WRITTEN BY S NAGARAJAN
Date: 13 October 2018
Time uploaded in London – 7-47 AM (British Summer Time)
Post No. 5534
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 12-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி இரண்டாம்) கட்டுரை
ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 1
ச.நாகராஜன்
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அமெரிக்காவில் திரையிடப்பட்ட வெற்றிப்படம் ஆபரேஷன் ஃபைனல். (Operation Finale)
கதையல்ல நிஜம், ஆபரேஷன் ஃபைனல். நாஜி ஜெர்மனியில் ஹிட்லருக்குக் கீழே பணி புரிந்த அடால்ஃப் எய்ச்மேன் (Adolf Eichmann) இஸ்ரேலிய உளவுப் பிரிவால் பிடிக்கப்பட்டு இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பின்னர் அவர் தூக்கிலிடப்பட்ட நிஜமான சம்பவத்தை திரையில் சித்தரிக்கும் படம் இது.
இஸ்ரேலிய உளவுப் பிரிவான மகத்தான நவீன சாதனங்களைக் கொண்ட உலகின் அதி சிறந்த உளவுப் பிரிவான இஸ்ரேல் நாட்டின் மொஸாட் (Mossad) எப்படி எய்ச்மேனைப் பிடித்தது என்பதைக் காட்டும் இந்தப் படம் அமெரிக்காவில் உடனடி வெற்றியைப் பெற்றுள்ளது. இதர நாடுகளில் இது 2018 அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வெளியிடப்படும்.
இதன் டைரக்டர் க்ரிஸ் வெய்ட்ஸ். எய்ச்மேனாக நடித்திருப்பவர் பிரபல நடிகர் பென் கிங்க்ஸ்லி. உளவுப் பிரிவின் ஒற்றர் படையின் தலைவரான பீட்டர் மால்கினாக நடித்திருப்பவர் ஆஸ்கார் ஐஸக். அர்ஜெண்டினாவில் 2017 அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. தத்ரூபமாக காட்சிகளைப் படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு தனி ஆய்வுப் பிரிவு நிறுவப்பட்டு ஏராளமானோரை பேட்டி கண்டு உள்ளது உள்ளபடி காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.
ஹிட்லரின் ராணுவப் பிரிவான எஸ்.எஸ்ஸில் எய்ச்மேன் 1932இல் சேர்ந்தார். 1942இல் அனைத்து யூதர்களையும் மரண சேம்பருக்கு அனுப்பும் பொறுப்பைப் பெறும் அளவில் அந்தப் பிரிவில் உயர்ந்தார். சுமார் 30 லட்சத்திலிருந்து நாற்பது லட்சம் யூதர்களை மிக விரைவாகத் ‘திறம்பட’ மரண அறைக்குக் கொண்டு சென்றவர் அவர். இன்னும் இருபது முதல் முப்பது லட்சம் யூதர்கள் சித்திரவதை முகாமில் கொல்லப்பட்டனர்.
இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்தவுடன் அமெரிக்கத் துருப்புகள் எய்ச்மேனைப் பிடித்தன. ஆனால் சிறையிலிருந்து தப்பிய எய்ச்மேன் நான்கு ஆண்டுகள் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் மாறுவேடத்துடன் இன்னொரு பெயரில் உலவி வந்தார். கடைசியாக 1950இல் அர்ஜெண்டினாவில் வந்து வசிக்க ஆரம்பித்தார். நாஜிகளுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக அர்ஜெண்டினா திகழ்ந்தது.
அதன் தலைநகரான ப்யூனெஸ் ஐரிஸில் (Buenos Aires)
ரிசார்டோ க்ளெமெண்ட் என்ற ஒரு ஆசாமி சாதாரண மனிதன் போல வாழ்ந்து வந்தான். மெர்சிடெண்ஸ் பென்ஸ் தொழிற்சாலையில் போர்மேனாக அவன் வேலை பார்த்து வந்தான். தினசரி காலையில் பஸ்ஸைப் பிடித்து தொழிலகம் செல்வான்; மாலையில் மனைவி இரு மகன்கள் இருக்கும் தனது வீட்டிற்குத் திரும்புவான்.
ஆனால் அந்த சாதாரண ஆசாமிக்கு வந்தது வினை 1960ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி. அவர் வீடு திரும்பும் போது அவரை மடக்கிப் பிடித்தது இஸ்ரேலின் உளவுப் படை. கண்கள் கட்டப்பட்டு காரில் தூக்கிப் போடப்பட்டு ஒரு அறையில் பத்திரமாக அவரைக் கொண்டு சென்று அவர் தான் தாங்கள் தேடிக் கொண்டிருந்த எய்ச்மேன் என்று உறுதிப் படுத்திக் கொண்டது மொஸாட். உலகின் அதி நவீன கருவிகளுடன் பல மாதங்களாக உளவுப் படையில் பல பேர்கள் இந்தத் தருணத்திற்காக வேலை பார்த்து வந்தனர்.
அர்ஜெண்டினா நாஜிகளைப் பிடிக்க் ஆதரவு தராது என்று தீர்மானித்த இஸ்ரேல் தானாகவே எய்ச்மேனைப் பிடித்து இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. மொஸாடின் டைரக்டரான ஹேரலுக்கு எய்ச்மேன் இருக்குமிடம் பற்றிய தகவல் வந்தவுடன் அவர் பிரதம மந்திரிக்கு அதைத் தெரிவித்தார்.
இஸ்ரேலின் பிரதம மந்திரியாக இருந்த டேவிட் பென் -குரியன் (David Ben- Gurion) நாற்பது லட்சம் யூதர்களின் பெரும் பலிக்குக் காரணமான எய்ச்மேனை எப்பாடு பட்டாவது பிடித்துக் கொண்டு வந்து நீதிக்கு முன்னால் நிறுத்த உத்தரவிட்டார்.
எப்படி எய்ச்மேன் அர்ஜெண்டினாவில் இருப்பது மொஸாட்டிற்குத் தெரிய வந்தது?
மகத்தான கொலைகளைச் செய்த எய்ச்மேனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இஸ்ரேலியர் பலர் இதே வேலையில் தீவிரமாக இருந்தனர். அவர்களின் ஒருவர் தான் சைமன் வைஸெந்தால். அவருக்கு ஒரு கடிதம் பற்றிய விவரம் தெரிய வந்தது. அதன்படி 1953இல் எய்ச்மேன் ப்யூனெஸ் ஐரிஸில் இருப்பதாக அவர் தெரிந்து கொண்டார். இதை அவர் வியன்னாவில் இருந்த இஸ்ரேலின் தூதருக்குத் தெரிவித்தார். அத்துடன் அவர் தனிப்பட்ட துப்பறிவாளர்களைத் தானே நியமித்து எய்ச்மேன் குடும்பத்தினரை போட்டோ பிடிக்க ஏற்பாடு செய்தார். எய்ச்மேனின் சகோதரரான ஆட்டோ என்பவர் அச்சு அசலாக எய்ச்மேன் போலவே இருப்பார். ஆகவே உண்மையான எய்ச்மேனைப் பிடிக்க நிறைய தகவல்களைச் சரிபார்க்க வேண்டி இருந்தது. தனக்குக் கிடைத்த போட்டோக்களை மொஸாட்டிற்கு சைமன் வழங்கினார்.
இதே சமயம் லொதார் ஹெர்மன் என்பவரும் எய்ச்மேனைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்தார். ஜெர்மனியிலிருந்து 1938ஆம் ஆண்டு அவர் அர்ஜெண்டினா வந்து அங்கு குடியேறினார். ஹெர்மெனின் மகளான சில்வியா க்ளாஸ் எய்ச்மேன் என்பவருடன் பழக ஆரம்பித்தார். இந்த டேடிங்கில் ஒரு நாள் க்ளாஸ் பேச்சு வாக்கில் எப்படி தன் தந்தை யூதர்களைக் கொன்று குவித்தார் என்று பெருமை அடித்துக் கொண்டார். சில்வியா இதை தந்தைக்குச் சொல்ல, அவர் உண்மையை நன்கு அறிந்து கொள்ள தன் மகளை க்ளாஸின் வீட்டிற்கே செல்லச் சொன்னார். வீட்டின் கதவைத் திறந்தவர் எய்ச்மேன் தான். ஆனால் அவர் க்ளாஸின் மாமா. க்ளாஸ் அவரை அப்பா என்று அழைப்பது வழக்கம் என்பதையும் சில்வியா அறிந்து கொண்டார்.
செய்தி உறுதிப் படுத்தப்பட்டது. மொஸாட் டைரக்டர் ஹேரல் தீவிரமாக இந்த வேட்டையில் இறங்கினார். உளவுப் பிரிவினரில் ஏராளமானோரைத் தொடர்ந்து எய்ச்மேனைக் கண்காணிக்க அவர் பணித்தார். அவர்களில் ஒருவர் எய்ச்மேனின் அடையாளங்களைக் கண்டு அவரே என உறுதிப்படுத்தினார்.. பின் மொஸாட் மின்னல் வேகத்தில் செயலில் இறங்கியது. பின்னர் நடந்ததைப் பார்ப்போம்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் முதல் மனைவி மிலெவா மேரியின் வாழ்வு சற்று சோககரமானது.(பிறப்பு 29-12-1875 மறைவு 4-8-1948).
ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி ஆய்விற்குப் பெரிதும் துணை புரிந்தவர் மிலெவா. இருவரும் மனமொத்து வாழ்ந்து வந்தனர். நிச்சயம் நோபல் பரிசு கிடைத்து விடும் என ஐன்ஸ்டீனும் மிலெவாவும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆய்வில் ஐன்ஸ்டீனின் பெயர் மட்டும் இருந்தது. மிலெவா என்ன நினைத்தார் எனில், ஐன்ஸ்டீன் வெற்றி பெற்றால் அது தனது வெற்றி தானே என்று கருதினார். ஆனால் பின்னால் ஐன்ஸ்டீன் பெர்லினில் சென்று தங்க வேண்டி இருந்த போது அது மிலெவாவுக்குப் பிடிக்கவில்லை. உறவில் விரிசல் ஏற்பட்டது. ஐன்ஸ்டீன் பெர்லின் வாசத்தில் திடமாக இருந்ததால் விவாகரத்து வரை செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மிலெவாவும் இதற்கு இணங்கினார் – ஒரு நிபந்தனையின் பேரில். நோபல் பரிசு கிடைக்கும் பட்சத்தில் அந்தத் தொகையைத் தனக்குத் தர வேண்டும் என்றார் மிலெவா. ஐன்ஸ்டீன் ஒத்துக் கொண்டார், அந்தத் தொகையை முதலீடு செய்து அதில் வரும் வட்டியை அவர் எடுத்துக் கொள்ளலாம் என்றார் அவர். 1919இல் விவாகரத்து செய்யப்பட்டது. விவாகரத்து ஆன சில மாதங்களிலேயே ஐன்ஸ்டீன் தன் நெருங்கிய உறவுப் பெண்மணியான எல்சாவை மணம் செய்து கொண்டார்.
1921இல் ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றார். நினைத்தபடியே நோபல் பரிசு பணம் வந்தது. அதை மிலெவா பெற்றுக் கொண்டு மூன்று வீடுகளை வாங்கினார். அவரது ஒரு மகன் நோய்வாய்ப்படவே மருத்துவச் செலவிற்காக இரு வீடுகளை விற்க நேரிட்டது. பாவம், ஏழ்மை வாழ்க்கையில் தான் அவர் காலம் தள்ள நேர்ந்தது. ஜூரிச்சில் 72ஆம் வயதில் அவர் காலமானார். 2009ஆம் ஆண்டு அவரது கல்லறையில் ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடரான ஜீனியஸ் தொடரின் முதல் பாகத்தில் அவர் வரலாறு இடம் பெற்றது. அவரைப் பற்றிய ஏராளமான புத்தகங்கள் இப்போது வெளியாகியுள்ளன.
***