பல்லக்குத் தூக்கியும் பல்லக்கில் ஏறியவனும்! (Post No.5778)

Written by S Nagarajan

Date: 14 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 25 am


Post No. 5778

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 8

பல்லக்குத் தூக்கியும் பல்லக்கில் ஏறியவனும்!

ச.நாகராஜன்

பொழுது புலர்ந்தது. மக்கள் வெள்ளம் திரண்டது. சபை ஆரம்பித்தது.

கூட்டத்தினருள் ஒருவர் எழுந்து கேட்டார்ர் :

எல்லா உயிர்களும் சமமா? சமம் எனில் ஏன் உலகில் இத்தனை வேற்றுமை?

வள்ளுவர் முழங்கினார்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான்

கேள்வி கேட்டவர் இதைக் கேட்டுத் தொடர்ந்தார்: “தாங்கள் எல்லா உயிர்களும் பிறப்பால் சமம் தான்; ஆனால் செய்யும் தொழில்களால் உயர்வு தாழ்வை அடையும் என்கிறீர்கள். கர்மம் தான் காரணம் எனில் அதை எப்படி அறிவது? எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்ல முடியுமா, நாங்கள் தெளிவை அடைவதற்கு? வள்ளுவர் சிரித்தவாறே கூறினார்:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

இதைத் தனியாக வேறு மெய்ப்பிக்க வேண்டுமா என்ன? இதற்கு நூல்களே தேவை இல்லை. பல்லக்குத் தூக்கிச் செல்பவனையும் அதில் அமர்ந்திருப்பவனையும் பார்த்தால் தெரியவில்லையா என்ன?

அனைவரும் எளிய இந்த விளக்கத்தினால் மகிழ்ந்தனர். அன்றாடம் காணும் பல்லக்கு மூலம் கர்ம வினை பற்றிய ரகசியத்தை அறிந்தனர்.

அறம் யாது? மகளிர் பக்கத்திலிருந்து ஒரு இனிய குரல் ஒலித்தது.

வள்ளுவர் கூறினார்:

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன் சொலினதே அறம்

முகம் விரும்பும் தன்மையைக் காட்ட வேண்டும். இனிது பார்க்க வேண்டும்.உள்ளம் கலந்த இனிய சொற்களைப் பேச வேண்டும். இது அறம்!

அப்படியானால் சொல் எப்படி இருக்க வேண்டும்?

வள்ளுவர் உடனடியாகக் கூறினார்:

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்  

சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயனிலாச் சொற்களைச் சொல்லக் கூடாது.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து 

இன்னுமொரு சொல் சொல்கின்ற சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருக்கும்படி பார்த்து ஒரு சொல்லைச் சொல்ல வேண்டும்.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல் 

ஒரு சொல்லின் திறத்தை உணர வேண்டும். பின்னர் அதைச் சொல்ல வேண்டும். அத்தகைய சொல்லைச் சொல்லும் சொல்வன்மையை விடச் சிறந்ததான அறமும் பொருளும் இல்லை.

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்

சொல்லின் தொகுதி அறிந்த தூய்மையாளர், பேசும் இடத்தில் அவையின் தன்மை அறிந்து அதற்கு ஏற்றதான சொற்களைச் சொல்ல வேண்டும்.

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்   

சொற்களின் தன்மை அறிந்து ஆராய்ந்த நன்மை உடையவர், சபையின் தன்மையை நன்கு ஆராய வேண்டும். அதற்குத் தக சொல்ல வேண்டியதை உணர்ந்து சொல்ல வேண்டும்.

வள்ளுவர் கூறக் கூற புலவர்கள் அவர் கூறியதன் பொருளை உடனுக்குடன் விரித்துரைத்தனர். சொல் பற்றிய சொற்கள் இத்தனையா!

மக்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு புலவர் எழுந்து கேட்டார்;

சொல்லுக என்று சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்; சொல்லக் கூடாதது?

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று 

சான்றோராக இருந்தாலும் சரி நயனில்லாதவற்றைச் சொல்லினும் சொல்லட்டும்; ஆனால் பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்லக் கூடாது.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க

நன்குசலச் சொல்லு வார் 

நல்ல அறிஞர்கள் கூடியுள்ள சபையில் நல்ல பொருளை மனதில் பதியும்படி சொல்லக் கூடிய திறன் உடையவர், அறிவில்லாதவரின் சபையில் மறந்தும் கூடப் பேசி விடக் கூடாது.

காதலின் தன்மை யாது? -ஒரு இளைஞன் கேட்டான். அனைவரும் வள்ளுவரை ஆவலுடன் பார்க்க அவர் கூறினார்.

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

நல்லாண்மை என்னும் புணை 

பெண்ணிடம் உள்ள நாணம், ஆணிடம் உள்ள ஆண்மை ஆகிய தோணிகளை காமம் என்னும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன என புலவர் ஒருவர் விரித்துக் கூற அனைவரும் கரை சேர்வது எப்படியாம் என்று சிரித்தவாறே கேட்டனர்.

காமம் அப்படிப்பட்ட பெரும் புனலா? இன்னொருவர் கேட்டார்.

வள்ளுவர் சிரித்தவாறே கூறினார்:

காமக் கடல் மன்னும் உண்டே அது நீந்தும்

ஏமப் புணை மன்னும் இல்  

காமம் என்பது ஒரு பெருங்கடலே தான். அதை நீந்திக் கடந்து கரை சேர்வதற்கான தோணி தான் இல்லை! அனைவரும் தீராக் காதலின் தன்மையை அறிந்து ரசித்தனர். சபையில் கலகலப்பு உண்டானது.

ஐயனே, கடலைச் சொல்லி விட்டீர்கள், காமத்திற்காக! ஊருணியும் கேணியும் எங்கு வரும்? எதற்கு உவமையாகும்?

வள்ளுவர் கூறினார்:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு  

ஊருக்கு உதவுகின்ற பெரிய உள்ளம் கொண்ட பேரறிவாளியின் செல்வமானது, ஊரார் அனைவருக்கும் உபயோகமாகும் நீர் நிறைந்த குளம் போல – ஊருணி போல ஆகும்.

ஆஹா, தேவைக்குத் தக அவரவருக்கு வேண்டியது போல எடுக்க தன்னை அர்ப்பணிக்கும் ஊருணி போல அல்லவா நல்ல உள்ளம் கொண்ட ஒருவனின் செல்வம்! அனைவரும் தமது ஊரில் உள்ள பேரறிவாளிகளுக்கு மனதால் நன்றி கூறினர்.

அடுத்து வள்ளுவர் கூறினார்:


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு 

மணலில் அமைந்துள்ள கேணியில் தோண்டத் தோண்டத் தோண்டிய அளவு நீர் ஊறும். அது போல மக்கள் தாம் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

ஆஹா, கடல், புணை, ஊருணி, கேணி ஆகிய அனைத்தையும் வைத்து எத்தனை ரகசியங்களை விளக்குகிறார் வள்ளுவர் என மக்கள் மெய் சிலிர்த்தனர்.

கூட்டத்தில் பருத்த உடலுடன் இருந்த ஒருவர் எழுந்திருக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்தார். இவருக்கு என்ன ரகசியம் அறிய வேண்டியிருக்கிறது என அனைவரும் அவரைப் பார்க்க, ‘இந்த உடம்பைப் பேணிக் காப்பது எப்படி ஐயனே! நெடுநாள் வாழ ஆசை தான்!’ என்றார்.

அனைவரும் சிரிக்க வள்ளுவர் புன்முறுவலுடன் கூறினார்:

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு 

சித்த மருத்துவர் ஒருவர் எழுந்து உண்ட உணவு செரித்த பின்னரே அடுத்த வேளை உணவை அளவு அறிந்து சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எளிய ரகசியமே உடம்பை அடைந்தோர் அதை நெடுங்காலம் பேணி வைத்திருக்க வைக்கும் வழி என்று நெடுநாள் வாழ வைக்கும் ரகசியத்தை வள்ளுவர் கூறிய படி கூறினார்.

‘இன்னும் எவற்றை அளவறிந்து செய்ய வேண்டும் ஐயனே!’

கேள்வி எழுந்தவுடன் ஐயன் பதில் கூறலானார்:

ஆற்றின் அளவறிந்து ஈக அது பொருள்

போற்றி வழங்கு நெறி  

பிறருக்கு வழங்கும் போது எவ்வளவு கொடுக்க முடியும் என்ற அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை வளமாக இருப்பது போலத் தோன்றி இல்லாமல் போய் விடும். ஆகவே அளவறிந்து கொடுக்கவும்.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்ச

மாற்றங் கொடுத்தற் பொருட்டு  

சபையிலே ஒன்றைக் கேட்கும் போது அஞ்சாமல் விடை கூறத் தக்க அளவு அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

புலவர்களின் விளக்க உரையைக் கேட்டு மக்கள் மகிழ்ந்து கொண்டிருந்த சமயம் ஒரு வயதானவர் எழுந்தார்:

ஐயனே! பயிர்த் தொழில் செய்து வாழ்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இதுவரை இல்லாத அளவு வள்ளுவர் முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது.

கரங்களைக் கூப்பினார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் 

உழுகின்ற வேளாண்மைத் தொழிலைச் செய்து வாழ்பவர்களே வாழ்கின்றவர்கள். ஏனைய அனைவரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவர்கள் தாம்!

அனைவரும் உழவுத் தொழிலின் மகிமையையும் அதற்கு வள்ளுவர் தரும் முக்கியத்துவத்தையும் அறிந்து வியந்தனர். கதிரவன் சாயும் நேரம் வரவே, பிரிய மனமின்றி அனைவரும் பிரிந்தனர்.

***

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்

972,37,93,,200,645,644,711,712,  197,719, 1134,1164, 215,396,943,477, 725,33

அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது.

Tags–பல்லக்குத் தூக்கி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: