Written by London swaminathan
Date: 10 August 2018
Time uploaded in London – 12-50 am (British Summer Time)
Post No. 53078
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
14 கோடிக்கு மேல் ஒரு பைஸாகூட வேண்டாம்- முனிவர்
கண்டிப்பு! காளிதாசன் தரும் சுவைமிகு தகவல்
உலகப் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாசன் ஒரு சுவையான சம்பவத்தை பாடுகிறான். கௌத்ஸ முனிவர் என்பவர் மன்னனிடம் 14 கோடிப் பொன் கேட்டார். மன்னன் ரகுவோ தயாள குணம் கொண்டவர். முனிவர் கேட்டதற்கு மேல் மூட்டை மூட்டையாக கொண்டுவந்து இறக்கினார். முனிவரோ ‘கறார் பேர்வழி’ இதோ பார் நான் கேட்டதற்கு மேல் ஒரு பொன் கூட எடுக்க மாட்டேன். அதை மட்டும் எண்ணி வை என்றார்.
மன்னன் ரகு வாரி வழங்கும் பாரி வள்ளல்; வலது கை கொடுப்பதை இடது கை அறியாது வழங்குவான்; முனிவரோ கொஞ்சமும் பேராசை இல்லாதவர். கூடக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லும் பெருந்தகை. நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டிய இரு உதாரண புருஷர்கள்!
காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஐந்தாவது சர்கத்தில் வரதந்து- கௌத்ச முனிவர்களின் கதை வருகிறது.
மன்னன் ரகுவை கௌத்சர் சந்திக்கிறார்.
இதில் அருமையான விஞ்ஞான விஷயங்கள் வருகின்றன
உலகம் சூர்யனிடமிருந்து உயிர் பெறுகிறது (5-4): சூரியன் இல்லாவிடில் உயிர்கள் இல்லை. வரதந்து முனிவர் ஞான சூரியன்; அவருடைய ஒளியைப் பெற்றவர் கௌத்சர்.
மரங்கள், பிள்ளைகளைப் போன்றவர்கள்! ஆஸ்ரமத்திலுள்ள புத்திரர்களைப் போன்ற மரங்கள் காட்டுத் தீயினாலோ காற்றாலோ சேதமடையாமல் இருக்கின்றனவா?. என்று கௌத்ஸரிடம் ரகு குசலம் விசாரிக்கிறான். இது புற சூழல் விஞ்ஞானம்.
ஆஸ்ரமத்திலுள்ள மான்கள் அபாயமில்லாமல் வாழ்கின்ற்னவா? ரகுவின் கேள்வி; வனவிலங்குப் பாதுகாப்பு அறிவியல்.
இது போன்ற பல கேள்விகளைக் கேட்டுவிட்டு உமது வரவினால் எனக்கு மகிழ்ச்சி. ஆனாலும் எனக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை. உங்கள் குரு ஏதேனும் சொல்லி அனுப்பி இருந்தால் அதை நிறைவேற்ற ஆசை என்றான் ரகு.
கௌத்சர் சொன்னார்
நீங்கள் தானம் கொடுத்தே வறுமைக்கு வந்து விட்டீர்; பொன் குடத்தால் என்னை வரவேற்காமல் மண்குடத்தை வைத்து என்னை வரவேற்றதிலிருந்தே அது தெரிகிறது ஆகையால் நான் வேறு ஒருவரிடம் செல்கிறேன் என்றார். ரகு அவரைத் தடுத்து உமது குருவுக்குத் தரவேண்டிய தக்ஷிணை என்ன? என்று கேட்டான்.
குரு எனது பணிவிடையையே குருதக்ஷிணை என்று சொன்னார்;
நான் வற்புறுத்தவே கோபத்தில் 14 கோடிப் பொன் கொண்டுவரச் சொல்லிவிட்டார் என்றார் கௌத்ஸர்.
என்னிடம் ஒருவர் யாசகம் கேட்டுத் திரும்பிப் போன அபவாதம் எனக்கு வேண்டாம் எனது யாக சானை லையில் சில தினங்கள் இருங்கள் பணம் கொண்டு வருகிறேன் என்றான் ரகு.
அவன் ஆயுதங்களின் ரதத்தில் ஏறிப் படுத்த இரவில் குபேரன் அவரது அரண்மனை கஜானாவில் பொன் மழை பெய்தான். ரகு படை எடுத்து வரப்போகிறானே என்று அஞ்சி குபேரனே வந்து கொட்டிவிட்டான்.
தங்கம் முழுதும் ஆகாஸத்திலிருந்து விழுந்தது.
அந்த தங்கத்தை அப்படியே கௌத்ஸரிடம் கொடுத்தான் ரகு. ஆனால் 14 கோடிக்கு மேல் ஒரு பொன் கூட இருந்தாலும் அதைத் தான் ஏற்கமாட்டேன் என்று கௌத்ஸர் சொல்ல, இல்லை முழுதும் உங்களுக்குத்தான் என்று ரகு சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது; இதைக் கண்டு அயோத்தி நகரமே வியப்பில் ஆழ்ந்தது.
பிறகு கௌத்ஸர் நூற்றுக் கணக்கான குதிரைகள் ஒட்டகங்களின் மீது பணத்தை ஏற்றிச் சென்றார். நல்லாட்சி நடத்தும் அரசனுக்கு பூமி விரும்பியதை எல்லாம் தரும். உனக்கு பூமி மாத்திரமின்றி ஆகாசமும் கொடுத்து விட்டது; உன்னைப் போலவே உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று ஆஸீர்வதித்து விட்டுச் சென்றார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்- கேட்டதை விட கூடத் தரும் மனிதன் ரகு.
தேவைக்கு மேல் ஒரு பைஸா கூட எடுக்க மாட்டேன் என்ற கௌத்ஸ முனிவர்.
இதுதான் க்ருத யுகத்தின் அடையாளம்! ஒருவர் பொருளை மற்றொருவர் விரும்பார்; எடுக்கவும் மாட்டார்.
-SUBHAM