த காலத்தில் ஏராளமான கார்டினல்கள் இறந்து விட்டதால் அவரைக் கண்டாலேயே அனைவருக்கும் பயமாம் – தனக்கும் சாவு வந்து சேருமோ என்று தான் பயம்! முத்தாய்ப்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பது கண் திருஷ்டியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆனந்தம் தரும் செய்தியாக அமைகிறது. அதையும் பார்த்து விடுவோம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மேதைகள் எவ்வளவு நேரம் தினமும் தூங்குவார்கள்?

இதோ ஆராய்ச்சி தரும் தகவல்கள் :

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தினமும் 10 மணி நேரம் தவறாமல் உறங்குவார். இது தவிர பகல் நேரத்தில் குட்டித் தூக்கமும் அவருக்கு உண்டு.

இதற்கு நேர்மாறானவர் பிரபல விஞ்ஞானியான நிகோலஸ் டெல்ஸா. அவர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் இரவில் தூங்குவார்.

இதை ஈடு கட்டும் விதமாக பகல் நேரத்தில் குட்டித் தூக்கமாக பல முறை அவர் தூங்குவதுண்டு.

லியனார்டோடாவின்சியின் தூக்கப் பழக்கம் சற்று விசித்திரமானது. செயல்படாமல் நெடுநேரம் இருக்கக் கூடாது என்பது அவரது கொள்கை. ஆகவே அவர் 20 முதல் 120 நிமிடம் வரை தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இப்படி பகலிலும் இரவிலுமாகச் சேர்த்து ஒரு நாளக்கு ஐந்து மணி நேரத்திற்கு மேல் அவர் தூங்க மாட்டார். இதனால் அவர் இடைவிடாது செயலூக்கத்துடன் தனது பணிகளைச் செய்து வந்தார். இப்படி உறங்கும் பழக்கத்திற்கு டா வின்சி தூக்க அட்டவணை (The Da Vinci Sleep  Schedule) என்றே பெயர் வைக்கப்பட்டு விட்டது. இதற்கு உபர்மேன் தூக்க அட்டவணை (Uberman Sleep Schedule) என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது ஒரு நாளை ஆறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் 20 நிமிடம் மட்டுமே தூங்கும் முறைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே உறங்க முடியும்.

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சரியாக இரவு 10 மணிக்கு உறங்கப் போவார்.காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பார்.

தாமஸ் ஆல்வா எடிஸனோ இரவு 11 மணிக்கு உறங்கச் சென்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவார். ஸ்பேஸ்  கம்பெனியின் உரிமையாளரான இலான் மஸ்க் இரவு 1 மணியிலிருந்து காலை 7 மணி வரை ஆறு மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்.

வெற்றிகரமான மேதைகள் பொதுவாகக் குறைந்த நேரமே தூங்குகின்றனர். பெரிய சாதனைகளைப் புரிகின்றனர்!

 

****

 

Leave a comment

1 Comment

 1. தூக்கத்தைப் பற்றி பல கருத்துக்கள், கொள்கைகள் இருக்கின்றன. அனுபவமும் பலவிதமாக இருக்கிறது. ஆழ்ந்த உறக்கம் நல்ல ஆரோக்யத்தின் அறிகுறி. நல்ல, ஆழ்ந்த தூக்கம் [ கனவு இல்லாதது] சாதாரணமாக அனைவருக்கும் அத்தியாவசியமானது. . இதுதான் நமது நினைவு ஆற்றலை சீர்படுத்துகிறது என்கிறார்கள். வயதாக ஆக இந்த வகை தூக்கம் அரிதாகிறது.

  விஞ்ஞானிகள், சில மேதைகள் போன்றோர் வித்தியாசமானவர்கள். அவர்களுடைய நிலையை நாம் சகஜமானதெனக் கருதமுடியாது. அதேபோல் ஞானிகள். ஸ்ரீ ராமக்ருஷ்ணர், ஸ்ரீ ரமணர் போன்றோர் தூங்கினரா என்பதே சந்தேகம்; படுப்பார்கள், உறங்கமாட்டார்கள்! ஆனால் ரமணர் இளவயதில் உறங்கச்சென்றால் அவரை எழுப்புவது கஷ்டமாம்! இதைப் பயன்படுத்தி , அவர் விழித்திருக்கும்போது அவருடன் மோத இயலாதவர்கள், அவர் உறங்கும்போது அவரை அடிப்பார்களாம், ஆனாலும் அவர் அசந்து உறங்குவார்!

  நான் கல்லூரி நாட்களில் ஏதாவது கஷ்டமான பாடத்தைப்படித்தால், உடனே , புத்தகத்தை மூடிவைத்து தூங்கிவிடுவேன். விழித்தவுடன் பாடம் மனதில் நன்கு பதிந்ததுபோல் இருக்கும்! பின்னர் “How to Study” போன்ற புத்தகங்களைப் படிக்கும் போது, இதையே ஒரு சிறந்த உத்தியாகச் சொல்லியிருப்பதைக் கண்டேன்!

  கவலை, பொறுப்புச் சுமை, குற்ற உணர்வு ஆகியவை நல்ல தூக்கத்தைத் தடுத்துவிடும். இதை ஷேக்ஸ்பியர் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

  Methought I heard a voice cry, “Sleep no more!
  Macbeth does murder sleep”—the innocent sleep,
  Sleep that knits up the raveled sleave of care,
  The death of each day’s life, sore labor’s bath,
  Balm of hurt minds, great nature’s second course,
  Chief nourisher in life’s feast.
  [Macbeth, after he had murdered the King]

  Canst thou, O partial sleep, give thy repose
  To the wet sea-boy in an hour so rude,
  And in the calmest and most stillest night,
  With all appliances and means to boot,
  Deny it to a king? Then happy low, lie down!
  Uneasy lies the head that wears a crown.
  [King Henry, part 2]

  Thou hast no figures nor no fantasies
  Which busy care draws in the brains of men;
  Therefore thou sleep’st so sound.
  [Julius Caesar}

  O sleep! O gentle sleep!
  Nature’s soft nurse, how have I frighted thee,
  That thou no more wilt weigh my eyelids down
  And steep my senses in forgetfulness?
  Why rather, sleep, liest thou in smoky cribs,
  Upon uneasy pallets stretching thee,
  And hush’d with buzzing night-flies to thy slumber,
  Than in the perfum’d chambers of the great,
  Under the canopies of costly state,
  And lull’d with sound of sweetest melody?
  [ Henry IV]

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: