WRITTEN BY S NAGARAJAN
Date: 22 October 2018
Time uploaded in London – 6-21 AM (British Summer Time)
Post No. 5573
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
மொஜார்ட்டின் நினைவாற்றல்
ச.நாகராஜன்
ரோமில் உள்ள போப்பின் தேவாலயத்தில் உள்ள சில இசைப் பாடல்கள் யாரும் அறிய முடியாதபடி பாதுகாக்கப்பட்டு வருபவை. இசைக்குழுவில் இதை இசைப்பவர் யாரேனும் வெளியில் தர முற்பட்டால் அவர் தேவாலயத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்படுவார். இந்த விசேஷ இசையின் நோட்ஸின் காப்பி மூன்றே மூன்று பேர்களிடம் மட்டும் தான் இருக்கிறது. லியோபோல்ட் அரசரிடம் ஒரு காப்பி, இன்னொரு காப்பி போர்ச்சுகல் அரசர், மூன்றாவது, மிகப் பெரும் இசைக் கலைஞரான பட்ரே மார்டினியிடம் ஒரு காப்பி – ஆக இப்படி மூன்று காப்பிகள் மட்டுமே வெளி உலகில் உள்ளன.
ஆனால் இன்னொரு காப்பி போப்பின் ஆணையின்றி வெளி உலகிற்கு வந்து விட்டது. ஆனால் அது இசைக்குழுவினர் எவரிடமிருந்தும் வெளி வரவில்லை. மொஜார்ட்டை இளமைப் பருவத்தில் ரோமுக்கு அவரது தந்தை அழைத்துச் சென்ற போது அவா செயிண்ட் பீட்டர் ஆலயத்தில் அந்த இசையைக் கேட்டார். இசை முடிந்தாலும் கூட அவரது தந்தை மொஜார்ட்டை அங்கிருந்து லேசில் கிளப்ப முடியவில்லை. அப்படி அவர் அந்த இசையில் ஆழ்ந்து லயித்து இருந்தார். அன்று இரவு அவரது தந்தை உறங்கிய பின்னர் மெதுவாக எழுந்த மொஜார்ட் இத்தாலிய நிலவொளியில் தான் கேட்ட இசைப்பாடலுக்கான முழு நோட்ஸையும் தன் நினைவிலிருந்து அப்படியே எழுதி விட்டார். போப்பின் ஆணை மொஜார்ட்டின் நினைவாற்றலுக்கு முன் செல்லுபடியாகவில்லை!
ஆதாரம் : டபிள்யூ. எஃப்.கேட்ஸ் எழுதிய Anecdotes of Great Musicians என்ற புத்தகம்
ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது :-
Mozart’s memory
Part of the service used in the Pope’s chapel at Rome
is sacredly guarded and kept with great care in the
archives of the chapel. Any singer found tampering
with this “Miserere” of Allegri, or giving a note of it to an
outsider, would be visited by excommunication. Only
three copies of this service have ever been sent out.
One was for the Emperor Leopold, another to the King
of Portugal, and the third to the celebrated musician,
Padre Martini.
But there was one copy that was made without the
Pope’s orders, and not by a member of the choir either.
When Mozart was taken to Rome in his youth, by his
father, he went to the service at St. Peter’s and heard
the service in all its impressiveness. Mozart, senior,
could hardly arouse the lad from his fascination with the
music, when the time came to leave the cathedral. That
night after they had retired and the father slept, the boy
stealthily arose and by the bright light of the Italian
moon, wrote out the whole of that sacredly guarded
“Miserere” The Pope’s locks, bars, and excommunications
gave no safety against a memory like Mozart’s.
From Anecdotes of Great Musicians by W. F. Gates
****
R.Nanjappa (@Nanjundasarma)
/ October 24, 2018மொஃஜார்ட்டின் நினைவாற்றல் அபாரமானதுதான். ஆனால் இது வெறும் நினைவாற்றல் மட்டும் தானா எனச் சற்று யோசிக்கவேண்டியுள்ளது. இது பூர்வ ஜென்ம சம்பந்தமாகவும் இருக்கலாம்! முன்னொரு பிறவியில் அந்த இசையைப் படைத்தவர் அவராகவே இருந்திருக்கலாம்,, யார் கண்டது!
ஸ்வாமி விவேகானந்தருக்கும் இத்தகைய அற்புத நினைவாற்றலும் கிரகிப்புத்தன்மையும் இருந்தன! ஓரு புத்தகத்தை ஒருமுறை புரட்டிப்பார்த்துவிட்டு அதிலிருந்து எது கேட்டாலும் சொல்வார்! ஆனால் இச்சக்தியும் வெறும் நினைவாற்றலுக்கும் அப்பாற்பட்டதெனத் தோன்றுகிறது.
இதெல்லாவற்றையும் மீறிய ஒரு அதிசயம் நம் தமிழ் நாட்டில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்தது, திருப்புகழ் ஸ்வாமிகள் எனப் புகழ்பெற்ற ஸ்ரீ ஸச்சிதானந்த ஸ்வாமிகள் 12 வருஷங்கள் வள்ளிமலையை விட்டுக் கீழிறங்காமல் தவம் செய்துவந்தார். அப்போது தினமும் இரவில் மலையில் யாரோ பெண்கள் உரிய ராக தாளங்களில் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடுவது காதில்விழும். சங்கீதம் சிறிதும் அறியாதிருந்த ஸ்வாமிகள் இந்தப் பாட்டுக்களைக் கேட்டே அத்தனை திருப்புகழுக்கும் அதே ராக தாளங்களை அமைத்தார்! [பின்னர் அவ்வாறு பாடுவது ஸ்ரீ வள்ளியும் (பொங்கி) அவரது ஸகிகளும் என அறிந்தார். பொங்கியே அவரது இஷ்ட தெய்வமானார்!] இவர் இவ்வாறு ராகதாளங்கள் அமைத்த பாடல்கள் “திருப்புகழ் பாராயணத்
தவநெறித் திருமுறை” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 400 பாடல்கள் இருக்கின்றன. இவ்வாறு தெய்வவழிச் செவிமடுத்ததால் , திருப்புகழை கர்னாடக கச்சேரி இசைப்பாணியில் பாடுவதை அவர் ஆதரிக்கவில்லை. மேலும் அவர் பாடும்போது, ஒரே தந்தியுள்ள ஜதி வாத்யம் ஒன்றில் ஒரு தென்னங்குச்சியைக்கொண்டே அத்தனை ராக, தாளங்களையும் இசைப்பார்! இதுவும் நினைவாற்றலையும் மிஞ்சிய ஒரு நிலை தானே!
பரமஞான தேசிகனான முருகன் அடியார் இவ்வித அருள் பெற்றது ஒரு அதியமா என்ன!
“அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறி என இமைப்பொழுதில் வாழ்வித்த வேதியனும்,,,வேடிச்சி காவலனே! “
Santhanam Nagarajan
/ October 24, 2018விவேகானந்தர் தனது நினைவாற்றலுக்கு தனது பிரமசர்யத்தை காரணமாகக் கூறினார். என்றாலும் கூட இதர சில சம்பவங்களை நினைத்துப் பார்த்தால் இது இறையருளின் விளையாட்டே தவிர வேறல்ல என்ற முடிவுக்கு வர வேண்டியதாயிருக்கிறது. பூர்வ ஜென்மம், பிரமசரியம் என்று நாம் காரணத்தைச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. அவனன்றி ஓரணுவும் அசையாது. ஒரு முறை தேவராஜ முதலியார் ஃபேனை ரமண மஹரிஷியின் பக்கம் திருப்பி வைத்தார். பின்னர் மஹரிஷியை நோக்கி, “இதுவும் கூட இறைவனின் சித்தமா?” என்று கேட்டார். சந்தேகமில்லாமல் என்று உடனடியாக பதில் சொன்னார் மஹரிஷி! ஆக அவரது முத்திரை வாக்கியமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சூத்ரமாக அமைகிறது
R.Nanjappa (@Nanjundasarma)
/ October 24, 2018இங்கே பகவான் ரமணரைக் குறிப்பிட்டதும் அவரைப்பற்றிய ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. இதுவும் ஒர் அபூர்வமான முறையில் ஒரு நினைவைப் பற்றியதே!
ஒருமுறை ஸம்ஸ்க்ருதம் அறிந்திருந்த முஸ்லிம் பண்டிதர் ஒருவர் ஆதிசங்கரரின் ‘ஆத்ம போத’த்தைத் தமிழில் செய்யுட்களாக மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில் இரண்டு காப்பி பகவானுக்கு அனுப்பினார். தபாலில் வந்த புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதும், மூடிவைப்பதும் பிறகு மீண்டும் புரட்டிப் பார்ப்பதுமாக இருந்தார். ஏதோ தனக்குள் சிந்தித்திருப்பதாகத் தோன்றியது. பிறகு அலமாரியிலிருந்து ஸம்ஸ்கிருத மூலத்தை எடுத்துவரச் சொல்லி அதைப் புரட்டிப் பார்த்து வைத்துவிட்டார். பிறகு ஒரு காகிதத்தில் இரண்டு சுலோகங்களை வெண்பாக்களாகத் தமிழில் எழுதினார். அப்போது அங்கிருந்த குர்ரம் சுப்பராமையா , ‘இப்படியே எல்லாவற்றையும் எழுதிவிடலாமே’ என்றார். பகவான் ‘அதெல்லாம் நமக்கெதற்கு’ என்று சொன்னார்.ஆனாலும். பிறகு அடுத்த இரண்டு நாட்களிலும் மேலும் சில வெண்பாக்கள் எழுதினார், பின்னர் , ஓரு தொண்டரிடம், ‘இது நம்மை விடாதுபோல் இருக்கிறது; ஒரு நோட்புக் தைத்துக் கொண்டுவாரும்’ என்று சொன்னார். நோட்புக் வந்ததும், இரவுபகல் பாராமல் 68 சுலோகங்களையும் வெண்பாக்களாக எழுதி முடித்தார். ‘என்ன செய்வது, ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கிறது; முன்பு எங்கோ படித்தமாதிரியும் இருக்கிறது’ என்றார்.
அங்கிருந்த ஸ்ரீ முருகனார், ‘இதில் என்ன அதிசயம்! ஒவ்வொரு கல்பத்திலும் இப்படித்தானே ப்ரஹ்மாவுக்கு வேதங்கள் வெளிப்படுவதாகச் சொல்லியிருக்கிறது ‘ என்றார்! ‘அதுசரி, ஜெயதேவர் விஷயம் போல இங்கும் வேறு யாராவது தான் எழுதினேன் என்று வருவார்களோ என்னவோ’ என்றார் பகவான்!
இதுதான் பகவான் ரமணர் கடைசியாக எழுதியது. அப்போது அவருக்கு கண்பார்வையும் சரியில்லை. இரவில் ஆசிரமத்தில் விளக்கும் இல்லை- டார்ச் லைட்டோ, ஃப்லாஷ் லைட்டோ வைத்துக்கொண்டு எழுதினார். இதிலிருந்து இதன் முக்கியத்துவம் தெரிகிறது! ஆனால் முன்பே எங்கோ படித்தமாதிரி இருக்கிறது என்று சொன்னதன் மர்மம் விளங்கவில்லை!
இதற்கு எழுதிய மங்கலப் பாடலில் பகவான் இவ்வாறு எழுதினார்:
ஆன்மாவின் போதமருள் ஆசானாம் சங்கரன் அவ்
வான்மாவுக்கு அன்னியன் ஆவனோ – ஆன்மாவாய்
என்னகத்தே யிருந்து இன்று தமிழ் சொல்வானும்
அன்னவன் அன்றி மற்றார்.
இதுதான் மர்மமோ!
Santhanam Nagarajan
/ October 25, 2018ஒரே ஆன்மா என்பதை நிஜமாக நிச்சயமாக அனுபவித்து உணர்ந்து உலகுக்குச் சொல்லிய பெரிய மஹரிஷி ரமண பகவான். மகாத்மா காந்திஜிக்கு செய்தி ஏதேனும் சொல்லுங்கள் என்ற போது இங்கு வேலை செய்யும் சக்தியே அங்கு வேலை செய்கிறது என்றார் அவர். காஞ்சி பரமாசார்யாள் பற்றியும் அவர் இதே போல குறிப்பிட்டார். ஏக சக்தி! மஹா சக்தி!! இதில் விசித்திரம் என்னவெனில் மகாத்மா காந்திஜியும் பரமாசார்யாளும் திருவண்ணாமலை வந்துள்ளனர். காந்திஜி அருகில் ஒரு கூட்டத்தில் பேசினார். பரமாசார்யாளோ ரமண ஆசிரமத்தின் வழியே தான் சென்றார். ஆனால் இருவரும் ரமணரைப் பார்க்கவில்லை – தரிசிக்கவில்லை. ஒரே ஆன்மா என்று இதை எடுத்துக் கொள்ளலாமா? ஆக ரமணர் ஆன்மாகவாக என் அகத்தே இருந்து இன்ரு தமிழ் சொல்வானும் என்று கூறும் போது உலகை ஆக்கி, வழி நடத்தும் ஒரே சக்தி ரமணராக அவதரித்தது என்றே தான் தோன்றுகிறது. சிந்தனையைத் தூண்டியமைக்கு நன்றி திரு நஞ்சப்பா அவர்களே! பகவானின் அனுக்ரஹம் நம் அனைவருக்கும் என்றும் இருக்கட்டும்! நாகராஜன்