பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு கேள்விகள்! – 7 (Post no.5476)

Written by S Nagarajan

Date: 7 DECEMBER 2018


GMT Time uploaded in London –6- 27 am


Post No. 5746

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 7

ச.நாகராஜன்

நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தை நல்ல முறையில் எதிர் கொண்டான் பாண்டியன். அனைத்து ஏற்பாடுகளும் அருமை என்றனர் மக்கள்!

அவை கூடியவுடன் ஒரு பெரியவர் எழுந்தார்.

“ஐயனே! எதன் மீது பற்று கொள்ள வேண்டும்?” என்றார்.

வள்ளுவர் கண்களை மூடிக் கொண்டு ஒரு நொடி தியானித்தவர் கூறினார்:

“பற்றுக பற்றற்றான் பற்றினை பற்றுக அப்பற்றைப்

பற்று விடற்கு”

பற்றற்றவனாகிய கடவுள் மீது பற்று கொள்க; அப்பற்று இதர பற்றுகளை விடச் செய்து விடும்!

அருமையான இந்த அறிவுரையைக் கேட்ட பெரியவர் அமரவே புலவர் ஒருவர் எழுந்தார்.

“அற்புதமான கருத்துரைகளை ஆழ்ந்த தமிழ்ச் சொற்களுடன் கூறுகிறீர்கள்.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரு உண்மையைத் தருமாறு அருளிச் சொன்னீர்கள் என்றால் தமிழின் அருமையையும் நாங்கள் உணர்வோம்”!

உடனே வள்ளுவர் சிரித்தவாறே கூறினார்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு

துப்பாய தூஉம் மழை

கேள்வி கேட்ட புலவர் அர்த்தம் தெரியாமல் மயங்கவே புலவர் குழாமின் தலைவர் ஒருவர் எழுந்தார். அர்த்தத்தை விளக்க ஆரம்பித்தார்.

துப்பார் என்பது உண்பவரைக்குறிக்கும். துப்பாய எனில் உணவுப் பொருள்களை என பொருள் கொள்ளல் வேண்டும்.துப்பாக்கிஎனில் அவற்றைத் தருவதோடு துப்பார்க்கு, அதாவது அருந்துவோருக்கு தானும் ஓர் உணவாகவேஅமைவது மழை அல்லவா? அதன் சிறப்பைச் சொல்லி மாளுமா?

வள்ளுவர் தொடர்ந்தார்:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதஉம் எல்லாம் மழை.

உண்ணுவோருக்கு ஒன்றும் இல்லாமல் அவர்கள் வாழ்வைப் பெய்யாமல் கெடுக்க வல்லது மழை; அப்படி மழையின்றி உளம் நொந்தோருக்கு துணையாய் வந்து அவர்களைக் காக்க வல்லதும் அதே  மழையே.

விவரத்தைப் புரிந்து கொண்ட  மக்கள் மனம் மகிழ்ந்த போது அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது.இலேசாக சாரலாக மழை ஆரம்பித்தது.

வள்ளுவர் வாயிலாக இருமுறை மழை என்ற சொல்லைக் கேட்ட வருண தேவன் தானும் வள்ளுவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பதை மறைமுகமாகக் காட்டி அருளினான் என்று தங்களுக்குள் சொல்ல மகிழ்ந்த மக்கள் ஆஹா, ஆஹா என்று கூவி மகிழ ஒருவர் எழுந்தார்.

“வாய்மை எனப்படுவது யாது?”

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

வாய்மை எனப்படுவது யாது என்றால் மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கில்லாத சொற்களைக் கூறுவதே ஆகும்.

வள்ளுவர் தொடர்ந்து கூறினார்:

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையில் நல்ல பிற

மழை பெய்து கொண்டிருக்கும் போதே புலவர் வள்ளுவர் கூறியதை மழையைச் சுட்டிக் காட்டி விளக்கினார்.

“நீரால் புறத்தில் தூய்மை ஏற்படும். அகத் தூய்மை வாய்மையால் அமையும்.

அது மட்டுமல்ல. பிரான் முதன் முதலாக இங்கு தன்னை முன்னிலைப் படுத்தி கூறுகிறார்.

அவர் கண்டவற்றுள் எந்த ஒன்றும் கூட வாய்மையைக் காட்டிலும் சிறந்ததாக, நல்லதாக இல்லை!

பொய் பேசுதலே தவறு” என்று அந்தப் புலவர் முடித்த போது வள்ளுவர் சிரிப்பு தவழ கூறினார்:

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்

ஒரு பெரிய நன்மைக்காகவென்று பொய் சொல்ல நேர்ந்தால் அது வாய்மை என்றே கருதப்படும்.

நூறு  கேள்விகள்! – 7,

அருமை, அருமை என அனைவரும் எண்ணி மகிழ்ந்தனர்.

அப்போது புலவரின் பேச்சைக் கேளாமல் பெண்கள் பகுதியிலிருந்து சிறிது உரத்த குரலில் பேச்சுச் சப்தம் கேட்க பாண்டியன் சப்தம் வந்த திசையை நோக்கினாண்.

மூன்று அழகிய இளம் பெண்கள் தங்களுக்குள் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்ததைக் கண்ட அவன் சற்று திடுக்கிட்டான்.

பாண்டியன் நோக்கிய திசையை அனைவரும் நோக்க பெரும் நிசப்தம் நிலவியது. ஆனால் அந்தப் பெண்களோ அனைவரும் தங்களைக் கவனிப்பது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

“யாரது! அங்கே பேசிக் கொண்டிருப்பது?” பாண்டியனின் உரத்த குரலைக் கேட்டவுடன் அனைவரும் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதை அந்த மூன்று பெண்கள் உணர்ந்தனர்; திடுக்கிட்டனர்.

“இங்கே வாருங்கள்” – மன்னனின் ஆணையைக் கேட்ட அவர்கள் நடுங்கியவாறே மேடைக்குச் சென்றனர்.

“வள்ளுவப் பிரான் அற்புதமான அறிவுரைகளைத் தர அதை அனைத்து நாடுமே உன்னிப்பாகக் கேட்டுக் களிக்கிறது. ஆனால் நீங்களோ உங்களுக்குள் சளசளவென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் அது வள்ளுவப் பிரானின் கூற்றை விட மிக முக்கியமானதாகத் தான் இருக்க வேண்டும். அப்படி என்ன தான் பேசினீர்கள். அந்த முக்கியமான விஷயத்தை அனைவருமே அறிந்து கொள்ளட்டும்!”

வெடவெடவென்று இளம் மேனி நடுங்க அவர்கள் அழும் நிலைக்கு வந்து விட்டனர்.

கண்கள் கலங்கின. அவர்களின் மூவரின் சிவந்த மேனியைக் கண்டு கூட்டம் வியந்தது. இப்படி ஒரு அழகா!

பாண்டியன் மீண்டும் உரத்த குரலில் காரணத்தைக் கேட்கவே, நடுவில் நின்றிருந்த பேரழகி விளக்கலானாள்.

“மன்னரே! எங்களை மன்னித்து விடுங்கள். நான் தான் ஆரம்பித்தேன் பேச்சை.

பாண்டிமாதேவியின் சிவந்த மேனியில் மார்பிலே தவழும் முத்து மாலையின் வெண்மை அழகா அல்லது அவர்களின் பற்களின் வெண்மை அழகா என்று கூறிய நான் அவர் தம் சிவந்த மேனியில் தவழும் வெண் முத்து மாலையே உலகின் ஒப்பற்ற அழகு என்றேன். ஆனால் இதைக் கேட்ட என் தோழி – இதோ இடப்பக்கத்தில் நிற்கிறாளே இவள், இல்லை இல்லை, சேரமாதேவி தான் சிவப்பின் உச்ச கட்ட அழகைக் கொண்டவர். அவர் அணிந்திருக்கும் சேரத்துத் தந்தத்திலான ஆபரணங்களுக்கு உவமையே இல்லையே! அவரே பேரழகி என்றாள். உடனே அதை மறுத்த இவள் – இதோ என் வலப்பக்கத்தில் இருக்கிறாளே இவள், இல்லை இல்லை, சோழமாதேவி தான் ஒப்பற்ற அழகி. அவர் அணிந்திருக்கும் மரகத மாலையும், இடுப்பில் மரகதப் பரல்கள் கொண்ட ஒட்டியாணமுமே அவரது சிவப்பிற்கு ஏற்ற பச்சையாக அமைந்து என் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. மற்ற இருவரும் அழகில்லை. சோழமாதேவியே உலகின் ஒப்பற்ற பேரழகி என்றாள். இதை நான் மறுக்க, அவர்களும் மறுக்க விவாதத்தில் எங்களை மறந்து உரத்த குரலில் பேசி விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்” – இப்படி அவள் கூறியவாறே மஹாராணியை நோக்கிக் கைகூப்பி வணங்கினாள்.

பாண்டியன் அதிர்ந்து போய் குழம்பி நின்றான். இப்படி ஒரு விவாதமா! இங்கேயா!

மூன்று தேவியரும் கலீர் என்று சிரித்தனர். கூட்டத்தினரும் சிரித்தனர். வள்ளுவரும் புன்முறுவல் பூத்தார்.

பாண்டியன் இவர்களை என்ன செய்வது என்று நினைத்து பாண்டிமாதேவியைப் பார்க்க அவளோ, விவாதத்தின் உண்மையைச் சொன்ன அந்தப் பெண்ணைப் பார்த்து, “உண்மையைச் சொல்லவா! நீ தான் அழகு” என்றாள். அதைக் கைதட்டி சேரமாதேவியும் சோழமாதேவியும் ஆமோதித்தனர். “அதுமட்டுமல்ல, உன் தோழிகளும் அழகிகளே” என்று கூற மூவரும் நாணத்தால் இன்னும் சிவந்தனர். தன் கழுத்திலிருந்த முத்து மாலையை மஹாராணி அவளுக்கு அணிவிக்க மற்ற இரு தேவியரும் தங்கள் பங்கிற்கு ஒரு தந்த அணியையும், மரகத மாலையையும் முறையே மற்ற இருவருக்கும் அணிவித்தனர்.

பாண்டிமாதேவி வள்ளுவரை நோக்கினாள்.

வள்ளுவர் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கூறினார்:

அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும் என் நெஞ்சு

“அட, இவள் தெய்வப் பெண்ணோ, மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண் தானோ! என் நெஞ்சம் மயங்குகிறதே”

அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்தனர். ஒரு தலைவனின் கூற்றாக இதை வள்ளுவர் கூறியதை அவர்கள் உணர்ந்தனர்.

ராணி இன்னும் மூன்று ஆசனங்களை மேடைக்கு வரவழைத்துத் தங்கள் அருகில் அந்த மூவரையும் அமரச் சொன்னாள். அன்று கூட்டம் முடியும் வரை அங்கும் அமரும் பெருமையை அவர்கள் பெற்ற போது, “உண்மையைச் சொன்னதற்கான பரிசு” என்று சிலரும், ‘அவர்களின் அழகுக்கான பரிசு’ என்று சிலரும் ‘அவர்களது ஆகூழ் தந்த பரிசு’ என்று சிலரும் இப்படிப் பலவிதமாகக் கூறி மகிழ்ந்தனர்.

பாண்டியன் கையை உயர்த்த அமைதி நிலவியது. சபை தொடர்ந்தது.

கலகலப்பான அந்த நேரத்தில் பெண்ணின் பார்வை எப்படிப்பட்டது என்று ஒரு ரஸிகர் வேகமாகக் கேட்டு விட்டார்.

புன்முறுவல் பூத்த வள்ளுவர் கூறினார்:

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து

கூட்டத்தினர் அனைவரும் ஆஹா என்று கூறி மகிழ்ந்தனர்.

நினைக்க நினைக்கப் பல பொருள் தரும் அதைக் கூறி வியப்பை அடைந்தனர்.

எமனோ, அல்லது கண்ணோ, பெண் மானோ, அட,இந்த இளம்பெண்ணின் பார்வை இந்த மூன்றின் தன்மையையும் ஒரு சேர அல்லவா கொண்டிருக்கிறது!

ஒரு இளைஞன் எழுந்து கேட்டான்.

‘பெண்ணழகை எப்படி வர்ணிக்கலாம், ஐயனே!’

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து

மூங்கில் போன்ற தோளைக் கொண்ட இவளுக்கு தளிரே மேனி. முத்தே பல், இவள் கொண்டிருக்கும் இயற்கை மணமே மணம். வேலே மை உண்ட கண்.

வானத்து நட்சத்திரங்கள்இவளுடைய முகத்தையும் சந்திரனையும் கண்டு வேறுபாடு அறிய முடியாமல் கலங்கித் திரிகின்றன!

அட, ஏன் நட்சத்திரங்கள் படிப்படியாக நகரும் பெண்ணின் முகத்தைப் பார்த்துக் கலங்கித் திரிய வேண்டும்? சந்திரனுக்கு உள்ளது போல இவள் முகத்தில் களங்கம் இருக்கிறதா என்ன, இல்லையே!

புலவர் ஒருவர் அனைத்தையும் விளக்கி வள்ளுவப் பிரான் அறம், பொருள், இன்பம் ஆகிய விளக்கிய பான்மையை வியந்து போற்றியதோடு கடவுளில் ஆரம்பித்து காமத்தில் முடிந்தது இன்றைய தினம் என்று கூறி அவரை வணங்கக் கூட்டம் அன்று முடிந்தது.

அனைவரும் மகிழ்ச்சி பொங்க அந்த மூன்று மகளிரையும் பாராட்டினர். அவர்களால் அல்லவோ காமத்துக்கு விளக்கமாக சில உரைகளை வள்ளுவர் மூலமாகக் கேட்க முடிந்தது. கூட்டம் முடிந்தவுடன் மகளிர் பலர் அவர்களைத் தொட்டு மகிழ்ந்து பாராட்டினர்.

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

350, 12, 15, 291,298, 300, 292, 1081, 1085, 1113,1116, 1117

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: