வைச்ச பொருள்?! – 1 (Post No.5537)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 14 October 2018

 

Time uploaded in London – 5-44 AM (British Summer Time)

 

Post No. 5537

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

ஆய்வுக் கட்டுரைகளை காப்பி அடித்து தங்கள் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டாம். சிலர் கட்டுரைகள் வெளியான தளம், எழுதியவர் பெயர் இல்லாமல் நண்பர்களுக்கு அனுப்ப அவர்கள் தங்கள் பெயரில் அனுப்பி வெளியிடுகிறார்கள். எழுதியவர் பெயர், வெளியிட்ட இணையதளமான www.tamilandvedas.comஇன் பெயர் ஆகியவற்றையும் நண்பர்களுக்கு இணைத்து அனுப்புங்கள்.

 

 

வைச்ச பொருள்?! – 1

 

.நாகராஜன்

1

திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரில் அருளிய தேவாரப் பாடலைப் படித்தேன் :

 

வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்

 

சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கின் அல்லால்

மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்

அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலாப் பேதை நெஞ்சே

 

‘வைத்த பொருள்’ என்ற சொற்களுக்குச் சரியான பொருள் புரியாமல் குழப்பம் வந்தது.

 

சரி ‘பொருள்’ என்பதன் ‘பொருளைப்’ புரிந்து  கொள்ளத் திருவள்ளுவரை நாடலாம் எனத் திருக்குறளை எடுத்தேன்.

வள்ளுவரோ ‘பொருள்’ பற்றிய ‘பொருள் களஞ்சியமாக’ இருக்கிறார்! நுனிப்புல் மேய முடியாது.

 

2

பொருள் என்ற சொல்லிற்கான பொருளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,

பொருள் என்றால் உண்மை அல்லது மெய்ப்பொருள்

பொருள் என்றால் வினை.

பொருள் என்றால் செய்தி.

பொருள் என்றால் பயன்

பொருள் என்றால் உறுதிக் குணம்

பொருள் என்றால் சிறந்தது

பொருள் என்றால் சொற் பொருள் அல்லது உரை

பொருள் என்றால் பொருள் நூல் (Economics)

பொருள் என்றால் நூல் பொருள்

பொருள் என்றால் உடைமை 

பொருள் என்றால் பண்டம் அல்லது வஸ்து

பொருள் என்றால் செல்வம்

பொருள் என்றால் மதிப்பு

 

 

பொருளுக்கான இத்தனை ‘பொருள்களையும் குறளில் ஏற்றி ஒன்றுடன் ஒன்று இணைத்து அருமையான ஒரு ‘பொருள் மாலையைஅவர் தொடுத்து விட்டார். (பொருள் மாலை என்பதை நான் இங்கு பொருள் களஞ்சியம் என்ற பொருளில் தந்துள்ளேன். வள்ளுவரோ 1230ஆம் குறளில் ஒரு மனைவி தன் கணவரை பொருள் மாலையாளர் என்று குறிப்பிடுகிறாள். அதாவது அவள் கணவன் பொருள் தேடுவதையே இயல்பாகக் கொண்டவனாம். பொருள் என்பது இங்கு செல்வம் என்ற பொருளைத் தரும். குறள் : பொருள் மாலையாளரை உள்ளிருள் மாலை, மாயும் என் மாயா உயிர்! இதன் அர்த்தம் : பொருள் தேடுவதையே இயல்பாகக் கொண்டுள்ள என் கணவரை நினைத்து நினைத்து வருந்தி, அவர் அருகில் இல்லாததால்,இது வரை மாயாதிருந்த என் உயிர் இதோ, இந்த மயக்கம் தரும் மாலைப் பொழுதில் நிச்சயம் மாய்ந்து விடும் – கற்பியலில், பொழுது கண்டு இரங்கல் என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் வருகிறது)

 

பொருளுக்கான பொருளை அறிய சுமார் 96 குறட்பாக்களைப் படித்து ஆராய்ந்து உண்மைப் பொருளைத் தேற வேண்டும்.

பொருள் என ஆரம்பிக்கும் குறட்பாக்கள் 13.

பொருள் என முடியும் குறட்பாக்கள் 6

பொருள் என வார்த்தை வரும் குறட்பாக்கள் 66.

இத்தனை குறட்பாக்களையும் படித்து முடித்தால் தான் அப்பர் வைத்த “வைச்ச பொருளின் முடிச்சை அவிழ்க்க முடியும்!

 

 

3

பொருளைப் பலவாறாக இனம் பிரிக்கிறார் வள்ளுவர். உறு பொருள், உல்கு பொருள், தெறு பொருள், செம் பொருள், மெய்ப் பொருள், தேறும் பொருள் என இப்படிப் பலவகைப் பொருள்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாப்பொருளும் குறளில் இருக்கிறது!

 

4

முதலில் இல்லற வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்.

தூக்கிவாரிப் போடும் ஒரு குண்டை வள்ளுவர் தூக்கிப் போடுகிறார்பெண்ணியவாதிகள் முன்பு.

குறள் 141 – அதிகாரம் பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம் பொருள் கண்டார்கண் இல்.

பிறனுடைய மனைவியிடத்தில் அவளது பெண்மையை அடைய விரும்பி நடக்கும் பேதைமை கொண்டு நடக்கும் அறியாமை அறம், பொருள் கண்டு தெளிந்தவரிடத்தில் இல்லை.

ஆக இங்கு ஒருவனுடைய மனைவி அவனுக்குப் பொருள் என்பதைச் சொல்கிறார் வள்ளுவர்.

ஆணை முன் நிறுத்தி அவனுடைய பொருள் மனைவி என்பதால் அவர் ஆணுக்கு முன்னுரிமை கொடுக்கிறாரா? –பெண்ணியவாதிகள் குதர்க்கமாகப் பேசுவர் இப்படி!

ஆனால் உண்மையில் குறள் முழுவதையும் ஓர்ந்து படித்தால் இதன்Corollaryயாககிளைத் தேற்றமாகவருவது ஒரு பெண்ணுடைய (மனைவியின்) பொருள் ஆண் (அவள் கணவன்) என்பதாகும்.

 

இப்படித்தான் குறளைப் படிக்க வேண்டும்.

இதை எப்படி வலியுறுத்திச் சொல்ல முடியும் என்றால் பல குறள்களையும் இணைத்துப் படிக்க வேண்டும்.

இந்தக் குறளுக்கு இணை குறள் 63வது குறள் (மக்கட் பேறு)

தம் பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்

 

ஒரு தம்பதிக்கு தமது பொருள் என்பது அவர்களுடைய மக்களேஅந்த மக்கட் செல்வம் அவரவர் செய்த முன் வினையின் பயனாக வந்து அமையும். (தன் பொருள் என்று ஆணைக் குறிப்பிடவில்லை இங்கு; தம் பொருள் என்கிறார்! மனமொத்த தம்பதிக்குப் பிறந்ததால் தம் பொருள்!)

ஆழ்ந்த ஹிந்து தத்துவத்தைக் கூறும் குறள் இது. (இவன் தந்தை என் நோற்றான் கொல்? – குறள் 70 அதே மக்கட் பேறு அதிகாரம்தந்தை நோன்பு நோற்க வேண்டும்! தாய் சும்ந்து ஈன்று அவன் சான்றோன் என்று கேட்டு உவக்க வேண்டும்!)

ஆக மனைவிக்கு உடைமை அவள் கணவன். கணவனுக்கு உடைமை அவனது மனைவி. இருவருக்கும் உடைமை அவர்கள் பெற்ற மக்கட் செல்வம்.

 

வேறொரு வகை பெண்கள் உண்டு. அவர்கள் பொருட் பெண்டிர்!

குறள் 913 .அடுத்தவன் மார்பைத் தடவி, அவன் பர்ஸையே பார்த்து தன் முந்தானையை விரிக்கும் விலை மகளிரே பொருட் பெண்டிர்.

 

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ யற்று.

 

இருட்டு அறையில் பிணத்தைத் தழுவி நிற்பதற்கு ஒப்ப, விலைமகளிரின் அணைப்பு பொய்யான தழுவுதல் ஆகும். என்ன ஒரு அற்புதமான உவமை!

ஆக பெண்களில் பொருள் பெண்டிரையும் இனம் காட்டி விடுகிறார் வள்ளுவர்.

 

அவரா வைச்ச பொருளின் முடிச்சை அவிழ்க்க வழி சொல்லாமல் இருப்பார்?!

தொடர்ந்து படியுங்கள்இன்னும் சற்று ஆராய்வோம்….

                       –தொடரும்

***

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: