Written by S Nagarajan
Date: 19 August 2018
Time uploaded in London – 6-17 AM (British Summer Time)
Post No. 5337
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ரமண பக்தை மா பிரோஜா தலயார்கானைக் காத்த நாகம்!
ச.நாகராஜன்
பகவான் ப்ரியா மா பிரோஜா தலயார்கான் (Ma Firoza Taleyarkhan 1898-1984) மிக மிக செல்வச் செழிப்புடைய பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.
ரமணரை அடைக்கலம் புகுந்து திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரது சரித்திரம் மிக சுவையான ஒன்று.
ஏராளமான அனுபவங்களை அவர் தொகுத்து எழுதியுள்ளார். அதில் ஒன்று தான் அவரை நாகம் காத்து வந்ததை பகவான் சுட்டிக் காட்டிய சம்பவம்.
ஆண்டு 1945. ஒரு நாள் அலஹாபாத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தவரும் சிறந்த ரமண பக்தருமான டாக்டர் சையத்தின் மனைவியும் சூனா என்பவரும் திருமதி தலயார்கானின் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர்.
மெக்காவில் உள்ள கபாலாவை (Kharbala) பற்றி திருமதி சையத் விவரித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் தான் அவர் மெக்கா சென்று திரும்பியிருந்தார்.
திருமதி தலயார்கானின் எதிர்புறத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென்று அவரை விசித்திரமாகப் பார்த்தனர்.
திடீரென்று அவர்கள், “உங்களுக்குப் பின்னால் பாம்பு இருக்கிறது, ஜாக்கிரதை” என்று அவர்கள் கத்தினர். உண்மையில் அவருக்குப் பின்னால் ஒரு பாம்பு படம் விரித்துக் கொண்டு நின்றிருந்தது.
தலையை மெதுவாகத் திரும்பிப் பார்த்தார் அவர். பாம்பு அவரை தீண்டி இருக்கக் கூடும். ஆனால் அது மெதுவாக நாற்காலியிலிருந்து இறங்கி வெளியே ஊர்ந்து சென்றது. தோட்டக்காரரைக் கூப்பிட்ட திருமதி தலயார்கான் அந்தப் பாம்பைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார். பாம்பு பாம்பு என்ற சத்தத்தால் அந்த இடம் சற்று களேபரமானது.
திருமதி தலயார்கானுக்கு அண்டை வீட்டில் வசித்து வந்த ராஜகோபாலய்யங்கார் அப்போது தான் ஆசிரமத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். ராஜகோபாலய்யங்கார் பகவானை அருகிலிருந்து கவனித்து வந்த பகவானின் அணுக்கத் தொண்டர்.
சத்தம் கேட்டு அவர் ஓடி வந்தார்.
திருமதி தலயார்கானைப் பார்க்க வந்திருந்த இரு பெண்மணிகளும் நடந்த விஷயத்தைப் பரபரப்புடன் ராஜகோபாலய்யங்காருக்கு விளக்கினர்.
அவர் திருமதி தலயார்கானை நோக்கி, “பாம்பை அடித்துக் கொன்று விட்டீர்களா?” என்று கேட்டார்.
அதைத் தன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று பதில் அளித்தார் அவர்.
அவர் உடனடியாக ஓடோடிச் சென்று பகவான் ரமணரிடம் நடந்த விஷயத்தை விவரித்தார்.
பகவானின் முதல் கேள்வி பாம்பை தலயார்கான் அடித்துக் கொன்று விட்டாரா என்பது பற்றித் தான்.
இல்லை என்ற பதில் வந்ததும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் பகவான் ரமணர்.
“நல்லது” என்ற அவர், அந்த பாம்பு தான் அவரைப் பாதுகாத்து வரும் நாகம் என்றார்.
ஒரு நாள் காலை திருமதி தலயார்கான் படுக்கையிலிருந்து எழுந்த போது அவர் பிரார்த்தனை செய்யும் மேஜைக்கு அருகில் ஒரு பாம்பின் ஒரு பெரிய தோல் உரிக்கப்பட்டு கிடந்ததைக் கண்டார்.
அவர் தூங்கிக் கொண்டிருந்த போது திறந்திருக்கும் ஜன்னல் வழியாக உள்ளே அது வந்திருக்கக் கூடும்!
வெல்லூர் மாவட்ட நீதிபதியாக அப்போது இருந்த அனந்தநாராயணன் (பின்னால் மதராஸ் ஹை கோர்ட் நீதிபதியாக இருந்தவர்) இந்தச் சம்பவத்தைக் கேட்டு முதலில் இதை நம்பவில்லை.
ஆனால் அடுத்த நாள் காலை உணவருந்திய பின்னர் இருவரும் வீட்டின் வாசலில் கைகளை அலம்பிக் கொண்டிருந்த போது அவரே அந்த நாகம் ஊர்ந்து செல்வதைப் பார்த்தார்.
முதலில் நம்பாதவர் இப்போது அதிசயப்பட்டு முழு விஷயத்தையும் நம்பினார்.
அந்த நாகத்தைப் பற்றிய உண்மையை பகவான் விளக்கியதால் அதைப் பற்றிய பயம் இல்லாமல் மா தலயார்கான் வாழ்ந்து வந்தார்.
இப்படிப் பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன. பகவானின் அருளுக்குப் பாத்திரமான அவர் தனது சுவையான அனுபவங்களை Sages, Saints and Arunachala Ramana என்ற நூலில் விவரித்துள்ளார்.
****
R.Nanjappa (@Nanjundasarma)
/ August 19, 2018நாகப்பாம்பு பற்றிய பல கதைகள், நிகழ்ச்சிகள் நம்மவரிடையே வழங்கி வருகின்றன. இவை மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதை, அறியாதவர்கள் சொல்வது என விலக்கிவிடுகிறோம். ஆனால் நம்பத்தகுந்தவர்களிடமிருந்தும் இத்தகைய விஷயங்களைக் கேட்கிறோம்.
ஸ்ரீ ரமணரின் மஹா சமாதிக்குபின் தன் கிராமத்திற்குச் சென்று வசிக்கவிரும்பிய சூரி நாகம்மா, அந்தக் கிராமத்துக் கோயிலை [ சரியான பூஜை இல்லாமல் இருந்தது] ஒரு நாகம் காத்துவந்ததையும், அதை ஒட்டிய தன் அனுபவங்களையும் பற்றி தன் நினைவுக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.
பெரிய சித்தர்களும், மஹான்களும் இவ்வித உருவங்களில் சில இடங்களில் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் கீரி உருவில் தென்பட்டார் [திருவண்ணாமலை, வள்ளிமலை] என்பது சிலரின் அனுபவம். ஒரு பூண்டி சாமியாரைப் பற்றி பரணீதரன் ‘அருணாசல மகிமை’யில் எழுதியிருக்கிறார். அவர் அனுமதியின்றி யாரும் அவர் அரையில் நுழையக் கூடாதாம். ஒரு நாள் ஒருவன் சட்டென்று கதவைத் திறந்து உள்ளே நுழைய, சாமியார் இருந்த இடத்தில் ஒரு பெரிய நாகம் படமெடுத்து நின்றதைப் பார்த்து அலறியடித்து வெளியில் வந்தான் என பரணீதரன் எழுதியிருக்கிறார்.
பாம்புகளில் நாகத்தைப் பற்றி பல நிகழ்ச்சிகளைச் சொல்கிறார்கள். எனக்குத் தெரிந்த இரு நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.
சிதம்பரத்தில் பல வீடுகளில் ‘வாழும் பாம்பு’ என்று இருக்கிறது. இது சாதாரணமாக நம் எதிரில் பகலில் நடமாடாது. ஆனால் இரவில் வெளிவரும்.
என் உறவினர் குடியிருந்த வடக்கு வீதி வீட்டில் இப்படி யொரு பாம்பு இருந்தது. அந்த வீட்டின் சொந்தக்கார அம்மாள் , வயதான தெலுங்கு பிராமணர், அந்த பாம்பு கொல்லைப்புறத்தில் எப்பொழுது நடமாடுகிறது என்பதை வாசனையிலேயே சொல்லிவிடுவார்! அப்போது மட்டும் தோட்டப் பக்கம் போகவேண்டாம் என்பார். [என் கேரள நண்பன் ஒருவனும் வாசனை வைத்தே நச்சுப் பாம்பு இருப்பதைச் சொல்லிவிடுவான்.காட்டியும் இருக்கிறான்.]
இதற்கு அடுத்தவீடு பெரியவீடு, பரந்த பின்கட்டு, மரம் செடிகள் நிறைந்த பகுதி. ஒரு வயதான முதலியார் அம்மாள் மட்டும் இருந்துவந்தார். அங்கும் ஒரு பெரிய நாகம் நடமாடும். ஆனால் பயமில்லை. இவர் வீட்டை விற்பதற்கு முயற்சிசெய்து வந்தார். இடையில் அதை பெப்ஸிகோலாக்காரர்கள் கிடங்காக உபயோகித்து வந்தனர். ஒரு நாள் காலை சுமார் 5.30 மணிக்கு அந்த நாகம் வெளிக்கிளம்பி, கூறையிலிருந்து சுவர் வழியாகக் கீழிறங்கி வடக்கு வீதியைக் கடந்து எதிரில் கீழவீதியில் இருந்த ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவரைத்தாண்டி, பின்கட்டு தோட்டத்தில் புகுந்தது! இதை நாங்கள் பார்த்தோம். சுமார் 10 அடி நீளமான பாம்பு! அன்று மாலை வந்த அந்த முதலியார் அம்மாள் வீடு விற்றுவிட்டது என்று சொன்னார்! இது அந்தப் பாம்பிற்கு எப்படித் தெரியும்? அது காலிசெய்து விட்டது! அந்த இடத்தில் ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் எழுந்துவிட்டது!
கீழ வீதியில் புகுந்த அந்தப் பாம்பை, ஏற்கெனவே அங்கிருந்த பாம்பு அண்டவிடவில்லை. இரண்டும் சண்டையிட்டன. வீட்டுக்காரர்கள் பயந்துவிட்டனர். கடைசியில் ஒரு பாம்பாட்டி வந்து அதைப் பிடித்துப்போனான்! இது நடந்து சுமார் 12 வருடம் இருக்கும்.
மும்பை புற நகர் பகுதியான மலாடில் ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு. சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடக்கும். சில சமயம் பாம்புகள் உள்ளே நுழைந்து மாடிப்படியின் கீழ் படுத்திருக்கும். அங்கிருந்த ஒரு வாட்ச்மேன் மட்டும் சற்று வித்தியாசமானவன். அவன் பாம்பிருக்கும் இடத்திற்குப் போனால் போதும், பாம்பு எழுந்து அவன் பின் போகும்! அவன் காம்பவுண்டைக் கடந்து சென்று பாம்பை வெளியில் விட்டுவிடுவான்! இதைப் பார்த்தால்தான் நம்புவார்கள்.
இப்படி நாகப்பாம்பைப் பற்றி மட்டும் எத்தனையோ நிகழ்ச்சிகள். Among snakes, the Cobra seems to be different and a little mysterious!
Santhanam Nagarajan
/ August 19, 2018புதிய பல விஷயங்களைத் தந்தமைக்கு நன்றி. சித்தர்கள் பலர் பல உருவில் நடமாடுவது வழக்கம். ரமண மஹரிஷியின் வாழ்வில் நடந்த பல சம்பவங்களைக் கூறலாம். வழியில் புலியைப் பார்த்து ஒடி வந்து சொன்ன சிஷ்யரிடம், “அடடா! அவர் ஒரு சித்தர். உங்களைப் பார்க்கத் தானே வந்தார்!” என்று சொன்னார். இது போல பல சம்பவங்கள். மகானை மகானே அறிவார். நன்றி ச.நாகராஜன்
Tamil and Vedas
/ August 19, 2018very interesting