ஹிந்து காந்திஜி! – 2 (Post No.5496)

WRITTEN BY S NAGARAJAN

Date: 2 October 2018

 

Time uploaded in London – 6-08 AM (British Summer Time)

 

Post No. 5496

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்துத்வம் வாழ வழி காட்டியவர்

சென்ற ஆண்டு இதே நாளில் ஹிந்து காந்திஜி – 1 வெளியாயிற்று. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி திருநாளில் அடுத்த கட்டுரை மலர்கிறது.

ஹிந்து காந்திஜி! – 2

ச.நாகராஜன்

1

புனிதமான தினம் அக்டோபர் இரண்டாம் தேதி. இந்தியாவிற்கு மட்டுமல்ல இந்தப் புனித தினம். மனித குலத்திற்கே புனிதமான தினம் காந்திஜியின் ஜென்ம தினம்.

அதில் ஏராளமான சிந்தனைகள் மலர்வதில் வியப்பில்லை. ஆனால் அனைவரும் வாழ வேண்டும். சர்வே ஜனா சுகினோ பவந்து என்ற ஹிந்து மதத்தின் ஆணி வேரான கொள்கையை கைக் கொண்டு அதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மகான் காந்திஜி.

ஹிந்து மதம் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

நையாண்டி செய்து வரும் கடிதங்கள், கேலியாக கேள்வி கேட்கும் கடிதங்கள். உண்மை அறியத் துடிக்கும் கடிதங்கள், மதமாற்றம் செய்யத் துடிக்கும் விஷமிகளின் கடிதங்கள், இந்தியாவை மத அடிப்படையில் துண்டாட நினைக்கும் துரோகிகளின் கடிதங்கள், ஒன்றும் அறியா அப்பாவிகளின் கடிதங்கள் – இதில் எதையும் அவர் துச்சமாகத் தூர எறிந்ததில்லை. அவற்றிற்குத் தக்க பதிலை தொடர்ந்து வழங்கியே வந்தார்.

அருமையான கலைக் களஞ்சியமாக அவர்து பதில்களும், கட்டுரைகளும் திகழ்கின்றன. இவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். ஹிந்து காந்திஜியைத் தரிசித்து மகிழ்வோம்.

 

2

 

சார்லஸ் ப்ராட்லா பிரிட்டனைச் சேர்ந்த நாத்திகவாதி.(Charles Bradlaugh Birth 26-9-1833 death 30-1-1891). சமூக சீர்திருத்தவாதி.

ஒரு சமயம் இவர் பிரிட்டிஷ் பார்லிமெண்டின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வொரு உறுப்பினரும் ‘பைபிள் சாட்சியாக உண்மையாகத் தொண்டு செய்கிறேன்என்று பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பின்னரே அவர் சபையில் அமர முடியும். இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்ற முடியாது என்று கூறிய ப்ராட்லா வழக்கு ஒன்றைத் தொடுத்தார்; வெற்றியும் பெற்றார். ஆகவே பைபிளின் பேரால் பிரமாணம் எடுக்காமலேயே சபை உறுப்பினர் ஆனார்.

இவர் 1891ஆம் ஆண்டு மரணமடைந்த போது அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி – ஆம், மஹாத்மாவே தான். அப்போது அவருக்கு வயது 21!

பைபிளை ஏற்க மறுத்த ப்ராட்லா அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்கவில்லை. இந்த ப்ராட்லாவைக் குறிப்பிட்டு காந்திஜிக்கு வந்த கடிதம் ஒன்றைப் பார்ப்போம்.

 

எஸ்.டி.நட்கர்னி என்பவர் வட கானராவைச் சேர்ந்த் கார்வார் நகரைச் சேர்ந்தவர். அவர் 1925ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியிட்டு ஒரு கடிதத்தை காந்திஜியின் எங் இந்தியா பத்திரிகைக்கு அனுப்பினார். நீண்ட அந்தக் கடித்தத்தில் அவர் ப்ராட்லாவைச் சுட்டிக் காட்டி கீழ்க்கண்டவாறு எழுதிய பகுதியை மட்டும் இங்கு பார்ப்போம்:

 

“கடவுளை மறுக்கும் ப்ராட்லாவைப் பற்றி தாங்கள் குறிப்பிடும் போது அவருக்குத் தெரிந்த வகையில் உள்ள கடவுளை அவர் மறுப்பதாகக் கூறுகிறீர்கள். நாம் எல்லோரும் கடவுளைப் பற்றிக் கூறும் விளக்கங்கள் வெவ்வேறு விதமாக இருப்பினும், அவ்விளக்கங்களுக்கு அடிப்படையில் தவறாத ஏதோ ஒரே விதமான கருத்து இருப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். கடவுளை ப்ராட்லா மறுப்பதிலும் இந்தக் கருத்து அடங்கி இருக்கிறதா? ப்ராட்லா அறிஞர்; இவ்விஷயங்களை ஊன்றிக் கவனிக்கும் சக்தியும் அவருக்குப் போதிய அளவு உண்டு, அப்படியிருக்க, அவர் கடவுள் இருப்பதை மறுக்கும்படி செய்வது எது?

 

இதற்கு காந்திஜி 30-4-1925 தேதியிட்ட எங் இந்தியா இதழில் இப்படி பதில் அளித்தார்:

 

ஸ்ரீ நட்கர்னியின் சாமர்த்தியமான கடிதத்திற்கு இடம் கொடுக்க நான் மறுக்க முடியாது. எனினும், ஜைன மதமோ அல்லது பௌத்த மதமோ நாத்திக மதங்கள் அல்ல என்ற எனது அபிப்ராயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். கடவுளைப் பற்றிய கீழ்க்கண்ட விளக்கங்களை நான் ஸ்ரீ நட்கர்னிக்கு எடுத்துக் கூறுகிறேன். கர்மாவின் மொத்த சாரமே கடவுள் ஆகும். நேர்மையானதைச் செய்யும்படி மனிதனை வற்புறுத்துவது கடவுளே; உயிர் வாழும் அனைத்தின் நிறைவே கடவுள். விதியன் கைப்பொம்மையாக மனிதனை ஆட்டி வைப்பதும் கடவுள் தான். தமக்கு ஏற்பட்ட சோதனைகளையெல்லாம் தாங்கும் சக்தியைப் ப்ராட்லாவுக்கு அளித்தது கடவுளே; நாத்திகவாதிக்கு மறுப்பாக இருப்பதும் கடவுளே தான்

 

பிரார்த்தனையின் அர்த்தமும் அவசியமும்  பற்றி காந்திஜி உத்தியோக மந்திரைச் சேர்ந்த பிரார்த்தனை மைதானத்தில் ஆற்றிய சொற்பொழிவு 23-1-1930 எங் இந்தியா இதழில் வெளியானது. அதில் ப்ராட்லாவைப் பற்றி காந்திஜி குறிப்பிட்டார்.

 

அந்தப் பகுதி மட்டும் இங்கு தரப்படுகிறது:

முதல்தரமான சந்தேகவாதியோ அல்லது நாத்திகரோ கூட ஒரு தார்மிகக் கொள்கையின் அவசியத்தை ஒப்புக் கொள்ளுகிறார்கள். அக்கொள்கையை அனுசரிப்பதே நல்லது என்றும் அதை அனுசரிக்காமல் இருப்பது தீங்கு என்றும் கருதுகிறார்கள். ப்ராட்லாவின் நாத்திகம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் அவர் கூட, உண்மையைப் பேச வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தினார். உண்மையைப் பேசியதற்காக மிகுந்த துன்பத்திற்குள்ளானார். அதனால் தான், மதத்தை மறுக்கும் ஒரு மனிதன் கூட மதமின்றி வாழ்வதில்லை, வாழ முடியாது என்று நான் கூறியுள்ளேன்.

 

 

ப்ராட்லா அறிந்த மதம் கிறிஸ்தவமே. அதையே அவர் எதிர்த்தார். இதனால், அவர் கிறிஸ்தவ பாதிரிகளின் கடும் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது; மிகுந்த துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருந்தது. ஆனால் அப்படிப்பட்ட நாத்திகவாதியும் கூட உண்மையைப் பேச வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தியதை காந்திஜி பாராட்டத் தவறவில்லை.

 

ஹிந்து மதக் கொள்கைகளையும் அது கூறும் பிரார்த்தனை, சத்தியம் உரைத்தல் உள்ளிட்ட அனைத்தையும் ஆயிரக்கணக்கான முறை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் மகாத்மா எடுத்துரைத்து வந்தார்.

 

30-1-1891 அன்று மறைந்த ப்ராட்லாவின் ஈமச்சடங்கில் கலந்து கொண்ட மகாத்மா 57 வருடங்களுக்குப் பிறகு அதே ஜனவரி 30ஆம் தேதி சுடப்பட்டு இறந்தது ஒரு ஆச்சரியகரமான தற்செயல் ஒற்றுமை தானோ?!

 

picture by Krishna srinivasan, SFC, USA

3

காந்திஜியை மதமாற்றம் செய்வதற்காகவும் குறைந்த பட்சம் வாதத்தில் வெல்வதற்காகவும் வந்த பாதிரிகள் எத்தனையோ பேர்!

அத்தனை பேரிடமும் தான் ஒரு ஹிந்து என்பதை ஆணித்தரமாக அடித்து உரைத்ததோடு ஹிந்து கொள்கைகளான விக்கிரக வழிபாடு, மறு ஜென்மம் போன்றவற்றை தீவிரமாக ஆதரித்துப் பேசி அதன் உண்மை விளக்கங்களையும் அவர் முன் வைத்தார்.

 

13-3-1937 தேதியிட்ட ஹரிஜன் இதழில் வெளியாகியுள்ள  விக்கிரக வழிபாடு பற்றிய உரையாடல் ஒன்றைப் பார்ப்போம்.

ஒரு கத்தோலிக்க பாதிரியார் காந்திஜியிடம் வந்தார். அவருக்கும் காந்திஜிக்கும் நடந்த உரையாடல் இது:

 

காந்திஜி : ஏதாவதொரு விதத்தில் விக்கிரக வழிபாட்டை அனுசரிக்காமல் இருப்பது முடியாத காரியம். ஒரு மசூதியை ஆண்டவனின் இருப்பிடம் என்று முஸ்லிம் கூறுகிறார்; மசூதியைப் பாதுகாப்பதற்காகத் தமது உயிரையே கொடுக்கிறார். அவர் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? ஒரு கிறிஸ்தவர் சர்ச்சுக்கு ஏன் போகிறார்? அவர் பிரமாணம் செய்ய வேண்டியிருக்கும் போது பைபிளை வைத்துக் கொண்டு ஏன் பிரமாணம் செய்கிறார்? அவ்விதம் செய்வதை நான் ஆட்சேபிக்கவில்லை. மசூதிகளும், சமாதிகளும் கட்டுவதற்காக ஏராளமான செல்வத்தைக் கொடுப்பது விக்கிரக வழிபாடு அல்லவா? கன்னிமேரியும், மற்ற கிறிஸ்தவ மகான்களும் கல்லிலோ அல்லது ஓவியத்திலோ, திரையிலோ அல்லது கண்ணாடியிலோ உள்ள கற்பனை உருவங்களே அல்லவா? அந்த உருவங்களின் முன் ரோமன் கத்தோலிக்கர்கள் முழந்தாளிட்டுப் பணிவது விக்கிரக வழிபாடு அல்லவா?

 

 

கத்தோலிக்கப் பாதிரியார்: நான் என் தாயாரின் புகைப்படத்திற்கு மரியாதையாக அதை வணங்குகிறேன். ஆனால் அதை பூஜிப்பதில்லை.நான் கிறிஸ்தவ மகான்களையும் பூஜிப்பதில்லை. நான் கடவுளை வழிபடும்போது, அவர் சிருஷ்டி கர்த்தா, அவர் எந்த மானிடரையும் காட்டிலும் மேலானவர் என்ற உண்மையை ஒப்புக் கொள்ளுகிறேன்.

 

காந்திஜி : அது போலவே, நாங்கள் வழிபடுவது கல்லை அல்ல; கல்லிலும் உலோகத்திலும் செய்யப்பட்டுள்ள விக்கிரகங்களிலிருக்கும் கடவுளையே வணங்குகிறோம்.

பாதிரியார்: கிராமவாசிகள் கற்களையே கடவுள் என்று பூஜிக்கிறார்கள்.

 

காந்திஜி : இல்லை. அவர்கள் கடவுளை மாத்திரமே பூஜிக்கிறார்கள். கடவுளுக்குக் குறைந்த எதையும் அவர்கள் பூஜிப்பது இல்லை. கன்னி மேரியின் முன்னிலையில் முழந்தாளிட்டு வணங்கும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர் மூலமாக கடவுளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றே நீங்கள் கோருகிறீர்கள். அதுபோலவே ஒரு ஹிந்து, கல் சிலையின் மூலம் கடவுளுடன் தொடர்பு கொள்ள முற்படுகிறார். முஸ்லீம்கள் மசூதிக்குள் செல்லும் போது  பயபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் செல்லுகிறார்கள். உலகம் முழுவதுமே ஏன் ஒரு மசூதியாக இருக்கக் கூடாது? அற்புதமான பரந்த ஆகாயம் ஏன் மசூதியின் விதானமாக இருக்கக் கூடாது? எனினும். நான் முஸ்லீம்களை அறிந்து கொண்டுள்ளேன்; அவர்கள் விஷயத்தில் அனுதாபம் கொள்ளுகிறேன். கடவுளை வணங்குவதற்காக ஒரு மசூதிக்குச் செல்லுவது அவர்களுடைய வழியாகும். கடவுளை வணங்க, ஹிந்துக்கள் அவர்களுடைய சொந்த வழியைப் பின்பற்றுகிறார்கள். நாம் கடவுளை அணுகும் வழிகள் தான் வேறானவையேயன்றி, கடவுள் வெவ்வேறானவர் அல்ல.

 

பாதிரியார்: கடவுள் தங்களுக்கு உண்மையான வழியைக் காட்டியதாக கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர்.

 

காந்திஜி: கடவுளின் சித்தம், பைபிள் என்ற நூலில் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மற்ற நூல்களில் குறிப்பிடப்படவில்லை என்றும் நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? கடவுளின் சக்தியை நீங்கள் ஏன் ஓர் எல்லைக்கு உட்படுத்துகிறீர்கள்?

 

பாதிரியார் : ஆனால், கடவுளிடமிருந்து நமக்குத் தகவல் கிடைத்தது என்பதை, மனிதர் செய்ய முடியாத அற்புதமான செயல்களின் மூலம் ஏசுநாதர் நிரூபித்தாரே.

 

காந்திஜி : முகமது நபியும் கூட அவ்விதமே தான் கூறுகிறார். கிறிஸ்தவரின் சாட்சியத்தை நீங்கள் ஒப்புக் கொண்டால், முஸ்லீமின் சாட்சியத்தையும் ஹிந்துவின் சாட்சியத்தையும் கூட ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

 

பாதிரியார் : அசாதாரணமான அற்புதங்கள் எதுவும் தம்மால் செய்ய முடியாதென்றும் முகமது நபி கூறினார்.

 

காந்திஜி : இல்லை; கடவுள் இருப்பதை அசாதாரண அற்புதங்களின் மூலம் நிரூபிக்க அவர் விரும்பவில்லை. எனினும், கடவுளிடமிருந்து தமக்குச் செய்திகள் வருவதாக அவர் கூறிக் கொண்டார்.

 

 

4

ஹிந்துத்வம் பற்றிய காந்திஜியின் கட்டுரைகள் ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். போலி கிறிஸ்தவ பாதிரிகள் மற்றும் போலி இஸ்லாமியர்களின் வாதங்களை அவர் கிழி கிழி என்று கிழித்துத் தூக்கி எறிகிறார். தைரியமாக. மிக தைரியமாக!

 

அதிர்ஷ்டவசமாக அவரது எழுத்துக்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றை வரிவரியாகப் படித்தால் ஹிந்து மதத்தின் பெருமையை உணரலாம்.

 

நாத்திகவாதியான ப்ராட்லாவுக்கும் அவரால் பதில் கூற முடிகிறது. மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரிகளுக்கும் அவரால் பதில் கூற முடிகிறது.

 

அது தான் ஹிந்து காந்திஜியின் மேதைத்தனம். ஹிந்துத்வத்தில் ஊறி புடம் போட்ட தங்கமே தான் ஹிந்து காந்திஜி!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: