1001 அருமையான ஆங்கிலத் திரைப்படங்கள்! (Post No.5654)

WRITTEN BY S NAGARAJAN

Date: 12 November 2018

Time uploaded in London – 6-30 AM (GMT)

Post No. 5654

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

1001 அருமையான ஆங்கிலத் திரைப்படங்கள்!

ச.நாகராஜன்

இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய 1001 ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியலைத் தொகுத்துத் தருகிறது 1001 Movies You Must See Before You Die என்ற ஆங்கிலப் புத்தகம். இதைத் தொகுத்து வழங்கி இருப்பவர்  Steven Jay Schneider.

1900 ஆம்  ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை வந்திருக்கும் ஆங்கிலப் படங்களில் சிறந்தவற்றை இப்புத்தகம் வழங்குகிறது. இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய படங்கள் இவை!

 இப்படி ஒரு நூலை யாராவது தொகுக்க மாட்டார்களா என ஏங்கி இருக்கும் பல்லாயிரக்கணக்கான திரைப்பட ஆர்வலர்களுக்கு வர பிரசாதம் இந்தப் புத்தகம்.

116 ஆண்டு ஆங்கிலத் திரைப்பட வரலாறு தொகுக்கப்பட்டது போன்ற ஒரு கலைக்களஞ்சியமாக இது அமைகிறது!

முதலில் தொகுக்கப்பட்ட பட்டியலில் 1300 படங்கள் இடம் பெற்றன. ஆனால் திருப்பித் திருப்பி ஆராய்ந்து யோசித்து 1001 படங்களைத் தெரிவு செய்துள்ளார் ஸ்டீவன் ஜே ஷ்னெய்டர்.

அனைத்துப் படங்களின் பெயர்களும் நூலின் ஆரம்பத்திலேயே அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு படத்தைப் பார்க்கலாம். 1998 ஆம் ஆண்டு வெளியான ஒரு படம் டாம்  டய்க்வெரின் ‘ரன் லோலா ரன்’. (Tom Tykwer’s Run Lola Run).

20 நிமிடம் நடக்கும் ஒரு சம்பவம் மூன்று முறை எடுக்கப்பட்டிருக்கிறது.

 

ஒரு சில நிமிடங்களில் சூழ் நிலை எப்படி மாறும் என்பதைக் காட்ட மூன்று முறை சற்று நேரத்தை மாற்றிக் காண்பிக்கிறார் டைரக்டர். லோலாவுக்கு என்ன நேருகிறது? படத்தைப் பார்த்தால் தெரியும்; காலத்தின் அருமையும் புரியும்!

அடடா, என்ன மாற்றம்! அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.

சிசில் பி டெமிலியின் டென் கமாண்ட்மெண்ட்ஸ்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜுராஸிக் பார்க்.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் சைக்கோ!

இப்படி ஒவ்வொரு படமும் வெளி வந்த ஆண்டு, டைரக்டர், நடித்தவர்கள், கதை உள்ளிட்ட அனைத்தையும் சுமார் 150 முதல் 500 வார்த்தைகளில் ஒவ்வொரு கட்டுரையிலும் தருகிறார் நூலாசிரியர்.

22 விஷயங்களாகப் படங்கள் தொகுக்கப்பட்டு அதில் இடம் பெறும் படங்கள் இறுதியில் தரப்பட்டுள்ளது. இதில் இடம் பெறும் 22 விஷயங்கள் :

Action, Adventure, Animation, Avant-Garde, Comedy, Crime, Docu-drama, Documentary, Drama, Experimental, Family, Fantasy, Horror, Musical, Mystery, Noir, Romance, Sci-fi, Short, Thriller, War and Western.

இப்படங்களை இயக்கியுள்ள 596 பிரபலமான டைரக்டர்களின் பெயர்களும் டைரக்டர் இண்டெக்ஸில் தரப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் பற்றிய் படங்களா?

இதோ The Bridge on the river Kwai (1957), The Great Escape (1963), Gone with the Wind (1939).

படங்கள் அணி வகுக்கின்றன!

என்றாலும் கூட நாம் விரும்பும் அனைத்துப் படங்களும் இதில் காண முடியுமா என்றால், அது சந்தேகம் தான்.

எடுத்துக்காட்டாக உலகப் போர் சம்பந்தமாக நாம் விரும்பும், The Guns of Navarone, Force Ten from Navarone முதலியவை 1001 படங்களில் இடம் பெறவில்லை. அனைவரும் ரசித்துப் பார்த்த கொள்ளை அடிக்கும் சம்பவம் இடம் பெறும் The Italian Job போன்ற படங்கள் சிலவும் இதில் இல்லை.

ஆனால் ஒன்று, இப்படி ஒவ்வொருவரின் விருப்பத் தேர்வையும் இடம் பெறச் செய்ய வேண்டுமானால் தொகுப்பாளர் 10001 படங்கள் என்று தலைப்பை மாற்ற வேண்டியிருக்கும்! ஸயின்டிபிக் பிக்ஷன் படங்கள் பற்றியோ கேட்கவே வேண்டாம். அன்றாட வாழ்க்கை, காமெடி, த்ரில்லர் என அசத்துகிறது பட்டியல்!.

ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் ஏராளமான படங்கள் வேறு. மலரும் நினைவுகளைக் கொண்டு வரும் படி உள்ளது.

திரைப்படத் துறை 100 ஆண்டுகளுக்கு மேலாக வலுவுள்ள ஒரு பொழுதுபோக்குத் துறையாக ஆகி உள்ளது. ஏழை முதல் பணக்காரன் வரை, நாடு, மொழி, பால்,இனம், வயது பேதமின்றி குறைந்த செலவில் நிறைந்த மன நிறைவைத் தருவது நல்ல திரைப்படங்களே!

2012இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின் படி இதுவரை உலகில் 1,32,000 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அமெரிக்காவில் மட்டும் 44000 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது திரைத்துறையின் பிரம்மாண்டத்தைக் காண்பிக்கிறது!

ஆக இப்படி திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூல் என்றால் அது திறம்பட தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்துள்ள ஸ்டீவன் ஜே ஷ்னெய்டர் பாராட்டுக்குரியவரே! இவர் திரைப்பட விமரிசனகர்த்தா. தயாரிப்பாளர். திரைப்படத் துறை பற்றி நன்கு அறிந்தவர். சினிமா கலை பற்றிப் பல நல்ல புத்தகங்களை எழுதியவரும் கூட.

இறப்பதற்கு முன் இந்த 1001 படங்களில் முடிந்தவற்றைப் பார்த்து முடிப்போம்!

****

Leave a comment

2 Comments

  1. 1001 அருமையான ஆங்கிலத் திரைப்படங்கள்! பிரமிப்பாக இருக்கிறது! இன்று அனேகமாக எல்லாப் படங்களும் யு-டியூபில் கிடைக்கின்றன! நாளுக்கு ஒன்றாகப் பார்த்தாலும் 3 வருடங்களில் பார்த்து முடித்து விடலாம்!

    ஆனால் எதை வைத்து ஒரு படத்தை “அருமை” எனச் சொல்ல முடியும்? கதை, நடிப்பு, டெக்னிகல் உத்திகள், இயக்குநர் திறமை எனப் பலவற்றைச் சொல்லலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி ஒரு படத்தில் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஒரு செய்தி இருக்கவேண்டும்! மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரவேண்டும்!

    இப்படிப் பார்த்தால் 1000 சினிமாக்கள் தேறுமா என்பது சந்தேகமே! பல படங்கள் தொழில் நுட்பம், நடிப்பு, கலை அம்சங்கள் ஆகியவற்றில் சிறந்தே இருக்கின்றன. ஜனரஞ்சகமாகவும் இருக்கின்றன. ஆனால் எல்லாம் மனதைத் தொடுவதாக இல்லை. மனதில் பதியும்படி நல்ல கருத்தைக்கொண்ட சில படங்கள் சட்டென்று நினைவுக்கு வருகின்றன.

    1.பொதுவாக Westerns எனப்படும் படங்கள் நல்லது-கெட்டதிற்கிடையே யான போராட்டத்தை விளக்குவதாக இருக்கும். அனாவசியமான ஹிம்சைக் காட்சிகள் இருக்காது. இவை, உலகில் எவ்வளவு கெட்ட அம்சங்கள் இருந்தாலும் இறுதியில் நல்லதே, உண்மையே வெல்லும் என்னும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதாக இருக்கும். தீமையோ, தீயவர்களோ இறுதியில் வென்றதாகக் காட்டவே மாட்டார்கள். இத்தகைய படங்களிலும் 50களில் வந்த கறுப்பு-வெள்ளைப் படங்கள் சிறந்தவை. அதிலும் பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாமல் Randolph Scott, Joel McCrea, Audie Murphy Roy Rogers போன்ற நடிகர்கள் நடித்தவை சிறந்தவை. இத்தகைய படங்களில் நடிப்பதை பெருமைமிக்கதாக பெரிய ஸ்டார்களும் கருதினார்கள். John Wayne, James Stewart, Kirk Douglas, Robert Mitchum. Gregory Peck,Glenn Ford,James Garner, Henry Fonda ஆகியோர் நடித்த படங்கள் குறிப்பிடத் தக்கவையாக இருக்கும்.கலர் படங்களில் Man Who Shot Liberty Valence,Rio Bravo, El Dorado, Last Train From Gunhill, Shootist ஆகியவை சிறந்தவை. Clint Eastwood நடித்தவை அசல் ‘வெஸ்டர்ன்’ படங்கள் அல்ல. இவை Spaghetti Western எனப்படும். வன்முறைச் சம்பவங்கள் மிகுந்தவை. ஆனால் அவரே தயாரித்து இயக்கிய ‘Unforgiven’ என்ற படம் வன்முறை வெற்றிபெறாது, அது சரியல்ல என்ற கருத்தை வலியுறுத்தும் படம். பொதுவாக வெஸ்டர்ன் படங்களில் இயற்கைக் காட்சிகள் அபாரமாகப் படமாக்கப்பட்டிருக்கும். பின்னணி இசையும் அபாரமாக இருக்கும். Dmitri Tiomkin,Elmer Bernstein, Jerry Goldsmith, Max Steiner,Jerry Fielding ஆகியோரின் இசை மிக அருமையாக இருக்கும். Trigger என்ற குதிரையும் ராய் ராஜர்ஸ் படங்களில் நடித்துப் புகழ்பெற்றது! “Dollar” என்ற குதிரை John Wayne க்குப் பிடித்தது-அவருடன் பல படங்களில் நடித்தது! தான் உயிருடன் இருக்கும் வரை இந்தக்குதிரையை விற்கக்கூடாது என்று நிபந்தனை போட்டிருந்தார் வேய்ன்! ராய் ராஜர்ஸின் நாய் ‘Bullet” டும் புகழ்பெற்றது! இந்தப் படங்களைப் பார்த்தால் நாம் ஓரு புது உலகில் புகுவோம்! அங்கிருந்து வெளியில் வரவே மனம் வராது!

    2. அருமையான கதையம்சங்களைக்கொண்ட படங்கள் பல இருக்கின்றன. சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்;
    1,Once A Thief (1965) : திருட்டில் ஈடுபட்டிருந்த ஒருவன் நல்லவனாக முயற்சிசெய்கிறான். அது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்படம் சித்தரிக்கிறது.
    2. அடிப்படையில் இதே கருத்துடன் 2002ல் வந்த படம் Road To Perdition. ஒரு தீய கும்பலைச் சேர்ந்த ஒருவன் . மனைவி, இரு மகன்கள். ‘நீ என்ன வேலை செய்கிறாய்’ என பெரிய மகன் ஒரு நாள் கேட்கிறான்! அவனால் பதில்சொல்ல முடிவதில்லை! கும்பலிலிருந்து வெளிவர முயற்சிசெய்கிறான். தன் குழந்தைகள் இத்தகைய சூழ்நிலையில் இருக்ககூடாது, வன்முறை தகாது என நினைக்கிறான். அவன் மனைவியையும் ஒரு பையனையும் கும்பல்காரர்கள் கொன்றுவிடுகின்றனர், ஒருபையனுடன் தப்பியோட
    முயற்சிக்கிறான் , இறுதியில் மகன் துப்பாக்கியைத் தொடக்கூடாது என்று கருதி தானே வில்லைனைச் சுட்டு, மடிகிறான். உருக்கமான கதை-நெஞ்சைத்தொடும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் Tom Hanks நான்கு குழந்தைகளின் தந்தை- இந்தக் கதையின் கருத்து அவருக்குப் பிடித்துவிட்டது. ஆனால் வன்முறை அதிகம் கூடாது என்ற
    நிபந்தனையுடன் நடித்தார். அருமையான பின்னணி இசை.
    3.Man Who Knew Too Much 1956: ஒரு அமெரிக்கத் தம்பதிகள் மகனுடன் மொராக்கோவிற்கு உல்லாசப்பயணம் செல்கின்றனர், இங்கு ஒரு அரசியல்வாதியைக் கொல்லச் செய்யும் சதியைப்பற்றி அறிகின்றனர். அதைத்தடுக்க முயல்கின்றனர், இவர்கள் பையன் கடத்தப் படுகிறான். ஒரு பாட்டின் மூலம் அவனிருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். கொலையும் தவிற்கப்படுகிறது. இந்தப் படத்தில் வந்த Que Sera Sera- When I was just a little boy girl என்று Doris Day பாடும் பாட்டு உலகப் பிரசித்தி பெற்றது. ” நடப்பது நடக்கும்- எதிர்காலம் நம் வசத்தில் இல்லை- Whatever Will Be Will Be, The future is not ours to see” என்ற கருத்தில் வரும் பாடல் ஓரளவு ஹிந்து நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறது! இதை அப்போது சர்ச்சுகள் எதிர்த்தன! ஆனால் பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது! தமிழில் இதே கருத்துடன் ” சின்னப் பெண்ணான போதிலே” என்ற பாட்டு இதே மெட்டில் ஆரவல்லி படத்தில் வந்தது! பாட்டை வைத்து குழந்தையைக் கண்டுபிடிக்கும் உத்தி கைதி கண்ணாயிரம் படத்தில் (ஹிந்திப் படத்தைத் தழுவி) வந்தது!
    4.To Sir With Love 1967: வேலை இல்லாத நீக்ரோ எஞ்சினீயர் ஒருவர் பள்ளி ஆசிரியர் வேலையையைத் தாற்காலிகமாக ஏற்றுக் கொள்கிறார். அந்தப் பள்ளிப்பிள்ளைகள் சரியான தறுதலைகள்-போக்கிரிகள். எந்த ஆசிரியரும் நிலைக்காத அந்தப் பள்ளியில் இந்த ஆசிரியர் அவர்களுடன் பாடுபட்டு அவர்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமாகிறார்.மாணவர்களும் திருந்துகிறார்கள். அவர்கள் அன்புக்குக் கட்டுப்பட்டு வரும் எஞ்சினீயர் வேலையையும் துறந்து ஆசிரியராகவே தொடர்கிறார்! இது ஒரு உண்மை நிகழ்ச்சியின் மீது எழுந்த கதையானாலும், சினிமா கதையைவிடச் சிறந்த முறையில் படமாக்கப்பட்டிருந்தது. உண்மையான ஆசிரியர் பாடம் சொல்லித்தரமட்டும் அல்ல- வாழ்க்கைக்கும் அவரே வழிகாட்டி என்பதை இப்படம் அருமையாக விளக்குகிறது.
    5. Renaissance Man1994: இதுவும் ஒரு ஆசிரியர் பற்றிய கதைதான்- வித்தியாசமான ஆசிரியர்! வேலை இழந்த ஒரு கம்பெனி மேலதிகாரி ஒருவர் ஒரு மிலிடரி பள்ளியில் பயிற்சிபெறும் சிப்பாய்களுக்கு ஆங்கில இலக்கியம் போதிக்கும் பணியில் தாற்காலிகமாக அமர்கிறார். சிப்பாய்களோ கழிசடைகள். இலக்கியம் கிலோ என்னவிலை என்பவர்கள். அவர்களுக்கு ஷேக்ஸ்பியரின் “ஹாம்லெட்” நாடகத்தை விளக்குகிறார்; அவர்களையே பாத்திரங்களாக நடிக்கச் செய்கிறார்! நிஜ நடிகர்களின் நிகழ்சியைப் பார்க்க வைக்கிறார்! ஆர்வமெனும் தீ பற்றிக்கொள்கிறது! அடுத்து “ஹென்ரி-V” என்னும் நாடகத்தை விளக்குகிறார். இரண்டு மாதங்களில் பரீட்சைக்குச் தயார் செய்கிறார். மேலதிகாரிக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.பரிட்சையில் தேறாவிடில் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்படுவர்- இவருக்கும் வேலை போய்விடும் என்கிறார்! ஒரு நாள் இரவில் பரேட் நடக்கும் போது ஒரு சிப்பாயை மற்றவர்கள் சீண்டுகிறார்கள் அவனோ, ஹென்ரி-5ல் வரும் St.Crispin Day’s Speech என்ற பகுதியை உணர்ச்சி பூர்வமாக ஒப்பிக்கிறான்- கொட்டும் மழையையையும் பொருட்படுத்தாமல்! எல்லோரும் அசந்துபோகிறார்கள்! சிப்பாய்கள் அனைவரும் பரிட்சையில் நல்லபடி தேறுகிறார்கள்! ஆசிரியரும் அங்கேயே தொடர்கிறார்! இங்கு இவர் ஹாம்லெட் பற்றி விளக்கும் முறை அருமையானது- அதைப் படித்தவர்களும் ரசிக்கலாம்! தமிழில்
    மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை இந்த ஹென்ரி-5 நாடகத்திலிருந்து இந்தப் பகுதியைத் தன் நாடகத்தில் காப்பியடித்திருக்கிறார்! இலக்கிய ரசனை வருவதற்கு ஆசிரியர் பங்கு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது.
    6,.Becket 1964 : இது ஆங்கிலேய அரசர் ஹென்ரி-2க்கும் கேன்டர்பரி ஆர்ச்பிஷப்புக்கும் இடையேயான பகைமையைப் பற்றியது. அரசுப் பொறுப்பில் அக்கறையில்லாமல் களியாட்டங்களில் காலம் கடத்தியவர் மன்னர். அவருக்கு அடியாளாக இருந்து அவர் நம்பிக்கையைப் பெற்றவர் தாமஸ் பெக்கட். சர்ச் விஷயத்தில் மன்னர் தலையிடுவதை கான்டர்பரி ஆர்ச்பிஷப் எதிர்த்தார். அவர் இறக்கவே, அந்தப்பதவிக்கு தன் நம்பிக்கைக்குகந்த பெக்கெட்டை நியமிக்கிறார். ஆனால் ஆர்ச்பிஷப் என்ற மகத்தான சர்ச் பொறுப்பை ஏற்றதும் பெக்கெட் தன் பழைய வழிகளை விட்டு உண்மையாகவே கடவுளுக்கும் சர்ச்சுக்கும் விசுவாசமாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார். நல்ல நடத்தை உள்ளவராக மாறுகிறார். தன் பழைய ஆள் தனக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த மன்னர் பெக்கெட்டை கொலைசெய்யத் தூண்டுகிறார். ஆனால் கொலை நடந்தபிறகு தன் செயலுக்கு வருந்தி பிராயச்சித்தம் செய்ய முற்படுகிறார், பெக்கெட்டை ஒரு ‘செயின்டாக” அறிவிக்கிறார். இது 12ம் நூற்றாண்டில் நடந்த சரித்திர நிகழ்ச்சி. இதன் முக்கிய படிப்பினை, சமய, ஆன்மீகத்துறையில் பொறுப்பு வகிப்பவர்கள் அரசியல் வாதிகளுக்கு வீணில் அடிபணியலாகாது என்பதே. அரசனின் அடியாளே அந்தப் பொறுப்பிற்கு வந்தாலும் சமயப்பொறுப்பை விடலாகாது என்பதே. இன்று சபரிமலை விஷயத்தில் இடதுசாரி அரசுக்கும் கோவில் தன்திரிக்களுக்கும் இடையே இத்தகைய சர்ச்சைதானே நடக்கிறது!

    இப்படி பல படங்களைப் பற்றி எழுதலாம்! சினிமா வியாபார நோக்கில்தான் எடுக்கப்படுகிறது. தரக்குறைவான வீண் கவர்ச்சி அம்சங்கள் தான் அதிகம். ஆனால் இன்று அதுவே நவீன கலைகளில் ஒன்றாகிவிட்டது. அதிலும் உண்மையான கலை அம்சங்களுடனும் உன்னதக் கருத்துக்களுடனும் வரும்படங்கள் ஆங்கிலத்தில் இருக்கவே செய்கின்றன..அதிக விளம்பரமில்லாது வரும் படங்கள் நமக்குத் தெரிவதில்லை. இத்தகைய புத்தகங்கள் சிறந்த படங்களை அறிந்துகொள்ள உதவும். [ நான் 45 வருடங்களாக சினிமா பார்ப்பதில்லை-அதனால் பழைய படங்களையே குறிப்பிட்டிருக்கிறேன்!]

  2. Santhanam Nagarajan

     /  November 16, 2018

    சூப்பர்! 132000 படங்கள்! 44000 அமெரிக்காவில் எடுக்கப்பட்டவை! கேட்க வேண்டுமா? நிறையவே நல்ல படங்கள் உள்ளன! தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். நானும் பல வருடங்களாக சினிமா பார்க்காமல் இருந்தேன். ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் வரும் இந்தக் காலத்தில் அவற்றை வெறுத்து ஒதுக்காமல் அவற்றிலும் நமக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே! Eat Pray Love, 36 chamber of shaolin போன்ற ஏராளமான நல்ல படங்கள் உள்ளன. உத்வேகம் ஊட்டும் படங்கள். இரண்டாம் உலக மகா யுத்த படங்கள், சில அறிவியல் புனைகதை படங்கள், இன்னும் உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஏராளமான நல்ல படங்கள் உள்ளன. இவற்றைத் தொகுத்து வருகிறேன். தமிழ் சினிமா மிகவும் தரம் தாழ்ந்து இருப்பதைப் பார்த்துத் தான் இதில் இறங்க ஆரம்பித்தே. கையில் காமராவை எடுத்த்வன் எல்லாம் நல்ல படத்தைத் தர முடியுமா? நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம் – இது எனது கொள்கை. எனது பார்த்ததில் ரசித்தது, படித்ததில் பிடித்தது தொடரில் இப்படிப்பட்ட நல்ல திரைப்படங்களையும் நல்ல நூல்களையும் சுட்டிக் காட்டியுள்ளேன். நீங்கள் குறித்த சில படங்களையும் பார்க்கப் போகிறேன். நன்றி. வணக்கம் – முகாம் : சான்பிரான்ஸிஸ்கோ

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: