Written by LONDON SWAMINATHAN
Date: 19 JUNE 2018
Time uploaded in London – 7-01 AM (British Summer Time)
Post No. 5127
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
உலகில் உள்ள இரண்டு பழைய மொழிகள் ஸம்ஸ்க்ருதமும் தமிழும்.
தமிழ் மொழிக்கு ஸம்ஸ்க்ருதத்தை விட நெருங்கிய மொழி எதுவும் இல்லை. வேற்றுமை உருபுகள், அகர வரிசை, சொற்கள், மொழி அமைப்பு, சந்தி முதலியன இவற்றைக் காட்டி நிற்கும்! ஆகையால் இவ்விரண்டு மொழிகளும் சிவ பெருமானின் உடுக்கை ஒலியின் வெவ்வேறு பக்கத்தில் எழுந்த இரு வேறு மொழிகள் என்பது உறுதியாகிறது. இதை நிரூபிக்க பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிவிட்டேன் ஆகையால் அரைத்த மாவையே அரைக்காமல் அடுத்த கட்டத்துக்குப் போகிறேன். அகஸ்த்ய மஹரிஷியை, தமிழுக்கு இலக்கணம் வகுத்த சிவபெருமான் அனுப்பிய சான்று ஒன்று போதுமே!
இப்பொழுது லோகேஷ் சந்திரா எழுதிய இந்திய ஜப்பானிய உறவு பற்றிய 400 பக்க புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். எந்தப் பக்கம் எடுத்தாலும் ஒரு புதிய, சுவை மிகு தகவல்.
ஜப்பானியர்களும் க, கா, கி, கு, கூ……………… என்று நமது ஸம்ஸ்க்ருத-தமிழ் அகர வரிசைப்படியே மொழி பயில்கின்றனராம். லோகேஷ் சந்திராவும் அவரது தந்தை டாக்டர் ரகுவீராவும் பெரிய மேதைகள். இந்திரா காந்தி தனக்கு வந்த ஜப்பானியப் பரிசுப் பொருட்களின் மேலுள்ள எழுத்துக்களுக்கு பொருள் தெரிய இவரிடம் அனுப்புவாராம். எவராவது வந்து இந்திய- ஜப்பானிய உறவு பற்றிக் கேள்வி கேட்டாலும் லோகேஷ் சந்திரவிடம் அனுப்பிவிடுவாராம். இதையெல்லாம் ஆதாரத்துடன் எழுதியுள்ளார் புஸ்தகத்தில்.– நிற்க.
ஜப்பானிய மொழியை கஞ்சி (KANJI) லிபியில் எழுதுகின்றனர். இது இந்திய எழுத்து முறையுடன் ஆழ்ந்த தொடர்பு உடைத்து.
ஜப்பானிய குழந்தைகள் பள்ளிக்குப் போனவுடன் தொடக்க வகுப்பிலேயே ஒரு பாடலைக் கற்க வேண்டும் இதில் 50 ஜப்பானிய எழுத்துக்களும், ஒலிகளும் வந்துவிடும். அது பொருள் பொதிந்த ஒரு ஸம்ஸ்க்ருதப் பாடலின் மொழிபெயர்ப்பு!
இரொஹா (IROHA) கவிதை என அழைக்கப்படும் இந்த முதல் பாடத்திலேயே நாம் திருக்குறளிலும் நாலடியாரிலும் படிக்கும் ‘நிலையாமை’ என்னும் டாபிக் (TOPIC) வந்து விடுகிறது!
பாடலின் சுருக்கம் இதோ:-
“அழகான வண்ணங்கள், எப்படி அடித்துச் செல்லப்பட்டன!
இந்த உலகில் யார் நிலையாய் வாழ்பவர்?
நிலையற்ற வாழ்வு மலை போல நிற்கிறது.
இன்றைய நாளைக் கழித்துவிட்டோம்.
பொருளற்ற கனவுகள் இனியும் வேண்டாம்;
மாய மயக்கத்தில் (போதையில்) உழல மாட்டோம்.”
KRISHNA( ??) IN JAPAN
ஏதோ ஆதிசங்கரர் எழுதிய விவேக சூடாமணியைப் படிப்பது போலத் தோன்றும். முதல் வகுப்பிலேயே இந்திய தத்துவத்தின் உயர்ந்த கருத்துக்களை மனதில் பதித்து விடுகின்றனர். குழந்தையைப் பொறுத்தமட்டில் அது ஒரு செர்ரிப் பழ மரத்தைப் (CHERRY FRUIT TREE) பார்த்துப் பாடும் பாடல் இது. அதன் இலைகள் உதிர்வதைப் பார்த்துப் பாடும் பாடல். ஆனால் வயது முதிர முதிர, நாம் பாடியது நமது வாழ்க்கை பற்றியதன்றோ என்ற சிந்தனை எழும்!
வள்ளுவன் சொல்ல வில்லையா? இன்றிருப்போர் நாளைள இல்லை என்ற சிறப்புடைத்து இவ்வுலகம் என்று! (காண்க– நெருநல் உளன் ஒருவன் –குறள் 336) மஹாபாரதத்தின் யக்ஷப் ப்ரஸ்னத்திலும் உலக மஹா கவி காளிதாஸனின் ரகு வம்ச காவ்யத்திலும் இக்கருத்து உண்டு.
லோகேஷ் சொல்கிறார்:
இந்தப் பாடல் ஒரு ஸம்ஸ்க்ருதப் பாடலின் மொழிபெயர்ப்பு என்று!
ஸர்வே ஸம்ஸ்காராஹா அநித்யாஹா உத்பாத வ்யய தர்மினஹ
தேஷாம் வ்யுப சமாஹா சுகம் அவதத் மஹா ஸ்ரமணஹ
இது ‘மஹா பரிநிர்வாண சூத்ர’த்தின் ஸம்ஸ்க்ருதப் பாடல் என்றும் இதையே ஜப்பானியக் குழந்தைகள் முதலில் இரோஹா கவிதை என்று கற்கிறதென்றும் சொல்கிறார். மத்தியகாலத்தில் இந்தியா மீது படையெடுத்த காட்டுமிராண்டிகள் புத்தமத மடாலயங்களை அழித்துவிட்டதால் இந்தியாவில் இது கருகிச் சாம்பல் ஆகிவிட்டது; ஜப்பானில் இன்றும் உயிர்த் துடிப்புடன் உளது என்று நுவல்கிறார் லோகேஷ் சந்திரா!
(முஸ்லீம்கள் நாளந்தா பல்கலைக் கழகம் முதலியவற்றைத் தீயிட்டுக் கொளுத்தியதைக் குறிப்பிடுகிறார் இந்தப் பேரறிஞர்).
–சுபம்–