Picture from Sevabharati.
Written by S NAGARAJAN
Date: 5 August 2018
Time uploaded in London – 6-40 AM (British Summer Time)
Post No. 5289
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
சென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஐந்தாவது உரை
சுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்! – 1
சுற்றுப்புறச் சூழலைக் காப்பதும் சட்டம் இயற்றுவதும் அரசின் கடமை என்று எண்ணாமல் ஒவ்வொரு தனி மனிதனும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க முன் வரவேண்டும்.
அரசு இயற்றும் சட்டங்களை பின்பற்றுவதுடன் கூட மற்றவர்களையும் சட்டங்களை மதித்து நடக்க உத்வேகமூட்ட வேண்டும்.
இது தவிர பல்வேறு வழிகளால் ஒவ்வொரு தனி மனிதனும் சுற்றுப்புறச் சூழலைக் காக்க முடியும்.
எடுத்துக் காட்டாக சிலவற்றை இங்கே கூற முடியும் :
ஷவரிலோ அல்லது குழாயிலிருந்து வரும் நீரிலோ நெடுநேரம் குளிக்காமல் தண்ணீரை வீணாக்காமல் தேவையான அளவு நீரில் குளித்தால் நீரைச் சேமிக்க முடியும்.
ஷேவிங் செய்யும் போதோ அல்லது பல் துலக்கும் போதோ குழாய்த்தொட்டியில் இருக்கும் குழாயை திறந்து விடாமல் மூடி வைக்க வேண்டும்.தேவைப்படும் போது நீரை எடுத்தாலே போதுமே!
ஒழுகுகின்ற குழாய்களை உடனடியாக ரிப்பேர் செய்து சரிவர பராமரிக்க வேண்டும். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை அனைவரும் அறிவோம்.
வீட்டிலேயே நீரை மறுசுழற்சிக்கு உள்ளாக்க முடியும். தோட்டம், மாடியில் செடிகள் வளர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு சரியான நீரை சரியான அளவில் கொண்டு செல்ல வழி வகுக்க வேண்டும்.
சுத்தம் செய்வதற்கு எப்போதுமே அதிக அளவில் நீரைப் பயன்படுத்த வேண்டாம். தேவையான இடத்தில் பேகிங் சோடா, வினிகர் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீரைச் சேமிக்கலாம்.
நீரைச் சேமித்தல் மிக மிக இன்றியமையாதது. ஏனெனில் நீர் வரும் ஆதாரங்களிலிருந்தோ அல்லது நதிகளிலிருந்தோ ஒவ்வொருவரின் இல்லத்திற்கும் நீரைக் கொண்டுவருவதற்கான ஆற்றல் அளப்பரியது. அதற்கு ஆகும் செலவும் அதிகம்.
சார்ஜர்களை ப்ளக்கில் எப்போதும் போட்டு வைக்காமல் பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் அகற்றி விட வேண்டும்.
வீ ட்டில் உள்ள விளக்குகளை எப்பொழுதும் எரிய விடாமல் தேவையான நேரத்திம் மட்டுமே எரிய விட வேண்டும்.
பயன்பாட்டில் இல்லாத கம்ப்யூட்டர்கள், லேப் டாப்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றை உரிய முறையில் மின்சார இணைப்பிலிருந்து அகற்றி விட வேண்டும்
குண்டு பல்புகளை அகற்றி விட்டு காம்பாக்ட் ஃப்ளோரெஸண்ட் பல்புகளைப் (compact fluorescent bulbs) பொருத்த வேண்டும்.
வாகனப் பயன்பாட்டைக் குறைக்க பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம் அல்லது கார் பூல் எனப்படும் பல பேர் இணைந்து ஒரு காரில் செல்லும் முறைப்படி செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். இதனால் எரிபொருள் சேமிக்கப்படும், பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும். தனித்தனியாக காரை ஓட்டும் போது ஏற்படும் களைப்பு அறவே இருக்காது. பல பேர் அமர்ந்திருக்க ஒருவர் மட்டுமே ஓட்டுவதால் இந்த நன்மை ஏற்படும்.
இப்படிச் சிந்தித்தால் ஏராளமான வழிகளை நாமே முன்மாதிரியாக இருந்து அமைத்துக் காட்ட முடியும்!
***