கொலைகார மூலகம் (THALLIUM) பற்றிய சுவையான தகவல்கள்! (Post No.5390)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 3 September 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 5390

 

 

கொலைகார மூலகம் (THALLIUM) பற்றிய சுவையான தகவல்கள்! (Post No.5390)

 

 

உலகில் கண்டறியப்பட்டுள்ள நூற்றுக்கும் மேலான மூலகங்களில் ஒன்று தால்லியம் (THALLIUM) . இது கொலை வழக்குகளில் அடிபட்டதாலும், துப்பறியும் நாவல் புகழ் ‘அகதா கிறிஸ்டி’ நாவல்களில் அடிக்கடி தலைக் காட்டியதாலும் புகழ் பெற்றுவிட்டது.

 

இது ஒரு உலோகம். வெள்ளியை விட  அதிகம் கிடைக்கும்  உலோகம். இதன் பிறப்பே சர்ச்சைக்குரியது. அட! கர்ணன் போன்றோரின் பிறப்பில்தான் சர்ச்சை என்று நினைத்தால் ஒரு மூலகத்தின் பிறப்பிலுமா சர்ச்சை?

 

ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி சோதனைச் சாலையில் சல்ப்யூரிக் அ மிலக் குடுவையில் பச்சைக் கோட்டைக் கண்டார். ஆஹா, இது ஒரு புதிய பொருள் இதற்குத் தல்லியம் என்ற திருநாமாத்தைச் சூட்டுவோம் என்று கருதி நாமகரண சடங்கையும் நடத்தி விட்டார். அவர் பெயர் வில்லியம் க்ரூக்ஸ் WILLIAM CROOKES (1832-1919). இது 1861-இல் நடந்தது.

 

ஆனால் ப்ரான்ஸ் நாட்டில், 1862-இல் கிளாட் அகஸ்ட் லாமி CALUDE AUGUST LAMY (1820-1878) இதற்கும் ஒரு படி மேலே சென்று தால்லியத்தை வடிகட்டி, உலோகக் கட்டியாக செய்து, லண்டனில் உள்ள ஒரு கண்காட்சிக்கும் அனுப்பி விட்டார். அந்தக் கமிட்டி அவரைப் பாராட்டி ஒரு பதக்கமும் கொடுத்து விட்டது. பிரஞ்சு அகாடமி இவர்தான் இந்த மூலகத்தின் கண்டு பிடிப்பாளர் என்று அறிவித்துவிட்டது

 

 

ஒரிஜினல் விஞ்ஞானிக்கு வந்ததே கோபம்! அவருடைய விஞ்ஞான சஞ்சிகை மூலம் விட்டு விளாசினார். ஒவ்வொரு இதழிலும் பிய்த்துக் குதறினார். போகப் போக அது பிரான்ஸ்- பிரிட்டன் ‘ரசாயன’ யுத்தமாகப் பரிணமித்தது. “வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு , கொடுத்த மெடலை  வாபஸ் வாங்கு” என்ற கோஷம் பெரிதானது

 

நமக்கு வேண்டாமப்பா, இந்த வம்பு என்று சர்வதேச கண்காட்சிக் கமிட்டி அவருக்கும் ஒரு பதக்கத்தைக் கொடுத்தது.

இனித்தான் சுவையான கதைகள்!

 

விஷம் வைத்து ஆட்களைத் தீர்த்துக் கட்டுவோர், அந்த சடலத்தை எரித்துவிட்டால், கொலைத் தடயம் மறைந்து விடும் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். பிரிட்டனில் கிரஹாம் யங் என்பவர், ஒரு கொலை வழக்கில் வகையாகச் சிக்கிக் கொண்டார். அவரால் கொலை செய்யப்பட்ட (BOB EGLE) பாப் ஈகிள் என்பவரின் சடலத்தை எரித்த சாம்பல் கிடைத்தது . அதை ஆராய்ந்ததில் தால்லியம் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. இது குற்றம் தொடர்பான (FORENSIC SCIENCE) தடய அறிவியலில் ஒரு புதிய மைல் கல்லாக விளங்குகிறது. ஒரு சோதனையின் பெயர் அடாமிக் அப்ஸார்ப்ஷன் ஸ்பெக்ட் றோமெட்ரி . இந்த சோதனை நடத்தப்பட்ட போது, எந்த ஒரு சடலத்தை எரித்தாலும் காணப்படும் அளவுக்கும் மேலாக அந்த சாம்பலில் தால்லியம் இருந்தது தெரிந்தது. அவர் விஷம் வைத்துக் கொன்றது உறுதியானது.

 

அகதா கிறிஸ்டியின்  ‘ஆகாத’ நாவல்

அகதா கிறிஸ்டியை (AGATHA CHRISTE) அறியாத ஆங்கிலப் புதினப் பிரியர்கள் கிடையாது. அவர் 1961ஆம் ஆண்டில் தி பேல் ஹார்ஸ்(THE PALE HORSE) என்ற ஒரு துப்பறியும் நவீனத்தை வெளியிட்டார். அதில் தால்லியம் விஷக் கொலை வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட தடயத்தை எ[ப்படி திசை திருப்பிவிட முடியும் என்றும் எழுதி இருந்தார். அந்தக் கதையில் மந்திர தந்திர சாபங்கள்தான் (MAGIC CURSES) ஆளைக் கொன்றது என்ற பாணியில் கதைப்போக்கு இருந்தது.

 

1980 முதல் 1990 ஆண்டுகளில் இராக் நாடு, தனது அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்ட தாலியத்தைப் பயன்படுத்தியதாக மேலை நாடுகள் செப்புகின்றன. இது இயற்கையில் ஆட்கள் இறந்தது போலவும் காட்டவும் உதவும்.

 

கிரஹாம் யங் என்ன செய்தார்?

இவர் இங்கிலாந்தில் ஹார்ட்போர்ட்ஷைரில் பொவிங்டன் என்ற ஊரில் வேலை பார்த்தார். தொழிற்சாலையில் சக ஊழியர்களின் ‘காப்பி’யில் தால்லியம் சல்பேட் (THALLIUM SULFATE) என்ற ரசாயனத்தைக் கலந்தார். பல ஊழியர்கள் நோயால் வருந்தினர். இருவர் இறந்தனர். ‘ஏனைய்யா! உமது தொழிற்சாலையில் இந்தக் கோரம் ? என்று வினவியபோது, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழிக்கு இணங்க அவரே தன்னைக் காட்டிவிட்டார். ‘ஒருவேளை தால்லியம் காரணமாக இருக்கலாம்’ என்று உளறிவிட்டார்.

(நுணல்= தவளை)

பின்னர் டாக்டர்கள் பரிசோதனையில் அவர்கள் தால்லியத்தால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப் பட்டது.

 

யங் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை 1972-ல் பெற்றார்.   1990-ல் தற்கொலை செய்துகொண்டார்.  இதில் துயரம் என்னவென்றால், அவர் ஏற்கனவே குடும்பத்தினருக்கு விஷம் வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, மன நோய்க்கான மருந்தைச் சாப்பிட்டவர். மனநோய் மருந்துகள் நன்றாக வேலை செய்கிறது என்று டாக்டர்கள் பகர்ந்தவுடன் அவர் விடுதலை செய்ய்ப்பட்டிருந்தார் அதற்குப் பின்னர்தான் பெரிய கொலை வழக்கு!

 

ஆனால் தால்லியம் ரசாயன விஷத்தால் இறந்த எல்லாவற்றையும் கொலை என்றும் கருதிவிடக்கூடாது.  1987ம் ஆண்டில் கயானா ( (GUYANA, தென் அமெரிக்கா) நாட்டில் 44 பேர் மர்மமாக இறந்தனர். நுற்றுக் கணக்கானோர் நோயில் வீழ்ந்தனர். அவர்கள் குடித்தது வெறும் பசுவின் பால். பின்னர் ஆராய்ந்ததில் கரும்புத் தோட்டத்தில் எலிகளைக் கொல்ல வைக்கப்பட்ட தால்லியம் கலந்த வெல்லக் கட்டிகளை அந்த பசுக்கள் மேய்ந்தது கண்டறியப்பட்டது. அதன் உடலில் ஏறியவிஷம் பாலில் கலந்து அப்பாவிகளைத் தப்பாகக் கொன்றது. தப்பாமல்  கொன்றது.

 

குறி வைத்தது எலியை; கொடுத்ததோ மனித பலியை!

 

தால்லியம், எலி மருந்து, கண்ணாடித் தொழிற்சாலை  ஆகியவற்றில் பயன்படுகிறது அதன் ஐஸடோப் (ISOTOPE) இருதய நோய்ப் பரிசோதனைகளில் பயன்படுகிறது. ஒரு காலத்தில் தலையில் ஏற்படும் புழுக்களைக் கொல்லவும் (RINGWORMS IN SCALP) பயன்பட்டது. தலை முடியை உதிர வைத்தால்தான் தலையில் சிகிச்சை தரமுடியும் . தால்லியம் கலந்த ரசாயனப் பொருட்கள் அதைச் சுலபமாக செய்து முடித்தமையால் அதற்கு ‘முடி சூடும் பெருமை’ கிடைத்தது.

 

1930களில் தாலியம் அஸிடேட் ரசாயனத்தை முகத்தில் வளரும் முடியை அகற்றவும் பயன்படுத்தினர்.

 

‘தலை மயிரும் தால்லியமும்’– கதை முடிந்தது!

வேதியியல் பயிலும் மாணவர்களுக்கு உதவும் குறிப்புகள்:

Chemical symbol TI
Atomic number 81
Atomic weight 204.3833
Melting point 304 C
Boiling point 1457 C

 

–சுபம்–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: