ஆச்சரியம் ஆனால் உண்மை; நீங்கள் நினைப்பதைக் “கேட்கலாம்”! (Post No.5382)

WRITTEN BY S NAGARAJAN

Date: 1  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-55 AM (British Summer Time)

 

Post No. 5382

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 31-8-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திஆறாம்) கட்டுரை

 

ஆச்சரியம் ஆனால் உண்மை; நீங்கள் நினைப்பதைக்கேட்கலாம்!

 

.நாகராஜன்

 

ஆச்சரியம் ஆனால் உண்மை! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் எதுவும் சாத்தியம்! நீங்கள் மனதில் நினைப்பதை உங்களால் கேட்க முடியும்!

 

இதற்கான ஒரு சாதனத்தை உருவாக்கியவர் இந்திய வமிசாவளியினரில் ஒருவர். பெயர் ஆர்னவ் கபுர்.இவரைப் பற்றி உலகப் பத்திரிகைகள் அனைத்தும் புகழ்ந்து தள்ளுகிறது.

 

அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம் ஐ டி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது) புதுமை சாதனங்களை உருவாக்குவதில் முதலிடம் பெற்ற ஒன்று. இதில் மீடியா லேப் என்று ஒரு பிரிவு சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அங்கு எதிர்காலம் உருவாக்கப்படுகிறது.

 

 

ஆறு மாடிக் கட்டிடத்தில் உள்ள மீடியா லேபில் 230 ஆய்வு மாணவர்கள் இருக்கின்றனர். அவர்கள் கலை, எஞ்சினியரிங், உயிரியல், இயற்பியல், குறியீடு ஆகிய துறைகளில் தங்கள் ஆய்வைச் செய்கின்றனர்.

 

இன்று நாம் காணும் டச் ஸ்கிரீன், தானியங்கி காரை ஓட்டுவிக்கும் ஆணைகள் போன்றவை இங்கு உருவாக்கப்பட்டவை தான்.

 

பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் என்று பிறரால் எள்ளி நகையாடப்படும் எண்ணங்களை செயல்படுத்த விரும்புவோரின் களம் இது.

 

இன்று நாம் கூகிளில் எந்த இடத்தைப் பற்றிக் கேட்டாலும் பதில் பெறுகிறோமே, அது 1979இல் மீடியா லேபில் உருவானது தான்!

மூவி மேப் என்ற பெயரில் அன்று அது உருவாக்கப்பட, இன்று ஒவ்வொரு சந்து பொந்தையும் கூகிளில் நாம் காண்கிறோம்!

 

மிகப் பெரிய சோதனைக் கூடமான இதில் பாலைவனத்தில் பயிர் வளர்ப்பது எப்படி, கனவுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி, மனித மூளையை இண்டர்நெட்டுடன் இணைப்பது எப்படி போன்றவை ஆராயப்படுகின்றன.

 

கேட்டால் சிரிப்போம்; ஆனால் இவை மெய்ப்பிக்கப்படும் போது ஆவென்று வாயைப் பிளந்து ஆச்சரியப்படுவோம். இதை அறிவியல் உலகம் ‘எதிர்காலம் உருவாக்கப்படும் தொழிற்சாலை’ என்று செல்லமாகக் குறிப்பிடுகிறது!

மீடியா லேப்பில் ஒரு ஆய்வு மாணவராக இருக்கும் ஆர்னவ் கபுருக்கு மனம் நினைப்பதைக் ‘கேட்டால்’ என்ன என்று தோன்றியது.

 

விளைவு : ஆல்டர் ஈகோ என்ற சாதனம் அவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இது காதில் சொருகி வைக்கப்படும். ஒரு ஒலாவை அல்லது ஊபரை வரவழைக்க வேண்டுமென்றால் நீங்கள் அதை நினைத்தாலே போதும். அது ஓலா அல்லது ஊபருக்கு சொல்லப்பட்டு கார் உங்களை வந்து அடையும்!

 

இதை யூ டியூபில் அவர் சமீபத்தில் செய்து காண்பித்த போது உலகமே அயர்ந்து போனது. நீங்களும் இந்த யூ டியூப் டெமோவைப் பார்க்கலாம் (Arnav Kapoor’s Alter Ego YouTube video).

எதை கபுர் நினைத்தாலும் ஆல்டர் ஈகோ அவர் பேசாமல் இருக்கும் போதே அதைச் செய்து விடுகிறது.

 

இயந்திரமும் மனித மனமும் இணையும் காலம் தொடங்கி விட்டது என்கிறார் அவர்.

 

 

 

அவரை 60 நிமிடங்கள் என்ற தொடருக்காக பேட்டி கண்ட ஸ்காட் பெல்லி அதிசய அனுபவத்தை அடைந்தார்.

‘நீங்கள் உங்களுக்குள்ளாக பேசும் போதே உங்கள் மூளை எலக்ட் ரிகல் சிக்னல்களை உங்கள் குரல் நாண்களுக்கு அனுப்புகிறது. அந்த சிக்னல்களை நீங்கள் எடுத்து ஒருவர் என்ன பேச நினைக்கிறார்’ என்பதைக் கண்டு பிடிக்க முடியும் என்கிறார் ஆர்னவ்.

 

இந்த சிக்னலை பெறுகின்ற சாதனத்தைத் தான் வடிவமைத்துள்ளார் ஆர்னவ்.

பேசாமல் இருக்கும் போதே இந்த சிக்னல்கள் பெறப்பட்டு அவை ஒரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகின்றன. உடனடியாக நினைத்தது செயல்படுத்தப்படுகிறது.

 

எடுத்துக்காட்டாக சில கேள்விகளை ஸ்காட் பெல்லி கேட்டார்:

ஸ்காட்: 45689 என்ற எண்ணை 67 ஆல் வகுத்தால் வருவது?

ஆர்னவ் மனதிற்குள்ளாக இந்தக் கேள்வியைக் கேட்டு கணினிக்கு அனுப்புகிறார். பின்னர் மண்டைஓட்டின் வழியே கணினி அனுப்பும் அதிர்வுகளை உட்காதில் கேட்கிறார். விடையைச் சொல்கிறார்.

 

ஆர்னவ் : விடை 681.925

 

ஸ்காட் : மிகச் சரியான விடை. பல்கேரியாவில் உள்ள பெரிய நகர் எது? அதன் ஜனத்தொகை என்ன?

 

ஆர்னவ் மனதிற்குள்ளாக இதை எண்ணி அவர் சாதனம் மூலமாகக் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறார்.

ஆர்னவ் : சோபியா 12.10 லட்சம் ஜனத்தொகை

ஸ்காட் : அட, இண்டர்நெட்டே உங்கள் தலைக்குள் இருக்கும் போல் இருக்கிறதே!

 

ஆர்னவ்: ஆம், அதைப் பெறத்தான் இந்த சாதனம்.

இப்படித் தொடரும் கேள்விகளும் பதில்களும் நம்மை வியக்க வைக்கின்றன.

 

இந்த மீடியா லேபிற்கு நிதி எப்படி வந்து சேருகிறது? இதில் 90 நிறுவனங்கள் இணைந்து நிதி உதவியை அளிக்கின்றன.  உலகின் மிகப் பெரிய விளையாட்டு சாதனம் தயாரிக்கும் லெகோ, தோஷிபா, ஜெனரல் எலக்ட்ரிக் போன்ற பிரம்மாண்டமான நிறுவனங்கள் நிதியை அள்ளித் தருகின்றன. மீடியா லேப் 302 அதிசயக் கண்டுபிடிப்புகளுக்கான பேடண்ட் உரிமைகளைப் பெற்றுள்ளது! மீடியா லேப் தரும் நவீன கண்டுபிடிப்புகள் கேட்கவே நம்ப முடியாதவை.

 

எடுத்துக்காட்டாக பெட்டிக்குள் பயிர் வளர்ப்பது ஒன்று. பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டவை. அந்தப் பயிர்கள் ஆனந்தமாக வளர்கிறதாம். வருடத்திற்கு ஐந்து அறுவடை நிச்சயம்!

நம்ப முடியாத இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் நாளைய உலகை மாற்றப் போவது நிச்சயம்

 

ஆர்னவ் கபுரின் உங்கள் எண்ணத்தின் படி பேசாமலேயே ஆணையிட்டு எதையும் செய்ய முடியும் என்பதும் இதில் ஒன்று.

அவரது யூடியூப் காட்சியைத் தான் பாருங்களேன், ஒரு முறை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ….

 

ரொபாட் இயலில் மிகப் பெரிய விஞ்ஞானியான கெவின் வார்விக் ரொபாட்டுகளைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.ஸ்டீபன் ஹாகிங்கும் இதையே சொல்லி வந்தார். இவர்கள் இருவரும் சொல்வதை மெய்ப்பிப்பது போல ஒரு சம்பவம் நடந்து விட்டது.

 

ஃபேஸ்புக்கின் ஆய்வுப் பிரிவு இரண்டு ரொபாட்டுகளைச் செய்தது. இவை ஒன்றுக்கொன்று பேசும் வல்லமை படைத்தவை. ஆகவே இதற்கு சாட்பாட்ஸ் (Chatbots) என்று பெயர். ரொபாட்டுகளின் பெயர் ஆலிஸ் மற்றும் பாப். (Alice and Bob).

 

இவைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பாஷை கடினமாக இருக்கிறது என்று எண்ணிய இவை தமக்கு எளிதான ஒரு பாஷையை தாமே உருவாக்கிக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டன.

 

இவைகள் பேசிக் கொண்டது விஞ்ஞானிகளுக்குப் புரியவில்லை.

அரண்டு போன விஞ்ஞானிகள் திகைத்தனர். இவை பேசுவது என்ன என்று தெரியாமல், ஏதேனும் ஏடாகூடமாக அவை திட்டம் போட்டால்!

 

அவ்வளவு தான், சோதனையையே ஃபேஸ்புக் நிறுத்தி விட்டது.

இது அபாயமானது என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்து கொண்டனர்.

 

கெவின் வார்விக்கோ, “இது ஒரு முக்கியமான மைல்கல். ரொபாட் அபாயகரமானவை அல்ல என்று எவரெவர் நினைத்தார்களோ அவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு நல்ல பாடம். அவை என்ன பேசுகின்றன என்று நமக்குத் தெரியவில்லை. அவை இயங்கக்கூடியவையாக இருந்து ராணுவ ரொபாட்டாக இருந்தால், விளைவு ஆபத்தான ஒன்றாகும். இது தான் உலகின் பதிவு செய்யப்பட்ட ரொபாட்டுகளின் முதல் சம்பாஷணை! அவை நமது கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்று நாம் நினைத்தாலும் அவை என்ன பேசின என்பது நமக்குத் தெரியவே தெரியாது. ஜாக்கிரதை, ஸ்டீபன் ஹாகிங்கும் நானும் இது பற்றி பலமுறை எச்சரித்து விட்டோம்” என்கிறார்.

ஃபேஸ்புக் நிறுத்தி விட்ட சோதனை உலகில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது!

குறிப்பு : முன்பொரு முறை பாக்யா வாசகர்களுக்கு தன் கையெழுத்திட்ட போட்டோவை அனுப்பி கெவின் வார்விக் வாழ்த்துக்கள் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

***

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: