Written by S NAGARAJAN
Date: 21 SEPTEMBER 2018
Time uploaded in London – 8-32 AM (British Summer Time)
Post No. 5452
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 21-9-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திஒன்பதாம்) கட்டுரை
விண்வெளி ஆயுதங்கள் – 1
ச.நாகராஜன்
தரைப் படை, கப்பல் படை, விமானப் படை என்ற மூன்று படைகளைப் பற்றியும் அந்தப் படைகள் கொண்டிருக்கும் அபாயகரமான ஆயுதங்களையும் பற்றியும் தான் நாம் இது வரை கேள்விப் பட்டிருக்கிறோம்.
புதிதாகத் தோன்றிக் கொண்டிருக்கும் விண்வெளிப் படை எத்தகைய ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தால் வியப்பினால் பிரமிப்போம்.
சில ஆயுதங்களை இங்கு பார்க்கலாம்.
ஏவுகணைகள்
முதன் முதலில் ராக்கெட்டை – ஏவுகணையை– தயாரித்தது சீனா தான் என்று சொல்வது வழக்கம். ஆனால் உலோக சிலிண்டர் ராக்கட் இந்தியாவில் தான் முதன் முதலாக பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது என்பதை ஆதார பூர்வமாக வரலாறு கூறுகிறது. ஆக ஏவுகணையின் தாயகம் இந்தியாவே.
மெக்ஸிகோ– அமெரிக்கா போரிலும், அமெரிக்க உள்நாட்டுப் போரிலும், முதல் உலக மகா யுத்தத்திலும் ராக்கெட்டுகள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இதை பயங்கரமான ஆயுதமாக உருவாக்கிக் காட்டியவர் ஹிட்லரே. ஜெர்மனியின் வி– 2 ராக்கெட் உலகையே நடுநடுங்க வைத்தது. இந்த ராக்கெட்டுகளில் ஆயிரம் ராக்கெட்டுகளை பிரிட்டன் மீது வீசினார் ஹிடலர்.
போரில் ஜெர்மனி தோற்றவுடன் அந்த ராக்கெட் விஞ்ஞானிகளை சோவியத் யூனியனும் அமெரிக்காவும் அழைத்தன. ராக்கெட் தொழில்நுட்பம் விரிவடைந்தது.
டர்பாவின் உருக்கப்பட்ட உலோகக் குழம்பு ஆயுதம்
அமெரிக்காவின் ராணுவத் தற்காப்பு நிறுவனத்தின் பெயர் டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜெக்ட்ஸ் ஏஜன்ஸி (Defence Advanced ResearchProjects Agency – DARPA) என்பதாகும். இது டர்பா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அறிவியல் புனைகதை எழுத்தாளரான ஆர்தர் சி.க்ளார்க் 1955இல் எழுதிய எர்த்லைட் என்ற நாவலில் உருக்கப்பட்ட உலோகக் குழம்பு பீச்சி அடிக்கப்படுவதை சித்தரித்துள்ளார். அதையே மேஹம் (MAHEM) என்ற பெயரில் – மாக்னெடோ ஹைட்ரோடைனமிக் எக்ஸ்ப்ளோஸிவ் ம்யூனிஷன் என்பதன் சுருக்கம் மேஹம் – ஒரு திட்டத்தை அமெரிக்கா 2008ஆம் ஆண்டு தொடங்கி வைத்தது. குறிபார்த்து இது இலக்கை நோக்கி வீசப்பட்டால் நச்சை ஏவினால் என்ன நடக்குமோ அது தான் நடக்கும். நினைத்தாலே நடுங்க வைப்பது தான் மேஹம்.
விண்ணில் பறப்பதை அழிக்கும் டெல்
டாக்டிகல் ஹை எனர்ஜி லேஸர் என்ற ஆயுதத்தின் சுருக்கமே டெல் (THEL). 1996இலிருந்து 2005ஆம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்பட்டது. இப்போது இது வேறு மாதிரியான ஆயுதமாக உருவாக்கப் பட்டு வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாகச் செய்த இந்த ஆயுதம் தரையிலிருந்து ஏவப்பட்டவுடன், விண்ணில் பறந்த 46 ராக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை அழித்து தன் வல்லமையைக் காட்டியது. இப்போது நியூ மெக்ஸிகோவில் திருத்தப்பட்ட வடிவமைப்புடன் இது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுதம் ஏந்திய விண்கலங்கள்
பூமியைச் சுற்றி இப்போது ஏராளமான விண்கலங்கள் வலம் வருகின்றன. ஆயுதம் ஏந்திய ஒரு விண்கலம் மூலம் மற்ற விண்கலங்களை அழிக்கவும், பூமியை நோக்கி ஆயுதங்களை வீசவும் ஒரு திட்டம் உள்ளது. இது விண்வெளி ஒப்பந்தம் என்னும் சர்வதேச உடன்படிக்கையை மீறிய செயல் தான். விண்வெளியை ஆயுதக் கிடங்காக ஆக்கக் கூடாது என்பது சர்வதேச ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்து. கடவுளின் தடி எனப்படும் Rods from God என்ற திட்டம் மூலம் சிறிய சாடலைட்டுகளை வைத்து பூமியில் உள்ள இலக்குகளைத் தகர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச ஒப்பந்தத்தை மீற முடியவில்லை என்பதால், செயல் அளவில் இந்தத் திட்டங்கள் முன்னேறாமல் உள்ளன என்பது நல்ல செய்தி!
சோவியத் யூனியனின் அல்மாஸ் விண்வெளி நிலையம்
அல்மாஸ் (Almaz) என்ற விண்வெளி நிலையம் பற்றிய திட்டம் ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்டது. கடலில் செல்லும் கப்பல்களை அழிக்க இந்த நிலையத்தைப் பயன்படுத்தலாம் என நினைத்தது சோவியத் யூனியன்.
சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் அது முனைந்ததால் அல்மாஸ் திட்டம் 1973 வரை சற்று கிடப்பில் போடப்பட்டது. இதையே சற்று மாற்றி சல்யுட் -2 என அறிமுகப்படுத்தியது அது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சல்யுட் -2 தோல்வி அடைந்தது. பின்னால் சல்யுட் -3, சல்யுட் -5 ஆகியவை வீரர்களைத் தங்கள் கலங்களில் ஏந்திச் சென்றன. ஆனால் தொழில்நுட்பப் பிரச்சினைகளால் இது அதிகம் முன்னேறவில்லை.
எதிர்காலத்தில் விண்வெளியில் போர் என்று ஒன்று வந்தால் அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று ரஷியா நினைப்பதால் விண்வெளி நிலையத் திட்டத்தை அது இன்னும் கை விடவில்லை.
அமெரிக்காவின் விண்வெளி லாபரட்டரி
மனிதனுடன் கூடிய விண்வெளி லாபரட்டரி – Manned Orbiting Laboratory – MOL – அமெரிக்க விமானப்படையின் திட்டமாகும். 1963லிருந்து 1969 வரை வேகமாக இயங்கிய இந்தத் திட்டத்திற்கென 17 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ப்ராஜெக்ட் டோரியன் என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கம் சோவியத் யூனியனின் பிரதேசங்களை போட்டோ பிடிப்பதுதான். இது ஏவுகணை ஆயுதங்களையும் ஏந்திச் செல்ல வல்லது. இதைப் பற்றிய பெரிய ஆவணம் ஒன்று – 20000 பக்கங்கள் கொண்டது – 2015இல் வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கு ஆகும் செலவு முன்னூறு கோடி டாலர் என்பதால் இதை கிடப்பில் போட்டது அமெரிக்கா. ஏற்கனவே 130 கோடி டாலர் செலவழிக்கப்பட்டு விட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்களை வேறு விண்கலங்களில் அமெரிக்கா அனுப்பியது.
இன்னும் சில விண்வெளி ஆயுதங்களைப் பார்ப்போம்…
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் பணி புரிந்த பிரபல பெண்மணியான கணித மேதை காதரீன் ஜான்ஸன் (Katherine Johnson) 2018 ஆகஸ்ட் 26ஆம் தேதி நூறாவது வயதை எட்டியதை ஒட்டி விண்வெளி ஆர்வலர்கள் அனைவரும் அவருக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்கின்றனர். நாஸா ஏவிய விண்கலங்களை ஏவுவதில் உள்ள சிக்கலான கணக்குகளை அவர் மிக வேகமாகப் போடுவார். அவரை மனித கம்ப்யூட்டர் என்றே அனைவரும் அழைப்பர். ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணியான அவர் இன பேதத்தையும் ஒழித்து நாஸாவில் வெற்றிக் கொடி நாட்டியதால் பின்னால் வந்த பெண்மணிகள் அனைவரும் அவரிடமிருந்து தாங்கள் உத்வேகம் பெற்றதாகக் கூறுவர். “Hidden Figures” என்ற திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. இந்தப் படம், 1962ஆம் ஆண்டு விண்ணில் ஜான் க்ளெனை ஏந்திச் சென்ற விண்கலத்தில் ஏவுவதில் உள்ள அனைத்து சிக்கலான கணிதங்களையும் அவர் செய்து முடித்ததை முக்கியமான ஒன்றாகச் சித்தரிக்கிறது. ஜான் க்ளென், ‘அந்தப் பெண் கணக்கைச் சரி பார்த்து விட்டாரா” என்று கேட்டு விட்டுத் தான் கலத்தில் ஏறினார். கம்ப்யூட்டர் செய்து முடித்த கணக்கை கையால் போட்டு அவர் சரி பார்ப்பது வழக்கம்.”அவர் கணக்கெல்லாம் சரி என்று சொல்லி விட்டால் நான் விண்வெளியில் பறக்கத் தயார்!” என்று ஜான் க்ளென் சொன்னது அவரது கணிதத் திறமையில் அனைவரும் வைத்திருந்த மதிப்பைப் பறை சாற்றுகிறது. 1953இலிருந்து 1986 முடிய நாஸாவில் வேலை பார்த்த இந்தப் பெண்மணியின் நூறாவது பிறந்த நாளுக்கு உலக விண்வெளி ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
***