அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை? (Post No.5614)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 2 November 2018

Time uploaded in London – 6-58 AM (GMT)

Post No. 5614

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 2-11-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஐந்தாம்) கட்டுரை  

அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை?

ச.நாகராஜன்

1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்தார். ஆனால் புதிதாக அவர் கண்டுபிடித்த அமெரிக்காவிற்கு அவர் பெயர் சூட்டப்படவில்லை, ஏன்?

ஒஹையோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாட் க்ராஃபோர்ட் இது பற்றிய புதிய ஆய்வு ஒன்றை நடத்தி தனது கருத்துக்களை இப்போது முன் வைத்துள்ளார்.

ஐரோப்பியர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளுக்குப் பெயர் சூட்டியபோது அவர்கள் கொலம்பஸை மதிக்காததும் அதே சமயம் இத்தாலியைச் சேர்ந்த அமெரிகோ வெஸ்புகி செய்த பிரச்சாரமுமே தான் அவர் பெயர் அமெரிக்காவிற்குச் சூட்டப்படாததற்குக் காரணம் என்று மாட் கூறுகிறார்.

அது மட்டுமல்ல, கொலம்பஸ் தான் கண்டுபிடித்த நாடு ஆசியாவைச் சேர்ந்தது என்று தான் இறக்கும் நாள் வரை உறுதியாக இருந்ததோடு அப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் அமெரிகோ வெஸ்புகியோ அது ஆசியாவைச் சேர்ந்த நாடு அல்ல என்று திடமாகத் தெரிவித்தார்.

1451ஆம் ஆண்டு இத்தாலியில் ஜெனிவாவில் பிறந்த கொலம்பஸ் 1476ஆம் ஆண்டு தனது 25ஆம் வயதில் போர்ச்சுகலுக்குச் சென்றார். அந்தக் காலகட்டம் புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கும் காலமாகத் திகழ்ந்தது. அதற்காக பல்வேறு வரைபடங்களைத் தயாரிக்கும் வணிகத்தில் கொலம்பஸ் ஈடுபட்டார்.

போர்ச்சுகலைச் சேர்ந்த கடல் பயணிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த மடெய்ரா தீவுகள் மற்றும் அஜோரஸ் ஆகிய புது இடங்களைக் கண்டுபிடித்தனர்.

 

அந்தச் சமயம் ஐரோப்பாவிற்கு இந்தியாவை அடைய ஒரு புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கும் தேவை அதிகரித்திருந்தது.  ஏனெனில் ஆடோமேன் சாம்ராஜ்யம் ஐரோப்பிய மாலுமிகள் கான்ஸ்டாண்டிநோபிள் வழியாகச் செல்லும் வழியை அடைத்ததோடு வட ஆப்பிரிக்காவில் செங்கடல் வழியே செல்வதையும் வெற்றிகரமாகத் தடுத்தது.

 

இந்தச் சமயத்தில் தான் கொலம்பஸ் மேற்கு நோக்கிப் பயணம் செய்தால் இந்தியாவை அடையலாம் என்று ஒரு புது உத்தியைத் தெரிவித்தார். அப்போது உலகம் உருண்டை என்ற கொள்கை உண்மை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.

உலகம் தட்டையானது என்ற கொள்கையை முன் வைத்து அதைத் தன் பிரபலமான எழுத்துக்களால் வலியுறுத்தி வந்த வாஷிங்டன் இர்விங்கின் கருத்து தவறானது என்பதை ஆணித்தரமாக உணர்ந்து கொண்ட உலக மக்கள் புதிய கடல் வழிகளைக் காண மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் கொலம்பஸின் மேற்கு நோக்கிய பயணத் திட்டத்தை போர்ச்சுக்கல் அரசு நிராகரித்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, கொலம்பஸ் இதற்குத் தகுதியானவர் இல்லை என போர்ச்சுக்கல் கருதியது. இரண்டாவதாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கு இடையில் உள்ள தூரத்தை அவர் மிகக் குறைவாகத் தப்பாகக் கணித்திருக்கிறார் என போர்ச்சுக்கல் நம்பியது.

ஆகவே நிராசையடைந்த கொலம்பஸ் தன் திட்டத்தை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்று அங்கு முன் வைத்தார். ஸ்பெயின் அரசு இதனால் ஏற்படும் வர்த்தக லாபத்தைக் கருத்தில் கொண்டு அப்படி ஒரு வழியைக் கொலம்பஸ் கண்டுபிடித்தால் இந்தியாவின் வைசிராயாக அவர் நியமிக்கப்படுவார் என்ற உறுதி மொழியைத் தந்தது.

இதனால் மகிழ்ந்த கொலம்பஸ் பஹாமா தீவு  வழியே பயணிக்க ஆர்ம்பித்தார். கியூபாவில் முதலில் கால் பதித்தார். பின்னர் தென் அமெரிக்காவை அடைந்தார்.

ஆனால் தான் அடைந்தது ஆசியாவைத் தான் என்று உறுதிபட அவர் நம்பினார். இதன் மூலம் ஸ்பெயின் அரசு, தான் அளித்த உறுதிமொழிக்கிணங்க தனக்குப் பெரும் பதவியையும் செல்வத்தையும் அளிக்கும் என அவர் நம்பிக் கொண்டிருந்தார்.

 

ஆனால் இதே சமயம் போர்ச்சுக்கலைச் சேர்ந்த வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியே சென்று இந்தியாவை அடைந்ததோடு வெற்றிகரமாகத் திரும்பியும் வந்து விட்டார். 1497 முதல் 1499 முடிய நடந்த இந்தப் பயணத்தால் ஸ்பெயினை போர்ச்சுகல் தோற்கடித்து கடல்வழிப் பயணங்களில் புதிய சாதனை படைத்துத் தலைமை இடத்தை அடைந்தது.

இதனால் எரிச்சல் அடைந்த ஸ்பெயின் அரசு கொலம்பஸின் தோல்விக்காக அவரைக் கைது செய்து ஸ்பெயினுக்குத் திருப்பி அழைத்து வரத் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவ விருதுகள் அனைத்தையும் உடனடியாக ஸ்பெயின் அரசாங்கம் ரத்து செய்தது.

1493ஆம் ஆண்டு கொலம்பஸ் தனது ஆதரவாளரான லூயிஸ் டி சண்டாஞ்ஜெலுக்கு தான் கண்டுபிடித்த புது நாடு பற்றி ஒரு  கடிதம் எழுதினார்.

ஆனால் இத்தாலியைச் சேர்ந்த அமெரிகோ வெஸ்புகி (1459-1512) போர்ச்சுகல் கொடியைப் பறக்கவிட்டுத்  தன் கப்பலைச் செலுத்தி 1499ஆம் ஆண்டு புதிய உலகைக் கண்டுபிடித்தார். அதைத் தன் கடிதம் மூலம் அவரை ஆதரித்த பிரபுவான லோரென்ஸோ டி மெடிசி என்பவருக்குத் தெரிவித்தார். அங்குள்ள பூர்வகுடி மக்களின் பாலியல் பழக்கங்கள், இதர வாழ்க்கை முறைகளையும அவர் சுவைபடத் தெரிவித்தார்.

இந்தத் தகவல்களையெல்லாம் கேட்டு ஜெர்மனியைச் சேர்ந்த நிலப்படத் தயாரிப்பாளரான மார்டின் வால்ட்சீமுல்லர் என்பவர் பெரிதும் ஆர்வமுற்று அமெரிக்காவின் முதல் வரைபடத்தைத் தயாரித்தார். அவர் தான் முதன் முதலில் அமெரிக்கா என்ற பெயரைச் சூட்டினார்.

அமெரிகோவின் பெயரை கௌரவிக்கும் வண்ணம் இந்த நிலப்பரப்பிற்கு அமெரிக்கா என்ற பெயரை மார்டின் சூட்டினார். இதனைக் கண்டுபிடித்த பெரும் திறமைசாலியான அமெரிகோவின் நினைவாக இந்தப் பெயரால் இந்த நிலப்பரப்பு சுட்டிக்காட்டப்படுகிறது என்றார் அவர்.

இதைத்  தொடர்ந்து ஆயிரத்து ஐநூறுகளில் அமெரிக்கா என்ற பெயர் அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது. கொலம்பஸின் பெயர் சூட்டப்படாமல் அமெரிக்காவிற்கு அமெரிகோ வெஸ்புகியின் பெயர் சூட்டப்பட்ட கதை இது தான்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சார்லஸ் குட்இயர் (பிறப்பு 29-12-1800 மறைவு: 1-7-1860) வல்கனைஸிங் உத்தியைக் கண்டுபிடித்த பெரும் கண்டுபிடிப்பாளர். ரப்பரைப் பற்றி அவர் அறியாத விஷயம் இல்லை. என்றாலும் அவர் வாழ்க்கையில் பெரும்பாலும் தோல்வியையே பலமுறை கண்டார். இறுதியில் வென்றார்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பலமுறை அவர் கைது செய்யப்பட்டார். ஒரு முறை நியூயார்க் அருகிலிருந்த க்ரீன்விச்சில் அவர் வாழ்ந்தபோது அவரது மைத்துனரைச் சந்தித்தார். “எனக்கு பத்து டாலர் கொடுங்கள். என்னிடம் இருந்த கடைசி சென்டையும் செலவழித்து விட்டேன். வீட்டிற்குத் திரும்பப் பணம் வேண்டும்” என்றார் அவர்.

“இப்படியெல்லாம் வாழக்கூடாது. இப்படி இருந்தால் வாழவே முடியாது” என்றார் மைத்துனர். “நிச்சயமாக ஒரு நாள் பெரிய ஆளாக ஆவேன்” என்று பதிலளித்தார் குட் இயர்!

தனது இளங் குழந்தையான மகனின் இறுதிச் சடங்கு செய்யக் கூட அவரிடம் பணம் இல்லை. வல்கனைஸிங்கை அவர் கண்டுபிடித்தாலும் கூட அதன் பேடண்ட் உரிமையைப் பெற அவர் போராட வேண்டியதாயிற்று. சிறைவாசமும் அனுபவிக்க நேரிட்டது. நோய்வாய்ப்பட்ட தனது மகளைக் காண நியூயார்க் சென்ற போது வழியிலேயே தனது மகள் இறந்து விட்டாள் என்ற செய்தியை அவர் கேட்க நேரிட்டது.

ஆனால் இவ்வளவு சோகத்திலும் அவர் மனம் கலங்கவில்லை.

தனது வாழ்நாளில் தன் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பிய அவர் அதற்காக உழைத்தார்; போராடினார். இறுதியில் வென்றார். வாழ்நாளின் இறுதிக்காலத்தில் அவர் பெரிய செல்வந்தராக ஆனார்.

“டாலர் சென்ட் என்ற கணக்கில் வாழ்க்கையை மதிப்பிடக்கூடாது. நான் விதைத்து மற்றவர்கள் பழங்களை அனுபவித்தனர் என்று நான் புகார் கூறவில்லை. ஒரு மனிதன் விதைத்து பழங்களை யாரும் அனுபவிக்கவில்லை என்கின்ற போது தான் அவன் வருத்தப்பட வேண்டும்” என்று எழுதினார் அவர். எத்துணை பரந்த மனப்பான்மை அவருக்கு இருந்தது என்பதை இதிலிருந்தே அறியலாம்.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: