Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 October 2018
Time uploaded in London – 8-33 am
(British Summer Time)
Post No. 5570
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஒரு பிரமுகர் வீட்டில் எல்லோரும் உரத்த குரலில் பேசுவார்கள்; காது செவிடுபடும்படி அலறுவார்கள். அந்த வீட்டிலொரு அமைதியான பெண்மணி வயதானவரும் வாழ்ந்தார். அவர்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர் ஒருவருக்கு பெருத்த வியப்பு.
அம்மையாரே! இவ்வளவு உரத்த குரலில் பேசும் இந்த வீட்டில் இவ்வளவு சன்னமான, இனிய குரலில் பேசுகிறீர்களே. உங்கள் பேச்சு எப்படி அவர்கள் காதில் விழும்? என்று கேட்டார்.
அம்மையார் சொன்னார்:
எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நான் வழக்கத்தைவிட மெல்லிய குரலில் காதோடு காது வைத்து ரஹஸியம் சொல்லுவது போல கிசு, கிசுப்பேன். உடனே எல்லோரும் அமைதியாகி விடுவார்கள். நான் என்ன சொல்லப் போகிறேன் என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு நிற்பார்கள். ஒரு சில வினாடிகளில் அவர்களுக்கு சொல்ல வந்த விஷயம் நன்றாகத் தெரிந்து விடும்.
இந்தத் துனுக்கை 100 ஆண்டுகளுக்கு முந்தைய பத்திரிக்கையில் படித்தவுடன், நமது உபந்யாசகர்கள் செய்யும் வித்தைகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. கிருபானந்த வாரியார், கீரன் போன்ற அருள் மிகு, புகழ் மிகு, திரு மிகு சொற்பொழிவாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக திடீரென்று அலறுவார்கள்.
கிருபானந்தவாரியார் சிரிப்பொலிக்கிடையே சொல்லுவார்:
தூங்கிட்டிருக்கிரவங்க, எல்லாம் எழுந்திருங்கள் என்று.
இன்னும் சிலர் யாரேனும் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தால், திடீரென்று ஒரு சில வினாடிகள் சொற்பொழிவை நிறுத்திவிட்டு கூட்டத்தையே பார்ப்பர்; பேசிக் கொண்டிருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு சொற்பொழிவை கவனிப்பர்.
நாம் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ராம சேஷன் என்ற விலங்கியல் பேராசிரியர், குரலை ஏற்றியும் இறக்கியும்தான் பாடம் நடத்துவார். நாங்கள் கடைசி வரிசை நாற்காலிகளில் உட்கார்ந்ந்து கொண்டு கிராஃப் (வரை படம்) போட்டு அன்று எத்தனை முறை ஏற்ற இறக்கம் என்று ஆராய்வோம்.
கணவன் மனைவி சமரச ரஹஸியம்
புதிதாகக் கல்யாணம் கட்டிய இருவர் குடும்பப் பிரச்சினைகளை விவாதித்துக் கொண்டிருந்தனர்.
ஒருவர் சொன்னார்:
“என் வீட்டில் நான்தான் சம்பாதிக்கிறேன் ஆகையால் நான்தான் குடும்பத் தலைவன்; இது என் மனைவிக்கு புரிய மாட்டேன் என்கிறதே”– என்று அங்கலாய்த்தார்.
அடுத்ததாக நின்ற புது மாப்பிள்ளை சொன்னார்; அலட்சியமாக, பெருமையுடன், வெற்றித் த்வனியில் சொன்னார்–
எங்கள் வீட்டில் எனக்கும், என் புது மனைவிக்கும் இடையே ஆரம்பத்திலேயே ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு விட்டோம். அதாவது பெரிய பிரச்சனைகள் என்றால் என் முடிவே இறுதியானது.சின்னப் பிரச்சனைகள் என்றால் அவள் முடிவே இறுதியானது.
முதலாமவருக்கு வியப்பு தாங்கவில்லை.
அப்படியா? இந்தத் திட்டம் நன்றாகச் செயல்படுகிறதா?
இரண்டாமவர் பதில் சொன்னார்:
பிரமாதமாக செயல்படுகிறது.பெரிய பிரச்சனை எதுவுமே இதுவரை வந்ததில்லை!
இதைப் படித்தவுடன் எனக்கு மதுரைப் பக்க ஜோக் நினைவுக்கு வருகிறது.
“என்ன வீட்டில் மீனாட்சி தர்பாரா? என்று கேட்பார்கள். அதாவது மதுரை மீனாட்சி அம்மன் போல பெண் ஆதிக்கம் அதிகமுள்ள வீடாக இருந்தால் கணவன் ‘பெட்டிப் பாம்பாக’ இருப்பார். அவ்வையார் சொன்ன பாட்டு நினைவுக்கு வரும்:–
Article No.1985
Compiled by London swaminathan
Date 10th July 2015
Time uploaded in London: காலை 8-21
சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி; ராக்ஷஸி. அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; சிலர் மூவர் என்பர். மொழியியல் அடிப்படையில் கட்டாயம் முவர் அல்லது அதற்கு மேலும் இருந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. ஆனால் எந்த அவ்வையார் படியதாக இருந்தாலும் சரி அவை அத்தனையும் ஆனி முத்து; தமிழர்களின் சொத்து. ஆத்திச் சூடி பாடிய கடைசி அவ்வையாரா, அதியமானைக் கண்ட சங்க கால அவ்வையாரா என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.
அதிசயம் என்னவென்றால் அவ்வையாரும் சாக்ரடீசும் ஒரே கருத்தைச் சொல்லியுள்ளனர்.
ஒருமுறை சாக்ரடீஸ் தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து, பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலேயிருந்து கொட்டினார். யார் தலையில்? சாக்ரடீஸ் தலையில்! அவர் அசரவில்லை; அவர் சொன்னார்:
“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடிமுழங்கியது; இப்பொழுது மழை பெய்கிறது!”
சாக்ரடீஸின் மனைவியை பற்றி நன்கு அறிந்தவர் ஒருவர் சாக்ரடீஸிடம் சென்று திருமணம் செய்துகொள்வது பற்றி தங்கள் கருத்து என்னவோ? என்று கேட்டார்.
அவர் சொன்னார்:
எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப்படுவாய்!
இன்னொரு முறை அவர் சொன்னார்:
“நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ தத்துவ வித்தகர் ஆகலாம்.”
அவ்வையாரும் இதையே சொல்கிறார்:
பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம்; — சற்றேனும் ஏறுமாறாக
இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்யாசம் கொள்
பொருள்: கணவனுக்கேற்ற பதிவிரதையாக இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தலும் அவளை விட்டு விடாதே. அவள் பிடாரியாக இருந்தாலோ, அவளிடம் போகிறேன் என்று சொல்லக்கூட வேண்டாம். பேசாமல் போய் சந்யாசம் வாங்கிக் கொள்.
பழைய முறத்தால் அடி!
சாக்ரடீஸ் மனைவி போலவே ஒரு கொடுமைக்காரியை மனைவியாகப் பெற்ற ஒரு சாதுவின் வீட்டுக்கு அவ்வையார் போனார். பாவம், அவர்தான் அவ்வையாரை சாப்பிட அழைத்தார். அவ்வையை வாசல் திண்ணையில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று மனைவியின் முகத்தை நன்கு துடைத்து, பொட்டு வைத்து அலங்கரித்து, தலையில் உள்ள ஈரும் பேனும் எடுத்துவிட்டு, தலைவாரிவிட்டு, மெதுவாக அவ்வையாருக்கு அமுது இடும்படி கொஞ்சும் மொழியில் கெஞ்சினார். அவளோ எடுத்தால் அருகிலிருந்த பழைய முறத்தை! புடைத்தாள் நைய அவனை. பேயாட்டம் ஆடினாள்; வசை மொழிகளை வாரி இரைத்தாள். அவன் வெளியே ஓடிவந்தான்; அப்பொழுதும் அந்த நீலாம்பரி முறத்தைக் கையில் ஓங்கியவாறு ஓடி வந்தாள்: அவ்வையாருக்கு ஒரு புறம் சிரிப்பு; மறுபுறம் அனுதாபம். அவனுக்கோ ஒரே பதைபதைப்பு.
அவ்வையார் பாடினார்:
இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக
ஆடினாள், பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்.
அவ்வையாருக்கு பிரம்மா மீதே கோபம் வந்து விட்டது. இப்படி நல்ல சாதுவுக்கு இவ்வளவு மோசமான மனைவியா என்று. இது பெண்ணா? பேயா? வறண்ட மரம் போன்ற பெண்ணை இந்த மகனை முடிச்சுப்போடச் செய்தானே என்று நினைத்து பிரம்மா மட்டும் என் முன்னே வரட்டும் நான்கு தலைகளையும் திருகிவிடுகிறேன் என்றார்.
உடனே பாடினார்:
அற்றதலை போக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ? – வற்றும்
மரம் அனையாட்கு இந்த மகனை வகுத்த
பிரமனையான் காணப்பெறின்.
அற்றதலை= ஏற்கனவே பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் கிள்ளி எறிந்த கதை புராணத்தில் உள்ளது.
((தமிழன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர் கட்டுரைகளை எடுக்கையில் அவர்தம் பெயரையும், அவருடைய பிளாக்–கின் பெயரையும் அப்படியே வெளியிடுங்கள். என் கட்டுரைகளில், படங்கள் என்னுடையதல்ல. அதைப் பயன்படுத்துவோர் சட்டபூர்வ வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.))
swami_48@yahoo.com
–subham—சுபம்-