
Written by S Nagarajan
Date: 29 DECEMBER 2018
GMT Time uploaded in London – 9-27 am
Post No. 5849
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
திரைப்படங்கள்
லக்ஷ்மி, சீக்ரட் சூப்பர் ஸ்டார் – இரு திரைப்படங்கள்!
ச.நாகராஜன்
2017, 2018 ஆகிய ஆண்டுகளில் வெளியான இரண்டு திரைப்படங்கள் நம் கவனத்தைக் கவர்கின்றன.
ஒன்று லக்ஷ்மி(2018). இன்னொன்று சீக்ரட் சூப்பர்ஸ்டார் (2017).
ஒன்று நடனம் பற்றியது. இன்னொன்று இசை பற்றியது.
இரண்டிலும் திறமையுள்ள இரு இளம் சிறுமிகள் தங்கள் ஆசைகளை நிறைவேற விடாமல் செய்யும் ஒரு அப்பா, ஒரு அம்மா ஆகியோரையும் மீறி நல்லெண்ணம் படைத்த உதவியாளருடன் அகில இந்திய முதலிடத்தைப் பெறுகின்றனர்.
நடனம், இசை ஆகியவற்றில் போட்டி என்றாலே படம் எப்படி இருக்கும் என்பதை எளிதில் யூகித்துக் கொள்ளலாம்.
லக்ஷ்மியில் இளம் பெண்ணுக்கு உதவி புரியும் விஜய கிருஷ்ணாவாக பிரபு தேவா வந்து அசத்துகிறார். டான்ஸ் மாஸ்டருக்கே உரித்தான படம் என்பதால் அவரிடம் நடன மாயாஜாலங்களைப் பார்க்க முடிகிறது.
கதை, வசனம். டைரக்ஷன் ஏ.எல்.விஜய். 130 நிமிடங்கள் ஓடும் இந்தத் தமிழ்த் திரைப்படம் 28-8-2018 இல் திரைக்கு வந்தது.
சிறுமியின் அம்மா தன் பெண்ணின் டான்ஸ் ஆசையை ஆதரிக்கவில்லை; பெண் ஹோட்டல் உரிமையாளர் விஜய் உதவியுடன் அகில இந்தியப் போட்டிக்குச் செல்கிறாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்து ஏற்படவே அவள் காதுகள் கேட்காமல் போக, டான்ஸ் மாஸ்டரான விஜய் அவருக்கு அபிநயம் பிடித்துக் காட்ட அவள் ஆடுகிறாள்; அனைவரையும் அசத்துகிறாள்; ஜெயிக்கிறாள்.
அளவான கதா பாத்திரங்களுடன் கச்சிதமான நடன அசைவுகள் நிரம்பி இருக்க படம் கவரும் வகையில் செல்கிறது. தித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கோவை சரளா என நடிகைகள் தங்கள் பங்கிற்கு கச்சிதமாக அளவுடன் நடித்துள்ளனர்.
கதை சொல்லும் நீதி – குழந்தைகளின் திறமைக்குத் தடை போடாதீர்கள் என்பது தான்!

அடுத்த படம் சீக்ரட் சூப்பர்ஸ்டார் 2017இல் வெளியான ஒரு ஹிந்தித் திரைப்படம். அத்வைத் சந்தனால் டைரக்ட் செய்யப்பட்ட இந்தப் படத்தில் அமீர்கான், கிரன் ராவ், ஜைரா வாசிம், மெஹர் விஜ், ராஜ் அருண் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை இது தான் :
இன்சியா 15 வயதான ஒரு முஸ்லீம் பெண். இனிமையான குரல் வளமும் கிதார் வாசிப்பதில் நல்ல திறமையும் கொண்டவள். அவளது தந்தையோ ஒரு முன்கோபக்காரன். மியூசிக் பிடிக்காத ஒரு முரட்டு ஜந்து. அம்மாவின் ஆதரவு இன்சியாவிற்கு இருக்கிறது. பள்ளித் தோழனின் பாசமும் ஆதரவும் இருக்கிறது.
அம்மா தன் நெக்லஸை விற்று லேப் டாப் வாங்கித் தர பர்தா அணிந்து சீக்ரட்டாக அடையாளத்தை மறைத்துத் தன் இசைப் பயணத்தைத் துவக்குகிறாள்.
மக்கள் மெய்மறந்து அவளின் இசையைக் கேட்டு யார் இந்த சீக்ரட் சூப்பர்ஸ்டார் என வியக்கின்றனர்.
பம்பாயில் உள்ள சக்தி குமார் என்ற திறமைசாலியான மியூசிக் டைரக்டர் அவளை அழைக்க அவள் வீட்டிற்குத் தெரியாமல் பள்ளித் தோழன் உதவி செய்யத் தனியாக விமானத்தில் ஏறி பம்பாய் செல்கிறாள்; பாடுகிறாள். சக்தி குமார் மெய்மறந்து அவளது இசையில் லயிக்கிறார்.
இன்சியாவின் தந்தைக்கு ரியாத்தில் வேலை கிடைக்க விமானநிலையம் சென்ற குடும்பத்தினர், எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்று கிதாரை தந்தை தூக்கி எறிய மனம் கசந்து அவரைப் பிரிகின்றனர்.
பம்பாயில் சிறந்த பெண் பாடகி தேர்வு நடக்கிறது. அதில் வெற்றி பெற்றவர் மனமுவந்து சீக்ரட் சூப்பர்ஸ்டாரே வென்றவர் என்று கூற மறைந்திருந்த சீக்ரட் ஸ்டார் சக்திகுமாரின் (அமீர்கான்) உதவியுடன் மேடை ஏறுகிறாள்.
தன் தாய் தனக்காகப் பட்ட துன்பங்களை எண்ணி மேடையிலிருந்து ஓடி வந்து அவளைக் கட்டி அணைக்கிறாள். சுபம்!
இந்தப் படம் பல அவார்டுகளைப் பெற்ற படம். நேஷனல் சைல்ட் அவார்டை இன்சியாவாக நடித்த வாசிம் பெற்றாள். 3 பிலிம் ஃபேர் அவார்டுகளையும் இந்தப் படம் பெற்றது.
15 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 965 கோடி ரூபாய் வசூலைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதாவது 6000 மடங்கு ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்! போட்ட முதலை விட அவ்வளவு மடங்கு வசூலை அள்ளிக் குவித்த படம்!
இரு படங்களின் மையக் கருத்து ஏறத் தாழ ஒன்று போல இருப்பது போலத் தோன்றினாலும் ஒன்று நடனத்தையும் இன்னொன்று இசையையும் மையமாகக் கொண்டிருப்பதால் இரு படங்களையுமே சுவாரசியமாகப் பார்க்க முடிகிறது.
வீட்டில் நடக்கும் வன்முறை, இளம் பெண்களின் அபிலாஷைகள், துணிவுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளல் போன்ற பல கருத்துக்களைப் படங்கள் முன் வைக்கின்றன. ஐட்டம் டான்ஸ் இல்லை என்பது ஒரு ப்ளஸ் பாயிண்ட் அல்லது பலருக்கு மைனஸ் பாயிண்ட்!
நல்ல படங்களைப் பார்த்த திருப்தி ஏற்படுகிறது என்பதால் இரு படங்களையுமே பார்க்கலாம்!
***