ஜாகர்த்தா மியூஸியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத கல்வெட்டு.
இந்தோநேஷிய பாஷா லிபியில் உளது.
Written by London swaminathan
Date: 11 JUNE 2018
Time uploaded in London – 8-25 am (British Summer Time)
Post No. 5098
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)
பிராஹ்மணத் தலைவர்களுக்கு கம்போடிய மன்னர்கள் கோவில்கள் கட்டிய சுவையான தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன.
கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், பர்மா, இந்தோநேஷியா ஆகிய நாடுகளில் உள்ள கல்வெட்டுகளில் அங்குள்ள பிராஹ்மணர்களின் செல்வாக்கு பற்றிய அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன. யசோவர்மன் (கி.பி.889) என்னும் கம்போடிய மன்னனின் கல்வெட்டு பின்வரும் தகவலை அளிக்கிறது:-
‘மன்னன், கடமைகளில் தவறாதவன்; கோடி ஹோமமும் பல யக்ஞங்களும் செய்தான்; பிராஹ்மணர்களுக்கு தங்கமும் நகைகளும் வாரி வழங்கினான்’ — என்று கல்வெட்டு கூறுகிறது. அவனது காலத்தில் சைவ சமயம் தழைத்தோங்கியது.
கம்போடியாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பிராஹ்மணர்கள் பிரசன்னமாயிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து தொடர்ந்து வந்த பிராஹ்மணர் எண்ணிக்கையால் அவர்களின் ஜனத்தொகை அதிகரித்தது.
மன்னனையே இறைவனாக கருதி கோவில் கட்டுவது இரண்டாவது ஜயவர்மன் (கி.பி.802) காலத்தில் ஆரம்பித்தது. அதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த வழக்கம் வளர்ந்தது. அங்கோர்வட் காலத்தில் வைஷ்ணவ மதம் செழித்தது.
பிராஹ்மணர்களின் செல்வாக்கு வளர, வளர மன்னர்களுக்கும் மேலாக அவர்கள் புகழ் பரவியது. குறிப்பாக சிவ கைவல்யர் என்னும் குடும்பத்தினர் பரம்பரையாக மன்னர்களுக்குப் புரோஹிதர்களாக விளங்கினர்.
நமது நாட்டில் பிரதம மந்திரிகள், முதல் மந்திரிகள், கவர்னர்கள் மாறினாலும் அவர்களிடம் வேலை பார்த்த சில அரசாங்க அதிகாரிகள் மற்றும் செயலர், டிரைவர், பியூன், சமையல்காரர் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதால் அவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது; அவர்களின் நீண்ட கால அனுபவம் பயன்படும். இதுபோல சில பிராஹ்மணக் குடும்பங்கள் பல மன்னர்களை உருவாக்கின. அவர்களுடைய தயவு மன்னர்களுக்குத் தேவைப்பட்டது.
எகிப்திய மன்னன் அம்னோதேப்புக்கு (அமண தேவன்= ஸ்ரமண தேவன்), துருக்கி மன்னன் தசரதன் எழுதிய கடிதம்/ கல்வெட்டு; க்யூனிபார்ம் லிபியில் உளது.
மேலும் அவர்களுடைய ஸம்ஸ்க்ருத அறிவு சட்டப் புத்தகங்களையும் வேத தர்மங்களையும் அறிய உதவியது. இதனால் வெறும் புரோகிதர் பதவியில் மட்டுமின்றி சட்ட ஆலோசகர்களாகவும், அமைச்சர்களாகவும் விளங்கினர். அங்கோர்வட் சிற்பங்களில் பிராஹ்மண ஆசிரியர் துரோணர், பிராஹ்மணராக மாறிய விஸ்வாமித்ரர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கோடஸ் (COEDES) என்னும் அறிஞர் செப்புகிறார்.
சிற்பங்களில் உயர்குடி மக்கள் உச்சுக் குடுமியுடனும் (தலையின் உச்சியில் தூக்கிக் கட்டிய குடுமி) CHINGON, தாழ்ந்த குல மக்கள் கீழே தொங்கும் தாழ் சடையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சில ஊர்வல சிற்பங்களில் பிராஹ்மணர்கள் மட்டுமே அதைக் காண்பதாகவும் உள்ளன.
மன்னர்களுக்குத் தலை வணங்காத ஒரே இனம் பிராஹ்மணர்கள் என்பதாக சிற்பங்கள் காட்டும்; ஏனையோர் தாழ்ந்த தலையுடன் நிற்பர். இத இந்தியாவிலும் காணலாம். மன்னர்கள் இறைவனுக்கும் பிராஹ்மணர்களுக்கும் மட்டுமே தலை வணங்குவர், தலை தாழ்த்துவர் என்று மிகப் பழைய புற நானூற்றுப் பாடல்கள் போற்றுகின்றன.
தாய்லாந்து, கம்போடியாவில் புத்த மதம் ஆதிக்கம் பெற்றபோதும் பிராஹ்மணர்களுக்கே முதலிடம் தரப்பட்டது; தாய்லாந்தில் இன்று வரை இது நீடிக்கிறது.
கம்போடியாவில் பிராஹ்மணர்கள் க்ஷத்ரிய ஜாதியாருக்குப் பெண் கொடுத்து, பெண் எடுத்த செய்திகள் உள. புராதன பிராஹ்மணர்களின் வழி வந்த பாகு (Bakus) என்போர் மன்னர் ஆட்சிக்கு வழி இல்லாத போது அரசு கட்டிலும் ஏறி முரசு கொட்டினர்.
அசோகர் கல்வெட்டுகளில் எப்படி புத்தமத ஸ்ரமணர்களுக்கும் முன்னர் பிராஹ்மண ஜாதி குறிப்பிடப்படுகிறதோ அதே போல பர்மா, தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளில் புத்த மதத்தினருக்கும் முன்னதாக பிராஹ்மண குருக்களே இடம் பெற்றனர்.
ஐயருக்கும் கோவில்கள்
சில பிராஹ்மணத் தலைவர்கள் “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று கபிலர் என்னும் புலவரை சங்கத் தமிழ் நூல்கள் போற்றுவது போல ஒழுக்க சீலர்களாகவும், அறநெறி தவறா பெருந்தகைகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களுக்குக் கோவில்களும் எழுப்பப்பட்டன.
எட்டாவது ஜயவர்மன் காலத்தில் ஜயமங்களார்த்த என்ற பிராஹ்மண புரோகிதருக்கு கோவில் கட்டப்பட்டது. இதே போல வித்யாவிசத் என்பவருக்கும் கோவில் இருந்தது. சீன யாத்ரீகர்கள் பூணுல் அணிந்த பிராஹ்மணர்களைப் பார்த்ததை குறிப்பிடத் தவறவில்லை.
ஒன்பதாம் நூற்றாண்டு முதலாவது இந்திரவர்மன் கால அங்கோர்வட்டில் சிவ சோமன் என்ற பேரறிஞரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் சங்கரரிடம் வேதாந்தம் கற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது.
பிராஹ்மணர்கள் கடல் கடந்து போக க்கூடாது என்று மநு தர்ம சாஸ்திரம் புகலும். பெண்கள் கடல் கடந்து போகக் கூடாது என்று தமிழ் தொல்காப்பியம் நுவலும். ஆயினும் பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு பலரும் சென்றதை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இலங்கையின் முதல் மன்னனுக்கு – விஜயனுக்கு— அரச குல மங்கைகள் தேவைப்பட்டதால் மதுரை பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் அனுப்பப்பட்டனர்; அவர்களில் ஷத்ரிய குல நங்கைகளும் அமைச்சர்களின் பிராஹ்மண குல மங்கைகளும் அடக்கம்.
இதே போல தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியப் பிராஹ்மணர்களின் வருகை பற்றிப் பகரும் கல்வெட்டுகளும் உள.
1500 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்த தென் கிழக்காஸிய நாடுகளின் இந்து சாம்ராஜ்யத்துக்கு விதை ஊன்றியவர்களும் அகஸ்த்யர், கௌண்டின்யர் என்ற இரண்டு பிராஹ்மணர்களே.
கம்போடியாவில் மட்டுமின்றி பர்மாவிலுள்ள பகான், தாய்லாந்திலுள்ள சுகோதை நகர அரச வம்சங்களுக்கும் பிராஹ்மண புரோகிதர்களே அபிஷேக ஆராதனைகளை செய்துவைத்தனர். அவர்களுக்குப் பின்னர் புத்த குருமார்கள் வந்தனர். பிராஹ்மண குருக்களை வேலைக்கு எடுத்தபோதே அவர்களுக்கு ஸம்ஸ்க்ருத நூல் அறிவோடு பௌத்த மத ஸம்ப்ரதாயங்களும் தெரிய வேண்டும் என்று புதிய தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.
சம்பா என்று அழைக்கபட்ட வியட்நாமில் பிராஹ்மணர் நிலை தாழ்ந்த அளவுக்கு ஏனைய நாடுகளில் தாழவில்லை. சம்பா தேசத்து போ நகர கல்வெட்டில் பிராஹ்மணர்களும் மன்னர் காலடியில் விழுந்து வணங்கியதாக எழுதப்பட்டுள்ளத்து. இத்தகைய கல்வெட்டு வாசகத்தை இந்தியாவிலோ வேறு எங்கோ காண முடியாது.
தாய்லாந்தில்
தர்மராஜ (1361) என்ற மன்னன் வேத சாஸ்திர நூல்களிலும் வான சாஸ்திரத்திலும் வல்லவன் என்று ஒரு கல்வெட்டு விளம்பும். தர்மராஜ அசோக (1510) என்ற மன்னன் இந்து மதத்தையும் புத்தமததையும் ஒரு சேர ஆதரித்ததாக மற்றொரு கல்வெட்டு ;போற்றும். ஆக திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் வியட்நாமில் (சம்பா தேசம்) ஆளத் துவங்கியதிலிருந்து 1600-களில் முஸ்லீம் ஆக்ரமிப்பாளர்கள் வரும் வரை 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காஸிய நாடுகளில் இந்து மதம் கொடி பறந்தது என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.
உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தொநேஷியாவில் பிராஹ்மணர் ஆதிக்கம் பற்றிய தகவல்கள் எனது நேற்றைய கட்டுரையில் (மூல வர்மன் கல்வெட்டு) உளது.
ஸம்ஸ்க்ருத ஆதிக்கத்தைப் பரவ விடாத இலங்கையிலும் கூட ‘குண்ட மாலா’ என்ற ஸம்ஸ்க்ருத நூல் இயற்றப்பட்டதாக ஆராய்சியாளர் சிலர் உரைப்பர்.
-சுபம்-
tskraghu
/ June 11, 2018thanks for bringing to the fore info like this.