“நான் கொன்று விடுவேன்!” – புத்தரின் பதில்!! (Post No.5424)

Written by S NAGARAJAN

Date: 13 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-48 AM (British Summer Time)

 

Post No. 5424

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

“நான் கொன்று விடுவேன்! – புத்தரின் பதில்!!

 

ச.நாகராஜன்

 

எல்லையற்ற தேஜஸுடனும், சாந்தத்துடனும், கருணையுடனும் புத்தர் தனது சிஷ்யர்களுக்கு,தேவையான அனைத்தையும் உபதேசித்து வந்தார்.

 

அவர்களுக்கு நல்ல பயிற்சி தந்து அவர்களை மேம்படுத்தும் ஒரு நல்ல பயிற்றுநராக (trainer) அவர் இருந்தார்.

கேசி என்று குதிரைகளைப் பழக்கும் பயிற்றுநர் ஒருவர் அவரிடம் சீடராக இருந்தார்.

 

அவரை புத்தர் அழைத்தார்.

 

“ஓ! கேசி! நீ குதிரைகளைப் பயிற்றுவிக்கும் ஒரு நல்ல பயிற்றுநர். குதிரைகளை எப்படி நீ பழக்குகிறாய்? சொல்லேன்.”

கேசி பதில் கூறினார்: “ஐயனே! குதிரைகளை சில சமயம் மிருதுவாக நடந்து கொண்டு சொல்லித் தருவேன். சில சமயம் கடுமையாக நடந்து கொண்டு சொல்லித் தருவேன்.இப்படி இரண்டு விதமாகவும் நடந்து கொண்டு சொல்லித் தருவேன்.”

 

 

“கேசி! ஒரு வேளை அந்தக் குதிரை நீ சொல்கிற படி கேட்கவில்லை என்றால் அதை என்ன செய்வாய்?”

 

“ஐயனே! அதைக் கொன்று விடுவேன். ஏனெனில் அது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கே ஒரு களங்கத்தைத் தந்து விடுகிறது. ஐயனே! நீங்கள்  எல்லோருக்கும் சொல்லித் தருகிறீர்கள். நல்ல ஒரு பயிற்சியாளர். நீங்கள் எப்படிச் சொல்லித் தருகிறீர்கள்?”

 

“கேசி! நானும் கூட சில சமயம் அனைவரையும் மிருதுவாக நடத்திச் சொல்லித் தருவேன். சில சமயம் கடுமையாக நடந்து கொண்டு சொல்லித் தருவேன். இப்படி இரண்டு விதமாகவும் நடந்து கொண்டு சொல்லித் தருகிறேன். இது தான் உடலால் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள். இப்படிச் செய்தால் இன்ன நல்ல பலன்கள் கிடைக்கும். இது தான் நல்ல முறையில் பேச வேண்டிய வழி. இதனால் வரும் நல்ல பலன்கள் இவை. இது தான் நல்ல சிந்தனை கொள்ளும் முறை. இதனால் அடையும் பலன்கள் இன்னின்னவை. இப்படி இருப்பவர்கள் தேவர்கள்; இப்படி இருப்பவர்கள் மனிதர்கள்.

 

இதோ பார்; இப்படி நடப்பது  உடலால் செய்யும் தவறான வழிகள்; இதனால் ஏற்படும் தீமைகள் இவை. இதோ பார்; இப்படிப் பேசுவது தவறான வழி; இதனால் ஏற்படும் தீய விளைவுகள் இவை;இதோ பார் இப்படி சிந்திப்பது தப்பான வழி; இதனால் வரும் தீய பயன்கள் இவை. இது தான் நரகத்திற்கு வழி. இதுவே மிருகங்களின் வழிமுறை; இதுவே பிசாசுகளின் நடத்தை. என்று இந்த விதமாக நான் மிருதுவாகவும் கடுமையாகவும் ஆக இருவிதமாகவும் சொல்லித் தருகிறேன்.”

 

“ஐயனே! இப்படி இரு விதமாகவும் சொல்லித் தந்தும் ஒருவன் நல்ல விதமாக நடக்கவில்லை எனில் அவனை நீங்கள் என்ன செய்வீர்கள்?”

 

“அப்போது அவனை நான் கொன்று விடுவேன்.”

 

“ஐயனே! நீங்கள் ததாகதர். உங்களை நீங்களே அப்படி அழைத்துக் கொள்கிறீர்கள். அதன் அர்த்தம் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இன்றி சொல்வதையே வாழ்ந்து காட்டுபவர் என்பது தானே! நீங்கள் அஹிம்சையை உபதேசிப்பவர். உங்களால் கொல்வது என்பது இயலவே இயலாது. ஆனால் நீங்களே நான் கொன்று விடுவேன் என்று சொல்கிறீர்களே!”

 

புத்தர் புன்முறுவல் பூத்தார்.

 

ததாகதர் என்ற சொல்லுக்கு உண்மையின் வழி நிற்பவர் என்பதிலிருந்து அநேக அர்த்தங்கள் உண்டு. புத்தர் தன்னை எப்போது ததாகதர் என்றே சொல்லிக் கொள்வது வழக்கம். அதற்கு சொல்லும் செயலும் ஒன்றாகவே இருந்து வாழ்பவர் என்ற பொருளும் உண்டு. அதைச் சுட்டிக் காட்டி கேசி கேட்ட கேள்விக்கு அவர் பதில் தந்தார் இப்படி:

 

“ கேசி! உண்மை தான். ததாகதர் இன்னொருவரின் உயிரை எடுக்க நினைக்கக் கூட மாட்டார். என்றபோதிலும் ஒருவருக்கு மிருதுவாகவும், கடுமையாகவும் இந்த இரு விதமாகவும் சொல்லித் தந்த பின்னரும் அவர் அதன் படி நடக்கவில்லையெனில் அவருடன் ததாகதரோ அல்லது அவருடன் சேர்ந்த பிக்ஷுக்களோ பேசவே மாட்டார்கள். நமது பண்பாட்டின் படி இப்படி பேசாமலிருப்பதே ஒருவனைக் கொல்வதற்குச் சமம். அவனை நல்வழிப் படுத்த முடியாது என்று ததாகதரும் அவருடன் இணைந்த மற்ற பிக்ஷுக்களும் நினைத்து விட்டால் அவ்வளவு தான், அவனுடன் பேச மாட்டார்கள்.”

 

 

புத்தர் பேசவில்லை என்றால் அவன் என்ன செய்வான்; திருந்தியே ஆவான் – உயிர் வாழ ஆசைப்பட்டால்!

 

இந்த ஒரு சம்பவமே புத்தர் எவ்வளவு கருணையுள்ளவர், அவர் எப்படி தன் சீடர்களை நல்வழிப் படுத்தி வந்தார் என்பதைப் புரிய வைக்கும்.

 

“ஓ! பிக்ஷுக்களே! தீமையை விட்டொழியுங்கள். தீமையை விட முடியாது என்றால் ததாகதர் இப்படிச் சொல்ல மாட்டார். அதை விட முடியும். ஆகவே தீமையை விட்டொழித்தால் நல்லதைக் கடைப்பிடித்தால் வளமும் செல்வமும் பெருகும்.”

என்று அவர் தன் சீடர்களை நோக்கிக் கூறி அருளினார்.

புத்தரின் வழி தனி வழி; அது கருணை வழி!

புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சா

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: