மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்!(Post No6056)

Written by S Nagarajan


Date: 10 February 2019


GMT Time uploaded in London – 9-32 am


Post No. 6056

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் மாத இதழில் ஜனவரி  2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

எளிதான வழிகள் மூலம் மூளை ஆற்றலை மேம்படுத்துங்கள்

மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்!

ச.நாகராஜன்

மூளையைப் பற்றி அறிவியல் விஞ்ஞானிகள் ஆராய ஆராய அவர்களுக்கு வியப்பு தான் மேலோங்குகிறது. நூறு பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) இணைப்புகள் உள்ளன என்று கூறி அவை எப்படி ஒன்றுடன் ஒன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன என்பது பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த மூளை ஆற்றலை மேம்படுத்த வழிகள் உண்டா என்ற கேள்விக்கு உண்டு என்றே அறிவியல் பதிலைத் தருகிறது. சில வழிகளை இங்குக் காண்போம்: முதலாவது எளிய வழி : மூளை ஆற்றலை மேம்படுத்துவது எப்படி என்பது சம்பந்தமான ஏராளமான புத்தகங்கள் வெளியாகியுள்ளன; கட்டுரைகளும் ஆயிரக் கணக்கில் படிக்க உள்ளன. பணம் கொடுத்து வாங்க முடிந்தோர் இவற்றை வாங்கிப் படித்து முன்னேறலாம்; இல்லை என்றாலும் கவலை இல்லை; அவ்வப்பொழுது நூலகங்கள் சென்று இந்தப் புத்தகங்களைப் படிக்கலாம்; அல்லது இணையதளத்தில் உள்ள ஏராளமான வலைத் தளங்களில் பல ஆக்கபூர்வமான யோசனைகளைப் படிக்கலாம்; அவற்றைக் கடைப்பிடிக்கலாம்.

இரண்டாவது வழி: ஸ்பீட் ரீடிங். வேகமாகப் படிப்பது, குறிப்புகளை உடனுக்குடன் எடுப்பது என்ற அணுகுமுறை உங்களுக்கு இரட்டிப்பு மடங்கு அறிவைத் தரும். மூன்றாவது வழி : இது யோகா வழி. யோகம் கூறும் சுவாசப் பயிற்சியைக் கற்றுக் கொண்டால் மூளை ஆற்றல் மேம்படும். எப்படி? ஆழ்ந்து சுவாசிப்பதால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அதிகமாகிறது; அதுவே மூளைக்கு அதிக ஆக்ஸிஜனைத் தருகிறது.மூக்கினால் ஆழ்ந்து சுவாசித்தால் உங்களின் உதரவிதானம் நன்கு விரிவு படுவதை நீங்களே உணர முடியும். அதன் மூலம் அதிகமாக சுவாசக் காற்று உங்கள் நுரையீரலைச் சென்றடைவதையும் நீங்கள் அறிய முடியும். பலமுறை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதால் மனத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கம் போய் ஒரு ஓய்வு உணர்வு உங்களுக்கு ஏற்படும். இந்த அருமையான உணர்வு உங்கள் மூளையைத் திறனுடன் சிந்திக்க வைக்கும். நல்ல சிந்திக்கும் ஆற்றலே முன்னேற்றத்திற்கு வழி அல்லவா! அதைப் பெற முடியும்! அடுத்து நான்காவது வழி யோகா கூறும் தியான முறை : கண்களை மூடிக் கொண்டு உங்கள் சுவாசத்தைக் கவனிப்பது நல்ல ஒரு வழி முறை. தசைகளை இறுக்கி விட்டு அதை தளர்ச்சி அடையச் செய்வதும் ஒரு நல்ல வழிமுறை. மனம் அங்கும் இங்கும் அலை பாய்ந்தால் மீண்டும் அதை உங்கள் சுவாசத்தை நோக்கிக் கவனிக்க வையுங்கள்.கவன சக்தியும், ஒருமுகக் குவிப்பும் அதிகமாக இதுவே நல்ல வழிமுறை! ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தினமும் இதைச் செய்தால் மனம் தெளிவாகும். பல பிரச்சினைகளுக்கு அறிவார்ந்த தெளிவான முடிவுகளைக் காண முடியும்.



அடுத்து ஐந்தாவது வழி : எப்படி உட்கார்கிறோம் என்பதும் முக்கியம் தான்! உடலின் நிலை உங்களின் மூளை ஆற்றலை – சிந்திக்கும் திறனை நிர்ணயிக்கிறது. உதாரணத்திற்கு உங்களை நீங்களே ஒரு சிறிய சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். கடினமான ஒரு கணக்கை எடுத்துக் கொண்டு கூரையையும், ஜன்னலின் வழியாக வெளிப்புறங்களையும் பார்த்துக் கொண்டு, படுத்துக் கொண்டு செய்து பாருங்கள்; அந்தக் கணக்கு முடியாது; ஆனால் அதே சமயம் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கண்களைக் கூர்மையாக அதன் மீது பதித்துக் கொண்டு கணக்கை ஆரம்பியுங்கள். எளிதில் முடிந்து விடும். இப்படி உடல் நிலைப்பாடு எதிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆம், பாடி லாங்க்வேஜ் முக்கியமே! அடுத்து ஆறாவது வழி:  Phosphotidyl Serine (PS)  மீது கவனம் செலுத்துங்கள். இந்தத் துணை மருந்து கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துவதாக மருத்துவ சோதனைகளும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன். நினைவாற்றல் குறைப்பாடுகளையும் இது நீக்குகிறது. பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. ஆகவே இதைப் பயன்படுத்தலாம். அடுத்து ஏழாவது வழி: வல்லாரையைச் சிறிதளவு அன்றாடம் சாப்பிடலாம். இந்த அரிய மூலிகை மூளை ஆற்றலை மேம்படுத்துகிறது; நினைவாற்றலை அதிகரிக்க வைக்கிறது. இது எந்த ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். பிரம்மி என்று சம்ஸ்கிருதப் பெயரைக் கொண்ட இது பிரம்மி டானிக்காகவும் மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. வல்லாரை சூட்டைக் கிளப்பும். ஆகவே ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகி எப்படி எப்போது எந்த அளவில் சாப்பிடலாம் என்பதைக் கலந்து ஆலோசித்து இந்த அரிய மூலிகையைப் பயன்படுத்துங்கள். அடுத்து எட்டாவது வழி: சிந்தனை ஆற்றலை மேம்படுத்தும் நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ரூபிக் க்யூப் (Rubik’s Cube) போன்ற சில பிரச்சினை தீர்க்கும் விளையாட்டுக்களை சில வாரங்கள் பழகிப் பாருங்கள். எதையும் ஒரு புதிய அணுகுமுறையுடன் பார்க்க இந்த சிந்தனை பழக்கங்கள் வழி வகுக்கும். பழக்கத்திற்கு உள்ள அபார பலத்தின் காரணமாக நாளடைவில் பிரச்சினைகளைத் தீர்க்கும் உங்கள் அணுகுமுறையே நல்ல முறையில் மாறி விடும். அடுத்து ஒன்பதாவது வழி :டெட் டைம் அல்லது வேஸ்ட் டைம் எனப்படும்  (Dead Time and Waste time) பயன்படுத்தாத நேரம் பற்றிக் கவனியுங்கள். காரில் அல்லது பஸ்ஸில் செய்யும் போது நீங்கள் சும்மா உட்கார்ந்திருப்பீர்கள். மணிக்கணக்காக டாக்டரின் டிஸ்பென்ஸரியில், அரசு அலுவலங்களில், வங்கியில் இன்னும் இது போன்ற இதர இடங்களில் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கும் நேரங்களைக் கணக்கில் எடுங்கள். குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் 200 மணி நேரம் இப்படிச் செலவிடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் திட்டமிடுங்கள். புத்தகம் படிப்பது அல்லது புத்தகத்தை ஆடியோ டேப்பில் கேட்பது என்பதிலிருந்து நூற்றுக்கணக்கான பயனுள்ள வழிகளை நீங்களே தொகுக்கலாம்; அதைப் பயன்படுத்தலாம்.


அடுத்து பத்தாவது வழி: புதிதாக ஒரு மொழியைக் கற்பது. இது வயதாகும் போது ஏற்படும் மூளை ஆற்றல் குறைபாட்டை நீக்க வல்லது. புதிய பரிமாணங்களை அறிய இது வழி வகுக்கிறது. இது ஒரு நல்ல மூளைப் பயிற்சி. தமிழில் முகம் இல்லை என்று சம்ஸ்கிருதம் அறிந்தோர் சொன்னால் அதைச் சொல்ல உனக்கு வாய் இல்லை என்று நீங்கள் கூற முடியும். (இந்த இரு மொழிகளை அறிந்தால் தானே இப்படிச் சொல்ல முடியும்) ஆங்கிலத்தில் afraid. ஸ்பெயின் மொழியிலோ fear! அடுத்து பதினொன்றாவது வழி எழுதுவது. எதையும் எழுதிப் பார்ப்பது பல வழிகளில் உங்கள் மனதை மேம்படுத்துகிறது. எது முக்கியம் என்பதை இது புலப்படுத்துவதோடு மட்டுமின்றி மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருவதை எளிதாக்கவும் எழுதும் முறை பயன்படுகிறது. படைப்பாற்றல் திறனையும் இது ஊக்குவிக்கிறது. டயரி எழுதுவது, நல்ல பல விஷயங்களைக் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்வது, கவிதை எழுதல் அல்லது பிடித்தமான கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்தல் என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். செலவே இல்லாத எளிய இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள்; ஒரு சில மாதங்கள் சென்ற பிறகு உங்களை நீங்களே மதிப்பீடு செய்யுங்கள். எப்படி மூளைத் திறனைக் கூட்டியுள்ளீர்கள் என்பது உங்களுக்கே தெரியவரும். உங்களுடன் பழகும் இதர நண்பர், உறவினர், குடும்பத்தினர் உங்களின் ஆற்றல் திறனை வியப்பது ஒரு போனஸும் கூட!   *****

Leave a comment

2 Comments

  1. இது குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயன் தரும் விஷயங்கள் அடங்கிய கட்டுரை. இருந்தாலும் ஓரிரண்டு விஷயங்கள் குறிப்பிடவேண்டும்.

    விரைவாகப் படிப்பதை இன்று பொதுவாக சிலாகித்துச் சொல்கிறார்கள். அதிகம் படித்தோம் என்று சொல்லிக்கொள்ள இது உதவலாம்; ஆனால் ஆழ்ந்து படித்தோமா என்று நினைத்துப் பார்க்கவேண்டும். மெதுவாக/நிதானமாகப் படிப்பதால் Stress குறைந்து ஒரு மருத்துவப் பயன் பெறலாம் [ Therapeutic effect] என்று சொல்கிறார்கள். இதை நாவல்கள் படிப்பவர்களும் ஒருவாறு உணரலாம். டிக்கன்ஸ், ஹார்டி, ஜேன் ஆஸ்டென் போன்ற பழம்பெரும் ஆசிரியர்களின் படைப்புக்கள் நிதானமான, ஆழ்ந்த நடையில் அமைந்தவை. சம்பவங்களும் நிதானமாக நகரும். படிக்கும் நமக்கும் ஆர்வம் மிகுந்தாலும் பரபரப்பு குறையும்! இதை தற்கால நாவல்களில் காணமுடியாது!
    ஒரு புத்தகத்தில் கருத்துக்களுடன் மொழி நடையும்/இகக்கியத் தரமும் முக்கியமானவை. விரைந்து படித்தால் மொழி நடையைத் தவறவிடலாம்! We read a book as much for the ideas as for the expression! Hidden meanings and deeper connections are understood only when read slowly!
    சிலருக்கு விரைந்து படிக்கும் திறன் இயல்பாகவே அமைந்திருக்கிறது.
    ஆனால் செமஸ்டர் முறை வந்தபிறகு, ஆழ்ந்து படிப்பதோ, படிப்பதை வெகு நாட்கள் நினைவில் இருத்துவதோ சாத்தியமில்லாமல் போய்விட்டது! கவிதைகளை ( தற்காலக் கவிதைகளல்ல- real old grand poetry- English or Tamil) விரைந்து படித்தல் இயலாது! Current systems and practices in education have led to shortening of the span of attention.
    உரக்கப் படிப்பதும் நினைவில் வைத்துக்கொள்ள உதவும்! கற்றலிற் கேட்டலே நன்று எனச் சொல்கிறோமல்லவா! பொதுவாக கவிதைகளை நினைவில் வைத்துக்கொள்ள அவற்றை உரக்கப் படிப்பதே சிறந்த வழி. தமிழ் செய்யுட்களில் எதுகை, மோனை என பல உத்திகள். ஆங்கிலக் கவிதைகளில் Rhyme, meter என பல உத்திகள், இவற்றை உரக்கப் படித்தால்தான் அனுபவிக்க முடியும். முன்பெல்லாம் நமது ஆசிரியர்கள் தமிழ் செய்யுட்களை அவற்றுக்கான நடையில் பாடிக்காட்டுவார்கள்- படிக்க மாட்டார்கள்! அதுவே பாதி மனப்பாடமாகிவிடும்! [ இன்று தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே கவிதை என இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள்! கவிதைகள் நினைவில் நிற்பதில்லை]

    படித்ததை குறிப்பெடுத்து எழுதிவைத்துக் கொள்வது சிறந்த பழக்கம். கம்ப்யூட்டர் வந்தபிறகு எழுதும் வழக்கம் மிகவும் குறைந்துவிட்டது, நம் கையினால் எழுதுவது மூளையின் சில பகுதிகளுக்குச் சிறந்த பயிற்சி என்று இப்போது ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. நம் கையினாலேயே எழுதுவது நினைவு வைத்துக்கொள்வதற்கு முக்கிய சாதனமாகும்.

    நமது சொந்தப் புத்தகமாக இருந்தால், முக்கியமான பகுதிகளை அடிக்கோடிட்டுக் கொள்ளலாம். Highlight செயாலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் ஹைலைட் செய்வது சில காலத்தில் மங்கிவிடும்; பல காகிதங்களும் அதைத் தாங்குவதில்லை. அடிக்கோடிட்டால் எத்தனை வருஷங்களானாலும் மறையாது. (இதற்கு நல்ல பென்சில், கசியாத பால்பென் பயன்படுத்தவேண்டும்)
    நம் புத்தகத்தில் உரிய இடத்தில் பிற குறிப்புக்களை எழுதலாம். சொற்களின் பொருள்கள், references to similar ideas, cross references என அதை வளப்பம் செய்து கொள்ளலாம்.

    பொதுவாகவே எழுதுவது சிறந்த பழக்கம். படித்ததை நினைவுகூற இது அவசியப் பயிற்சி. எழுதிப் பார்ப்பதால் நமது எழுத்துத் திறமையும் கூடும். எந்த விஷயத்தைப் பற்றியும் சொந்தமாக எழுதிப் பார்ப்பது நமது படைப்பாற்றலை வளர்க்கிறது.

    இதை ஒரு கலையாக/ சமயச் சடங்குபோல் தற்காலத்தில் வளர்த்திருப்பவர் Julia Cameron. இவர் The Artist’s Way:A Spiritual Path to Higher Creativity (1992) என்ற புத்தகத்தில் இம்முறையை விளக்கி இருக்கிறார். “காலை எழுந்தவுடன் எழுதுங்கள், தோன்றியதை எழுதுங்கள்; இதற்கென தனியாக அழகிய நோட்டுப்புத்தகம் வைத்துக்கொள்ளுங்கள், தனி நேரம் ஒதுக்குங்கள், தினமும் செய்யுங்கள் ” என்று சொல்கிறார். JOURNAL writing or Journaling என்ற இந்த முறை உலகில் மில்லியன் கணக்கில் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. Creativity- படைப்புத் திறன் ஒரு தெய்வீக சக்தி, இதை வளர்த்துக்கொள்ளலாம்-வளர்த்துக்கொள்ள வேணும் இதற்கு தினமும் எழுதிப் பழகுதல் அவசியம் என்பது இவர் கூறும் முக்கிய கருத்து.

  2. Santhanam Nagarajan

     /  February 11, 2019

    super
    almost or most of these points mentioned here were followed by my father. hence we learnt these techniques from him. the computer technology wiped out many good habits including writing.
    thanks for the v good write up.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: