Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 2 October 2018
Time uploaded in London – 8-40 am (British Summer Time)
Post No. 5498
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
இன்கா (INCA CIVILIZATION) என்றால் என்ன?
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் குஸ்கோ (CUSCO) என்னும் நகரில் இருந்து 5000 கிலோமீட்டர் தூரம் வரை இருந்த பகுதிகளை ஆண்ட நாகரீகம் இன்கா நாகரீகம் என்று அழைக்கப்படும். சுமார் எட்டு லட்சம் சதுரமைல் பரப்பை 1400 முதல் 1600 வரை ஆண்டனர். ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த படையெடுப்பாளர்கள் இந்த நாகரீகத்தை முற்றிலும் அழித்து தங்கம் முதலிய செல்வங்களை வெளி நாட்டுக்குக் கொண்டு சென்றனர்
புதிதாக என்ன கண்டு பிடித்தார்கள்?
இன்கா நாகரீக மக்கள் கயிற்றில் முடிச்சுகளைப் போட்டு கணக்கு எழுதினர். முடிச்சுகள் மூலம் வேறு பல விஷயங்களையும் பதிவு செய்தனர். இது பற்றிய புதிய கண்டு பிடிப்புகள் புகழ்பெற்ற விஞ்ஞான சஞ்சிகை நியூ ஸைன்டிஸ்டில் (NEW SCIENTIST) வெளியாகியுள்ளது. அதை படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்த திரு மந்திரப் பாடல்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே
— திருமந்திரத்தில் திருமூலர்
பொருள்:
தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் தத்துவ ஞானிகள். இந்த மெய்ஞானிகள், பூர்வ ஜன்ம தீவினைப் பயனை தவிர்ப்பர். இனி வரும் வினைகளையும் தகர்த்து விடுவர்; அதாவது வினைக்கான கர்மங்களைச் செய்ய மாட்டார்கள். இவை அனைத்தும் சிவன் அருளாலே கிட்டுவதாகும். அதாவது இறைவன் அருள் இருந்தால் விதியை வெல்லலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ‘முடிச்சு’ என்னும் மொழி பற்றித் திருமூலரும் பாடியுள்ளார்!!!
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 75 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய சொற்பொழிவிலேயே இன்கா நாகரீகம் பற்றிச் சொல்லிவிட்டு ‘இனன்’ என்பது சூரியனின் பெயர் என்று சுட்டிக் காட்டினார். இன்கா நாகரீகத்தின் தங்க சூரிய கோவில் மிகவும் பிரஸித்தம்.
மேலும் இந்துக்களின் டெஸிமல் / தஸாம்ச (DECIMAL SYSTEM) முறை கணக்கீட்டை இன்கா பயன்படுத்தியது முடிச்சு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இன்காவுக்கு முன்னர் மத்திய அமெரிக்க நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் 2000 ஆண்டுகளுக்குக் கொடி கட்டிப் பறந்த அஸ்டெக் (ஆஸ்தீக), ஒல்மெக் (ஒளியன்= நாகர்), மாயன் (மயன்=சிற்பி) ஆகியனவும் இந்து நாகரீகங்களே என்று ஆதாரங்ளுடன் நான் கட்டுரை எழுதியுள்ளேன். எனது எட்டு ஆண்டுக் கட்டுரைகளைப் படித்து இன்புறுக.
பதினைந்தாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிகப் பெரிய சாம்ராஜ்யம்- ஈக்வடார் நாடு முதல் சிலி நாடு வரை பரந்த, தொழிநுட்ப அறிவுமிக்க நாகரீகம்– இன்கா என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. மச்சு பிச்சு என்னும் வான்முகட்டைத் தொடும் அரண்மனையையும், நாடு முழுதும் நல்ல நவீன சாலைகளையும், இடையிடையே புல்லினால் ஆன, வலுவான பாலங்களையும் அமைத்தவர்கள் இன்காக்கள் என்பதிலும் ஐயப்பாடு எழாது. ஆனால் அதிசயத்திலும் அதிசயம் அவர்களுக்கு எழுதத் தெரியாது!!!!
உண்மைதானா????
எழுதிய காகிதங்கள் எதையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை என்பது உண்மையே. ஆயினும் அவர்கள் வித விதமான முடிச்சுகள் உள்ள வண்ண, வண்ண கயிறுகளை விட்டுச் சென்றுள்ளனர். இதை கீ பூ (KHIPU) என்று அழைப்பர். இதில் சீன அபெக்கஸ் (ABACUS) (கணக்கீட்டுப் பலகை) போல கணக்கு வழக்குகளை எழுதியது முன்னரே தெரியும். ஒருவேளை இந்த கயிற்று முடிச்சுகள் பழங்கால கதைகளையும் சொல்லுமோ என்ற சம்சயம் ஆராய்ச்சியாளர் இடையே எழுந்தது. அதை மேலும் ஆராய, ஆராய இவை வெறும் முடிச்சுகள் அல்ல– கதை சொல்லும் முடிச்சுகள்– பாடல் பாடும் முடிச்சுகள்– என்பது தெரிய வந்தது. அதனால்தான் நியூ ஸைண்டிஸ்ட் போன்ற புகழ் மிகு அறிவியல் வார இதழும் கூட 5 பக்கக் கட்டுரையை படங்கள் சஹிதம் வெளியிட்டது..
நூற்றாண்டுக் கணக்கில் முடிச்சு ஆராய்ச்சி நடந்தபோதும் ஐரோப்பியர்கள் சொன்ன அசிங்கமான முடிவுகளே இதுவரை நிலவின. ஆனால் இப்பொழுது ரோஸட்டா (ROSETTA STONE) கற்பலகை போல நமக்கு புதிய கருவிகள் கிடைத்துவிட்டது.
(ரோஸட்டா பலகை என்றால் என்ன? இது லண்டனில் பிரிட்டிஷ் மியூஸியத்தில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், எகிப்து நாட்டின் சித்திர எழுத்துக்கள் பற்றி நிறைய பேர் ஆராய்ச்சி என்ற முறையில் உளறிக்கொட்டி கிளறி மூடினர். அதாவது நாம் சிந்து- ஸரஸ்வதி சமவெளி நாகரீக எழுத்துக்கள் பற்றி இப்பொழுது பிதற்றுவது போல குதறி வந்தனர். மூன்று மொழி லிபிகளில் ஒரே விஷயத்தை எழுதிய ரோஸட்டா கல்வெட்டு கிடைத்த பின்னர் எகிப்து பற்றிய எல்லா உளறல்களையும் பிதற்றல்களையும் இந்து மஹா சமுத்திரத்தில் தூக்கிப் போட்டனர்).
இந்த முடிச்சு ஆராய்ச்சி ஒருவேளை இந்தியாவின் மிகப் பழமையான ஸிந்து-ஸரஸ்வதி நாகரீக ரஹஸியங்களை- முடிச்சு அவிழ்க்க- உதவும். முடிச்சவுக்கிகள் வாழ்க!!!
மேலும் காண்போம்……..
1530 ஆம் ஆண்டை ஒட்டி மஹா கிராதகனான ஸ்பானிய மனிதன் பிரான்ஸிஸ்கோ பிசாரோ (FRANSISCO PIAZARO) இன்காக்களை எதிர்கொண்டான். பிரம்மாண்டமான கற்சிலைகளையும், கொட்டிக் கிடக்கும் தங்கக் குவியலையும் பார்த்து வாயைப் பிளந்தான் அந்தக் கொள்ளைக்காரன். அவர்களும் இந்துக்களைப் போலவே இளிச்சவாயர்கள். ஸ்பானிய கும்பலை நம்பி மோஸம் போனார்கள். ஆட்சியைப் பிடித்தான் வெள்ளைக்கார கொள்ளைக் காரன். சரி, நாகரீகமற்ற இந்த ‘ஜந்து’க்களுக்கு கொஞ்சம் கிறிஸ்தவ மதம் மூலம் நாகரீகம் புகட்டுவோம் என்று எண்ணி ஸ்பானிய முறைகளை அமல்படுத்த முன்வந்தபோது ஸ்பெயின் நாட்டை விட அற்புதமான வரி வசூல் முறை, சாலை அமைப்பு, தகவல் தொடர்பு முறை இருந்ததைக் கண்டான். வியந்து மூக்கில் விரலை வைத்தான்.
இப்பொழுது பெரு நாட்டில் உள்ள குஸ்கோ என்ற ஒரு தலை நகரில் இருந்து பல லட்சம் சதுரமைல் பரப்பை நிர்வகித்தனர் இன்காக்கள்.
பல மாகாண நிர்வாக சபைகள் அனைத்தும் ஒரு மஹா இணைப்பில் அடங்கும் பெடெரல் முறை அங்கே இருந்தது. ஸ்பெயின் ஜனத்தொகையை விடக் கூடுதலான ஒரு கோடிப் பேரை சுண்டுவிரல் அசைவில் ஆண்டனர் இன்கா மன்னர்கள்!
பணம் ,காசு, நாணயங்கள் இல்லாத மார்க்கெட் பொருளாதாரம். மத்திய நிர்வாகத்தின் கீழ் அனைவருக்கும் உணவு விநியோகம். உழைப்பின் பலன் கிடைக்க அவரவர்களுக்கு நில புலன்களும் இருந்தன. இது ஒரு சோஸலிஸ சமுதாயமா அல்லது எதேச்சாதிகார முடியாட்சியா என்று ஆரய்ச்சியாளர்கள் இன்னும் வாதப் பிரதிவாதங்களில் மண்டையை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆயினும் இன்கா அமைப்பு அற்புத அமைப்பு, கன கச்சித அமைப்பு என்பததை அனைவரும் ஏற்பர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஹார்வர்ட் பல்கலைக் கழக மானுடவியல் வல்லுனர் கார்ரி உர்டன் (GARY URTON) செப்பினார்:
நிர்வாக முறையில் இவர்கள் சிறப்பின் காரணம் மக்கத்தொகை கணக்கெடுப்பு, வரி/ கப்பம் கட்டுதல், ஸ்டோர்ஹவுஸ்/ கிடங்கு பொருள் அட்டவணை, கையிருப்புக் கணக்குகள் ஆகிய அனைத்தையும் கீபூ என்னும் கயிறு முடிச்சு முறையில் குறித்து வைத்தனர். இதற்காக ஒரு தனி ஜாதி அங்கே இருந்தது. அவர்கள் இதில் விசேஷ பயிற்சி பெற்றனர்.
கீபூ எப்படி இருக்கும்?
ஒரு பென்ஸில் அளவு கனமுள்ள கயிறும் அதிலிருந்து தொங்கும் பல சிறிய கயிறுகளும் இருக்கும். இதை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினர் என்பதை ஸ்பானிய ஆட்கள் எழுதி வைத்தனர். அதற்குக் காரணம் காதல் திருமணம்!
ஒரு இன்கா இளவரசியும் ஸ்பானிய படை எடுப்பாளனும் திருமணம் புரிந்ததால் அவர்களின் வரி விதிப்பு வசூல், இதுவரை வந்தது எவ்வளவு, யார் எவ்வளவு பாக்கி வைத்துள்ளனர் என்பதெல்லாம் ஸ்பானிய மொழியிலும் எழுதப்பட்டது.
இதற்கு மேல் இப்போது நடந்த ஆராய்ச்சியில் தெரிய வந்த அதிசயங்க ளை அடுத்த கட்டுரையில் காண்போம்.
தொடரும்………….
-சுபம்–