Written by S NAGARAJAN
Date: 31 MAY 2018
Time uploaded in London – 7-52 am (British Summer Time)
Post No. 5062
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பாக்யா 1-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதிமூன்றாம்) கட்டுரை
கண் திருஷ்டியும் அறிவியலும்! – 3
ச.நாகராஜன்
திருஷ்டியைப் பற்றி அறிவியல் முத்தாய்ப்பாக என்ன சொல்கிறது என்பதைக் காண்பதற்கு முன்னர் தமிழர் தம் பழக்கங்களைத் தெரிந்து கொள்வோம்.
கண்ணுக்கு அழகூட்டுவதற்காக மட்டும் தமிழ் மங்கையர் மையைத் தீட்டிக் கொள்ளவில்லை. தன்னைத் தீய பார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் மையைத் தீட்டிக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு மை தீட்டும் தாய்மார் மறந்து விடாமல் அதே மையினாலேயே குழந்தையின் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைக்க மறக்கமாட்டார்கள்.
சில பொல்லாத கண்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தான் இந்த திருஷ்டிப் பொட்டு.
மணமக்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து வீட்டில் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள், வயதானவர்கள் கற்பூரத்தை ஏற்றி அவர்களைச் சுற்றி திருஷ்டி கழிப்பது பழக்கம்.
தொன்று தொட்டு இருந்து வரும் இந்த தமிழர்களின் பழக்கம் பல இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.
எடுத்துக் காட்டாக ஒன்றே ஒன்றை மட்டும், சமீப கால இலக்கியத்திலிருந்து இங்கு சுட்டிக் காட்டலாம்.
திருஅருட்பாவை அருளிய அருட்பிரகாச வள்ளலாரின் திருஅருட்பா, ஆறாம் திருமுறையில் 4225ஆம் பாடல் இந்த கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
“கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்”
என்ற வரிகள் கற்பூரத்தைப் பயன்படுத்துவதைச் சுட்டிக் காட்டுவதைக் காணலாம்.
இதன் பொருள் : என் கணவராகிய சிவபிரான் என்னிடம் வந்தருளுவாராயின் அவருக்குக் கண்ணேறு (கண் திருஷ்டி) கழிக்கும் பொருட்டுக் கற்பூரம் கொண்டு வந்து வைப்பீராக என என் செவிலியரிடம் சொன்னேன். அவரது திருவடியின் கீழ்நிலை ஒளியுடைய பூத தத்துவங்களின் நிலையாகும் என்று சொன்னேன். அதனாலோ, வேறு யாது காரணத்தாலோ அவர் வந்திலர்.
இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் கண் திருஷ்டியைக் கழிக்க நவரத்தினங்களை அணிவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் திருஷ்டி கழிக்கப் பல்வேறு வழிமுறைகள், தாயத்துக்கள் மணிகள் அணிவது ஆகியவற்றைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர்; வருகின்றனர்.
கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த அராபியர்கள் கல், மரம் உள்ளிட்டவற்றால் செய்த தாயத்துகளை பாதுகாப்பிற்காக அணிந்தனர்.
பழைய கால ஹீ ப்ரு, எகிப்திய நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் அணிந்த தாயத்துகளையும் அவர்கள் அணிந்தனர். ஆனால் இன்றைய நவ நாகரீக காலத்திலோ அவர்கள் ஒரு சிறிய பேப்பரில் பிரார்த்தனை மந்திரம் ஒன்றை எழுதி வைத்துக் கொள்கின்றனர். இது குர் ஆன் வசனமாக இருக்கும். இதை ஒரு வயதான ஆன்மீகப் பெரியார், தான் தேர்ந்தெடுத்த பொருள் ஒன்றில், கறுப்பு மையால் எழுதித் தருவார்.
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேச மை பேப்பரில் நன்கு ஆழமாகப் பதிவதால் அந்த மைக்கு மவுசு அதிகம்.
இப்படிப் பட்ட தாயத்துக்களை இடது கையிலோ அல்லது கழுத்திலோ அணிவது பாரம்பரிய பழக்கம்.
ஒவ்வொரு நாகரிக மக்களின் தாயத்துக்களை எழுதப் புகுந்தால் அது பெரிய அளவு நூலாக மலரும்.
இனி அறிவியலுக்கு வருவோம்.
உலகம் கண்ட மிகப் பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவர் ராபர்ட் ஓப்பன்ஹீமர். அணுகுண்டைக் கண்டு பிடித்த அவர் அணுகுண்டின் தந்தை என்று போற்றப்படுகிறார். அது வெடிப்பதை நேரில் பார்த்து மலைத்தவர்.
ஹிந்து மதத் தத்துவத்தின் பால் ஆழ்ந்த மதிப்புக் கொண்ட அவர் அணுகுண்டு வெடிப்பைப் பற்றி கீதையின் சுலோகம் ஒன்றை எடுத்துக்காட்டாகக் கூறினார்.
கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனத்தை கீதையின் 11வது அத்தியாயம் விளக்குகிறது. அதில் 12வது ஸ்லோகம் “திவி சூர்ய சஹஸ்ரஸ்ய” என்று கூறுகிறது. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் எப்படி இருக்குமோ அதே போல அணுகுண்டி வெடிப்பு இருந்தது என்று மலைத்துக் கூறினார் ஓப்பன்ஹீமர்.
ஹிந்து பழக்க வழக்கங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் பால் பற்றுக் கொண்டவர் அவர்.
அவரது வாழ்க்கை வரலாற்றை ஆப்ரஹாம் பயஸ் என்பவர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமர் என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.
அதில் வரும் ஒரு செய்தி கண் திருஷ்டியைப் பற்றியது.
ராபர்ட் ஓப்பன்ஹீமர் ஹிந்துக்களின் திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ந்தார்.
அதன் முடிவில் பிரமிக்க வைக்கும் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார்.
“ஹிந்துக்கள் உப்பை (கடல் உப்பு அல்லது கல் உப்பு, உப்புப் பொடி அல்ல) ஒரு சிறு பாத்திரத்தில் (பழைய கால ஆழாக்கு அல்லது படி) போட்டு இடது புறமும் வலது புறமும் தலையைச் சுற்றி திருஷ்டியைக் கழிக்கின்றனர்.
அப்போது லட்சக்கணக்கான நெகடிவ் ஐயான்கள் (Negaive Ions) அவர்கள் உடம்பை விட்டு வெளியேற்றப்படுகின்றன.”
லட்சக் கணக்கான நெகடிவ் ஐயான்கள் என்ற சொற்றொடர் குறிப்பிடத் தகுந்தது.
ஆக இப்படி உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியே ஹிந்துக்களின் திருஷ்டி கழிப்பை அறிவியல் ரீதியாக ஆமோதித்துப் புகழ்கிறார்.
திருஷ்டியைப் பற்றி இவ்வளவு விவரங்களை அறிந்த நீங்கள் எல்லோரிடமும் இதைப் பற்றி அறிவியல் ரீதியாக விளக்கினால், உங்கள் வீட்டார் உங்களுக்குத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டி வரும்.
என்ன இருந்தாலும் கண் திருஷ்டி பொல்லாதது தானே!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
சமீபத்தில் மறைந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்கின் கடைசி பேப்பர் (ஆய்வுத் தாள்) வெளியாகியுள்ளது. அதில் அவர் மிகவும் சிக்கலான விஷயமான மல்டி வர்ஸ் (Multi Verse) எனப்படும் பல் பிரபஞ்சக் கொள்கையைப் பற்றி எழுதியுள்ளார்.
பிரபஞ்சம் என்பது ஒரு பிரபஞ்சம் மட்டும் அல்ல; ஒவ்வொரு பிரபஞ்சத்தின் மேலாகவும் அடுக்கடுக்காக பிரபஞ்சங்கள் உள்ளன என்பது பல் பிரபஞ்சக் கொள்கையின் தத்துவம்.
முதலில் எள்ளி நகையாடப்பட்ட இந்தக் கொள்கைக்கு சமீப காலமாக மதிப்பு அதிகமாகிக் கொண்டு வருகிறது.
இதை ஆதரித்தவர்களுள் முக்கியமானவர் ஸ்டீபன் ஹாகிங்.இவருடன் இணைந்து இதை ஆராய்ந்த ஹெர்டாக் (Hertog) என்ற விஞ்ஞானி பல பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை ஹோலோகிராபி என்ற உத்தி மூலம் கண்டோம் என்கிறார்.
டபிள்யூ.டன் என்பவர் நத்திங் டைஸ் (Nothing Dies) என்ற நூலில் அனைவரும் “எங்கேயோ இருந்து கொண்டே இருக்கிறோம்” என்கிறார். அதாவது யாரும் சாவதில்லை; ஒவ்வொரு கண வாழ்க்கையையும் இன்னொரு பிரபஞ்சத்தில் பதிவாகியுள்ளது அப்படியே இருக்கும்!
நவீன விஞ்ஞானம் கூறும் இப்போதைய பல் பிரபஞ்சக் கொள்கைப்படி நாம் அனைவருமே வாழும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்ற இந்தக் கொள்கையைக் கூட ஆதரிப்பதாக ஆகி விடும்.
சில விஞ்ஞானிகள் இந்த ஆய்வுப் பேப்பரின் கொள்கையை மறுத்து ஹாகிங் செய்தது ஒரு டாய் மாடல் (Toy Model) தான், தீர்க்கமாக இது பற்றி இன்னும் ஆராய வேண்டும் என்று சொல்கின்றனர்.
ஆக தனது கடைசி ஆய்வுத் தாளினாலும் கூட மிகவும் பேசப்படுபவராக ஆகி விட்டார் ஸ்டீபன் ஹாகிங்!
***
R.Nanjappa (@Nanjundasarma)
/ May 31, 2018ஒரு நிலையில் நவீன விஞ்ஞனிகளின் கண்டுபிடிப்புக்கள் பிரமிக்க வைக்கின்றன. ஆனால் ஆழ்ந்து யோசிக்கும் போது கவலை தருவதாகவே இருக்கின்றன. எந்த விஷயத்தைப் பற்றியும் அறுதியிட்டு எதையும் சொல்ல இயலாதவர்களாகவே இருக்கிறார்கள்.
விரிந்துகொண்டே போகும் பிரபஞ்சம் Expanding Universe என்றார்கள். அது அவர்கள் கருத்துக்கும் கற்பனைக்கும் அடங்காமல் போகவே, ‘நம் பார்வைக்கு உட்பட்ட பிரபஞ்சம்’ Observable Universe என தங்களுக்குத் தாங்களே ஒரு எல்லை வகுத்துக்கொண்டார்கள்! இது ஒரு ஜன்னல் வழியாக ஆகாயத்தைப்பார்த்து அதன் முழுமையை ஆராய்வது போன்றது!
ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை Time-Space பற்றிய நமது சிந்தனையையே புரட்டிப்போட்டுவிட்டது. ஆனால் நடைமுறை வாழ்க்கையை இது எவ்வாறு பாதிக்கிறது என்பதை இதுவரை எந்த விஞ்ஞானியும் சரியாக விளக்கியதாகத் தெரியவில்லை! உலகிலேயே பன்னிரண்டு விஞ்ஞானிகள்தான் ஐன்ஸ்டீனையே சரியாகப் புரிந்துகொண்டார்கள் என்பார்கள்!
Quantum , Particle physics வந்த பிறகு நியூட்டன் வகுத்த பௌதிக விஞ்ஞானக் கோட்பாடுகள் தகர்த்தெரியப்பட்டன; ஆனாலும் ஒரு எல்லைக்குள் அவை வழங்கியே வருகின்றன! இது ஒரு அற்புதம் என்றே சொல்லவேண்டும். இறுதி நிலையில் Quantum கோட்பாடுகளே உண்மையானவை; ஆனால் நடைமுறையில் , ஒரு எல்லைக்குள், நியூட்டனின் வழியும் சரியே! இது ஆதி சங்கரர் சொன்ன பரமார்த்திக உண்மை, வியவஹாரிக உண்மை என்ற நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது! இதை Fritjof Capra வின் Tao of Physics என்ற புத்தகத்தின் வாயிலாக ஓரளவு அறிந்துகொண்டோம்! ஆனாலும் திகைப்பாக இருக்கிறது!
சரி, இந்த உலக இயக்கத்தின் அடைப்படை அம்சமாக எதைச் சொல்லலாம்?
Law of Entropy என்பர் ஒரு சாரார். இந்த கொள்கைப்படி, in any natural process, there is an inherent tendency towards dissipation of useful energy. அதாவது, நாம் சக்தியை பயன்படுத்தும் பொழுது, ஓரளவு சக்தி வீணாகிறது. நாளடைவில் வீணாகும் சக்தியின் அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. இப்படி உலக இயக்கம் முழுமையுமே அழிவுப் பாதையில் தான் போகிறது! [ ஒரு சின்ன உதாரணம்: ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு கார் ஓட்டினால், 15 கி.மீ. போவதாகக் கொண்டால், அந்த பெட்ரோலின் சக்தி, 15கிமீ+ காரில் எழுந்து வெளியில் பரந்த வெப்பம் என்று சொல்லலாம். ஆனால் 15 கிமீ திரும்பி வந்தால் பெட்ரோல் மீண்டு வராது. Energy spent is irreversible. Such irreversible quantity will one day exceed all useful energy! மேலும், எரி சக்தி பெட்ரோலுடன்தான் வருகிறது; இந்த பௌதிக உலகில் பெட்ரோல் ஒரு காலத்தில் தீர்ந்துவிடும்! Thus, every source of energy in the world will be exhausted, since in the material universe energy is embedded in matter and the earth cannot exchange matter with the rest of the universe! விஞ்ஞானிகள்
‘என்ட்ரோபி’ என்று நமக்குப் புரியாத மொழியில் பேசுகிறார்கள். இதை நமக்குப் புரியும்படி விளக்கியவர் Jeremy Rifkin. 1981 ல் வந்த இவர் புத்தகம் [Entropy] 1989ல் மறு பதிப்புக் கண்டது. ஆனால் இன்று கிடைப்பதரிதாக இருக்கிறது. என்ட்ரோபி கொள்கையை அறிந்த ஐன்ஸ்டீன் ‘இதுவே உலகின் அறுதிக் கோட்பாடு ‘ “ultimate law” என்று சொன்னதாக ரிஃப்கின் எழுதியிருக்கிறார்! எனவே, நாம் முன்னேற்றம் [ விஞ்ஞானம் , பொருளாதாரம்] என்பனவெல்லாம் அழிவுப்பாதையிலேயே செல்கின்றன!
இனி. ஸ்டீபன் ஹாகிங் கூறிய சில விஷயங்களும் கவலையூட்டுவதாகவே இருக்கின்றன. முக்கியாமாக ஏழு விஷயங்களைச் சொல்கிறார்கள்:
– மரபணுக்களில் கைவைப்பது மனிதகுலத்தின் மீதே திரும்பிவிடும்
[ genetic modification will recoil on us]
– வேறு பிரபஞ்சங்களில் வசிப்பவர்கள் பூமியை ஆக்ரமிப்பார்கள்.
– இந்த பூமி 600 வருஷங்களில் வெப்பத்தினால் எரிந்துவிடும்.
– ஆனால் அதற்கு முன்பாகவே இது மனிதர்கள் வசிப்பதற்கு தகுதியில்லாத இடமாக ஆகிவிடும்
– மனிதன் வேறு கிரகங்களில் இருப்பிடம் தேடவேண்டும்!
-அணு ஆயுதங்கள் மனிதகுலத்தை அழித்துவிடும்
– Robotகள் மனிதனின் இடத்தைப் பிடித்துவிடும். செயற்கை அறிவு மனிதனுக்குக் கேடுசெய்யும்.
இதையெல்லாம் படிக்கும் போது, இது விஞ்ஞானமா, கலிகாலத்தைப் பற்றிய புராணக் கருத்தா என்று மலைக்கிறோம்!
[ இங்கு சொன்ன எந்த விஷயத்திலும் விஞ்ஞானிகளிடையே கருத்தொருமை இல்லை! யாரை நம்புவது என்பது அவரவர் இச்சை!]