Written by London Swaminathan
Date: 13 September 2018
Time uploaded in London – 6-11 am (British Summer Time)
Post No. 5425
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாரதியார் பாடிய ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாடல் உயர்ந்த கருத்துக்களைக் கொண்டது. பாகவத புராணத்தில் பறவைகளையும் மிருகங்களையும் காடு மலைகளையும் வைத்து தத்தாத்ரேயர் பாடம் கற்றது போல பாரதியாரும் தன் வாழ்வில் கற்றார். இதை அவர் பாடிய காகம், கிளி, குருவி, குயில் பாட்டுகளில் தெளிவாகக் காணலாம். இங்கே சிறுவர்களுக்கும் அதே உத்தியைப் பயன் படுத்துகிறார். ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த் (William Wordsworth- Daffodils) ‘டாஃfஓடில்ஸ்’ என்னும் பூக்கள் பற்றிப் பாடிய பாடல் உலகப் பிரசித்தமானது. இன்னும் ஒரு பாடலில் புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு (Up Up My Friends, Quit your books) இயற்கையிடம் பாடம் கற்க வாருங்கள்; ரிஷி முனிவர்களிடம் கற்பதை விட அதிகம் கற்கலாம் என்கிறார்.
“One impulse from a vernal wood
May teach you more of man,
Of moral evil and of good,
Than all the sages can”.
இதோ பாரதியார் பாடலைப் படங்கள் மூலம் காண்போம்.
பாரதியாரின் பாடல் மூலம் விக்கிபீடியவில் இருந்து எடுக்கப்பட்டது; நன்றி
ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.
–subham–