வைச்ச பொருள் – 4 (Post No.5564)

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 October 2018

Time uploaded in London – 6-39 AM (British Summer Time)

Post No. 5564

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வைச்ச பொருள் – 4

ச.நாகராஜன்

9

வள்ளுவர் மெய்ப்பொருளைக் காணச் சொல்லி அறிவுறுத்திய குறளை மனதில் கொண்டு மிகப் பெரும் மகானான தாயுமானவர், உலக மகா கவியான பாரதியார், சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஆகியோர் “பொருள்” பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம்.

 

(ஊர் அனந்தம் எனத் தொடங்கும் பாடல்)

என்று கூறும் தாயுமானவர் உள்ளதிலேயே ‘பெரிய பொருளைப்’ பணிகுவாம் என்று கூறி அருளுகிறார்.

துரியநடு வூடிருந்த பெரியபொருள் யாததனைத் தொழுதல் செய்வாம்.         (அருமறையின் எனத் தொடங்கும் பாடல்) என்றும் கூறி பெரிய பொருள் கருத்தை வலியுறுத்துகிறார்.

பொருளாகக் கண்டபொரு ளெவைக்கும்முதற் பொருளாகிப போத மாகித்
தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த செழந்தே னாகி
அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரணஆ னந்த மாகி
இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம் இறைஞ்சி நிற்பாம்

பொருளுக்கெல்லாம் முதல் பொருளாக இருப்பதோடு இருள் தீர விளங்கும் பொருளினை இறைஞ்சி நிற்போம் என்று வேறு சொல்கிறார்.

 

அவரே, எங்கும் நிறைகின்ற பொருள் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடி அதன் இயல்பை நன்கு விளக்குகிறார். தெளிவான பாடல்கள் பதினொன்றும் இதோ:


அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய
ஆப்தர்மொழி யொன்றுகண்டால்
அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை
அறிந்தார்கள் அறியார்களார்
மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம்
வாயாய்ப் பிதற்றுமவரார்
மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்
வன்மையொ டிரக்கமெங்கே
புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம்
பூதபே தங்களெவிடம்
பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு
பொறைபொறா மையுமெவ்விடம்
எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர்
யாதுமுனை யன்றியுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.1.

அன்னே யனேயெனுஞ் சிலசமயம் நின்னையே
ஐயாஐயா என்னவே
அலறிடுஞ் சிலசமயம் அல்லாது பேய்போல
அலறியே யொன்றும் இலவாய்ப்
பின்னேதும் அறியாம லொன்றைவிட் டொன்றைப்
பிதற்றிடுஞ் சிலசமயமேல்
பேசரிய ஒளியென்றும் வெளியென்றும் நாதாதி
பிறவுமே நிலயமென்றுந்
தன்னே ரிலாததோ ரணுவென்றும் மூவிதத்
தன்மையாங் காலமென்றுஞ்
சாற்றிடுஞ் சிலசமயம் இவையாகி வேறதாய்ச்
சதாஞான ஆனந்தமாய்
என்னே யெனேகருணை விளையாட் டிருந்தவா
றெம்மனோர் புகலஎளிதோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.2.

வேதமுடன் ஆகம புராணமிதி காசமுதல்
வேறுமுள கலைகளெல்லாம்
மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே
விரிவா யெடுத்துரைக்கும்
ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை
உண்டுபணு ஞானமாகும்
ஊகம்அனு பவவசன மூன்றுக்கும் ஒவ்வுமீ
துலகவா திகள்சம்மதம்
ஆதலி னெனக்கினிச் சரியையா திகள்போதும்
யாதொன்று பாவிக்கநான்
அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கின்
அத்துவித மார்க்கமுறலாம்
ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்செய்
எந்தைநீ குறையுமுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.3.

சொல்லான திற்சற்றும் வாராத பிள்ளையைத்
தொட்டில்வைத் தாட்டிஆட்டித்
தொடையினைக் கிள்ளல்போற் சங்கற்ப மொன்றில்
தொடுக்குந் தொடுத்தழிக்கும்
பொல்லாத வாதனை எனும்சப்த பூமியிடை
போந்துதலை சுற்றியாடும்
புருஷனி லடங்காத பூவைபோல் தானே
புறம்போந்து சஞ்சரிக்கும்
கல்லோ டிரும்புக்கு மிகவன்மை காட்டிடுங்
காணாது கேட்ட எல்லாங்
கண்டதாக காட்டியே அணுவாச் சுருக்கிடுங்
கபடநா டகசாலமோ
எல்லாமும் வலதிந்த மனமாயை ஏழையாம்
என்னா லடக்கவசமோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.4.

கண்ணார நீர்மல்கி யுள்ளநெக் குருகாத
கள்ளனே னானாலுமோ
கைகுவித் தாடியும் பாடியும் விடாமலே
கண்பனித் தாரைகாட்டி
அண்ணா பரஞ்சோதி யப்பா உனக்கடிமை
யானெனவு மேலெழுந்த
அன்பாகி நாடக நடித்ததோ குறைவில்லை
அகிலமுஞ் சிறிதறியுமேல்
தண்ணாரு நின்னதரு ளறியாத தல்லவே
சற்றேனும் இனிதிரங்கிச்
சாசுவத முத்திநிலை ஈதென் றுணர்த்தியே
சகநிலை தந்துவேறொன்
றெண்ணாம லுள்ளபடி சுகமா யிருக்கவே
ஏழையேற் கருள்செய்கண்டாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.5.

காகமா னதுகோடி கூடிநின் றாலுமொரு
கல்லின்முன் னெதிர்நிற்குமோ
கர்மமா னதுகோடி முன்னேசெய் தாலுநின்
கருணைப்ர வாகஅருளைத்
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ
தமியனேற் கருள்தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ்
சங்கேத மாய்க்கூடியே
தேகமா னதைமிகவும் வாட்டுதே துன்பங்கள்
சேராமல் யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகசநிட் டைக்கும்என்
சிந்தைக்கும் வெகுதூரம்நான்
ஏகமாய் நின்னோ டிருக்குநா ளெந்தநாள்
இந்நாளில் முற்றுறாதோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.6.

ஒருமைமன தாகியே அல்லலற நின்னருளில்
ஒருவன்நான் வந்திருக்கின்
உலகம் பொறாததோ மாயாவிசித்ரமென
ஓயுமோ இடமில்லையோ
அருளுடைய நின்னன்பர் சங்கைசெய் திடுவரோ
அலதுகிர்த் தியகர்த்தராய்
அகிலம் படைத்தெம்மை யாள்கின்ற பேர்சிலர்
அடாதென்பரோ அகன்ற
பெருமைபெறு பூரணங் குறையுமோ பூதங்கள்
பேய்க்கோல மாய்விதண்டை
பேசுமோ அலதுதான் பரிபாக காலம்
பிறக்கவிலை யோதொல்லையாம்
இருமைசெறி சடவினை எதிர்த்துவாய் பேசுமோ
ஏதுளவு சிறிதுபுகலாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.7.

நில்லாது தேகமெனும் நினைவுண்டு தேகநிலை
நின்றிடவும் மௌனியாகி
நேரே யுபாயமொன் றருளினை ஐயோஇதனை
நின்றனுட் டிக்க என்றால்
கல்லாத மனமோ வொடுங்கியுப ரதிபெறக்
காணவிலை யாகையாலே
கையேற் றுணும்புசிப் பொவ்வாதெந் நாளும்உன்
காட்சியிலிருந்து கொண்டு
வல்லாள ராய்இமய நியமாதி மேற்கொண்ட
மாதவர்க் கேவல்செய்து
மனதின் படிக்கெலாஞ் சித்திபெற லாஞானம்
வாய்க்குமொரு மனுவெனக்கிங்
கில்லாமை யொன்றினையும் இல்லாமை யாக்கவே
இப்போ திரங்குகண்டாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.8.

மரவுரி யுடுத்துமலை வனநெற் கொறித்துமுதிர்
வனசருகு வாயில்வந்தால்
வன்பசி தவிர்த்தும்அனல் வெயிலாதி மழையால்
வருந்தியு மூலஅனலைச்
சிரமள வெழுப்பியும் நீரினிடை மூழ்கியுந்
தேகநம தல்லவென்று
சிற்சுக அபேஷையாய் நின்னன்பர் யோகஞ்
செலுத்தினார் யாம்பாவியேம்
விரவும்அறு சுவையினோடு வேண்டுவ புசித்தரையில்
வேண்டுவ எலாமுடுத்து
மேடைமா ளிகையாதி வீட்டினிடை வைகியே
வேறொரு வருத்தமின்றி
இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம்
எப்படிப் பிழைப்பதுரையாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.9.

முத்தனைய மூரலும் பவளவா யின்சொலும்
முகத்திலகு பசுமஞ்சளும்
மூர்ச்சிக்க விரகசன் னதமேற்ற இருகும்ப
முலையின்மணி மாலைநால
வைத்தெமை மயக்கிஇரு கண்வலையை வீசியே
மாயா விலாசமோக
வாரிதியி லாழ்த்திடும் பாழான சிற்றிடை
மடந்தையர்கள் சிற்றின்பமோ
புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத
பொன்னாட்டும் வந்ததென்றால்
போராட்ட மல்லவோ பேரின்ப முத்திஇப்
பூமியி லிருந்துகாண
எத்தனை விகாதம்வரும் என்றுசுகர் சென்றநெறி
இவ்வுலகம் அறியாததோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.10.

உன்னிலையும் என்னிலையும் ஒருநிலை யெனக்கிடந்
துளறிடும் அவத்தையாகி
உருவுதான் காட்டாத ஆணவமும் ஒளிகண்
டொளிக்கின்ற இருளென்னவே
தன்னிலைமை காட்டா தொருங்கஇரு வினையினால்
தாவுசுக துக்கவேலை
தட்டழிய முற்றுமில் லாமாயை யதனால்
தடித்தகில பேதமான
முன்னிலை யொழிந்திட அகண்டிதா காரமாய்
மூதறிவு மேலுதிப்ப
முன்பினொடு கீழ்மேல் நடுப்பாக்கம் என்னாமல்
முற்றுமா னந்தநிறைவே
என்னிலைமை யாய்நிற்க இயல்புகூ ரருள்வடிவம்
எந்நாளும் வாழிவாழி
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.11.

அற்புதமான இந்தப் பாடல்கள் மூலம் ‘ஏது பாவித்திடினும் அதுவாகி வந்தருள்செய் அற்புதப் பெரும் பொருளைப் பற்றி விளங்கிக் கொள்ள முடிகிறது.

                   10

மகாகவி பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் முதல் பாடலாக பிரம துதியைப் பாடுகிறார்.

ஓமெனப் பெரியோர் கள்-என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்

தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்
நாமமும் உருவும் அற்றே-மனம்

நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்

அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்

நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த

நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;

என்று இப்படி பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடலான பிரம துதியில் பாரதியார் ‘ஆமெனும் பொருள் அனைத்தாய் என்றும் ‘அந்த நிர்மலப் பொருளினை நினைந்திடுவேன் என்றும் பாடுகிறார்.

ஆக அனைத்திலும் ஊடுருவி ‘ஆம் எனும் பொருள், ‘நிர்மலப் பொருள் இருக்கிறது.

அந்தப் பொருளினை நாம் அறிந்திட வேண்டாமா – இப்படிக் கேட்கிறார் பின்னால் வந்த நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை.

11

அவர் கேள்விகள் பல.

சூரியன் வருவது யாராலே ?

சூரியன் வருவது யாராலே ?

சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்

கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?

பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?

அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்

தரையில் முளைத்திடும் புல்ஏது ?
மண்ணில் போட்டது விதையன்று

மரஞ்செடி யாவது யாராலே ?
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்

கருவில் வளர்ப்பது யார்வேலை ?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்

ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ ?

எத்தனை மிருகம்எத்தனைமீன்!

எத்தனை ஊர்வன பறப்பனபார் !
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !

எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள் !

எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்

யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள் ;

அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்

என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்

நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

“எல்லா மிப்படிப் பலபேசும் ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !
அந்தப் பொருளை நாம்நினைத்தே அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.” என்று முத்தாய்ப்பாகத் தன் கருத்தைக் கூறும் அவர்,
எந்தப் படியாய் எவர்அதனை எப்படித் தொழுதால் நமக்கென்ன ? என்கிறார்.


12

ஆக அப்பர் கூறிய “வைச்ச பொருளை இப்போது அறிய முடிகிறது. அவரே கோயில் எனப்படும் சிதம்பரத்தில் பாடிய இன்னொரு பாடலின் மூலம் நமக்கு ஒரு குறிப்பு (clue) கிடைக்கிறது.

வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய

அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற

பிச்சன் பிறப்புஇலி பேர் நந்தி உந்தியின்மேல் அசைத்த

கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே!

இப்போது வைச்ச பொருள் என்ன என்று விளங்குகிறது. அந்தப் ‘பொருள்’ என்ன?

–    அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: