வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி! (Post No.5574)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 October 2018

Time uploaded in London – 8-33 AM

(British Summer Time)

Post No. 5574

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி! (Post No.5574)

உலகப் புகழ் பெற்றவன் தமிழ்ப் புலவன் வள்ளுவன். 2660 வரிகளில் 133 விஷயங்களை அலசி ஆராய்ந்து விட்டான்.  அவன் ‘பக்கா’ ஹிந்து என்பதால் தர்ம, அர்த்த, காம என்ற அதே வரிசையில் திருக்குறளை முப்பாலாக வகுத்தான். நாலாவது விஷயமான மோக்ஷம் என்பதை துறவறவியலில் வைத்துவிட்டான். அவன் இரண்டு அடிகளில் சொன்ன விஷயங்களை பர்த்ருஹரி ஒரே வரியில் சொல்கிறார்.

நீதி சதகத்தில் 100 ஸ்லோகங்கள் உண்டு . அவர் யாத்த சிருங்கார சதகம், வைராக்ய சதகத்தில் மேலும் 200 பாடல்கள் இருக்கின்றன. வள்ளுவன் 1330 அருங்குறள்களில் செப்பியதை பர்த்ருஹரி 300 பாடல்களில் செப்பிவிட்டான்.  இருந்தபோதிலும் குறளுக்குத் தனிச் சிறப்பு உண்டு.

பர்த்ருஹரியின் மூன்று பாடல்களைக் குறளுடன் ஒப்பிடுவோம்

பர்த்ருஹரியின் நீதி சதகத்தில் 21, 22, 23 பாடல்களைக் காண்போம்

பாடல் 21-ன் பொருள்

மன்னிக்கும் குணம் உள்ளவனுக்கு கவசம் எதற்கு?

கோபம் உள்ளவனுக்கு எதிரிகள் எதற்கு?

ஒருவனுக்கு அறிவு இருந்தால் தீயதை எரிக்க தீ எதற்கு?

உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?

தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?

நல்ல விவேகம் இருந்தால் பணம் எதற்கு?

நல்ல குணங்கள் இருந்தால் ஆபரணங்கள் எதற்கு?

கவிதையை ரசிக்கத் தெரிந்துவிட்டால் அவனுக்கு ராஜ்யம், அரசாட்சி எதற்கு?

மன்னிக்கும் குணம்–

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல்- 314

உனக்கு துன்பம் விளைவித்தவர்க்கு நன்மைகள் பல செய்து அவர்கள் வெட்கப்படும்படி செய்க; அவர் செய்த கெடுதிகளையும் மறக்க.

தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என் குற்றமாகும் இறைக்கு- குறள் 436

தன்னுடைய குற்றத்தை ஆராய்ந்துவிட்டு, மற்றவர் குற்றத்தை

ஆராய்க; இதில் என்ன கஷ்டம்?

கோபம் பற்றி வள்ளுவன்

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்

ஏமப் புணையைச் சுடும்- 306

சேர்ந்தாரைக் கொல்லி= ஆஸ்ரயாசஹ

கோபப்பட்டவனை கோபம் என்னும் நெருப்பே அழித்துவிடும்; அவனுக்குத் துணையாக நின்றாரையும் அழித்துவிடும் (நெருப்பு போல)

உண்மை நண்பன்

ஒருவன் ஆடை திடீரென நழுவினாலோ, காற்றில் பறந்தாலோ, கிழிந்தாலோ ஒருவனின் கைகள் எவ்வளவு விரைவாக உடற் பகுதிகளை மறைக்க தன்னிச்சையாகச் செல்லுமோ அவ்வளவு விரைவாக, கஷ்டகாலத்தில் உதவுபவனே உண்மை நண்பன் என்பதை வள்ளுவன் காட்டுவது போல வேறு எவரும் காட்டியதில்லை.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788)

கெட்டவர்களும் பாம்பும் பற்றி வள்ளுவன்,

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடனுறைந்தற்று- 890

ஒரே கருத்து இல்லாதவருடன் வாழ்தல், குடிசையில் பாம்புடன் வசிப்பது போலாகும்

எது செல்வம்?

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்-443

ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுள் தலையாய

செல்வம் அறிவில் சிறந்த பெரியார்கள் சூழ இருப்பதேயாகும்.

க்ஷாந்திஸ் சேத் கவசேன கிம் கிம் அரிபிஹி அஸ்தி சேத தேஹினாம்

ஞாதிஸ்சேத் அநலேன கிம் யதி சுஹ்ருத்திவ்யௌஷதம் கிம் பலம்

கிம் ஸர்ப்பையதி  துர்ஜனாஹா கிம் உதனைர்வித்யா அனவத்யா யதி

வ்ரீடா சேத் கிமு பூஷணைஹி ஸுகவிதா யத்யஸ்தி ராஜ்ய்ரேன கிம் 1-21

क्षान्तिश्चेत्कवचेन किं किम् अरिभिः क्रोधो‌உस्ति चेद्देहिनां
ज्ञातिश्चेदनलेन किं यदि सुहृद्दिव्यौषधं किं फलम् ।
किं सर्पैर्यदि दुर्जनाः किम् उ धनैर्विद्या‌உनवद्या यदि
व्रीडा चेत्किम् उ भूषणैः सुकविता यद्यस्ति राज्येन किम् ॥ 1.21 ॥

xxxx

 

பாடல் 22-ன் பொருள்

ஒருவன் உறவினர்களிடத்தில் மரியாதை காட்ட வேண்டும்;

வேலைக்காரர்களிடம் அன்பாக இருக்க வேண்டும்;

புனிதர்களின் உறவுக்கு ஏங்க வேண்டும்;

ஆட்சியாளரின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;

கற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும்;

எதிரிகளிடத்தில் வீரத்தைக் காட்ட வேண்டும்;

முதியோரிடம் சகிப்புத் தன்மை இருக்க வேண்டும்;

மனைவியிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்;

மனிதர்களின் திறமை, விவேகம், தந்திரம் மூலம்தான்

நல்ல சமுதாயம் வேரூன்றி நிற்கிறது

எல்லோரிடமும் அன்பு காட்டுதல்—

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு- 80

அன்பு இருக்கும் உடல் உயிருள்ள உடல்; அது இல்லாவிட்டால் அது பிணம் ( தோல் போற்றிய எலும்புக்கூடு)

பெரியார் துணைக்கு ஏங்கு—

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்-442

இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே தயா பரிஜனே சாட்யம் ஸதா துர்ஜனே

ப்ரீதிஹி ஸாது ஜனே நயோ ந்ருப ஜனே வித்வத் ஜனே ச ஆர்ஜவம்

சௌர்யம் சத்ரு ஜனே க்ஷமா குரு ஜனே காந்தா ஜனே த்ருஷ்டதா

யேசைவம் புருஷாஹா கலாஸு குசலாஸ்தேஷ்வேவ லோகஸ்திதிஹி-1-22

दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं सदा दुर्जने
प्रीतिः साधुजने नयो नृपजने विद्वज्जने चार्जवम् ।
शौर्यं शत्रुजने क्षमा गुरुजने कान्ताजने धृष्टता
ये चैवं पुरुषाः कलासु कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥ 1.22 ॥

xxxx

பாடல் 23-ன் பொருள்

புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்;

மந்த புத்தியை  விலக்கும்; சுயமரியாதையை  அதிகரிக்கும்; பாபங்களைப் போக்கும்; மனத்தில் மகிழ்ச்சியை எழுப்பும்; உற்சாகத்தை உயர்த்தும்; சமுதாயத்தில் புகழை  ஈட்டித் தரும்; புனிதர்களின் கூட்டுறவால் கிடைக்காதது ஏதேனும் உண்டோ? செப்புக.

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்

நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மானோன்னதிம் திஸதி பாபம் அபாகரோதி

சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்

ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23

जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं
मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं
सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥

FROM MY EARLIER POST……………………..

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்பு உடை மகளிரொடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொற்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கம் தானே! —(விவேக சிந்தாமணி)

மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்!

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: