ஒபிஸிடி கோட் – 1 (Post No.5719)

Written by S Nagarajan

Date: 1 DECEMBER 2018


GMT Time uploaded in London –5- 39 am


Post No. 5719

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அறிவியல் துளிகள் 403 (எட்டாம் ஆண்டு முப்பத்தொன்பதாம் கட்டுரை)

ஒபிஸிடி கோட் – 1

ச.நாகராஜன்

(குறிப்பு : இந்தக் கட்டுரை சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து எழுதப்படுகிறது.இங்கு வந்து இரண்டு வாரம் ஆகி விட்டது)

அமெரிக்காவில் யாரைப் பார்த்தாலும் இப்போது உபவாசத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. நொறுக்குத் தீனிகள் கிடையாது; நினைத்தபடி சாப்பாடு கிடையாது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த உணவுக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு திடீரென ஏற்படக் காரணம் என்ன?

ஒபிஸிடி கோட்! (The Obesity Code) 2016ல் வெளியாகி இன்றைய ட்ரெண்டில் முன்னணியில் நிற்கும் புத்தகம் இது. இதை எழுதியவர் டாக்டர் ஜேஸன் பங் (Jason Fung). 

உடலின் எடை கூடி, பருமனாக இருக்கும் பெண்மணிகளும் ஆண்களும் தங்களின் உடல் பருமனைப் பற்றிக் கவலைப்படுவது நியாயமே. வெளியில் சகஜமாகப் போக முடியாது; எதையும் நினைத்தபடி உண்ண முடியாது; அதிலும் நீரிழிவு நோய்- டயபடீஸ் 2 – இருந்தாலோ அவ்வளவு தான்; ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள்! இவர்களுக்கெல்லாம் வரபிரசாதமாக இந்த டிரெண்ட் புத்தகம் அமைந்துள்ளது. பல பழைய கால பத்தாம்பசலிக் கொள்கைகளைத் தூக்கி எறிகிறது இந்தப் புத்தகம்.

இப்போதைய கொள்கையின் படி கலோரிகளை வைத்து உடல் எடையைப் பற்றிய அளவை நாம் கண்காணிக்கிறோம். 20 வயதுடைய ஒரு இளைஞனுக்கு அன்றாட தேவை 2800 கலோரிகள். 60 வயதுடைய ஒருவருக்கு அன்றாட தேவை 2496 கலோரிகள். அன்றாடம் நாம் உண்ணும் உணவை இதன் அடிப்படையில் நாம் தேர்வு செய்கிறோம்.

100 கிராம் காரட்டில் இருப்பது 35 கலோரிகள். 100 கிராம் பீன்ஸில் 117 கலோரிகளும், 118 கிராம் வாழைப்பழத்தில் 106 கலோரிகளும், 100 கிராம் தயிரில் 156 கலோரிகளும். 100 கிராம் வெந்த அரிசி சாதத்தில் 116 கலோரிகளும் உள்ளன. இப்படி கணக்கிட்டு நமது அன்றாட உணவை நாம் சாப்பிடுகிறோம் – உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க.

உள்ளே நாம் ஏற்கும் கலோரிகளைப் போல அதை அன்றாடம் செலவழிக்கவும் வேண்டும். இல்லையேல் அது கொழுப்பாக மாறி எடையை ஏற்றும். ஆக நடைப்பயிற்சி 28 நிமிடம் மேற்கொண்டால் 110 கலோரிகளையும், ஓடினால் 10 நிமிடங்களில் அதே கலோரிகளையும் இழக்கிறோம். ஆக இந்த உடல் இயக்கம் நமது அன்றாடத் தேவை ஆகிறது. இப்படி உடல் இயக்கம் மூலமாக நாம் இழக்கும் கலோரிகளால் குறையும் எடை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்கிறார் பங். ஆகவே அவரது அறிவுரை, முக்கியமாக உங்கள் உடலின் இன்சுலின் அளவைப் பாருங்கள் என்பதே! தொடர்ந்து தவறான உணவுப் பழக்கத்தின் காரணமாக உடலில் இன்சுலின் அளவு மிகவும் ஏறி விடும்.

ஆகவே ஹார்மோனல் இம்பாலன்ஸ் எனப்படும் ஹார்மோன்களின் சமச்சீரின்மை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். முக்கியமாக ஹார்மோன்களில் இன்சுலின் அளவை நாம் கண்காணித்து அதன் சமச்சீர்தன்மையை பராமரித்து வர வேண்டும். இதற்கான வழியாக, இடைவெளி விட்டு மேற்கொள்ளும் உபவாசத்தை – Intermittant Fastingஐ – மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறார் டாக்டர் பங்.

உணவை உட்கொள்ளும் போது நமது உடலில் உள்ள இன்சுலினின் அளவு ஏறுகிறது; நமது உடலில் உள்ள திசுக்களைச் சக்தி பெறச் செய்கிறது. நமக்குத் தேவையில்லாத அதிகப்படி சக்தியானது க்ளைகோஜனாக மாறி நமது உடலில் சேமித்து வைக்கப்படுகிறது.

உடனடியாகத் தேவைப்படும் அதிகப்படி சக்தி தசைகளிலும், கல்லீரலிலும் சேமிக்கப்படுகிறது.  இன்னும் கொஞ்சம் சக்தி தேவை என்ற நிலையில், க்ளைகோஜன் சக்தியைத் தருகிறது.மற்றவை கொழுப்பாக மாறுகிறது.

இந்த ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை இன்றைய நமது சூழ்நிலையின் காரணமாகவே ஏற்படுகிறது. உணவு வகைகளில் நமது விருப்பத் தேர்வுகள், பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளிலும் கேன்களிலும் அடைக்கப்படும் உணவு வகைகள், மிகுந்த அளவில் ஏற்றப்பட்ட சர்க்கரைச் சத்துக்களுடன் கூடிய உணவு வகைகள் ஆகியவை கட்டுப்பாடற்ற சந்தையில் கிடைக்கின்றன; அவற்றை ஆவலுடன் அவ்வப்பொழுது சாப்பிடுவதோடு நொறுக்குத் தீனியாக வேறு ஏராளமானவற்றைச் சாப்பிடுகிறோம். விளவு பருமனான உடல்; அத்துடன் டயபடீஸ்-2 போன்ற வியாதிகள்!

இத்துடன் இன்றைய வாழ்க்கை முறையிலான வேகம், பரபரப்பு, மன அழுத்தம் ஆகியவற்றோடு எந்த வித உடல் இயக்கமும் இல்லாமல் டி.வி முன்னால் உட்காரும் வாழ்க்கை முறை வேறு சேர்ந்து கொள்கிறது!

இதைப் போக்கும் வழி தான் ஒபிஸிடி கோட்! உடல் பருமனை நீற்கும் வழி முறை!

டோரொண்டோவில் இண்டென்ஸிவ் டயடரி மானேஜ்மெண்ட் ( தீவிர உணவுத்திட்ட நிர்வாகம்) என்னும் சிகிச்சை நிலையத்தை நடத்தி வரும் டாக்டர் பங் தன்னிடம் சிகிச்சைக்காக வருவோரிடம் பல்லாண்டுகளாகச் சோதித்து ஒரு புதிய வழிமுறைக் கண்டுபிடித்துள்ளார்.

உடல் பருமனை அறிவியல் ரீதியாகக் குறைக்க வேண்டும் என்பது அவரது அணுகுமுறை.

இதைத் தான் ஒபிஸிடி கோடில் – உடல் பருமனைக் குறைக்கும் வழி என்ற தனது புத்தகத்தில் – அவர் தந்துள்ளார்.

சுருக்கமாக அவரது வழிமுறையைப் பார்ப்போம் ..

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

க்ரோவர் ஸாண்டர்ஸ் க்ராண்ட்ஸ் (பிறப்பு 5-11-1931 மறைவு 14-2-2002 – Grover Sanders Krantz) அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மானிடவியலர் (ஆந்த்ரோபாலஜிஸ்ட்). மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். பிக் ஃபுட் (Big Foot) எனப்படும் பிரம்மாண்டமான புராண கால வரலாற்று பற்றிய ஆராய்ச்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டதால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். அவர் அந்த மனிதனைப் பார்க்கவில்லை என்றாலும் அதைப் பார்த்ததாகக் கூறிய பலரை நேரில் சந்தித்து விவரங்களைச் சேகரித்தார்.

வாழ்நாளின் இறுதியில் எட்டு மாதங்கள் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு துன்புற்றார். தனது மரணத்திற்குப் பின்னும் தனது உடல் பயன்பட வேண்டும் என்ற தனது ஆசையை அவர் தனது நண்பரான டேவிட் ஹண்டிடம் வெளியிட்டார். “எனது உடலைத் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. எனது நாயும் உடன் இருக்க வேண்டும்” என்றார் அவர்.

அவர் இறந்தவுடன், அவர் விருப்பப்படி  அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யப்படவில்லை. அது மானிடவியல் பிரிவுள்ள டென்னஸி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து அது பதப்படுத்தப்பட்டு  மீண்டும் 2003ஆம் ஆண்டு நேஷனல் மியூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரிக்கு அனுப்பப்பட்டது. அவரது விருப்பப்படி அவரது நாய்கள் க்ளைட், இக்கி, யாஹூ ஆகிய மூன்று நாய்களும் பச்சை பெட்டியில் வைக்கப்பட்டன.

2009இல் அவரது எலும்புக்கூடு கலை நோக்குடன் அழகுற மேம்படுத்தப்பட்டது. அவரது நாயான க்ளைடின் எலும்புக்கூடும் அப்படியே செய்யப்பட்டது. இரு எலும்புக்கூடுகளும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

செத்தும் கொடுத்தார் க்ரோவர் க்ராண்ட்ஸ்!

Tags- 

 ஒபிஸிடி கோட்! (The Obesity Code)

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: