மனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்! (Post No.5661)

Written by S Nagarajan

Date: 14 November 2018

GMT Time uploaded in London –10-17 am
Post No. 5661

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஏழாம் கட்டுரை)

அத்தியாயம் 401

 மனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்!

ச.நாகராஜன்

மனத்தையும் மூளையையும் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி முன்னேற முன்னேற நாளுக்கு ஒரு பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பை அறிந்து வருகிறோம்.

இந்த வகையில் இப்போது அறிவியல் ஆய்வு ஒன்று தரும் முடிவு ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் 5000 முகங்களைத் தெளிவாக அடையாளம் காண முடியும் என்று அறிவிக்கிறது. சில மனிதர்கள் சுமார் பத்தாயிரம் முகங்களைக் கூடத் தெளிவாக அடையாளம் காண்கிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.

உலகில் அன்றாடம் நாம் ஏராளமான முகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இவர்களில் தெரிந்தவர்கள் சிலர்; தெரியாதவர்கள் பலர்.

அறிவியல் இதழான ஸயின்ஸ் இதழில் ஃப்ராங்கி ஷெம்ப்ரி, இது பற்றி எழுதுகையில் இப்படிப்பட்ட ஆய்வு உலகில் இது தான் முதல் தடவை எனக் குறிப்பிடுகிறார். முகங்களை இனம் கண்டு அடையாளம் காணும் ஆய்வுகள் பல ஏற்கனவே நடைபெற்றிருந்தாலும் எத்தனை பேரை ஒரு மனிதன் அடையாளம் காண முடியும் என்பதைப் பற்றித் துல்லியமாக அறிவதற்கான ஆய்வு இதுவரை நடந்ததில்லை.

பிரிட்டனைச் சேர்ந்த யார்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ராப் ஜென்கின்ஸ் தலைமையிலான குழு இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் ‘ப்ரொசீடிங்ஸ் ஆஃப் தி ராயல் சொஸைடி பி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக தன்னார்வத் தொண்டர்களை க்ளாஸ்கோ பல்கலைக் கழக மற்றும் அபெர்டீன் பல்கலைக் கழக மாணவ சமுதாயத்திலிருந்து ஆய்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

அவர்களுக்கு இரு சோதனைக்ள் தரப்பட்டன. முதல் சோதனையில் ஒரு மணி நேரத்தில் தனக்குத் தெரிந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளித் தோழர்கள், பல்துறை வித்தகர்கள் உள்ளிட்டோரில் எத்தனை பேரை சரியாக அடையாளம் காட்ட முடியும் என்று கேட்கப்பட்டது. சோதனையில் பங்கு கொண்டோர் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்ல வேண்டும் என்பது கூட இல்லை. இவர் எனது பள்ளித் தோழர், இவர் எனது தெருவில் வசிப்பவர் என்று சொன்னால் கூடப் போதும். அவரைப் பார்த்தால் தெளிவாக இன்னொரு முறை அடையாளம் காட்ட முடியும் என்ற தகுதி இருந்தால் போதும், அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒரு மணி நேர சோதனையில் நேரம் ஆக ஆக, அடையாளம் காணும் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. களைத்துப் போன சோதனையாளர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக சோதனை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சோதனையின் அடுத்த கட்டமாக 3441 பிரபலங்களின் போட்டோக்கள் அவர்களிடம் காட்டப்பட்டன. அதில் அவர்களுக்கு யாரையெல்லாம் தெரியும் என்று கேட்கப்பட்டது. யாரையும் அவர்கள் விட்டு விடக் கூடாது என்பதற்காக, பிரபலங்கள் ஒவ்வொருவரின் இரு வெவ்வேறு போட்டோக்கள் காட்டப்பட்டன.

 இந்த இரு சோதனைகளின் முடிவுகளும் இணைந்து பார்க்கப்பட்ட பின்னர் சோதனையில் பங்கு கொண்டோர் ஆயிரம் முதல் பத்தாயிரம் பேர்களின் முகங்களைத் தெளிவாக அடையாளம் காண்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது.

சராசரியாகச் சொல்வதென்றால் ஒரு மனிதனால் 5000 பேர்களை அடையாளம் காட்ட முடியும்!

ஆயிரம் முதல் பத்தாயிரம் என்ற அளவிற்கு, இவ்வளவு பெரிய வேறுபாடு மனிதருக்கு மனிதர் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு, சிலருக்கு முகங்களை மிகச் சுலபமாக இனம் காணுவது இயல்பாகவே இருக்கிறது என்று ஆய்வாளர்கள் பதில் அளித்தனர். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கக் கூடும் என்கிறார் ஆய்வாளர் ஜென்கின்ஸ்.

சமூகச் சூழ்நிலையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர். சிலர் மிகவும் அதிகமாக ஜனத்தொகை உள்ள இடத்தில் வாழ்வதால் அதிகம் பேரை அறியக் கூடிய வாய்ப்பு இருந்திருக்கலாம் என்பது அவரின் கணிப்பு.

ஆய்வாளரில் ஒருவரான யார்க் பல்கலைக்கழக் உளவியல் நிபுணர் மைக் ப்ருடன், “ ஆய்வு முடிவு தரும் மிக அதிகமான எண்ணிக்கை எங்களுக்கே ஆச்சரியத்தைத் தருகிறது. ஏனெனில் மிகப் பண்டைய காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த போது அவர்கள் நூறு பேருக்கும் கீழாக இருந்த கூட்டத்திலேயே வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போதோ இப்படி மிக அதிகமான அளவில் மனிதர்களை இனம் காண முடிவது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான் “ என்கிறார் அவர்.

இந்த ஆய்வு ஒரு முக்கியமான விஷயத்திற்குப் பயன்படும். கணினிப் பயன்பாட்டில் முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருளை இன்னும் மேம்படுத்த இது உதவும் என்கிறார் அவர்.

   ஆய்வின் அடுத்த கட்டம் சற்று சிக்கலானது. வயதாக ஆக, இந்த நினைவாற்றல் திறன் எப்படி ஆகும் என்பது தான் அது. இப்போது சோதனையில் பங்கேற்றவர்களின் வயது 18 முதல் 61 முடிய இருந்தது. இவர்களின் சராசரி வயது 24.

மிக அதிகமாக முகங்களைக் கண்டறியும் உச்ச பட்ச வயது என்று  ஒன்று இருக்கிறதா என்பதை ஆய்வின் அடுத்த கட்டம் எடுத்துச் சொல்லும் என்கிறார் அவர்.  ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் எந்த முகமும் நினைவில் பதியாதோ என்பதையும் ஆய்வு கண்டறியும்.

சுவையான இந்தச் செய்திக்காக நினைவாற்றல் திறனில் அக்கறை கொண்டுள்ளோரும், சாஃப்ட்வேர் வடிவமைப்பாளர்களும்  காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆய்வு தொடர்கிறது.

எண்ணங்கள் பற்றிய பழைய ஆய்வுகளில் ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுமார் நாற்பதினாயிரம் எண்ணங்களை எண்ணுகிறான் என்பது கண்டறியப்பட்டது. அதாவது எண்பது வயது கொண்ட ஒருவர் தனது வாழ்நாளில் நூற்றிப்பதினாறு கோடியே எண்பது லட்சம் எண்ணங்களை எண்ணுகிறார்.

ஆயுளுக்கு 117 கோடி எண்ணங்கள் என்ற பிரமிப்பிற்கு அடுத்த கட்டமாக ஆயுளுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் முகங்களை அடையாளம் காட்டும் மனிதனின் திறன் பற்றிய ஆய்வு இப்போது 2018 அக்டோபரில் வெளியாகி நமக்கு இன்னும் அதிக வியப்பை ஊட்டுகிறது!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

எண்பத்துமூன்று வயது ஆகும் அமெரிக்க டாக்டர் ஹெர்பர்ட் பென்ஸன் (Herbert Benson  – பிறப்பு 1935) யோகா பற்றி அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த பிரபலமான டாக்டர். மனிதனுக்கு யோகா மூலமாக என்னென்ன சக்திகள் ஏற்படக் கூடும் என்பதை அறிவதற்காக ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலின் மருத்துவப் பேராசிரியரும் பென்ஸன் – ஹென்றி இன்ஸ்டிடியூட்டின் டைரக்டருமான அவர் ஆயிர்த்தி தொள்ளாயிர்த்து எண்பதுகளில் இமயமலைக்கு வந்து ஆய்வுகளை நடத்தினார்.

சிறப்பான டும்மோ (Tummo) என்ற ஒரு யோகா பயிற்சியை மேற்கொண்ட ஒரு துறவியின் கை விரலின் நுனி 17 டிகிரி அளவு வெப்பத்தை அதிகரித்துக் காட்டியதைக் கண்டு அவர் வியந்தார். எப்படி அதைச் செய்கிறார் என்பதை யாராலும் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லைல் 

சிக்கிமுக்கு சென்ற போது அவர்கள் யோகிகள் தங்கள் ஆற்றலினால் 64 சதவிகிதம் உடல் இயக்கங்களை மாற்றிக் காட்டியதைக் கண்டு அயர்ந்து போயினர்.

15000 அடி உயரத்தில் இமயமலையில் இருக்கும் யோகிகள் கம்பளிப் போர்வை கூட இல்லாமல் அப்படிப்பட்ட கடும் குளிரில் இயல்பான உடல் வெப்பத்தினால் மட்டுமே   வாழ்வது வீடியோ பிலிம் எடுக்கப்பட்டது.

பிரக்ஞையின் மூலம் உடல் இயக்கங்களை மாற்றிக் காட்டலாம் என்பதை நேரில் கண்ட பென்ஸன் 12 புத்தகங்களை எழுதியுள்ளார். இவை பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. தி ரிலாக்சேஷன் ரெஸ்பான்ஸ், தி மைண்ட் பாடி எஃபெக்ட், யுவர் மாக்ஸிமம் மைண்ட் உள்ளிட்ட அவரது புத்தகங்களில் மனம் பற்றிய விஞ்ஞானிகளின் அபூர்வ சோதனைகள் விளக்கப்பட்டுள்ளன.

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: