இறைவன் பற்றிய இரகசியங்கள்! (Post No.5626)

WRITTEN BY S NAGARAJAN

Date: 5 November 2018

Time uploaded in London – 6-17 AM (GMT)

Post No. 5626

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இறைவன் பற்றிய இரகசியங்கள்!

ச.நாகராஜன்

1

இறைவனை எப்படிக் கண்டறிவது? அவன் எங்கு உள்ளான், எப்படி உள்ளான் என்பதை மகான்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உரைத்து வைத்திருப்பதைத் தொகுத்துப் படித்தால் பல உண்மைகள் தெளிவாகப் புலப்படும். சிலவற்றை இங்கே தொகுத்துப் பார்க்கலாம்.

2

திருமூலர் கடவுளை நடமாடும் கோயில் நம்பனில் காண்கிறார்.

கோயிலில் உறைந்திருக்கும் பகவானுக்கு ஒன்று நைவேத்யமாகத் தந்தாய் எனில் அது நிச்சயமாக பசியினால் வாடி வதங்கும் ஏழைக்குச் சென்று சேராது; சில சமயம் சேரலாம். அல்லது நைவேத்யம் செய்தவரே வீட்டிற்குக் கொண்டு செல்லக் கூடும். ஆனால் நடமாடும் கோயிலாக இருக்கும் நம்பர்க்கு ஒன்று கொடுத்தால் அதில் இரட்டைப் பலன். அவனுக்கும் அது சேரும், அத்துடன் அது தானாகவே இறைவனையும் சேரும் என்கிறார் அவர். அற்புதமான இந்தக் கருத்து பெரிய உண்மையைப் புலப்படுத்துகிறது. இல்லாதவனுக்கு ஒன்று ஈயில், அதுவும் உண்ணுவதற்கு ஒன்று கொடுத்தால் அதில் மகிழ்வான் இறைவன், அது அவனைச் சேரும் என்பது தான் அது. வள்ளலார் அனைவருக்கும் அன்ன தானம் செய்யச் சொன்னதன் முழு ரகசியமும் இப்போது புரியும்.

 

திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பார்ப்போம்:

படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு ஆது ஆமே!

3

அவன் அணோர் அணீயான், மஹதோ மஹீயான் என்று அறைகின்றது வேதம்.

அணுவிற்கும் அணுவானவன். பிரம்மாண்டத்திற்கும் பெரிதான மஹத்துக்கும் மஹத்தானவன்! பெரிதுக்கும் பெரிது. சிறிதுக்கும் சிறிது!

அணுவில் அசைவாய் என்றார் (அடாமிக் தியரி தெரிந்த) அருணகிரிநாதர்.

அணுவாய் இருப்பவனும் அவனே; அணுவிற்குள் அசைவாய் இருந்து உலகத்தை இயக்குபவனும் அவனே!

என்ன அற்புதமான கருத்து!

4

திருமந்திரப் பாடல் இன்னொன்று இறைவனின் இயல்பை விளக்குகிறது.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே    (திருமந்திரம் பாடல் 270)

இறைவன் எண்குணத்தான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.

குணம் பற்றியதான இந்த விளக்கமும் அற்புதமான விளக்கம் தான்.

அன்பே சிவம்; தூய அன்பின் திருவுரு கடவுள்!

GOD IS LOVE!

பக்திக்கு இலக்கணமாய் விளங்கும் நாரதர் இறைவனை, ‘அவன் உன்னுள்ளே பரம ப்ரேம ரூபமாய் இருக்கிறான்’ என்கிறார்.

ஸா த்வஸ்மின் பரம ப்ரேம ரூபா (நாரத பக்தி சூத்ரம் – 2)

Sa tvasmin Parama-prema-rupa (Narda Bhakthi Sutra -2)

5

GOD IS NO WHERE  என்றான் ஒரு நாத்திகன்.

அதைக் கேட்ட ஞானி சிரித்தார். நீ சொன்ன சொல்லிலேயே உள்ளானே; இதோ பார் W NOவுடன் சேர்த்துப் படி

GOD IS NOW HERE என்று ஆகி விட்டதே! என்றார் அவர்.

6

இரணியன் நாத்திகர்க்குத் தலைவன்.

அவன் உன் கடவுள் இந்தத் தூணில் இருக்கிறானா? என்று தன் மகனை நோக்கிக் கேட்ட போது, பிரகலாதன், “அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்கிறான்.

கம்பர் சித்தரிக்கும் காட்சியோ அற்புதக் காட்சி.

கம்பரின் பாடல் இது:

சாணிலும் உளன்,ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட

கோணினும் உளன், மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற

தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன், இத்தன்மை

காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் நக்கான்!

அடேய்! எங்கிருக்கிறான் உன் இறைவன்?

அவன் சாணிலும் இருப்பான்; அணுவை நூறு துகள்களாகச் செய்த போது வருமே அந்தக் கோணிலும் இருப்பான்; நீ எங்கே இருக்கிறான் என்று கேட்டாயே, அந்தச் சொல்லிலும் இருப்பான்.

அருமையான இந்தச் சொற்களில் வாக்கில் இருப்பவன் அவனே; வாக்கைத் தருவபவனும் அவனே; அனைத்திலும் பரந்திருந்து உறையும் சர்வ வியாபியும் அவனே என்பதைப் புலப்படுத்துகிறான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்!

7

சரி, அவனை எப்படி அறிவது? வழி சொல்கிறார் அப்பர்:

அவன்,

விறகில் தீயினன், பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

இரகசியத்தைப் பிட்டுப் பிட்டு வைத்து விடுகிறார் அப்பர். நாவுக்கு அரசர் ஆயிற்றே! அவர் சொற்களில் உண்மை நர்த்தனமாடுகிறது!

விறகில் தீ இருப்பது போல, பாலில் உள்ளே நெய் மறைந்திருப்பது போல மாமணி ஜோதி மறைந்திருக்கிறான்.

உறவு கோலை நடு

உணர்வுக் கயிறை எடு

முறுக வாங்கிக் கடை

மேலே வந்து உன் முன்னே மிதப்பான்.

8

‘உள்ளத்தில் உள்ளான் என்கின்றனர் சமயக் குரவர்கள். ஆனால் கள்ளர்க்குப் புலப்படான்; மெய்யன்பர்க்குப் புலப்படுவான் என்கின்றனர் அவர்கள்! இறைவன் ஒரு இரகசியம்! அவனை முழுதுமாக அறிய முடியாது.

அநிர்வசனீயம் – பேச்சுக்கு அப்பாற்பட்டவன்.

Egoless, Everlasting, Eternal, Omnipotent, Omniscient என்று இப்படி வர்ணித்துக் கொண்டே போகலாம்!

9

ஆதி பகவன்

வாலறிவன்

மலர்மிசை ஏகினான்

வேண்டுதல் வேண்டாமை இலான்

எண்குணத்தான்

பொறிவாயில் ஐந்தவித்தான்

அறவாழி அந்தணன்

என்று இறைவனை ‘தனக்கு உவமை இல்லாதான் என்று கூறும் வள்ளுவர்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்று சுருக்கமாகக் கூறி விடுகிறார்.

ஓர் நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்!

***

Leave a comment

Leave a comment