நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்! (Post No.5309)

Written by S Nagarajan

Date: 11 August 2018

 

Time uploaded in London – 7-00 AM  (British Summer Time)

 

Post No. 5309

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காவியமான நைடதம் சிருங்காரச் சுவை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட ஒன்று.

இதில் சுயம்வரப் படலம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

திரிலோகத்தில் உள்ள அரசர்களெல்லாம் ஒருங்கு கூடி சுயம்வர மண்டபத்தில் வந்து சேர தமயந்தியின் தந்தையான வீமராஜன் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்தான்.

 

 

அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தன் மகளை மணம் செய விரும்புவது குறித்து மகிழ்ச்சி,

ஆனால் இவரை இன்னார் என்று நல்ல விதத்தில் அறிமுகப்படுத்தக் கூடியவர் இந்த மண்ணுலகில் இல்லையே என்பதை நினைத்து திகைப்பு.

 

 

நாரணனை மனம் உருக வேண்டினான். நாரணனோ பிரம்மாவை நோக்கி, ‘பிரம்ம தேவா!. இவர் இன்னின்னார் என்று கூற கலைமகள் அன்றி வேறு யார் இருக்கிறார்கள்” என்று கேட்டார். பிரம்மா கலைமகளை நோக்கி, “நீ சென்று அரசர் கூட்டத்தை தமயந்திக்கு இவர் இன்னார் என்று விளக்கி வருவாய்” என்று பணிக்க கலைமகள் சுயம்வர மண்டபம் வந்து ஒவ்வொருவரைப் பற்றியும் தமயந்திக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தாள்.

 

 

42 பாடல்களில் அரசர்கள் பற்றிய அறிமுகம் விளக்கப் படுகிறது.

தமயந்தியை மணக்க வேண்டி சுயம்வர மண்டபத்திற்கு வந்த இந்திரன், அக்கினி தேவன், யமன்,வருணன் ஆகியோரை விளக்கும் பாடல்கள் நளனுக்கும் இவர்களுக்குமாக அமைந்துள்ள சிலேடைப் பாடல்களாக அமைந்துள்ளன.

இந்திரனுக்கும் நளனுக்கும் சிலேடை:

 

கலை வளர்திங்க ளென்னக் கடிகமழ் கமலம் வாட்டுந்

திலக வாண் முகத் தாயிங்கு வைகிய சினவேற் காளை

வலனுடை வயிர வாளான் கற்பகமலிந்த தோளான்

பலபகைவரை முன்செற்ற பகட்டெழின் மார்பினானே.

 

இதன் பொருள் :- கலைமகளுடைய அருளும், நல்ல வாசனை பொருந்திய தாமரை மலரும் வாடி விடும்படியான, திலகமிட்ட சந்திரனைப் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! இங்கே இருக்கும் அரசன் கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றும், வலனைக் கொன்ற வெற்றியுடையவனும், வெற்றி மிகுந்த கூரிய வாளை உடையவனும், கற்பக மாலை சூடியவனும், மலை பிளக்கும் தோழனும், பகைவரை முதலில் ஜெயித்து  பெருமை பொருந்திய அழகிய மார்பினனுமான இந்திரன் ஆவான்.

இந்த அரசனின் வர்ணனை – கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றவன், கூரிய வாளை உடையவன், பகைவரை ஜெயித்தவன் ஆகியவை நளனுக்கும் பொருந்துபவை. ஆகவே இந்திரனையும் நளனையும் குறித்த சிலேடைப் பாடலாக இது அமைகிறது.

 

அக்னிதேவனுக்கும் நளனுக்கும் சிலேடை:

நகைமதி முகத்தாயீங்கு வைகிய நாமவேலான்

புகலுரும் வெகுளி யுள்ளத் தொருவினான் பொங்கி யார்த்த

பகையிருட் பிழம்பு சீக்கும் பலசுட ருமிழும் வாளான்

றகைமைசால் புலவ ரேத்துந் தால மேழுடைய கோவே

 

இதன் பொருள் :

சந்திர பிம்பம் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! (நகை மதி முகத்தாய்) இங்கு இருப்பவர் யார் எனில் சொல்ல முடியாத அளவு கோபமும் ஒளியும் பொருந்தியவனுமான அக்னி தேவன்.

இருளை ஒத்த பகைவரை தன் வாளால் வென்று பெருமை மிக்க புலவர்களால் சத்சத் தீவை உடையவன்.

 

 

தீவு தேவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அக்னியையே முதலாவதாக பூஜிப்பதாலும் அவர்களுக்கு வேண்டிய ஹவிர் பாகங்களை அக்னி மூலமாகப் பெறுவதாலும் வேதத்தில் அக்னியை மூலமாகச் சொல்வதாலும் இருள் பிழம்பை ஓட்டி ஒளி தரும் ஏழு நாவை உடையவன் ஆதலாலும் தேவர்களால் புகழப்படுவதாலும் அக்னி தேவன் இவ்வாறு புகழப் படுகிறான்.

 

 

அக்னியைக் கூறும் போது தேவர்கள் என்றும் நளனைக் குறிப்பிடும் போது புலவர்கள் என்று கூறுவதும் காண்க. தேவர்களும் புலவர்களும் சிலேடையாகக் கூறப்படுகிறது.

 

யமனுக்கும் நளனுக்கும் சிலேடை

அஞ்சன மெழுத லாற்றா தம்மவோ வென்று நையும்

வஞ்சிநுண் ணிடையா யிங்கு வைகிய நாமவேலா

னெஞ்சலி றருமன் றெண்ணி ரிருங்கட லுலக மெல்லாஞ்

செஞ்சவே யோசை போய தீதறு செங்கோல் வேந்தே

 

இதன் பொருள் : அஞ்சன மை எழுதும் போது அதன் கனம் கூடத் தாங்க மாட்டாது நைந்து போகும் நுண்ணிய இடையை உடையவளே! இதோ இருக்கின்றானே இவன் யம தருமன்! பயமுறுத்தும் வேல் படையை உடையவன். செவ்விய கால தண்டாயுதத்தைக் கொண்டு கடல் சூழ்ந்த உலகை புகழ் பரப்பச் செங்கோலால் ஆள்பவன்!

நளனும் இருங்கடல் உலகம் ஆள்பவன். செங்கோலால் ஆட்சி செய்து புகழ் பெற்றவன். ஆக ஈற்றடி இரண்டினாலும் நளனுக்கும் யமனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை :

பாற்றிரை யமிரத மூறும் படரொளிப் பவளச் செவ்வாய்

கோற்றொடி மடந்தை யீங்கு வைகிய குலவுத் தோளான்

மகற்றருஞ் சிறப்பின் மிக்க வளங்கெழு புவன வேந்த

னாற்றிசை பரப்புஞ் சூழ்போ நலங்கெழு நேமி வேந்தே

 

இதன் பொருள் ; பாற்கடலில் தோன்றிய அமிர்தமென ஊறுகின்ற பவளச் செவ்வாயை உடையவளே! அழகிய வளையலை அணிந்துள்ளவளே! இங்கு  வந்திருப்பவன் நன்மை பொருந்திய கடல் அரசனான வருண தேவன்.

 

 

புவனம் என்றால் நீர் ; நீருக்கு அரசன் வருணன்

புவனம் என்றால் பூமி : பூமிக்கு அரசன் நளன்

நேமி என்றால் கடல். வருணனைக் குறிப்பது.

நேமி என்றால் சக்கரம். நளனைக் குறிப்பது.

ஆக வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

இப்படி இந்திரன், அக்னி, யமன், வருணன் ஆகியோரின் சிறப்பியல்புகள் அனைத்தும் ஒருங்கே கொண்டவன் என்று குறிப்பால் தமயந்திக்கு கலைமகள் சொல்லிக் கொண்டே வருகிறாள் என்பது சுவையான செய்தி!

அதிவீரராம பாண்டியனின் நைடதம் கற்போர்க்கு ஔடதம்.

***

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: