ஈயடித் தர்ப்பணக் கதை! (Post No.5150)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 26 JUNE 2018

 

Time uploaded in London –  15-10 (British Summer Time)

 

Post No. 5150

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும் — குறள் 405

பொருள் :– கல்லாதவன் மதிப்பு, அவன் வாயைத் திறந்தவுடன் தெரிந்துவிடும்

ஈயை அடித்து தர்ப்பணம் செய்த போலி பிராமணன் கதை!!

ஒரு கிராமத்தில் பெரிய அக்ரஹாரம். அங்கு வைதீக விஷயங்கள், மந்திரங்கள் தெரியாத ஒருவர் எல்லா சடங்குகளும் தெரிந்தது போல நடிப்பார். தனிமையில் போய் ஸந்தியா வந்தனம் முதலிய கிரியைகள் செய்து வருவதாகச் சொல்லி ஏமாற்றி வந்தார்.

 

ஒரு சமயம், ஒரு முழு ஸூர்ய கிரஹணம் வந்தது. அது போன்ற சமயங்களில் எல்லோரும் ஆற்றங்கரைக்குப் போய் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆகையால் இந்த போலிப் பிராஹ்மணனும் அவர்களுடன் போக நேரிட்டது.

 

எல்லோரும் ஆற்றங்கரையில் ஸ்நாதிகளைச் செய்து தர்ப்பணம் பண்ணத் துவங்கினர். இவருக்குப் பயம்; இன்று நமது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தார். ஆகையால் மிகவும் கவனமாக அருகிலுள்ள பிராஹ்மணன் என்ன எல்லாம் செய்கிறார் என்று பார்த்து அதன் படியே செய்தார். மந்திரத்தை மட்டும் சொல்லுவது போல வாயை அசைத்து பாவனை செய்தார்.

 

 

அவர் பூணூலை இடம் மாற்றினால், இடப்பக்கமாகவும், வலம் மாற்றினால் வலப்பக்கமாகவும் மாற்றி விரைவாகச் செய்து கொண்டிருந்தார். இவருடைய துரத்ருஷ்டம், இவர் எந்தப் பிராஹ்மணனைப் பார்த்து தர்ப்பணம் செய்தாரோ அந்தைப் பிராஹ்மணன் முதுகில் ஒரு ஈ உட்கார்ந்தது. அவர் ஓங்கி ஒரு அடி அடித்து அதை விரட்டினார். அதைப் பார்த்த போலி பிராஹ்மணனும் முதுகில் ஓங்கி அடித்துக் கொண்டார். மற்றொரு ஈ இன்னொரு பக்கம் உட்காரவே உண்மைப் பிராஹ்மணன் அந்தப் பக்க முதுகில் ஒரு அடி அடித்து ஈயை விரட்டினார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த போலி பிராஹ்மணன் அதைப் பார்த்து அப்படியே செய்ய எல்லோருக்கும் தெரிந்துவிட்டது இது ஒரு சந்தேஹக் கேஸு என்று.

 

சிலர் தைரியமாக அவரிடம் வந்து ஏனய்ய இப்படிச் செய்தீர்? என்று கேட்க, ஓ, அதுவா? எனக்கு ஈயடிக்கும் மந்திரத்தின் பொருள் தெரியாது; அவர்தான் ஈயடி தர்ப்பண மந்திரம் அறிந்தவர் என்று சொல்ல அனைவரும் ‘கொல்’ என்று சிரித்தனர். எல்லோரும் பிடிப்பதற்குள் அவர் ஓடிப் போய்விட்டார்.

தமிழில் ‘ஈயடிச்சான் காப்பி’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. இதை வைத்துத்தான் அந்த சொற்றொடரும் வந்தது போலும்!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.

அறிவாளிகளின் சபையில் முட்டாள் எளிதில் அகப்படுவான்.

 

(பழைய நூலில் கிடைத்த கதை!)

 

–சுபம்—

 

Comments are closed.
%d bloggers like this: