Written by S NAGARAJAN
Date: 20 SEPTEMBER 2018
Time uploaded in London – 7-24 AM (British Summer Time)
Post No. 5449
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
சேஷாத்ரி ஸ்வாமிகள் ப்ளாஞ்செட்டில் பேசுவாரா? ரமண மஹரிஷியின் பதில்!
ச.நாகராஜன்
திருவண்ணாமலையிலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த பகவான் ரமண மஹரிஷியை தரிசனம் செய்ய பல பக்தர்கள் அன்றாடம் வருவதுண்டு. இவர்கள் தங்கள் சந்தேகங்களையும் பகவானிடம் கேட்டு தெளிவடைவதுண்டு.
பலவிதமான மனிதர்கள்! பலவிதமான சந்தேகங்கள்.
இறப்பைப் பற்றி பல பக்தர்களும் அவரிடம் கேட்பதுண்டு. 1935ஆம் ஆண்டிலிருந்தே இப்படிப்பட்ட கேள்விகளும் பகவான் ரமண மஹரிஷியின் பதில்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறப்பு என்பது கவலைப் படும் ஒரு விஷயம் அல்ல என்பதே அவர் அடிக்கடி கூறி வந்தது. இருந்தாலும் இவ்வுலகத்தை நிஜம் என்று நினைப்பவர்களுக்கு மறு உலகமும் நிஜம் தான் என்பது அவரது அருளுரை.
இதைக் கடந்த ஞான நிலையில் இருப்பவர்களுக்கு இவ்வுலகம் இல்லையெனில் மறு உலகம் ஏது?
18-11-1946 அன்று பக்தர் ஒருவர் மஹரிஷியிடம், “இறந்தவர்களுக்காக செய்யப்படும் வருடாந்திர சடங்குகள் முதலியவற்றால் அவர்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என்று வினவினார்.
இதற்கு மஹரிஷி, “உண்டு. அதெல்லாம் ஒருவனுடைய நம்பிக்கையைப் பொறுத்தது” என்று பதில் கூறி அருளினார்.
அந்த பக்தர் சென்ற பின் பகவானின் அணுக்க பக்தரான தேவராஜ முதலியார் பகவானை நோக்கி, “மூன்று வருடங்களுக்கு முன்பு வரை நான் இறந்தவர்களுக்கு வருடாந்திர சடங்குகள் செய்தலானது அவர்கள் மறுபிறவி எடுக்காத வரை அவர்களுக்கு நன்மை செய்யும் என்று நினைத்தேன்” என்றார்.
அவரை அப்போது இடைமறித்த பகவான், “அவர்கள் பலமுறை மறுபிறவிகள் எடுத்தாலும் நற்பலன் அவர்களுக்குக் கிடைக்கும். இவையனைத்தையும் கவனித்துக் கொள்ள ஒரு ஏற்பாடு இருக்கிறது. ஆனால் ஞான மார்க்கம் இதையெல்லாம் சொல்லவில்லை” என்று பதில் கூறி அருளினார்.
ஆக பகவான் கூறியதன் மூலம் இந்த அனைத்தையும் கவனித்துக் கொள்ள ‘ஒரு ஏற்பாடு’ இருக்கிறது என்ற ரகசியத்தை அனைவரும் அறிந்து கொண்டனர். இப்படிப்பட்ட “ஏற்பாடுகள்’ நமக்குத் தெரியவில்லை என்றாலும் அது உண்மை தான்.
ரமணர் போன்ற எல்லையற்ற பிரபஞ்ச ரகசியங்களை உணர்ந்தவர்கள் வாயிலாக இதைக் கேட்கும் போது நமக்குத் தெளிவு பிறக்கிறது.
கர்ம மார்க்கத்தை நம்புபவர்கள் அனைவரும் இந்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் தங்களின் பிதிர்களுக்கு அளப்பரிய நன்மை செய்வது உண்மை என்பதையும் அதன் மூலம் அவர்களும் அநுகூலம் பெறுவதும் உண்மை என்பது விளங்குகிறது.
மேற்கொண்டு தேவராஜ முதலியார், “இந்த உலகத்தை நம்பினால் மறு உலகங்களையும் நம்ப வேண்டும் என்று பகவான் சொல்வதுண்டு” என்று கூறியபோது, அவர், “அது அப்படித்தான்” என்று பதில் அளித்தார்.
இதற்குச் சில நாட்களுக்கு முன்பு 26-10-1946 அன்று கோயமுத்தூரிலிருந்து சிலர் திருவண்ணாமலை வந்திருந்தனர்.
இவர்கள் சேஷாத்ரி ஸ்வாமிகள் தங்களிடம் ப்ளாஞ்செட் மூலமாகப் பேசுவதாகக் கூறினர்.
ப்ளாஞ்செட் என்பது இறந்தவர்களுடன் பேசுவதற்கான ஒரு எளிய கருவி.
சேஷாத்ரி ஸ்வாமிகள் சமாதி அடைந்து விட்ட நிலையில் அதை பராமரித்து வந்தவர் திருவேங்கடம் பிள்ளை என்ற ஓய்வு பெற்ற போலீஸ்காரர். அவரிடம் சமாதியின் கோவிலைத் திறக்கச் சொல்லவே அவரும் திறந்தார். அவரிடம் பிளாஞ்செட்டைக் காண்பித்தனர் குழுவினர்.
திருவேங்கடம் பிள்ளை அவர்களை நோக்கி, “ ஒருநாள் சேஷாத்ரி ஸ்வாமிகள் க்ஷவரம் செய்த பின்னர் குருக்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டிருக்கும் போது என்ன சொன்னார், சொல்லுங்கள்” என்று கேட்டார். அவர்கள் ஏதோ பதிலளித்தனர். பின்னர் அவர் இன்னொரு கேள்வி கேட்க அதற்கும் பதில் வந்தது. வந்த இரண்டு பதில்களும் தவறு என்று கூறிய திருவேங்கடம் பிள்ளை மேற்கொண்டு ஒன்றும் கேட்கத் தேவையில்லை என்றும் சேஷாத்ரி ஸ்வாமிகள் அவர்கள் மூலம் பேசுவதாகத் தன்னால் நம்ப முடியாது என்றும் கூறி விட்டார். வந்த குழு குழப்பத்துடன் கலைந்தது.
இந்தக் குழுவினர் ரமாணாசிரமத்திலிருந்து தங்கள் நடவடிக்கைக்களை நடத்த விரும்பினர். ஆனால் ஆசிரமத்தின் அனுமதி கிடைக்கவில்லை.
ரமணரிடம், சேஷாத்ரி ஸ்வாமிகள் அவர்கள் மூலமாகப் பேசுகிறார் என்று சொல்லப்பட்ட போது, அவர், “ நமக்கு அவரை நன்றாகத் தெரியும். நம்மிடமெல்லாம் நெருங்கிப் பழகியிருக்கிறார். அவர் நம்மிடம் வந்து பேசாதது வருந்தத் தக்கதே” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
மிக அரிய உயரிய நிலையிலிருந்த சேஷாத்ரி ஸ்வாமிகளின் பெருமையை உள்ளது உள்ளபடி பகவான் ரமணரே அறிவார்.
சேஷாத்ரி ஸ்வாமிகள் எல்லையற்ற பெருநிலையில் இருந்த ரமண மஹரிஷியின் முன் ஒரு நாள் சற்று நேரம் அமர்ந்திருந்தார்.
அவரது உயரிய நிலையை அவர் அளக்க முயன்றார் போலும்.
“அட! பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாரே” என்று கூறினார் சேஷாத்ரி ஸ்வாமிகள்.
அப்படிப்பட்ட உயர் நிலையை அடைந்தவர் மஹரிஷி.
அவரது சொற்கள் மூலம் ஏராளமான ஆன்மீக ரகசியங்களை பக்தர்கள் அறிவதுண்டு.
இறந்த பின்னர் செய்யும் சடங்குகள் பயனளிப்பவையே என்றும், பிளாஞ்செட் மூலம் சேஷாத்ரி ஸ்வாமிகள் பேசுவது பற்றிய உண்மை பற்றியும் அவர் அருளி இருப்பது பொருள் பொதிந்த ஒன்று!
***
ஆதாரம் : தேவராஜ முதலியார் எழுதிய நாட்குறிப்பு (Day by Day with Bhagawan by A. Devaraja mudaliyar)