
Written by S Nagarajan
Date: 22 DECEMBER 2018
GMT Time uploaded in London –8 -38 am
Post No. 5812
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
அறிவியல் துளிகள் அத்தியாயம் 404
(எட்டாம் ஆண்டு நாற்பதாம் கட்டுரை)
ஒபிஸிடி கோட் – 2
ச.நாகராஜன்
முதலில் ஒபிஸிடி கோட் முறையை யார் பின்பற்றலாம் என்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். கர்ப்பிணிகளும், டயபடீஸ் 2 மற்றும் நீடித்த நோயுள்ளவர்கள் இதைப் பின்பற்றுதல் கூடாது. நல்ல ஆரோக்கியமாய் இருந்து ஆனால் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் மட்டுமே இதைப் பின்பற்றலாம். குடும்ப டாக்டரைக் கலந்தாலோசித்த பின்னரே ஏனையோர் உபவாச முறையைப் பின்பற்றலாம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கப் (240 மில்லி லிட்டர்) நீர் அருந்துதல் வேண்டும்.
உபவாசத்தின் போது சோர்ந்து படுத்து விடாமல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
காப்பி குடிக்கலாம்.க்ரீன் டீ விரும்புவோர் அதையும் பருகலாம்.
பசி எடுப்பது போல இருந்தால் நீர் அருந்தலாம் அல்லது காப்பி குடிக்கலாம்.
யாரிடமும் சாப்பிடாமல் இருப்பதைச் சொல்ல வேண்டாம். உடனே அவர்கள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற உபதேசத்தை ஆரம்பித்து விடுவர்.
ஒரு மாத கால அவகாசத்திற்குப் பின்னரே பலன் தெரிய ஆரம்பிக்கும்.ஆகவே பொறுமை தேவை.
உபவாசம் இல்லாத தினங்களில் நல்ல சத்துள்ள உணவாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.
முதலில் வாரம் ஒரு முறை ஆரம்பிக்கலாம். பிறகு உடல் தகுதிக்கும் மனப் பக்குவத்திற்கும் தேவைக்கும் தக இதை வாரம் இரு முறை ஆக்கலாம்.

12-12 என்ற முறையை ஆரம்பத்தில் பின் பற்றலாம். அதாவது இரவு 7 மணிக்குச் சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் அடுத்த நாள் காலை 7 மணிக்கே காலை உணவைச் சாப்பிட வேண்டும். 12 மணி நேர உபவாசம், பின்னர் அடுத்த 12 மணி நேரத்திற்குள் உடலுக்குத் தேவையான உணவு என்பது இந்த முறை. இது எளிய முறை.
இன்னும் அதிகமாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்
16 – 8 மணி நேர உபவாசம் என்ற முறையை மேற்கொள்ள வேண்டும்.
அதாவது இரவு 8 மணிக்கு சாப்பாட்டை முடித்து விட்ட பின்னர் அடுத்த நாள் காலை உணவை விட்டு விட்டு 12 மணிக்குத் தான் உணவை ஏற்க வேண்டும். ஆக 16 -8 என்ற மணி நேரப்படி இந்த முறை அமையும்.
உடலின் இயக்கத்தினால் ஏற்படும் கலோரி இழப்பு போக உடல் பயிற்சியினால் சுமார் 5 சதவிகிதம் மட்டுமே இழப்பு ஏற்படுகிறது. 95 சதவிகிதம் உணவுத் திட்டத்தினால் மட்டுமே உடல் எடை குறையும் என்கிறார் டாக்டர் பங். ஆகவே இந்த 95 சதவிகித உணவுத்திட்டத்தின் மீது உங்கள் அக்கறையைச் செலுத்துங்கள் என்பது அவரது அறிவுரை.
ஆகவே உடலில் எடையைக் கூட்டும் இன்சுலின் பற்றியும் அதை ஊக்குவிக்கும் உணவுகளின் மீதும் நமது பார்வை பதிய வேண்டும். குறைந்த பட்ச இன்சுலினுடன் உடல் நெடு நேரம் இருந்தால் போதும். இன்சுலினால் ஏற்படும் பாதிப்பு குறையும்.
இதற்கான நல்ல வழி 16 மணி நேர உபவாசம் தான். உடலுக்கு இன்சுலின் ப்ரேக் தர வேண்டும். அது உடல் எடை கூடுவதைத் தடுக்கும்.
“எதை உண்ணுவது என்பதும் முக்கியம். பதப்படுத்தப்பட்டு கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அனைத்து உணவு வகைகளும் விலக்கப்பட வேண்டும். சர்க்கரைச் சத்து, மாவுச் சத்து பொருள்களைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி உண்பதை விட்டு விட்டு குறைந்த தடவைகளே உண்ணுதல் வேண்டும். நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்த்தல் இன்றியமையாதது. பாட்டி கால வைத்தியம் என்று இதற்குப் பெயர். ஆனால் அது தான் சிறந்த உணவுப் பழக்கம்.
உடல் மிகவும் பருமனாக இருந்தால் காலை உணவு நேரத்தை மாற்ற வேண்டும். குறைந்த அளவு உணவை காலை 8 மணிக்கு பதிலாக 12 மணிக்கு எடுத்துக் கொள்ளலாம். 12 மணி நேர உபவாசத்திற்கு பதில் 16 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் உபவாசத்தைத் தொடரலாம். இதைத் தான் இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்கிறேன்” என்கிறார் டாக்டர் பங்.
இந்தப் பழைய காலப் பழக்கத்திற்கு யாரும் இன்று மதிப்புக் கொடுப்பதில்லை. ஆனால் இன்றைய தேவை அது தான்.
தரைக்கு மேல் வளரும் செடிகளிலிருந்து கிடைக்கும் கறிகாய்கள், சோயா, பருப்பு வகைகள், ஆப்பிள், பெர்ரி போன்ற பழ வகைகள், புரோட்டீன் உள்ள அசைவ உணவு வகைகள் முதலியவற்றை நமது உணவுத் திட்டமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட புதிய வாழ்க்கை முறையை மேற்கொண்டால் உடல் பருமன் குறைந்து ஆச்சரியப்படத்தக்க விதத்தில் உங்கள் உடல் பொலிவு கூடும். ஆயுள் நீளும். ஆரோக்கியம் நிலைப்படும்.
உலக நாடுகளில் இன்று இந்தியா தான் இளைஞர்கள் அதிகமாக இருக்கக் கூடிய நாடாகத் திகழ்கிறது. சீனாவில் ஜனத்தொகை கூடுதலாக இருந்தாலும் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் காரணமாக இன்று அதிக வயதானவர்கள் அங்கு இருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் இளைஞர்களின் நாடாகத் திகழும் நம் நாட்டில் இளைஞர்கள் தொப்பை இல்லாதவர்களாக ஆரோக்கியமான உடல் அழகுடன் திகழ இன்றைய தேவை: ஒபிஸிடி கோட்.


அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
அமெரிக்க டி.வி. சீரியலான ஸ்ட்ரேஞ்ஜ் ஏஞ்சல் (Strange Angel) 2018 ஜுனில் ஆரம்பித்து மக்களைக் கவர்ந்த ஒரு சீரியல். இது ராக்கெட் விஞ்ஞானியான ஜாக் பார்ஸன்ஸின் (Jack Parsons) வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர்.
அமெரிக்கரான ஜாக் பார்ஸன்ஸ் (பிறப்பு 2-10-1904 மறைவு 17-6-1952) கலிபோர்னியாவில் உள்ள பாஸடோனாவில் வாழ்ந்து வந்தார். அவருக்கு எப்படியாவது சந்திரனுக்குச் செல்ல வேண்டுமென்று ஆசை. அது மட்டுமல்ல, இன்னும் தொலைதூரத்தில் உள்ள கிரகங்களுக்கும் செல்ல அவர் ஆசைப்பட்டார்.
தனது இல்லத்தின் பின்புறத்திலேயே அவர் ராக்கெட்டைக் கட்ட ஆரம்பித்தார். பாஸடோனாவில் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரி ஒன்றையும் அவர் ஆரம்பித்தார். ஆனால் விஞ்ஞானிகளோ இதெல்லாம் சாத்தியமான காரியம் இல்லை என்று சொல்லி வந்தனர். அது மட்டுமன்றி அல்தாஸ் க்ரோலி (Althaus Crowley) என்பவர் ஆரம்பித்த தெலேமா என்ற தத்துவம் கொண்ட அமானுஷ்யம் சம்பந்தமான (அக்கல்டிஸம்) சங்கத்தில் சேர்ந்தார்.
பகலில் ராக்கெட்டைக் கட்டுவது, இரவில் அமானுஷ்ய சக்திகள் பற்றிய ஆராய்ச்சி என்று வாழ்க்கையைத் தொடரலானார். எஃப்.பி. ஐ இவரைக் கண்காணிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் வீட்டில் இருந்த லாபரட்டரியில் திடீரென்று ஒரு வெடி விபத்து ஏற்பட்டது.
ஒரு இரசாயனக் கரைசலை அவர் கலக்க முயன்ற போது அது கீழே சிந்தவே வெடி விபத்து ஏற்பட்டதாகப் பின்னர் தெரிய வந்தது. பெரிய காயங்களுக்குள்ளான அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் விபத்தின் காரணமாக சில நிமிடங்களிலேயே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவ மனை டாக்டர்கள் அறிவித்தனர்.
தொலைக்காட்சித் தொடரில் ஜாக் பார்ஸன்ஸாக ஜாக் ரெய்னர் நடித்துக் கலக்கியுள்ளார். 37 ஆண்டுகளே வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை ஜார்ஜ் பெண்ட்லி எழுதியுள்ளார். விண்ணில் பறக்க விரும்பிய இந்த விஞ்ஞானி இளம் வயதிலேயே மண்ணில் விபத்திற்குள்ளானது மகத்தான சோகம்!
*