முஸ்லீம் நாட்டில் துர்கை, அகஸ்தியர் சிலைகள்! (Post No.5242)

WRITTEN by London swaminathan

Date: 21 JULY 2018

 

Time uploaded in London – 9-24 am  (British Summer Time)

 

Post No. 5242

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

உலகிலேயே மிகப்பெரிய முஸ்லீம் நாடு இந்தோநேஷியா. இங்கே 1500 ஆண்டுகளுக்கு இந்துக்களின் ஆட்சி நடந்தது. இப்பொழுது இது பற்றி நிறைய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. நான் மூன்று புஸ்தகங்களில் இருந்து தொகுத்து ஆங்கிலத்தில் எழுதிய நீண்ட கட்டுரையின் முக்கிய அம்சங்களை மற்றும் குறிப்பிடுகிறேன்.

 

இந்தோ நேஷியாவின் ஜாவா, சுமத்ரா, போர்னியோ, பாலி தீவுகள் நான்கிலும் ஏராளமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள், ஜாவனிய கல்வெட்டுகள் உள்ளன. அவற்றிலிருந்து பல தகவல்கள் கிடைக்கின்றன.

சண்டி என்று துவங்கும் ஊர்ப்பெயர்கள் அனைத்தும் துர்க்கையின் பெயரில் அமைந்தவை. இங்குள்ள துர்க்கை இரு வடிவங்களில் காணப்படுகின்றன. எருமை அசுரனை வதைக்கும் மஹிஷாசுர மர்தினி கோலம்,  சோழர் கோவிலில் சாதாரணமாக நிற்பது போன்ற கோலம்.

 

துர்க்கை பற்றிப் பல கல்வெட்டுகள் உள; அவைகளும் இரு வகைப்படும். பழங்கால கல்வெட்டுகளில் துர்க்கையின் சாபம் பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் அரசன் கொடுத்த தானத்தை கபளீகரம் செய்தாலோ ஊறு விளைவித்தாலோ துர்க்கா தேவி அவனைத் தண்டிப்பாள் என்று பொருள்படும் கல்வெட்டுகள் உள.

 

பிற்காலத்தில் வெற்றி வரம் தரும் தேவி என்று போற்றப்படுகிறாள்.

இதே போல அகஸ்தியர் சிலைகளும் இரு வகைப்படும். ஒன்று ரிஷி முனிவர்கள் போல ஜடாமுடியுடன் காட்சி தரும் கோலம்; மற்றொன்று தலைப்பாகை கட்டிய கோலம்.

 

மற்றொரு விநோதம்- பிரம்மாண்டமான பீமன் சிலைகளாகும். பஞ்ச பாண்டவர்களில் மல்யுத்த வீரனான பீமனின் பெரிய சிலைகள் உள. இவைகளில் சிலவற்றைப் பைரவன் என்று கருதுவோரும் உண்டு. பெரிய ஆண் உறுப்புகளைச் சொருகி வைக்கும்படி சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு தனி அம்சம்.

 

பிராஹ்மணர் ஆதிக்கம்

மிகப் பழங் காலத்திலேயே தமிழ் நாட்டுப் பிராஹ்மனணர்கள் யாக யக்ஞங்களுக்கு அழைக்கப்பட்டதும் தெரிகிறது. பழைய  கல்வெட்டுகள் பல்லவ கிரந்தம் போன்ற எழுத்துக்களில் உள்ளன. ஆரம்ப கால மன்னர்களின் பெயர்களும் பல்லவர் போல வர்மன் பெயரிலேயே உள்ளன.

 

மூன்றாம் நூற்றாண்டு முதல் தகவல் கிடைக்கிறது. மூல வர்மன் என்ற மன்னன் பஹு சுவர்ணக யாகம் செய்து பிராஹணர்களுக்குத் தங்கம் மற்றும் 20,000 பசு மாடுகள் தானம் செய்த செய்தி ஏழு ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளில் உள்ளன. அவர்கள் தானம் பெற்ற பின்னர் யூப ஸ்தம்பங்களில் இதைப் பொறித்துள்ளனர்.

 

யூபம் என்ற ரிக் வேத ஸம்ஸ்க்ருத சொல் புறநானூற்றில் இரண்டு பாடல்களிலும் அதன் தமிழ் ஆக்கமான வேள்வித்தூணம் என்பது வேறு இரண்டு சங்கப் பாடல்களிலும் வருவதை ஏற்கனவே எழுதிவிட்டேன்.

மூல வர்மனின் தந்தை பெயர் அஸ்வ வர்மன். மற்றொரு முக்கிய மன்னன் பெயர் பூர்ண வர்மன்.

 

மூலவர்மன் யாகம் நடத்திய புனித பூமியின் பெயர் வப்ரகெசவ. இது போர்னியோவின் அடர்ந்த காட்டுக்குள் இருந்தது; 70 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களின் காலடி படாத கன்னி பூமிக்குள் நுழைகிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் உள்ளே நுழைந்த போது அதிசயமான பிராஹ்மண வேள்வித் தூண்களைக் கண்டு அசந்து போனார்கள்.

 

பூர்ணவர்மனின் பெயர் பொறித்த கற்கள் நிறைய கிடைக்கின்றன. ஒரு கல் ஆற்றோடையில் கிடந்தது. மற்றொரு பெரிய பாறையில் அவனது காலடிச் சுவடுகள் பொறிகப்பட்டுள்ளன. பெரியோர்களின் காலடிச் சுவடுகளைப் பதித்து வணங்குவது இந்து மரபு. அவனது காலடிச் சுவடுகளை விஷ்ணு பதம் என்று போற்றும் கல்வெட்டுக ளும் கிடைத்தன. அவனை உலகத்துக்கே ஆதாரம் என்றும் கல்வெட்டுகள் போற்றுகின்றன.

பூர்ண வர்மனின் தலைநகருக்குப் பெயர் தர்ம நகரம்; இது இப்போதைய இந்தோநேஷிய தலை நகரம் ஜாகர்த்தாவுக்கு அருகில் இருந்தது.

 

 

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் மன்னனை, மநு சொன்னது போல, தெய்வமாகவே பார்த்தனர். இறைவன் என்பது மன்னனுக்கும் கடவுளுக்கும் கோயில் என்பது அரண்மனைக்கும் கடவுளின் இருப்பிடத்துக்கும் பயிலப்பட்டன.

 

சீன யாத்ரீகன் பாஹியான் பல சுவையான செய்திகளை அள்ளித் தெளிக்கிறான். “நான்  பொது ஆண்டு 414 ஆம் ஆண்டில் கப்பலைத் தள்ளும் காற்று துவங்கும் நாளுக்காக ஜாவாவில் தங்கியிருந்தேன்; இங்கு பிராஹ்மண மதம் கொடிகட்டிப் பறக்கிறது. புத்த மதம் பரிதாப நிலையில் உள்ளது” என்று பௌத்தன் (பாஹியான்) எழுதியுள்ளான். சீனாவுக்கு விரைந்து செல்ல காற்றின் திசைக்காக பாஹியான் காத்திருந்த போது கொடுத்த செய்தி இது.

 

தமிழர்களுக்கு பருவக் காற்றின் ரஹஸியம் தெரியும்; அந்தக் காற்று வீசத்துவங்கும் நாளில் புறப்பட்டால் இலங்கையிலிருந்து பாட்னா (பீஹார்) வந்து சேர ஏழே நாட்கள் போதும் அசோக மாமன்னனின் தூதுக்குழு இப்படி வந்த செய்தி மஹாவம்ஸத்தில் உளது ( எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விவரம் காண்க)

 

இன்னொரு முக்கிய மன்னன் உதயணனுக்கும் மஹேந்திர தத்தாவுக்கும் பிறந்த மகன் ஐர்லங்கா ஆவான். ஆனக வாஞ்சன் என்பவன் காலத்தில் 27 கல்வெட்டுகள் வெளியாகின.

 

தமிழைப் பொறுத்த வரையில் சுமத்ராவில் ஒன்றும் மலேசியாவில் இரண்டுமாக மூன்று கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவை 1000 ஆண்டுப் பழமை உடையவை. ஆனால் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் ஆயிரத்துக்கும் மேலாக (தென் கிழக்காஸிய நாடுகளில்) கிடைத்திருக்கின்றன.

 

தமிழ் சொற்களின் ரஹஸிய அர்த்தம்

வியட்நாம் நாட்டில் (சம்பா) கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழைய கல்வெட்டு பாண்டியன் திருமாறன் என்பவனின் கல்வெட்டு ஆகும் ( நான் 1990-களில் லண்டன் “மேகம்” பத்திரிக்கையில் எழுதிய “வியட்நாமை ஆண்ட பாண்டியன்” என்ற கட்டுரையில் முழு விவரம் உளது; கண்டு மகிழக)

 

கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி என்ற புறநானூற்றுப் பாண்டிய மன்னன் இந்திரன் அமுதம் பற்றி எழுதிய பாடல் ( 182) மிகவும் பிரஸித்தம். அவன் ஏன் கடலில் செத்தான்? தென் கிழக்காசிய நாடுகளுக்குக் கப்பலில் செல்லும் போது புயலில் மாண்டான். அதை மறக்காமல் தமிழனின் பெருமையை உலகிற்குப் பறைசாற்ற புறநானூற்றைத் தொகுத்தளித்த மஹாதேவன் என்ற புலவனும் (தமிழில் பெருந்தேவன்) அப்படியே நமக்குக் “கடலுள் மாய்ந்த” என்ற பெயரைக் கொடுத்துச் சென்றார்.

 

கடல் சுவற வேல் விட்ட பாண்டியன் என்று திருவிளையாடல் புராணத்தில் ஒரு கதை உண்டு. கடலில் இருந்து நிலத்தை மீட்ட ‘நிலம் தரு வில் பாண்டியன்’ , பரஸுராமர் பற்றிய குறிப்புகளும் உண்டு. இதன் தாத்பர்யம்- அவர்கள் எல்லாம் கடலின் சீற்றத்துக்கு அஞ்சாது வில் தாங்கிய படைகளுடன் சென்று, தென் கிழக்காசிய நாடுகளில் இந்து தர்மத்தை நிலை நாட்டினர் என்பதாகும்.

 

பொது ஆண்டு 385-ல் போர்னியோ காட்டுக்குள் தமிழ் பிராஹ்மணர்கள் யாகம் செய்ய, மூலவர்மன் அழைப்பில் சென்றிருந்தால் அதற்கு முன்னதாகவே தமிழ் மன்னர் ஆட்சி அங்கு இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல. சாதவாஹனர் என்ற பிராஹ்மண மன்னர்களின் காசுகளில் கப்பல் படமும் உள்ளது இவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டவர்கள்.

மேலும் அகஸ்த்ய ரிஷி என்ற தமிழ் பிராஹ்மண ரிஷியின் சிலைகள் பல நாடுகளில் கிடைப்பதும் திருஞான சம்பந்தரின் கோத்ரமான கௌண்டின்ய கோத்ரப் பிராஹ்மணர்கள் நாக ராணியைக் கல்யாணம் செய்துகொண்ட தென்கிழக்காஸிய நாட்டுக் கதைகளும் இதற்குச் சான்று பகரும்.

 

ஆக, தென்னக மன்னர்களும் பிராஹ்மணர்களும் முதலில் அங்கே காலடி எடுத்து வைத்தற்கு பல்லவர் எழுத்துக்களும் தமிழ் இலக்கியமும் உறுதுணையாய் நிற்கின்றன.

 

கட்டுரையில் காணப்படாத விஷயங்களை ஆங்கிலக் கட்டுரையிலும் , இணைக்கப்பட்ட படங்களிலும் கண்டு மகிழ்க. 1920 ஆம் ஆண்டு டச்சு மொழி நூலில் இருந்து எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களும் அடக்கம்.

 

அகஸ்தியர் கடலைக் குடித்தார் என்று புராணங்கள் சொல்லும். அகத்ஸ்யர் கடலைத் தாண்டி தென் கிழக்காஸியாவுக்குப் போனார் என்று அர்த்தம்.

 

இந்தோநேஷியாவில் துர்க்கை சிலையை வட புற சந்நிதிகளிலும் அகஸ்த்ய ரிஷியின் சிலையைத் தென்புறங்களிலும் வைத்துள்ளனர் வடக்கில் இமய மலையில் இருந்த அகஸ்த்யரை தமிழுக்கு இலக்கணம் உருவாக்க சிவ பெருமான் அனுப்பிய கதை புராணங்கள் முதல் பாரதியார் பாடல் வரை உள்ளது அவர் தென் புறத்துக்கு வந்ததைச் சிறப்பிக்கும் முகத்தான் தென் வானத்தில் ஒளிரும் மிகப் ப்ரகாஸமான நக்ஷத்ரத்துக்கு அகஸ்த்ய நக்ஷத்ரம் என்றும் பெயர் சூட்டினர். அதன் அருகில் த்ரிஸங்கு சொர்கம் எனப்படும் நக்ஷத்ரத் தொகுதியைக் காணலாம்.

–சுபம்—

 

 

Leave a comment

Leave a comment