WRITTEN by London swaminathan
Date: 20 August 2018
Time uploaded in London – 20-23 (British Summer Time)
Post No. 5344
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும் பெரிது… (5344)
இன்று அவ்வையாரிடம் யாராவது அவ்வையே இதிஹாசங்களில் எது பெரிதோ? என்று கேட்டால்,
ஐயனே உலகில் பழமையானதும் பெரிதுமான நூல் ரிக் வேதம்; அதில் 40,000 வரிகள் உள்ளன.
ஆனால் நீவீர் இதிஹாசம் பற்றிக் கேட்டதால் அது பற்றி மட்டும் செப்புவேன் கேளீர்:
Image of Virgil
பெரிது பெரிது வர்ஜிலின் ஏனிட் (Aeneid of Virgil) ,
அதனினும் பெரிது ஹோமரின் இலியட்
(Iliad of Homer)அதனினும் பெரிது வால்மீகியின் ராமாயணம்;
அதனினும் பெரிது வியாஸரின் மஹாபாரதம்
அதனினும் பெரிது எங்கும் இல்லை, இப்போதும் இல்லை!
தாங்க்ஸ் (Thanks), அவ்வை என்று சொல்லி விடைபெற்றால் பல உண்மைகள் புலப்படும்.
வர்ஜில் என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரோமானிய புலவர். அவர் எழுதிய காவியம் ஏனிட். அது லத்தீன் மொழியில் உள்ளது அதிலுள்ள வரிகள்- 9868
இதற்கு முன், கி.மு 800-ஐ ஒட்டி கிரேக்க மொழியில் ஹோமர் இரண்டு இதிஹாசங்களை இயற்றினார். அவற்றில் இலியட்டின் வரிகள் 15,693. இத்தோடு ஆடிஸி (Odyssey) என்ற அவரது காவியத்தையும் சேர்த்தால் சுமார் 30,000 வரிகள்தான் வரும். அதற்கு முன் கிரேக்க மொழியில் எந்தப் படைப்பும் இல்லை. ஆனால் இலியட் காவியத்துக்கெல்லாம் முன் மாதிரியாக விளங்கிய வால்மீகி ராமாயணத்தில் 48,000 வரிகள். இதை விட மஹாபாரதம் பெரிது. 2,20,000 வரிகள். அதில் வியாஸர் சொல்லாத, பேசாத விஷயம் எதுவும் இல்லாததால், ‘வியாச்சோசிஷ்டம் ஜகத் ஸர்வம்’ (வியாஸரின் எச்சில்தான் உலகம் முழுதும்) என்பர்.
இந்துக்களின் கணக்குப்படி வால்மீகி ராமாயணமே முதல் காவியம். அதில் புத்த மதம் பற்றி ஒரு குறிப்பு இருப்பதாகச் சொல்லி அதை பின்னுக்குத் தள்ளுவர் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’.
மஹாபாரதத்தில் புத்த மதம், சமண மதம் பற்றிய குறிப்புகள் இல்லாமையால் அதை முன் வைப்பர். ஆனால் உண்மையில் எளிமையான காவியமான ராமாயணமே முதல் காவியம். இந்துக்கள் பயன்படுத்தும் ஸ்லோகம் என்பதே வால்மீகியின் சோகத்திலிருந்து வந்ததாக கதையும் உண்டு.
மஹா பாரதத்துக்குப் பெருமை சேர்க்கும் இரண்டு விஷயங்கள்-
அதிலுள்ள பகவத் கீதை
விஷ்ணு ஸஹஸ்ரநாமம்
ராமாயணத்தைப் பார்த்து, அல்லது அதைக் கேட்டு, கிரேக்க நாட்டுக்கு ஏற்ப ஹோமர் ஒரு இதிஹாசம் எழுதினார் என்று சில இலக்கிய விமரிசகர்கள் பகர்வர்:-
ட் ரோ ஜன் யுத்தம்= ராம ராவண யுத்தம்
ட் ராய் நகரம் = லங்கா
ஸ்பார்டா = அயோத்யா
மெனெலஸ் = ராமா
பாரிஸ்= ராவணா
ஹெக்டர் = இந்திரஜித் அல்லது விபீஷணன்
ஹெலன் = சீதா
அகமெம்னன்= சுக்ரீவா
பட் ரோ ஸியஸ்= லக்ஷ்மணன்
நெஸ்டர்= ஜாம்பவான்
அகில்லிஸ் = அர்ஜுனா+,,,,,,,,மா+ லக்ஷ்மணா
என்று ஒப்பிடுவர்.
இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்டது என்று கருதுவோரும் ஒரு விஷயத்தை மறக்க மாட்டார்கள் லத்தீன், கிரேக்க மொழிகளில் காவியங்களோ இதிஹாசங்களோ தோன்றும் முன் இலக்கியம் கிடையாது. ஸம்ஸ்க்ருதத்திலோ இதிஹாஸத்துக்கும் முன்னதாக பிரம்மாண்ட வேத கால இலக்கியம் உண்டு.
ராமாயண, மஹாபாரத இதிஹஸங்களைப் புகழாத இந்தியவியல் (Indologists) அறிஞர் எவருமிலர்.
–சுபம்–
R.Nanjappa (@Nanjundasarma)
/ August 21, 2018‘ராமாயணத்தில் புத்த மதம் பற்றிய குறிப்பு’- எதை வைத்து வெளி நாட்டு ‘அறிஞர்கள்’ இதைச் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.’
இங்கு ஒரு விஷயம் நினைவில் இருக்கவேண்டும். புத்த ‘மதம்’ என்று தற்காலத்தில் சொன்னாலும். புத்தர் தன் கருத்துக்களுக்கு ஒரு தனி ‘மதம்’ என்ற பெயரைச் சூட்டவில்லை. “தர்மம்” என்றே வழங்கிவந்தார். “ஆர்ய தர்மம்” என்றார். அப்போது நமது ஸனாதன மதத்திற்கும் ஹிந்து, மதம் என்ற பெயர்கள் இல்லை. அதுவும் தர்மம் தான்! ஆக, புத்தர் புதிய மதத்தைத் தொடங்கவில்லை.
புத்தர் அப்படி ஒன்றும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. புத்தரின் அடிப்படைக் கொள்கை, இந்த உலகம்-ஸம்சாரம் துக்கமயமானது என்பதே. இது பகவத் கீதையில் ஆணித்தரமாகச் சொல்லப்படும் கருத்து’
துஃக்காலயம் அஶாஸ்வதம் 8.15
ம்ருத்யு ஸம்ஸார வர்த்மனி 9.3
அனித்யம் அஸுகம் லோகே 9.33
ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத் 12.7
ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி
துஃக்க தோஷானு தர்ஶனம் 13.8
ஜன்ம ம்ருத்யு ஜரா துஃக்கம் 14.20.
புத்தர் ‘நிர்வாணம்’ பற்றிப் பேசுகிறார். இதுவும் “ப்ரஹ்ம நிர்வாணம்” என்று பகவத் கீதையில் வருவதுதான். 2.72, 5.24-26.
புத்தர் ஒவ்வொருவரும் தன் புத்தியைக்கொண்டு இந்த உலகின் நிலையாமையை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிறார். ‘புத்தி யோகம்” என்று இதையே பல இடங்களில் பகவத் கீதை விளக்குகிறது. மேலும் ஒவ்வொருவரும் தன்னாலேயே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும் என்றும் பகவத் கீதை சொல்கிறது! [6.5]
புத்தரின் அணுகுமுறைதான் புதியது. வேறு எதையும் சாராமல், தன் சுயபுத்தியினாலயே ஒவ்வொருவரும் சிந்தித்து உண்மையை உணரவேண்டும் என்றார். கடவுளை மறுக்கவில்லை, ஆனால் கடவுளைப் பற்றிப் பேசவில்லை. இதில் கீதையிலிருந்து மாறுபடுகிறார். [ ஆனால் பின்னர் வந்த பவுத்தர்கள் புத்தரையே கடவுளாகக் கும்பிடுகிறார்கள்!]
புத்தர் துறவுக்கு முக்கியத்துவம் தந்தார். சனாதன தர்மத்தில் துறவுக்கு இடமுண்டு, அனால் அதுதான் வழி என்று சொல்லவில்லை. எல்லோருக்கும் அதைச் சொல்லவில்லை. கீதை துறவுக்கும் த்யாகத்திற்கும் புதிய இலக்கணம் வகுக்கிறது. [18.2,3]
புத்தர் பெயரில் வழங்கும் கருத்துக்கள் அவருக்கு முன்பாகவே இருந்தன! ராமாயண காலத்திலும் இருந்தன.. ராமன் காட்டுக்குப் போகவேண்டாம், தகப்பன் சொல்லை நிராகரித்து அரசாட்சி செய்யவேண்டும் என்று வாதாடும் ஜாபாலி என்னும் முனிவர் [அயோத்யா காண்டம், சர்கம் 108] ஒரு வேத வித்தகர்தான்:”ப்ராஹ்மணோத்தம:”:ஆனால் அவர் சொல்பவை அறத்திற்குப் புறம்பானவை= “தர்மாபேதம்”. [ மேலுலகம் இல்லை, தான தர்மங்கள் வேறுமே எழுதிவைக்கப்பட்டவை, தசரதருக்கும் உனக்கும் என்ன உறவு?, சிராத்தம் செய்துவிட்டால் அந்த உணவு செத்தவர்களைச் சென்றடையுமா, கண்ணால் காண்பதைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் போன்றவை] இது ஓரளவுக்கு புத்தர் கருத்துக்கள் போன்று தோன்றலாம். இத்தகைய கருத்துக்கள் பழங்காலம் தொட்டே இருக்கின்றன. புத்தர் புதியதாக உருவாக்கியவை அல்ல.
புத்தரின் புதுமை, அவர் தன் சொந்த அனுபவத்தின் மீதே தன் போதனைகளைச் செய்ததுதான் [ பழைய சாஸ்திரங்களை நாடவில்லை.] மற்றபடி அவர் கொள்கைகள், கருத்துக்கள் பழையனவே.
இப்படிச் சில கருத்துக்கள் ராமாயணத்தில் வருவதால் ராமாயணம் புத்தருக்கும் பிந்தைய தாகாது. மஹாபாரதத்துக்குப் பிந்தைய தாகாது.
வெளி நாட்டினர், புத்தமதம் தனியான மதம் என்ற அடிப்படைக் கருத்திலிருந்து தொடங்குவதால் இத்தகைய அபத்தங்களைச் சொல்கிறார்கள், அல்லது வேண்டுமென்றே திரிக்கிறார்கள். புத்தர் காலத்தில் புத்தமதம் என்று ஒன்று இல்லை, அவர் சொன்ன கருத்துக்களைச் சிலர் ஏற்றார்கள், அவர்கள் ஸனாதனிகள் தான், புத்ததர்மமும் நமது பொது தர்மத்தின் ஒரு பிரிவுதான். இவற்றையெல்லாம் ஸ்ரீ ஆனந்த குமாரஸ்வாமி போன்றவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.
நமது ஸனாதன மதத்தில் புதிதாக ஒன்றைச் செய்வது என்பது இயலாது; ஏனெனில் இதில் ஆதியிலிருந்தே இல்லாதது எதுவும் இல்லை. சில புதிய விளக்கங்கள் வரலாம். அவ்வளவுதான். புத்தரின் கருத்துக்களுக்கு உபனிஷதங்களின் ஆதாரத்தை அறிஞர்கள் காட்டுகிறார்கள்.
நமது காலத்தில் புதிதாக ஒன்றைச் சொன்னவர் ஸ்ரீ ரமணமஹர்ஷிகளும் ஸ்ரீ அரவிந்தரும் தான். “நான் யார்” என்று பார்; சாமியைத் தேடுமுன் ஆசாமி யார் என்று பார் என்று ஸ்ரீ ரமணர் சொன்னார். இவர் வகுத்த “நான் யார்” என்னும் தேடல் முறை புதியது. ஸ்ரீ ரமணரும் தன் சொந்த அனுபவத்தையே ஆதாரமாகக் கொண்டுதான் விளக்கினார்; எந்தப் பழைய சாஸ்திரத்தையும் அவர் படித்ததுமில்லை, ஆதாரமாகக் காட்டவில்லை. ஆனால் இறுதி லட்சியம் நமது தர்மத்தில் உள்ளதுதான். “புத்தி இதயத்தே பொருந்தி அக நோக்கால் அத்துவிதமா மெய் அகச் சுடர் காண்கை”.
ஸ்ரீ அரவிந்தர் சற்று வித்தியாசமானவர். வேதாந்தம்-அத்துவிதம் என்று ஏற்றுக்கொண்டாலும், உலகம் வெறும் தோற்றம் என்பதை ஏற்பதில்லை; [இது பொதுவாக த்வைதிகள், விசிஷ்டாத்வைதிகளின் நிலை] லட்சியம் மோக்ஷம் அடைவது மட்டுமன்று, அதற்குப் பிறகும் ஆற்றவேண்டிய பணி உள்ளது என்பார். Supramental manifestation என்பது புதிய கொள்கை, அணுகுமுறை மட்டுமல்ல. ஆனால் இது ஒரு Theory யாக இருக்கிறதே தவிர, இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை![நடை முறை வழக்கில் இல்லை.]
இதையெல்லாம் பார்க்கும் போது புத்தர் சொன்னது ஒன்றும் அவ்வளவு புரட்சிகரமானதாகத் தெரியவில்லை. ஆனால் அரசியல் செல்வாக்கு வந்ததும் பௌத்தர்கள் தங்களை வித்தியாசமாகக் காட்டிக்கொள்ளவே முயன்றார்கள்.
புத்தர் நமது அவதாரங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்தான்.
வேற்றுமையை வளர்ப்பதுதான் வெளி நாட்டு “அறிஞர்க”ளின் தொழில்!
Sudharsan R
/ October 24, 2018ஔவையார் என்று எழுதாமல் அவ்வையார் என்று எழுதுவது ஏன்?
Sudharsan R
/ October 24, 2018ஜோதிடம் 4 லட்சம் ஸ்லோகங்கள் கொண்டது.
பாஞ்சராத்ர ஆகமம் 2 லட்சம் ஸ்லோகங்கள் கொண்டது
மஹாபாரதம் 1.25 லட்சம் ஸ்லோகங்கள் கொண்டது
18 புராணங்கள் சேர்ந்து 4 லட்சம் ஸ்லோகங்கள் கொண்டது
வால்மீகி இராமாயணம் 24000 ஸ்லோகங்கள் கொண்டது
அறிக.