காஞ்சி ஸ்வாமிகள் அடித்த ‘ஜோக்’! (Post No.5615)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 2 November 2018

GMT Time uploaded in London – 7-59 AM

Post No. 5615

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

என் தந்தை பெயர் வெங்கட்ராமன் சந்தானம் ( V.SANTANAM). மதுரை தினமணிப் பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர் ஆகப் பணியாற்றியவர் (DIED IN 1998)- தமிழ்ப் பத்திரிக்கைகளில் ஆன்மீகச் செய்திகளை வெளியிட்டு புரட்சி செய்தவர். இப்பொழுது இந்து விரோத, மார்கஸீய பத்திரிக்கையாக இருக்கும் ஹிந்து பத்திரிக்கை கூட ஆன்மீகம் என்றால் கடைசி பக்கம் தான் இருக்க வேண்டும், அதுவும் அரைக்கால் ‘பத்தி’ (one eighth of a column) தான் இருக்க வேண்டும் என்ற காலத்தில் என் தந்தை முதல் பக்கத்தில் மூன்று பத்தி (Three column heading) வரை செய்தி போடுவார்.

பத்திரிக்கையின் ஆசிரியரான ஏ.என்.சிவராமனுக்கு (ANS) பக்தி உண்டு என்றாலும் சடங்குகள், கோவில்களில் பகிரங்கமாக ஈடுபடமாட்டார். பத்திரிக்கையிலும் போட மாட்டார். ஆயினும் என் தந்தை, ஏ.என்.எஸ். (சிவராமன்) ஆகியோர் ஏக வசனத்தில் பேசிக்கொள்ளும் அளவுக்குப் பழக்கப்பட்டதால் ஒன்றும் சொல்ல மாட்டார். மேலும் அவர் வசத்தில் இருந்த சென்னை தினமணிப் பதிப்பைவிட மதுரை தினமணிப் பதிப்பு சர்குலேஷனும் (Sales and Circulation) அதிகம்.

 

இப்படி எவ்வளவுதான் ‘நல்ல’ செய்திகளைப் போட்டாலும் என் அப்பாவும் பலமுறை ஏமாந்து இருக்கிறார். ‘வெளுத்தது எல்லாம் பால்’ (All that glitters is not gold) என்று நம்பக் கூடியவர் சந்தானம் (என் தந்தை) என்று ஸ்வாமிஜி கிருஷ்ணா (ஆயக்குடி) கூட காமெண்ட் Comment அடிப்பார். ஒரு முறை குங்குமத்தில் இருந்து விக்ரஹங்களைக் கொடுக்கும் ஒரு ‘மாதாஜி’ (Mataji) பற்றி என் தந்தை செய்தி போட்டார். அவருக்கு நல்ல வரும்படி!! சில மாதங்களுக்குப் பின்னர் அந்த மாதாஜி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செய்தி பம்பாயிருந்து   வந்தது. இது போல பல ப்ஃ ராடு (frauds) களும் பயன் பெற்றனர்.

நிற்க.

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் கூட ஒருவரை தினமணிப் பத்திரிக்கையை வாசிக்கச் சொல்லிக் கேட்பாராம். பின்னர் ஸ்நானம் செய்யச் செய்வார் என்று ,மடத்துக்கு நெருங்கிய வட்டாரம் பகரும்.

சிருங்கேரி சங்கராச்சார்யார், காஞ்சி சங்கராச்சார்யார் போன்ற பெரியோர்கள் வந்தால் பெரிய செய்திகளைப் போடுவார். ஆயினும் இரு தரப்பிலும் புகார்கள் வரும். மடத்தில் இருந்து அல்ல. அவர்கள் மஹா பெரியவர்கள். மடத்தின் “மட” பக்தர்களிடமிருந்து!

என் தந்தைக்கு மொட்டைக் கடிதங்கள் வரும். ‘ஏய் சந்தானம், நீ காஞ்சி மடத்து ஆள்! சிருங்கேரி செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறாய்!’ என்று.

இதே போல சிருங்கேரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது ‘ஏய்! ஸந்தானம்’ என்று ஏக வசனத்தில் காஞ்சி பக்தர்கள் மொட்டைக் கடிதங்களும் வருவதுண்டு.

இரண்டு சங்கராசார்யார்கள் மதுரைக்கு வரும்போதும் எனது தந்தை வரவேற்புக் குழுவிலும் இருப்பார். அவர்களும் எங்கள் குடும்பத்துக்கு குறைவிலா ஆஸிகள் வழங்குவர்.

ஒருமுறை காஞ்சிப் பெரியவரை (சந்திர சேகர இந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 1894-1994) எனது தந்தை சந்தித்து நமஸ்காரம் செய்தார். பின்னர் வழக்கம்போல லோகாயத விஷயங்கள் பற்றி சம்பாஷனை தொடர்ந்தது. அப்பொழுது என் தந்தை பய பக்தியுடன் மொட்டைக் கடித விஷயங்களையும் அவருக்கு எடுத்துரைத்தார். உடனே காஞ்சிப் பெரியவர் சிரித்துக் கொண்டே சிலேடை மொழியில் ( இரு பொருள்பட விளம்பல்) “மடச் சண்டை” என்று சொன்னார்.

திருவள்ளுவர் இரண்டு அடிகள் எழுதி சொன்னதை சுவாமிகள் இரண்டு சொற்களில் சொல்லி விட்டார்!

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து- குறள் 645

பொருள்:-

பிறிதொரு சொல்லால் தான் சொல்லும் சொல்லை வெல்லவல்ல இன்னொரு சொல் இல்லாமை அறிந்த பிறகே தான் சொல்லக் கருதியதைச் சொல்ல வேண்டும்.

இவ்விஷயத்தில் காஞ்சிப் பெரியவரை வெல்லும் பெரியவர் எவருமிலர்.

மட= மடம்; மட = மூட, முட்டாள்தனமான)

லண்டன் வந்திருக்கும் என் அண்ணன் சந்தானம் சீனிவாசன் சொன்ன சம்பவம் இது.

— சுபம் —

Leave a comment

1 Comment

  1. சில “ஸ்வாமி”களையும் “குரு” மார்களையும் நம்பி ஏமாந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கிறது! மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது அனுபவத்தில் தானே தெரிகிறது! விளம்பர உத்திகள் மிகுந்த இந்த நாட்களில் அதிஜாக்கிரதையாகவே இருக்கவேண்டியதாகிறது.
    காஞ்சி, ஶ்ருங்கேரி மடங்களிடையேயான சர்ச்சை, இரு மடங்களின் தீவிர பக்தர்களால் வளர்க்கப்பட்டது. ஸ்ரீ ராமக்ருஷ்ணர் சொன்னது போல, இது சிவ பரிவாரங்களுக்கும் (பூத கணங்கள்) ராமர் தொண்டர்களுக்கும் (வானரங்களுக்கும்) இடையேயான சண்டை போன்றது.
    காஞ்சி மடம், ஸ்ரீ மஹாபெரியவர்கள் காலத்தில், அவர்களால்தான் பிரபலமானது. அதை முன்பு “கும்பகோணம் மடம்” என்றுதான் அழைப்பார்கள். ஸ்ரீ மஹாபெரியவர்கள் காலத்தில் தான் அது காஞ்சிக்குத் திரும்பி காஞ்சிமடமாயிற்று. அதற்குமுன் தமிழ் நாட்டில் தென் ஜிலாக்களில் கூட ( திருச்சி, மதுரை, திருநெல்வேலி) சிருங்கேரிச் சீடர்கள் தான் அதிகம்.

    மஹாபெரியவருக்குமுன் அம்மடத்தின் புகழ்பெற்ற ஆசாரியர் அதன் 59வது பீடாதிபதியான ஸ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதிகள்.(1610-1692). இவர் மடத்து சம்பிரதாயங்களிலிருந்து சற்று மாறுபட்ட கருத்துக்களைப் பரப்பினார். கலிகாலத்தில் யாக, யஜ்ஞாதிகள் சரிவர அனுஷ்டிக்கப்படுவதற்கான
    சூழ்நிலை இல்லை, பகவன் நாம சங்கீர்த்தனம் தான் பலன் தரும் என்ற கருத்தைப் பரப்பினார்.
    கலி கல்மஷ சித்தானம்
    பாப த்ரவ்ய ஜீவினாம்
    விதி கர்ம விஹீனானாம்
    கதி: கோவிந்த கீர்த்தனம்.
    [ கலி காலத்தில் மக்கள் மனம் மாசடைந்துவிட்டது; பாபம் தரும் தொழிலில் ஈடுபட்டே ஜீவனம் நடத்துகின்றனர்; நெறிமுறை தவறி கர்மங்கள் செய்கின்றனர். இவர்களுக்குக் கதி கோவிந்த ( பகவான்) கிர்த்தனை செய்வதுதான்.]

    .இதன்படி இவர் பஜனை பத்ததியை உருவாக்கினார். இது தக்ஷிண பாரத ஸம்பிரதாய பஜனை என பின்னாட்களில் விரிவடைந்தது. அதனால் இவருக்கு “பகவன் நாம போதேந்த்ரர்” என்ற பெயர் நிலைத்தது. ஆனால் பிறகு வந்த ஆசாரியர்கள் இதைப் பின்பற்ற வில்லை.

    காஞ்சி, சிருங்கேரி மடங்களின் சீடர்களின் விவாதத்திற்கு அடிப்படைக் காரணம் ஆதி சங்கரர் ஸ்தாபித்த மடங்கள் நான்கா அல்லது ஐந்தா என்னும் கேள்விதான். உண்மையில் எந்த மடத்தையும் ஆதி சங்கரரே ஸ்தாபித்தார் என்பதற்கான சரித்திர ஆதாரம் ஏதுமில்லை, இது ஒரு பரம்பரை நம்பிக்கைதான், அப்படிப் பார்க்கையில் ஐந்து மடங்களுக்கும் குருபரம்பரை விவரங்கள் மடங்களிலேயே இருக்கின்றன,
    இந்த விவாதம் கடந்த 60-70 ஆண்டுகளில் பெரிதானதற்குக் காரணம் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவரின் புகழ் பரவியதுதான். இப்பொழுது இவர் பெயரில் நடந்த அற்புதங்கள், அரிய நிகழ்ச்சிகளை வைத்து ஒரு Cult ஒருவாகி வருகிறது.
    இதில் வேடிக்கை என்னவென்றால், பெரியவர் சொன்ன ஒருமுக்கிய விஷயத்தையும் எவரும் பின்பற்றுவதில்லை:
    – காஃபியை நிறுத்து
    -சினிமா பார்க்காதே
    -பட்டு அணியாதே
    -கல்யாணம், உபநயனம் போன்றவற்றில் சிக்கனம்தேவை, லௌகிக அம்சங்கள் குறைய வேண்டும்.
    இவற்றையெல்லாம் எவரும் கண்டுகொள்வதில்லை.
    இன்று பெண்களே படித்து சம்பாதிப்பதால் வரதக்ஷிணை விஷயம் அமுங்கிவிட்டது. ஆனால் பெண்கள் வேலைக்குப்போகக்கூடாது என்பதை எவரும் மதிப்பதில்லை. அதே போல், வேதக் கல்வியும். எந்த பெரிய மனிதரோ, முக்கிய சீடரோ தன் வீட்டுக் குழந்தைகளை வேதக்கல்விக்கு அனுப்பியதாகத் தெரியவில்லை. ஆனால் வைதீக தர்ம பரிபாலனத்திற்காகப் பல சங்கங்கள்!
    இவற்றையெல்லாம் நன்கு கவனித்தால் ஸ்ரீ போதேந்த்ரர் 300 வருஷங்களுக்குமுன் சொன்னதன் உண்மை புரியும்!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: