Written by S NAGARAJAN
Date: 20 JUNE 2018
Time uploaded in London – 7-31 am (British Summer Time)
Post No. 5130
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 51
மது.ச.விமலானந்தம் அவர்களின் ‘பாரதி சபதம்’
ச.நாகராஜன்
1
பாரதி ஆர்வலர் மது.ச.விமலானந்தம் அவர்கள் தஞ்சாவூரில் சரபோசி மன்னர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அவர் பாஞ்சாலி சபதத்தை ஆய்வு செய்து எழுதிய நூல் இது. முதற் பதிப்பு 1963ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சவூர் பைந்தமிழ்ப் பண்ணை வெளியீடாக வெளி வந்தது. 122 பக்கங்கள் கொண்ட இந்த நூலை காரைக்குடி வி.ஆர்.எம் செட்டியார்,அவ்வை டி.கே.சண்முகம், பாரதியாரின் பேத்தி திருமதி விஜய பாரதி, தமிழ்ப் பேராசிரியர் புலவர் வி.அ.அரங்கசாமி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
“In his interesting criticism amounting to research, there is a vivid clarity of presentation, emphasizing the acme of central dramatic situations, the glory of the characterization, and the changing medium of expression.”என்று
நூலாசிரியரை வி.ஆர்.எம் செட்டியார் புகழ்ந்துரைக்கிறார்.
‘தேசியத் திருக்காப்பியம்’ என்றும், எக்காலத்திற்கும் ஏற்ற ‘தற்காலத் தன்மை’ வாய்ந்தது என்றும், ‘பாஞ்சாலி சபதம்’ என்பது பாரதியின் சபதமே என்றும் ஆசிரியர் மெய்ம்மறந்து பாராட்டும் பண்பு சுவைக்கத் தகக்து” என்று அவ்வை டி.கே.சண்முகம் பாராட்டுகிறார்.
திருமதி விஜயபாரதி ஆசிரியரைப் பாராட்டுவதுடன் அவர் பாஞ்சாலியின் சபதம் பாரதியின் சபதமே என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள இயலாது என்பதையும் நாசுக்காகத் தெரிவிக்கிறார்.
ஆக, பலரது பாராட்டையும் பெற்ற இந்த நூல் தகுதியுடைய ஆராய்ச்சி நூலாக மிளிர்கிறது.
2
நூலாசிரியர் வியாச பாரதத்தையும் வில்லி பாரதத்தையும் நன்கு ஆய்ந்து படித்தவர். பாஞ்சாலி சபதத்தைக் கரைத்துக் குடித்தவர்.
வியாச பாரதத்தில் உள்ள குறைகளாக ஐந்து குறைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
1)வஞ்சனையே உருவான சகுனி துரியோதனனுக்கு பாண்டவர் குறித்து பொறாமை கொள்ளலாகாது என்று கூறுகிறான். வஞ்சக சகுனி இப்படி உரைப்பானா?
2)திருதராஷ்டிரன் சூதாட்ட சமயத்தில் திரௌபதியை பணையமாக வைக்கப்பட்ட போது வென்றாகி விட்டதா என்று பலமுறை கேட்டதாக வியாசர் கதையை அமைத்திருக்கிறார்.சூதாட வேண்டாம் என்று துரியோதனனுக்கு நல்லறிவு சொன்ன முதியவரா இப்படிக் கேட்டிருப்பார்?
3) தர்மன், ‘திரௌபதி மாதவிடாயாய் இருப்பதால் அவள் ஒற்றாடை அணிந்து வரட்டும்; அதைப் பார்த்து அவையோர் துரியோதனனைத் தூற்றட்டும்’ என்று ஒருவன் மூலம் சொல்லி அனுப்புவதாக வியாசர் கூறுகிறார். எந்த கணவனாவது இப்படிச் சொல்லி அனுப்புவானா?
4) தேர்ப்பாகன் – ஒரு ஏவலன் – திரௌபதியைச் சென்று அழைக்கிறான். இது நடக்கக் கூடிய ஒன்றா?
5) தேர்ப்பாகனான பிரதிகாமியையும் துச்சாதனனையும் நோக்கி, ‘பாண்டவர்களைக் கண்டு பயப்படுகிறீர்களா, பயப்பட வேண்டாம், அவர்கள் யாது செய்வர்? என்கிறான் துரியோதனன்.இது துரியனின் ஆற்றலுக்கு இழுக்கு சேர்வதாக அல்லவா அமைகிறது.
ஆக இந்த ஐந்து குறைகளையும் வியாசர் குறைகளாகக் காண்கிறார் நூலாசிரியர்.
வில்லிப்புத்தூராரின் நான்கு குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர்.
3
“அடுத்து பாரதி சபதம் – பாஞ்சாலி சபதம் என்ற அத்தியாயத்தில் தமிழ்த் திறத்தால் நாட்டுப் பற்றை ஊட்டியவர், கண்ணன் புகழ் பாடியவர், பெண்ணின் பெருமையைப் பேசியவர் பாரதியார்.
இந்த மூன்றையும் தனித்தனியே பாடிப் போந்த பாரதிக்கு மூன்றையும் இணைத்துப் பாடும் வாய்ப்பு பாரதக் கதை மூலம் கிடைத்தது.”
“பாஞ்சாலி சபதம் பாரதி சபதமே என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு: தருமன், பாஞ்சாலியைப் பணையப் பொருளாக வைத்துச் சூதாடிய கொடுமையைப் பொறுக்காது பொங்கி எழுந்தான் வீமன். அங்கே பாரத அன்னையை மனதில் எண்ணிய பாரதியின் வெகுளி தலை காட்டுதல் காணலாம்.
இரு பகடை என்றாய் – ஐயகோ!
இவர்க் கடிமை யென்றாய்!
இது பொறுப்ப தில்லை – தம்பி!
எரி தழல் கொண்டு வா
கதிரை வைத் திழந்தான் – அண்ணன்
கையை எரித்திடுவோம்
என்பதில் பொருளும் சொல்லும் பழையதாகலாம். ஆனால் பொருளோடு பொருந்திய தொனியும், சொல்லோடு அமைந்த துடிப்பும் அங்கே சீற்றமுற்றுச் சாற்றியது வீமன் அல்லன், வரகவியே என விளங்கும்.”
“பாரதிக்குக் கண்ணனும் பெண்மையும் இரு கண்கள்; வலக்கண் ஆற்றல் நிலையது – அது தான் ஞாயிறு – வெம்மையது. அதுவே கண்ணன். இடக்கண் அமைதி நிலையது – அது தான் திங்கள் – தண்மையது – அதுவே பெண்.
இரண்டும் வேண்டும். ஆற்றலும் வேண்டும்; அமைதியும் வேண்டும். இதனைத் தான் ‘பாஞ்சாலி சபத’ வாயிலாக பாரதி உணர்த்துகின்றார்.”
இப்படி பல விதமாக பாஞ்சாலி சபதத்தை ஆய்வுக் கண்ணுடன் அலசி தன் கருத்துக்களைத் தருகிறார் விமலானந்தம்.
4
இப்படி நூலை நுணுகி ஆராய்ந்து பல்வேறு மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி பாரத அன்னையை மனதில் வைத்து எழுதப்பட்ட பாஞ்சாலி சபதம் உண்மையில் பாரதியின் சபதமே என்று நிறுவுகிறார் நூலாசிரியர்.
மறுக்க முடியாது.
“பாஞ்சாலி சபதம் தரும் இன்பம் இணையற்றது; துயர நிகழ்ச்சி தான்; துயரவுணர்வு தான்; ஆயினும் அந்நிகழ்ச்சியை அனுபவிப்பதால் வரும் இலக்கிய இன்பத்திற்கோ ஈடில்லை”
‘பாஞ்சாலி சபதத்தைப் படித்தேன். தேனுண்டேன். தேனுண்ணும் வண்டாகவே நின்றிருக்கலாம். தேனுண்ட மயக்கில் தேனிலேயே வீழ்ந்து விட்டேன். ஆனாலும் திளைத்தேன். அந்தக் கிறுக்கில் தோன்றிய உளறு மொழிகளைத் தான் உங்கள் முன் கொட்டினேன்.” என்கிறார் மது.ச.விமலானந்தம்.
கிறுக்கு மொழிகளாக இருப்பினும் தேன் மொழிகளாகவே அமைகிறது.
பாரதியின் பாஞ்சாலி சபதத்தை பாரதத்துடன் இணைத்துக் காணும் ஆய்வு நூல் இது.
பாரதி அன்பர்கள் விரும்பி ஏற்கும் நூலாகவும் இது அமைகிறது.
படியுங்கள்; பாஞ்சாலி சபதத்தை ரசியுங்கள்.
***