பாரதியாரும் ஆதி சங்கரரும்! (Post No.5418)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 11 September 2018

 

Time uploaded in London – 8-15 am (British Summer Time)

 

Post No. 5418

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பாரதி ‘தேச விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரோ மனிதர்களின் மோட்சம், முக்தி எனப்படும் ‘ஆன்ம விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரின் விவேக சூடாமணி ஒரு அற்புதமான கவிதை நூல். பாரதியாரோ 300 க்கும் மேலான கவிதைகளைப் பாடிய பெருங் கவிஞன்.

இருவர் பாட்டிலும் ‘விடுதலை’ பற்றிய பாடல்களில் ஒரே சிந்தனை ஓட்டமும், ஒருமித்த உவமைகளும் இருப்பது, கற்றோருக்கு இன்பம் தரும்.

 

முதலில் பாரதியாரின் வீர சுதந்திரம் வேண்டி நின்றார் கவிதையை ஒப்பிட்டு ஆராய்வோம்.

 

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

 

வேறொன்று கொள்வாரோ? – என்றும்

 

ஆரமுது உண்ண ஆசை கொண்டார் கள்ளில்

 

அறிவைச் செலுத்துவாரோ? (பாரதியார்)

 

மானுட ஜன்மம் பற்றி பாரதியார் சொல்லும் கருத்து ஆதி சங்கரரும் போற்றிய கருத்து. ‘அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது’- என்பது அவ்வையின் வாக்கு.

 

இதோ ஆதி சங்கரரின் விவேக சூடாமணியின் இரண்டாவது ஸ்லோகம்:-

 

‘ஜந்தூனாம் நரஜன்ம துர்லபதஹ’. மனிதனாய் பிறப்பது அரிது என்கிறார்.

மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது’– என்பது இந்தப் பாட்டில் பாரதியின் வரிகள்

XXX

சூரியனை விட்டு விட்டு எவரும் மின்மினிப் பூச்சியை நாடுவரோ என்பது பாரதியின் வாக்கு. ஆதி சங்கரர் சொல்வார்,

சூரியனும் மின்மினியும் போல, அரசனும் சேவகனும் போல, கிணற்று நீரும் கடல் நீரும் போல என்று முரண்பாடுகள் உள்ளன (241).

 

இந்த ஸ்லோகத்திலும்  பாரதி- சங்கரர் ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைப் பார்க்கிறோம்.

XXXX

கண்கள் இரண்டையும் விற்றுவிட்டுச் சித்திரப் படம் வாங்கினால் சிரிக்க மாட்டார்களா என்பது பாரதியின் கேள்வி.

 

நிலவொளி பிரகாஸிக்கும்போது, சித்திரத்திலெழுதிய நிலவை எந்த புத்திசாலியாவது நாடுவானா என்கிறார் சங்கரர் (522)

 

XXXX

 

பொய்மை எனும் பாம்பு கடித்தவகுக்கு ஒரே மருந்து, பிரம்ம ஞானமே என்பது சங்கரரின் வாதம் (ஸ்லோகம் 61)

 

பாரதி ஒரு பாட்டில் பாடுகிறார்,

‘பயமென்னும் பேய்தனை யடித்தோம்- பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்

வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கடைப் பிடித்தோம்

 

-என்று ஜயபேரிகை கொட்டுகிறார்.

 

இங்கு இருவர் படியதும் பிரம்ம ஞானம், மாயப் பாம்பு பற்றியே.

XXXX

 

குருவின் பெருமையைப் போற்றும் சங்கர்,

குருவின் சொற்களைக் கேட்ட சீடன் எல்லா பந்தங்களிலிருந்தும் விடுபட்டுச் சென்றான்; குரு என்பவர் சதானந்தத்தில் திளைத்து உலகையே  தூய்மையாக்குகிறார். அப்போது வேறுபாடுகள் மறையும்; இப்படிப்பட்ட ஆசார்ய- சிஷ்ய ஸம்வாதம் ஐயங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் என்று மூன்று ஸ்லோகங்களில் பாடுகிறார் (576-578)

 

பாரதியும் சுயசரிதையில்,

‘ஞானகுரு தேசிகனைப் போற்றுகின்றேன்

நாடனைத்துந்தானாவான் நலிவிலாதான்

மோனகுரு திருவருளால் பிறப்புமாறி

முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம்’

 

என்று ஆனந்தக் கூத்தாடுகிறான்.

 

சங்கரர் தனது 580 ஸ்லோகங்களில் பலமுறை சொல்லும் தத்வமஸி (நீயே அது/கடவுள்) என்ற உபநிஷத வாக்கியத்தையும் பாரதி பாடுகிறான்.

‘சாமி நீ சாமி நீ கடவுள் நீயே

தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்’ என்று பாடுகிறான்.

XXXX

 

ஆதிசங்கரர் போன்றோர் ஞானம் எனும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட போதும் பக்தி மார்க்கம் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதற்காக விவேக சூடாமணி, சௌந்தர்ய லஹரி, பஜ கோவிந்தம் போல 120க்-கும் மேலான துதிகளைப் பாடி வைத்தார். பாரதியும் பக்தியின் பெருமைதனைப் பாடுவான்,

 

பக்தியினாலே, தெய்வ பக்தியினாலே

 

பக்தியினாலே – இந்தப்

பாரிலெய்திடும் மேன்மைகள் கேளடீ

சித்தந்தெளியும்- இங்கு

செய்கையனைத்திலும் செம்மை பிறந்திடும்

வித்தைகள் சேரும்-நல்ல

வீரருறவு கிடைக்கும், மனத்திடைத்

தத்துவமுண்டாம், நெஞ்சிற்

சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்

 

ஆசையைக்கொல்வோம்- புலை

அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட பாசமறுப்போம்……

என்று நீண்டதொருபாடலைப் பாடுகிறார்.

XXXX

எண்ணிய முடிதல் வேண்டும் என்ற பாட்டில், பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்’- என்கிறார்.

 

இதே உவமையை ஆதி சங்கரர்,

சூரியனைக் கண்ட இருள் விலகுவது போல, ஞானம் எய்தியவுடன் எல்லாம் பிரம்மத்தில் கரைந்து விடும் என்பார் (ஸ்லோகம் 564). அதாவது எல்லாம் ஒன்றே என்ற உணர்வு பிறக்கும்.

XXX

பாரதியின் வேதாந்தப் பாடல்கள் அனைத்திலும் சங்கரரின் அத்வைதக் கருத்துகளைக் காணலாம். பாரதப் புதல்வர்களின்- தவ சீலர்களின்- கருத்து ஒன்றே என்பதற்கு இது எடுத்துக் காட்டு.

 

வாழ்க பாரதி- வளர்க அத்வைதம்

 

–SUBHAM-

 

 

 

Leave a comment

1 Comment

  1. ஆதி சங்கரர் பக்தியைப் போற்றினார்,பல பக்தி நூல்களை , தெய்வத் துதிகளை எழுதினார் என்பது உண்மைதான். ஆனால் “பக்தியே முக்திக்கு வழி” என்று ஆணித்தரமாக எங்கும் சொல்லவில்லை.
    ஆதி சங்கரர் ‘கர்மங்களுக்கு எதிராகப் புரட்சி செய்தார், மனிதனின் முக்கிய பிரச்சினை அறியாமை; இதற்கு மருந்து/மாற்று ஞானமே தவிர கர்மமல்ல. மனிதன் ஆத்ம ஸ்வரூபம்; இதை மறந்துவிட்டான். ஆத்மா என்றுமே இருப்பது; ஆத்மா ஒன்றுதான், அது வந்து போவதல்ல; கர்மா அறியாமை நிலையில் நிகழ்வது; கர்மாவினால் ஆத்ம சாக்ஷாத்காரம் பெற முடியாது. ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு ஞானம் ஒன்றுதான் வழி, இருளைப் போக்க வெளிச்சம் தேவை-அதுபோல் அறியாமையைப் போக்க ஞானம் தான் தேவை- இதுவே ஆதி சங்கரரின் அடிப்படை வாதம்.

    இங்கு கடவுள் எங்கு வருகிறார்? பக்தி எங்கு வருகிறது?
    ஆதி சங்கரர் கருத்துப்படி – உலகம், உயிர், கடவுள் [ ஜீவன், ஜகத், ஈஶ்வரன்}ஆகிய மூன்று அம்சங்கள் மனிதனின் அறியாமை நிலையில் இருப்பவை. தான் இந்த உடல்- ஒரு தனி வியக்தி- என்று நினைக்கும் வரை, அவனுக்கு இந்த உலகமும் தனியாகத் தோன்றும், அப்போது இந்த உலகைப் படைத்த ஒரு சக்தியும் இருக்கவேண்டுமல்லவா? எனவே, அங்கு கடவுளும் அவசியமாகிறது. ஆனால் இருப்பது ஒரே ஆத்மா-ப்ரஹ்மம் மட்டுமே -ப்ரஹ்மைவ சத்யம்-என்னும் போது, உலகமும் இல்லை; தனி வியக்தியும் இல்லை; ஈஶ்வரனும் இல்லை! எனவே, ஈஶ்வரன் என்பது is a concession to human weakness or ignorance! நாம் எந்தக் கடவுளிடம் பக்தி செலுத்தினாலும் கடைசியில் அதையும் தாண்டிச் செல்லவேண்டும்! In the ultimate stage, the idea of Iswara has to be sublated!

    ஆனால் அதுவரை- நாம் தனி வியக்தி என்று நினைக்கும் வரை- ஈஶ்வரனும் உண்மையே! அப்போது ஈஶ்வரனை வழிபட்டால் பலன் உண்டு, அந்த பக்தி நமக்கு ஞானத்திற்கு வழிவகுக்கும், பக்தியினால் ஞானம் விளையும். ஞானத்தினால் மோக்ஷம் வரும்- இதுவே ஆதி சங்கரரின் நிலை.

    So for Shankara, the idea of Ishwara is an intermediate stage, a concession to human weakness, ultimately to be sublated. Bhakti is a means to Jnana, Jnana is the sole means to liberation. Bhakti does not lead directly to Liberation.. This world and Iswara who created it are vyavaharika Satya. They are not false, but to be transcended or sublated finally.
    இதை ஒரே ஒரு- ஆனால் மிக முக்கியமான- உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.
    ஹிந்து மதத்தின் ultimate authority எனச் சொல்லக்கூடிய சாஸ்திர நூல் ஸ்ரீமத் பகவத் கீதைதான். ப்ரஹ்ம வித்யை, உபனிஷத, யோகசாஸ்திர ரூபமானது. பகவானே நேரில் சொன்னது.
    கிதையில் பகவான் கடைசியில் ‘எல்லா தர்மங்களையும் விட்டு என்னையே சரணடை; நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்; கவலைப் படாதே’ என்கிறார்.
    ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ
    அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஶுச 18.66
    இதுவே பகவத் கீதையின் இறுதி, உயர்ந்த உபதேசமாகக் கொள்ளப்படுகிறது.
    இதற்கு வியாக்யானம் செய்த ஆதிசங்கரர், பின் எழுதுகிறார்:

    “In this scripture, the Gita, has Knowledge been established as the supreme means to Liberation,or is it action, or both?”
    Then he goes on digressing on various points, and this goes on for 20 pages. (Please see the Gita with Sankaracharya’s commmentary, translated by Swami Gambhirananda, Advaita Ashrama, 7th Impression, 2006, pages 740-762)
    பகவான் இங்கு சரணாகதியைப் பற்றி ஸ்பஷ்டமாகச் சொல்கிறார். – ஶரணம் வ்ரஜ. சரணாகதியே பக்தியின் உன்னத நிலை. [ அனன்ய பக்தி]. இந்த இடத்தில், ஞானத்திற்கும், கர்மாவிற்குமான பூசல் எங்கிருந்து வந்தது?
    இது சங்கரரின் மனதிலிருந்தது. அதையே அவர் கீதையிலும் பார்த்தார். கீதையில் இருப்பதைப் பார்க்கவில்லை- தான் நினைத்ததையே பார்த்தார்.ஆக பக்தி, சரணாகதிதான் “supreme means to Liberation ” என்பதை ஆதி சங்கரர் ஒப்பவில்லை!

    கீதையை ஊன்றிப் படிப்பவர்கள் [ எந்த ஆசாரியருடைய உரையையும் தழுவாமல், உள்ளதை உள்ளபடியே படிப்பவர்கள் – all acharyas have indulged in “text-torturing” as Swami Vivekananda said- கீதையில் மூன்று முக்கிய விஷயங்களைக் கவனிப்பார்கள்:
    1. உடல்-ஆத்மா, க்ஷேத்ரம்-க்ஷேத்ரஞன், ப்ரக்ருதி-பகவான் ஆகியவற்றின் வேறுபாடு. உடல் ‘தான்” அல்ல. உடல் அழியும்; ஆத்மா அழியாதது. இதுவே ஞானம் அல்லது ஸாங்க்யம்.

    2. உடல் ப்ரக்ருதியைச் சேர்ந்தது. ப்ரக்ருதி வசப்பட்ட எவனும் கர்மாவின்றி இருக்கமுடியாது. கர்மா இல்லாமல் உடலைக்கூடத் தாங்கமுடியாது-உயிர் வாழ்க்கை நடக்காது. கர்மா குணங்களால் நடக்கிறது, ப்ரக்ருதியால் நடக்கிறது. ஆகவே, “நான் செய்கிறேன்” என்ற எண்ணமில்லாமல், தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை = நியதம் கர்ம, கார்யம் கர்ம,ஸஹஜம் கர்ம (மட்டும்) ஆசையில்லாமலும் பலனில் பற்றில்லாமலும் செய்யவேண்டும். இதை பகவானுக்கு அரப்பணமாகச் செய்யவேண்டும் இப்படிக் கர்மத்தை யக்ஞ மாக்கவேண்டும். யோகமாக்கவேண்டும். கர்மம் புரியாமலிருப்பதில் பற்றுக்கொள்ளலாகாது. பிற கர்மங்கள் பந்தம் விளைவிக்கும், பிறவிக்கு ஹேதுவாகும்.
    18வது அத்யாயத்திலும் இதைச் சுருக்கமாக, ஆணித்தரமாகச் சொல்கிறார்: நான்கு வர்ணங்களின் இயல்பான கர்மங்களை விவரித்தபின் ( ஶ்லோகம் 41-44, பகவான் சொல்கிறார்:
    ஸ்வே ஸ்வே கார்மாணி அபிரத; ஸம்ஸித்திம் லபதே பரம்
    ஸ்வகர்ம நிரத: ஸித்திம் யதா விந்ததி தத் ஶ்ருணு. 18.45
    யத: ப்ரக்ருதிர் பூதானி யேன ஸர்வமிதம் ததம்
    ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ: 18.46
    ஶ்ரேயான் ஸ்வதர்மோ விகுண:பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்
    ஸ்வபாவ நியதம் கர்ம குர்வன்னாப்னோதி கில்பிஷம் 18.47
    ஸஹஜம் கர்ம கௌன்தேய ஸதோஷமபி ந த்யஜேத்
    ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேன அக்னி வாவ்ருதா: 18.48

    தத்தமக்கு ஏற்பட்ட இயல்பான கர்மங்களைப் புரிந்தவாறே, மனிதன் உயர்ந்த ஸித்தியை எய்துகிறான். தன்னுடைய இயல்பான கர்மங்களில் ஈடுபட்டவாறே அவன் எப்படி மேன்மை எய்துகிறான் என்பதைக் கேள்.

    எந்தப் பரம்பொருளிலிருந்து ஸகல ப்ராணிகளும் உண்டாயினவோ, எந்தப் பரம்பொருள் உலகம் முழுமையும் வியாபித்திருக்கிறதோ, அந்தப் பரம்பொருளைத் தன் இயல்பான கர்மங்களைப் புரிதல் என்ற முறையில் வழிபட்டு மனிதன் பரம ஸித்தியை எய்துகிறான்.

    நன்கு கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குணக்குறைவாக இருந்தாலும் தன்னுடைய தர்மமே உயர்ந்தது. ஏனெனில் இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்வதன் மூலம் மனிதன் பாபத்தை அடையமாட்டான். (3.35ம் பார்க்க)

    குன்தி மைந்தனே! குறைவுள்ள தாயினும் தனக்கு இயல்பாக நேர்ந்த கர்மத்தை விட்டுவிடலாகாது. ஏனெனில், புகையினால் சூழப்பட்ட நெருப்பு போல, எல்லாக் கர்மங்களும் ஏதோ ஒரு வகையில் குறைவுள்ளதாகவே இருக்கின்றன.

    பகவான் இவ்வளவு எளிமையாக, நேரிடையாகச் சொன்ன பிறகும், கர்மாவை பகவான் சொல்லவில்லை என எப்படிச் சொல்லமுடியும்?
    3. கீதையில் 700 ஶ்லோகங்கள் இருக்கின்றன. இதில் பகவான் வாக்காக வருபவை 569 ஶ்லோகங்கள். இவற்றில் 140க்கும் அதிகமான ஶ்லோகங்கள் பக்தி-பகவான் பற்றியவை. பகவான் வேறெந்த விஷயம் பற்றியும் இவ்வளவு பேசவில்லை. அனேகமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் பக்தி பற்றிச் சொல்கிறார். ( லிஸ்டு என்னால் தரமுடியும்.) யோகம், த்யானம், யஜ்ஞம் என எதுவந்தாலும் அங்கு பக்தி பற்றிப் பேசுகிறார். அர்ஜுனன் கேட்காத போதும் தானே வலிந்து பக்திபற்றிச் சொல்கிறார். பக்தி பற்றிச் சொல்லும்போது, “குஹ்ய தமம், குஹ்ய தரம், குஹ்யாத் குஹ்ய தரம், ஸர்வ குஹ்ய தமம், பரமம் குஹ்யம்,தர்ம்யாம்ருதம்,ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம், மே பரமம் வச” போன்ற உயர்ந்த அடைமொழிகளைச் சொல்லி விளக்குகிறார். இப்படி பகவான் வாக்காலேயே வேறு எந்த சாதனையும் புகழப்படவில்லை. பகவான் ஞானத்தை இப்படிப் புகழவில்லை.
    ஆனாலும் ஆதி சங்கரருக்கு இது கண்ணில் படவில்லை போலும்!. கீதை ஞானத்தை உயர்வாகச் சொல்கிறதா, கர்மாவை உயர்வாகச் சொல்கிறதா என்று கேட்கிறார். பகவானே “மே பரம வச= என்னுடைய உன்னத வாக்கியம் = My Supreme Word எனச் சொன்ன பிறகும் இதை ஆதி சங்கரர் பொருட்படுத்தவில்லை! இது வியப்பளிக்கிறது!

    கீதை உபதேசம் அர்ஜுனனின் சரணாகதியிலிருந்து தொடங்குகிறது.{ ஶிஷ்யஸ்தேஹம் ஶாதி மாம் த்வாம் பரபன்னம் 2.7. இறுதியில் பகவான் என்னையே சரணடை [ மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ] என முடிக்கிறார். இடையிலும் ” மன் மனாபவ மத் பக்தோ, மத் யாஜி, மாம் நமஸ்குரு” என இரண்டு இடங்களில் இதே வார்த்தையைச் சொல்கிறார். [ 9.34. 18.65]

    எனவே கீதையின் முக்கிய உபதேசம் பகவானிடம் பக்தி செலுத்தி சரணாகதி செய்வதுதான். பக்தியினால் என்னையே அடைவாய். [ மாம் ஏவ ஏஷ்யஸி, ] என்று உறுதி கூறுகிறார். சத்யப் ப்ரதிக்ஞை செய்கிறார் [ ஸத்யம் தே ப்ரதிஜானே] என் பக்தன் அழிவதில்லை என பிரதிக்ஞை செய்கிறார். [ ந மே பக்த ப்ரணஸ்யதி 9.31]
    இப்படி பகவானே நேரிடையாக பக்தியின் உயர்வைக் கூறிய போதும் அதை முற்றிலும் ஏற்காத ஆதிசங்கரர் எப்படி பக்தியை உன்னதமாகக் கருதினார் எனச் சொல்ல முடியும்? சங்கரர் முற்றிலும் ஞானி. அவருக்கு பக்தி ஞானத்திற்கான ஒரு சாதனம் தான் முக்தியை அடையும் நேர் வழி அல்ல.
    ஆனால் பக்தியையே ப்ரதானமாகக் கொண்டவர்கள் அதையே சாதனமாகவும் சாத்யமாகவும் கருதுகிறார்கள். அதையே ஒரு தனிப் புருஷார்த்தமாகக் கருதுகிறார்கள். வீடும் வேண்டா விறலினராக இருக்கிறார்கள். “பகவான் முக்தியைக் கொடுத்தாலும் கொடுப்பார். பக்தியை எளிதில் தரமாட்டார்” என்பார் ஸ்ரீ ராமக்ருஷ்ணர். உண்மையான பக்தர்களுக்கு பக்தியே முக்தியைக்காட்டிலும் உயர்ந்தது.
    “ஆன பயபக்தி வழிபாடு பெறு முத்தியது” என்பார் அருணகிரி நாதர். ஸ்ரீ ரமணர் கூட, ‘ ஒன்று விசாரம் செய்; அல்லது சரணாகதி செய் Inquire or Surrender என்பார்.
    ஆதி சங்கரர் இப்படி பக்தியை உயர்ந்த நேர் சாதனமாகச் சொன்னதாகத் தெரியவில்லை.
    பாரதியார் இதை மிக எளிதாகச் சொல்லிவிட்டார்:
    “பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்
    பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்”.
    ஆசார்ய பக்தர்கள் என்னிடம் கோபப்படலாம். ஆனால்இங்கு சொன்னவற்றை ஆழ்ந்து யோசிக்குமாறு வேண்டுகிறேன்.
    ஆசார்யர் குருதான் ஆனால் பகவானே பெரிய குரு “குருர் கரீயான்” [11.43] அல்லவா!
    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: