WRITTEN BY S NAGARAJAN
Date: 5 SEPTEMBER 2018
Time uploaded in London – 6-41 AM (British Summer Time)
Post No. 5394
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
வில்லிபாரதம்
வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்!
ச.நாகராஜன்
வில்லிப்புத்தூராரின் வில்லி பாரதம் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அபூர்வமான காவியம்.
வில்லிப்புத்தூராரின் பாணியே தனிப் பாணி. ஏராளமான கதைகளை அவர் கூறுவது வியப்பூட்டும் ஒன்று. அதுவும் ஒவ்வொரு வரிக்கும் ஒரு கதை சொல்லும் அவரது சொல் சுருக்கம் அபூர்வமானது.
அத்துடன் ஏராளமான அணிகளை ஆங்காங்கே அள்ளித் தெளித்து நம்மை பிரமிப்பூட்டுவதும் அவரது பாணி.
இந்த இரண்டு அம்சங்களையும் ஒருங்கே காட்டும் ஒரு பாடல் ஆதி பருவத்தில் திரௌபதி மாலையிட்ட சருக்கத்தில் இடம் பெறுகிறது. (பாடல் எண் 41)
இது கண்ணபிரானைக் குறித்த பாடல் என்பதால் சுவை இன்னும் சற்றுக் கூடுகிறது.
திரௌபதிக்கு அவளது செவிலித் தாயர் சுயம்வர மண்டபத்தில் கூடி இருக்கும் அரசர்களை இன்னார் என்று அறிமுகப்படுத்தி வைக்கும் போது கண்ணபிரானை அறிமுகம் செய்து வைக்கின்றனர்.
இந்தக் குரிசில் யதுகுலத்துக் கெல்லாந் திலகமெனுமாறு
வந்துற்பவித்துப் பொதுவருடன் வளருங் கள்ள மாமாயன்
முந்தக் கஞ்ச மாமனுயிர் முடித்தானிவற்கு முகிலூர்தி
அந்தப்புரத்திலாராம மந்தப்புரத்திலாராமம்.
இந்தப் பாடலில் உள்ள இறுதி அடியான, “அந்தப்புரத்திலாராம மந்தப்புரத்திலாராமம்” என்பதில் அந்தப்புரம் என்பது வெவ்வேறு பொருளில் வந்தது மடக்கு என்னும் சொல்லணியாகும்.
பாடலின் பொருள் இது:
இந்தக் குரிசில் – இந்த உத்தம புருஷன்
யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனும் ஆறு வந்து உற்பவித்து – யது வமிசம் முழுவதற்கும் ஒரு திலகம் என்று சொல்லும் படி அலங்காரமாய் அக்குலத்தில் வந்துதித்து
பொதுவருடன் வளரும் – இடையர்களுடனே வளர்ந்த
கள்ள மா மாயன் – எவரும் அறியவொண்ணாத பெரிய மாயையையுடைய கண்ணபிரான் ஆவான்.
முந்த – இளம் பருவத்திலேயே
கஞ்சன் மாமன் உயிர் முடித்தான் இவற்கு – மாமனாகிய கம்ஸனின் உயிரை ஒழித்தவனாகிய இவனுக்கு
முகில் ஊர்தி அந்த புரத்தில் ஆராமம் – மேகங்களை வாகனங்களாக உடையவனான இந்திரனது அந்த அமராவதி நகரத்திலுள்ள கற்பகச் சோலை
அந்தப்புரத்தில் ஆராமம் – தனது மனைவி வசிக்கும் அந்தப்புரத்தில் இருக்கும் சோலையாம்.
இந்தப் பாடலில் ஏராளமான சிறப்புகள் உள்ளன.
முதலில் திலகம் என்ற சொல்! யது குலத்து திலகம் கண்ணன் என்பது அழகிய பிரயோகம். சீதையை வனிதையர் திலகம் என கம்பன் கூறி இருப்பதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
அடுத்து கண்ணன் பிறந்தது, இடையர்களுடன் வளர்ந்தது, அவன் அங்கு ஆற்றிய லீலைகள், பிறகு கம்ஸனைக் கொன்றது ஆகியவற்றை ஒரு வரியில் சொல்லி விடுகிறார் வில்லிப் புத்தூரார்.
வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது கர்ப்பத்தில் உதித்த கண்ணன் ஆயர்பாடி சென்று யசோதையின் மகனாக வளர்கிறான். அங்கு இடையர்களுடன் வளர்ந்து பல லீலைகளைப் புரிகிறான்.. தேவகி புத்திரன் யசோதையிடம் ஒளிந்து வளருதலை நாரதர் சொல்லக் கேட்ட கம்ஸன் மிக்க கோபம் கொள்கிறான். வில்விழா என்கிற வியாஜ்யத்தை வைத்து கண்ணனை வடமதுரைக்கு வரவழைக்கிறான்.
கண்ணன் வடமதுரை சென்று, கம்ஸ சபையில் வேகமாக எழும்பிக் கம்ஸனது மஞ்சத்தில் ஏறி அவனது கிரீடம் கழன்று கீழே விழும்படி செய்து அவனைத் தலைமயிரைப் பிடித்து இழுத்து தரையிலே தள்ளி அவன் மேல் தான் விழுந்து அவனைல் கொன்று ஒழிக்கிறான். இவ்வளவையும் சுட்டிக் காட்டுகிறது பாடலின் மூன்றாம் வரி.
அடுத்து மடக்கணியுடன் கூடிய நான்காம் வரி சுட்டிக் காட்டும் கதை இன்னொரு சுவையான கதை.
கண்ணன் நரகாசுரனை அழித்த பின் அவனால் முன்னொரு சமயம் கவர்ந்து போகப்பட்ட இந்திரன் தாயான அதிதி தேவியின் குண்டலங்களை அவளுக்குக் கொடுக்கும் பொருட்டு சத்யபாமையுடன் கருடன் தோளின் மீதேறி தேவலோகத்திற்குச் செல்கிறான். அங்கு இந்திராணி சத்யபாமையை வரவேற்று சகல உபசாரங்களையும் செய்கிறாள். என்றாலும் தேவலோகப் பெண்டிருக்கே உரித்தான் பாரிஜாதத்தை கேவலம் மானிடப் பெண்ணாகிய சத்யபாமைக்குத் தருதல் தகாது என்று எண்ணி அதைத் தரவில்லை. சத்யபாமை கண்ணனிடம் இந்த பாரிஜாத மலரரை துவாரகைக்குக் கொண்டு போக வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவிக்க கண்ணன் உடனே அந்த பாரிஜாத மரத்தை வேருடன் பிடுங்கிக் கருடனின் தோள் மீது ஏற்றுகிறான்.அப்பொது இந்திராணியின் தூண்டுதலின் பேரில் இந்திரன் கண்ணனுடன் போருக்கு வருகிறான்.
இந்திரன் உட்பட்ட சகல தேவ் சைனியத்தைத் தன் சங்க நாதம் ஒன்றினாலேயெ பங்கப்படுத்திய கண்ணன் துவாரகைக்கு பாரிஜாத மரத்துடன் வருகிறான். அங்கு சத்யபாமையின் அந்தப்புரத்தில் புறங்கடைத் தோட்டத்தில் அதை நடச் செய்து அருள்கிறான்.
இந்தக் கதையை சுவாரசியமான மடக்கணியுடன் சொல்கிறது நான்காம் வரி. அந்தப்புரம் என்ற சொல் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
ஆக வில்லிப்புத்தூராரின் பாணியான ஒரு வரியில் ஒரு கதை என்பதையும் அணிகளை இடத்திற்குத் தக்கவாறு பயன்படுத்துவதில் இங்கு சிறப்பான மடக்கணியைப் பயன்படுத்துவதையும் இந்தப் பாடலில் காண்கிறோம்.
வியாச பாரதம் சுவையானது எனில் அதைத் தமிழில் தரும் வில்லிப்புத்தூராரின் பாரதம் சுவைக்குச் சுவை ஊட்டுவதாக அமைவதைக் கண்டு வியக்கிறோம்..
கள்ள மாமாயன் வில்லிப்புத்தூராரிடம் புகுந்து செய்யும் தமிழ் மாயம் இதுவோ?!
***
குறிப்பு : பாடலின் உரை வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் இயற்றியதைப் பின்பற்றியதாகும்.