அதிசய கர்மயோகி (RSS) ஸ்ரீ சிவராம்ஜி!

Written by S NAGARAJAN

Date: 3 August 2018

 

Time uploaded in London – 5-25 AM   (British Summer Time)

 

Post No. 5282

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அதிசய கர்மயோகி ஸ்ரீ சிவராம்ஜி!

 

ச.நாகராஜன்

 

இப்படி ஒரு அதிசய கர்மயோகி இந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கிறாரா என்று நம்ப மறுக்கும் அளவு ஒரு அதிசய கர்மயோகியாக வாழ்ந்தவர் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) பிரசாரகர் ஸ்ரீ சிவராம்ஜி!

 

இவரைப் பற்றி அறிய ஆவல் கொண்டிருக்கும் பலருக்கும் தன்னைப் பற்றி எந்த வித விஷயத்தையும் தெரிவிக்காமல் மிக மிக அடக்கமாக எளிமையாக வாழ்ந்த மஹா புருஷர் அவர். என்றாலும் கூட நமது அதிர்ஷ்டவசமாக சங்க பிரசாரகர் பா.உத்தம்ராஜ் அவரைப் பற்றிய அரிய தகவல்களை

‘கர்மயோகி சிவராம்ஜி’ என்ற நூலில் தொகுத்துத் தந்து சிறந்த பணியை ஆற்றியிருக்கிறார்.

 

1968ஆம் ஆண்டையொட்டி சிவராம்ஜியுடன் சிறிது காலம் மதுரையில் அவருடன் பழகும் பாக்கியம் எனது குடும்பத்தினருக்குக் கிடைத்தது.

 

வழக்கம் போல எந்தக் குடும்பத்தினருடன் அவர் பழகினாலும் அதில் ஒரு உறுப்பினராகவே ஆகி விடுவது போல அவர் எங்கள் குடும்பத்தில் இணைந்தவர் ஆகி விட்டார்.

 

எளிமையான சட்டை – ஆனால் அழுக்கு இல்லாமல் தூய்மையாக இருக்கும். அதிகம் பேசவே மாட்டார் – ஆனால் பேசியவை மிக ஆழ்ந்த அர்த்தம் கொண்டதாக இருக்கும். பிற விஷயங்களைப் பற்றிப் பேசுவார் – ஆனால் அதன் உள்ளார்ந்த ஓட்டம் சங்க வளர்ச்சியை ஒட்டியே இருக்கும்.

அதிகாலை முதல் இரவு முடிய தினமும் சங்கப் பணி ஒன்றே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர்.

 

இன்று இந்து முன்னணித் தலைவராக இருக்கும் ஸ்ரீ இராம கோபாலனைக் ‘கண்டெடுத்தவர்’ அவர் தான்!

பிரசாரகராக இருந்து பிராந்த பிரசாரகராக உயர்ந்து இந்து முன்னணியை அமைத்து அதன் தலைவராக இருக்கும் இராம கோபாலன் சிவராம்ஜியைப் பற்றிக் கூறுகையில்,”நாங்கள் எல்லோரும் பிரச்சாரகர்கள். ஆனால் சிவராம்ஜி நூற்றுக்கு நூறு பிரச்சாரகர். பிசிறில்லாத ஸ்வயம்சேவகர்” என்று கூறினார்.

பரமபூஜனீய ஸ்ரீ குருஜி கோல்வால்கர் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் மூன்று ரிஷிகள்  இருப்பதாக ஒரு முறை குறிப்பிட்டார். அந்த மூவர் 1) தீனதயாள் உபாத்யாய 2) தத்தோபந்த் தெங்கடி 3) சிவராம்ஜி

 

எந்த ஒரு நபரையும் செதுக்கி அவரிடம் உள்ள நல்லனவற்றை வெளிக்கொணர்ந்து அவரை எவ்வளவு தூரம் சிறப்பானவராக ஆக்க முடியுமோ அவ்வளவு தூரம் ஆக்கி விடும் ‘சிறந்த மனிதரை உருவாக்கும் சிற்பியாக’ – ‘படைத்த பின் சிறக்க வைக்கும் சிறப்பு பிரம்மாவாக’ -அவர் வாழ்ந்தார்.

சைக்கிளில் தான் செல்வார். அதற்கு ஒரு ஷெட்யூல்ட் ரூட் இருக்கும்.

 

ஸ்ரீமதி நிர்மலா அவஸ்தி (விவேகானந்த கேந்திர முழு நேர ஊழியர்) அவரது செயல்முறையைப் பற்றி இப்படி வர்ணித்தார் ஒருமுறை : “சிவராம்ஜி காலையும் மாலையும் மயில் மீது சுற்றும் முருகன். காரியங்கள் முடிந்த பிறகு மத்தியான நேரம் ஆலயத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டே இருக்கும் விநாயகர் அவர்”

 

நல்லோர் வட்டம் என்று நல்லோர்கள் பலரைப் படைத்து அவர்களுக்கு திட்டங்களைத் தீட்டிக் கொடுத்து அவற்றை ஒழுங்குபட செயல்பட வைத்த அதிசய மனிதர் அவர்.

அவரது திட்டங்கள் பல என்றாலும்  சுமார் 347 திட்டங்களை மட்டும் உத்தம்ராஜ் பட்டியலிட்டிருக்கிறார். பட்டியலில் வராதவை எத்தனையோ!

 

ஒரு சில நல்லோர் வட்ட திட்டங்களை பார்ப்போம்:

சங்க வளர்ச்சிப் பணி தான் மூச்சு. அதன் அடிப்படையிலேயே அவர் திட்டங்களைக் காண வேண்டும்.

பத்து சங்கப் பாடல்களை மனப்பாடம் செய்தல்

ஒரு மஹானுடைய வாழ்க்கைச் சரித்திரம் படித்து அதைச் சொல்லத் தயாராக இருத்தல்

பத்திரிகைகளுக்கு ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் 3 கடிதங்கள் எழுதுதல்

கல்லூரிப் பேராசிரியர் 10 பேரைச் சந்தித்தல்

ஒரு ரத்ததான முகாம் நடத்துதல்

5 கலைஞர்களைச் சந்தித்தல்

ஒரு அனாதை விடுதியைப் பற்றிய முழு விவரம் சேகரித்தல்

வேலை இல்லாத 3 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்தல்

கஷ்டமான நிலையில் உள்ள 5 நோயாளிகளைச் சந்தித்தல்

நல்ல ஜோக்ஸ் 50 சேர்த்தல்

நல்ல செய்தியைக் குறைந்தது 10 பேரிடம்

படிக்காத 10 பெண்களுக்கு படிப்புச் சொல்லித் தருதல்

ஒரு பள்ளிக்கூடம் துவங்குதல்

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

 

புனேயில் 1917இல் பிறந்தார். சென்னைக்கு 1942ஆம் ஆண்டு வந்தார். பிரச்சாரகராகத் தன் பணியைத் துவக்கிய அவர் சென்னை மாநிலம் முழுவதும் தன் காலடியைப் பதித்தார். ஏராளமானோரை சங்கத்தில் இணைத்தார். அவர்களில் பலரும் மிக உயர்ந்த பொறுப்புகளில் – பல்வேறு துறைகளிலும் – இன்று பணி புரிகின்றனர்.

 

 

1999ஆம் ஆண்டு அவர் மறைந்தார். தன் இறுதி நெருங்கி விட்டதை டாக்டர் மூலம் உறுதிப் படுத்திக் கொண்ட அவர் தன் உடலை உடல் தானம் செய்து அதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

 

 

அவரது இறுதி மூச்சும் சங்க காரியாலத்தில் தான். அவரது உடலை ஏந்திச் செல்ல ராமச்சந்திரா மருத்துவ மனையிலிருந்து வேன் வந்த போது வருந்தாதவரே இல்லை.

சங்க மார்க்கம் என்பது கண்டகாகீர்ண மார்க்கம். முட்கள் நிறைந்த பாதை. அதை ஸ்வயம் ஸ்வீக்ருதம் செய்பவரே ஸ்வயம் சேவகர். அதாவது தாமாக முன்வந்து அந்த முள்பாதையில் நடக்க ஆரம்பித்து லட்சியமான ஹிந்து ராஷ்ட்ரத்தை அடைவதே இலட்சியம். அந்த மார்க்கத்தைச் சுட்டிக் காட்டி அதை ஸ்வயம் ஸ்வீக்ருதம் செய்ய ஆயிரக் கணக்கானோரை அழைத்து அதில் அவர்களை இணைத்தவர் அவர்.

 

உலகம் முழுவதும் சுகமாக இருக்கட்டும் (லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து) என்பது ஹிந்துத்வம்.

அதை வாழ்ந்து காட்டி அதற்கான வழி சங்கம் ஒன்றே தான் என்பதை நிரூபித்தவர் சிவராம்ஜி.

 

 

அவரை எப்பொழுது நினைத்தாலும் ஒரு நல்ல காரியம் செய்ய நம்மை நமது மனம் தூண்டும்.

இப்படிப்பட்டவரை மஹரிஷி என்று சொல்வதே மிகவும் பொருத்தமானது!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: