Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 13 October 2018
Time uploaded in London – 10-29 am (British Summer Time)
Post No. 5535
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
காளிதாஸன், கபிலன், ஷேக்ஸ்பியர் செப்புவது என்ன?
கண் துடிப்பதற்கு டாக்டர்கள் கொடுக்கும் விளக்கமும், ஸம்ஸ்க்ருத, தமிழ் இலக்கியம் கொடுக்கும் விளக்கமும் வேறு பட்டுள்ளன. ஆயினும் இந்துக்கள் சொன்ன விளக்கமே சரி என்பது போல புகழ் பெற்ற விஞ்ஞான சஞ்சிகைகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மேலும் காளிதாஸ மஹா கவி, சங்க இலக்கிய காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவர் என்பதற்கு மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது. கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோம்; வாருங்கள்.
டாக்டர்கள் மொழிவது என்ன?
கண் துடிப்பது சர்வ சாதரணமாக நிகழும். இது சில நாட்களோ, வாரங்களோ, சில மாதங்களுக்கோ கூட நீடிக்கலாம். அதுவாக வரும்; அதுவாகப் போகும்; இதில் ஒரு தீங்கும் இல்லை. ஆயினும் நீண்ட காலத்துக்கு இது நீடித்தால் நரம்புக் கோளாறாக இருக்க வாய்ப்பு உளது; ஆகவே மருத்துவரைப் போய்ப் பாருங்கள்.
கண் துடிப்பது ஏன்?
களைப்பு, தூக்கமின்மை, கஃபைன் (caffeine) அதிகமுள்ள காப்பி முதலிய பானங்களை அதிகம் பருகுவது, சிரமப்பட்டு (strain) படிப்பது, தூக்கமின்மை முதலியன சில காரணங்கள் என்று மருத்துவ நூல்கள் புகல்கின்றன.
ஆனால் சங்கத் தமிழ் நூல்களும், அதற்கு முந்தைய ஸம்ஸ்க்ருத நூல்களும் செப்புவதோ வேறு!
மேலை நாடுகளில் கண் (twitching, throbbing) துடிப்பு பற்றிப் பேசாமல் கண் அரிப்பு (Itching) நமைச்சல் பற்றிப் பேசுகின்றனர்.
கிரேக்க நாட்டு அறிஞர் துவங்கி ஷேக்ஸ்பியர்,ஜோனதன் ஸ்விப்ட் வரை ஒரே குரலில் பேசுகின்றனர்.
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான சஞ்சிகை ஸைன்டிபிஃக் அமெரிக்கனில் (Scientific American) வெளியான கருத்து, நம்மவர் செப்புவதில் பசை இருப்பதாகக் காட்டுகிறது.
முதலில் கிரேக்க அறிஞர் செப்பியது என்ன?
தியோக்ரிட்டஸ் (கி.மு.275) என்ற கிரேக்க கவிஞர் சொல்கிறார்:
என் வலது கண் அரிக்கிறது, என் காதலியை நான் காணலாமா? (Idylls ஐடில்ஸ் என்னும் நூலில்).
உலக மஹா ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர் (1604ம் ஆண்டு) உரைப்பது:
என் கண்களும் அரிக்கின்றன; நான் அழப்போகின்றேன் என்பது இதன் பொருளோ! (ஒதெல்லோ Othello நாடகத்தில் காட்சி 4- டெஸ்டிமோனாவின் வசனம்)
டாக்டர் நதானியல் ஹோம்ஸ் (1650ஆம் ஆண்டு) பகர்கிறார்:
அவர்களின் வலது கண்ணீல் நமைச்சல் எடுத்தால் அவர்கள் விரைவில் அழப்போகிறார்கள் என்பது அர்த்தம்; இடது கண் அரிப்போ
எதிர்கால இன்பச் சிரிப்பை முன் அறிவிக்கிறது.
ஜோனதன் ஸ்விப்ட் (1738) சொல்கிறார்
என் வலது கண்ணில் அரிப்பு; நான் அழப்போகிறேன்
இதற்குப் பின்னரும் இப்படி வலது, இடது கண்களின் சோகம், சந்தோஷம் பற்றி எழுதியுள்ளனர். ஆக 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கண்களின் மாற்றத்தை அறிந்துள்ளனர்.
ஆனால் இதற்கும் முன்னர் சங்கத் தமிழ் இலக்கியமும், ஸம்ஸ்க்ருத இலக்கியமும் கண் துடிப்பு பற்றி பேசுகின்றன.
உலக மஹா கவி, நாடக ஆசிரியன் காளிதாஸன் சொல்கிறான்:-
சாகுந்தலம், காட்சி 5-12
சகுந்தலை- ஏதோ அபசகுனம் போல் இருக்கிறதே! அடக்கடவுளே! என் வலது கண் துடிக்கிறதே. என்ன கஷ்டமோ
(பெண்களுக்கு வலக் கண் துடித்தல் கெட்டது. இடக் கண் துடித்தால் நல்லது நடை பெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை; இதைத் தமிழிலும் காணலாம்)
மேகதூதம் 94
மேகமே! நீ அருகில் சென்றதும் அந்த மான் விழியாளின் கண் துடிக்கும் (இதற்கு உரைகாரர்கள் இடக் கண் துடிக்கும் என்று எழுதியுள்ளனர்- சகுன சாஸ்திரத்தின் அடிப்படையில்)
அதாவது கணவன் வரபோகிறான் என்ற நற்செய்தி கிடைக்கும்
ரகு வம்ஸம் 14-49
(ராம பிரானின் உத்தரவின் பேரில், சீதையை லக்ஷ்மணன் ஒன்றும் சொல்லாமல் காட்டில் விட்டபோது)
சீதையின் வலது கண்கள் துடித்தன (இனி வரப்போகும் துக்கத்தை முன் அறிவிக்கும் முகமாக)
இதே காளிதாஸன் ரகு வம்ஸத்திலும், விக்ரமோர்வஸீயத்திலும் ஆண்களின் வெற்றியைக் குறிக்க வலது தோள்கள் துடித்ததாக எழுதுகிறான்.
ஆக ஆண்களுக்கு வலது கண், வலது தோள்– சுப சகுனம். பெண்களுக்கு அவ்வாறு இல்லை.
ஐங்குறு நூறு என்னும் சங்க நூலில் பிராஹ்மணப் புலவன் கபிலன் பாடுகிறான்:-
தோழி நன் நிமித்தம் பற்றிப் பாடுவது:–
நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்
மயிர்வார் முன்கை வளையும் செறூ உம்
……….. (218)
தலைவியே! என் இடக் கண் துடிக்கிறது. கை வளையல்கள் விம்முகின்றன (ஆகையால் கவலைப் படாதே; தலைவன் வருவது உறுதி)
இங்கும் உரைகாரர்கள் இடது கண் என்று எழுதுவதைக் காணலாம். இதற்கு அடிப்படை சகுன சஸ்திரம்.
கபிலர்தான், அதிகமாக காளிதாசன் உவமைகளை சங்கத் தமிழ் நூல்களில் பயன்படுத்துகிறார். இந்த இரண்டு வரிகளில் கூட புருவம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் காணலாம்.
கலித்தொகையில் பாலைபாடிய
பெருங் கடுங்கோவும் சோழன் நல்லுருத்திரனும் பாடுகின்றனர்:
மனைவயின் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
நல் எழில் உன் கணும் ஆடுமால், இடனே
–பாலைக் கலி 10/20-23 (பெருங் கடுங்கோ)
பொருள்
பல்லியும் நான் சொல்லுவதை ஆமோதிப்பது போல ஒலி செய்கிறது. இடக்கண்ணும் துடிக்கிறது. ஆகவே மனம் தேறுவாயாக.
இங்கும் இடக் கண் துடிப்பு என்பது பழைய உரை.
முல்லைக் கலியிலும் இது போலக் காண்கிறோம். பிற்காலப் புலவர்கள் யாத்த நூல்களிலும் கண் துடிப்பைக் காண முடிகிறது.
எனது கருத்து
கண் துடிப்போ கண் நமைச்சலோ — எதுவானாலும் அது வருங்கால நிகழ்ச்சிகளை உணர்த்தும் சகுனம் என்று மேலை நாட்டினரும் கீழை நாட்டினரும் நம்பினர்.
மேலும் இடப்பக்கம் துடித்தல் பெண்களுக்கு நல்லது, வலப்பக்கம் துடித்தல் ஆண்களுக்கு நல்லது என்ற காளிதாசன் கருத்தைக் கபிலர் முதலானோர் கையாண்டது காளிதாஸனின் காலத்தை நான் சங்க காலத்துக்கு முன் வைக்கக் கிடைத்த இன்னும் ஒரு சான்று.
பாரதத்தில் இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்து, பண்பாடுதான் இருந்தது.ஆங்காங்கே சிறிய விஷயங்களில் வேறு பாடு இருக்கலாம் என்பதற்கு இது இன்னும் ஒரு சான்று.
கடைசியாக இதில் விஞ்ஞானக் கருத்தும் இருக்கலாம் என்பது என் ஊகம். ஆயினும் ஆழமான ஆராய்ச்சி தேவை.
மூளையில் இரண்டு பகுதிகள் உள; அவற்றில் வலப்பக்க மூளை மனிதனின் இடது பகுதி உறுப்புகளையும், இடப்பக்க மூளை மனிதனின் வலது பகுதி உறுப்புகளையும் கட்டுப்படுத்துகின்றன என்பதெலாம் இப்பொழுது உறுதி செய்யப்பட்டுவிட்டன.
பெண்களுக்கு சில திறன்கள் அதிகம்; ஆண்களுக்கு சில திறன்கள் அதிகம் என்பதும் பென்ஸில்வேனியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ராகினி வர்மா செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. பெண்கள் உணர்ச்சிப்படுபவர்கள்; கலைகளில் வல்லவர்கள், கவனிப்பதில் வல்லவர்கள்.
ஆண்கள் அஹங்காரம் உள்ளவர்கள், நல்ல கணக்குப் போடுபவர்கள்; ஒளிமயமான முடிவுகளை எதிர்பர்ப்பவர்கள் என்று ஆராய்ச்சிகளில் தெரிய வருகிறது. இதை வைத்துப் பார்க்கையில் ஆண்களுக்கு ஏன் வலது பக்கத் துடிப்பு என்பது விளங்குகிறது. ஆயினும் இதை மெய்ப்பிக்க மேலும் ஆராய்ச்சி தேவை. ஒரு ஆளின் இடது கண்ணோ, வலது கண்ணோ துடிக்கையில் மூளையின் எந்தப் பகுதியில் என்ன நிகழ்கிறது என்பதை ஆராய்ந்தால் மட்டுமே உறுதிபடப் பேச முடியும். தற்போது இட, வல தொடர்புக்கு வாய்ப்பு இருப்பது மட்டும் ‘பட்டும் படாமலும்’ தெரிகிறது.
ஆராய்ச்சிகளைத் தொடர்வோம்.
–சுபம்–