மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை! (Post No.6101)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 21 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 6-22 am


Post No. 6101

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா 15-2-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு ஐம்பதாம் கட்டுரை – அத்தியாயம் 414

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽நமது மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை!

ச.நாகராஜன்

கம்ப்யூட்டர் கையால் இயக்கப்படும் நிலை மாறி மூளையுடன் இணைக்கப்படும் கருவி பற்றிய அதிசயத்தை நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாளைய நமது வாழ்க்கை நமது மூளையுடன் இணைகப்பட்ட கம்ப்யூட்டர் சாதனங்களுடன் தான்!

இன்று லட்சக்கணக்கானோர் ஆப்பிள் வாட்சைக் கையில் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

அது நமது இதயத் துடிப்பைச் சரியாகச் சொல்கிறது; நாம் எடுத்து வைக்கும் ஸ்டெப்ஸ் (நடக்கும் போது எடுத்து வைக்கும் அடிகள்) மொத்தம் எத்தனை, அந்த ஸ்டெப்ஸ் எத்தனை நிமிடங்களில் எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அன்றாடம் நம் உடலிலிருந்து செலவழிக்கப்படுக் கலோரிகள் எவ்வளவு என்பதையும் தினமும் இரவில் எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் அதில் டீப் ஸ்லீப் – ஆழ்ந்த உறக்கம் எத்தனை மணி நேரம் – சாதாரண உறக்கம் எத்தனை மணி நேரம் – எத்தனை முறை நடுவில் எழுந்திருக்கிறோம், அது எத்தனை நிமிடம் என்பதையும்  சரியாகச் சொல்கிறது. இந்த ஆப்பிள் வாட்சை நமது மொபைலுடன் ‘சிங்க்’ செய்யும் போது- இணைக்கும் போது -மொபைலில் அனைத்து விவரங்களையும் பார்க்க முடிகிறது!

லட்சக் கணக்கானோர் இன்று அன்றாடம் பார்த்துப் பயனடையும் நடைமுறை என்றாகி விட்டது, இது!

அடுத்து என்ன? பி.சி.ஐ – ப்ரெய்ன் கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ் (Brain Computer Interface)- சாதனங்கள் மனித உடலின் நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்படப் போவது தான்! இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் இந்தச் சொற்றொடரில் உள்ள கம்ப்யூட்டருக்கும் உடலுக்கும் தொடர்பு கிடையாது; அதோடு இந்த சாதனம் நேரடியாக மூளையுடன் இணைக்கப்படப்போவதும் இல்லை. ஆனால் பெயர் மட்டும் பி.சி.ஐ!

      நமது நரம்பு மண்டலம் இதர உடல் பகுதிகளால் வெளி உலகுடன் இணைக்கப்படுகிறது.நமது ஆணையின் படி தசைகள் சுருங்குகின்றன, விரிகின்றன, இயங்குகின்றன. உடல் அங்கங்கள் வெளியில் செய்யப்படவிருக்கும் வேலைகளை நாம் சொன்னபடி செய்கின்றன.

கண்கள் பார்க்கின்றன; காதுகள் கேட்கின்றன; உடல் இயங்குகிறது. வெளி உலகத்திலிருந்து வரும் சிக்னல்களைப் பெற்று அதற்கேற்ப உடல் இயங்குகிறது. எதிர்த்தாற்போல் கார் வருகிறது,ஒதுங்கிப் போ உள்ளிட்ட குறைந்த பட்சம் நாற்பது உயிர் காக்கும் முடிவுகளை சிறிது தூரம் செல்வதற்குள் நாம் எடுக்கிறோம் – நாம் அறியாமலேயே!

வெளி உலகத்திலிருந்து செய்திகளை அல்லது விசைகளை இன்னொரு விதமாகவும் அறிகிறோம். எடுத்துக்காட்டாக ரொபாட் மூலம் என்று சொல்லலாம். எளிய உதாரணம் தெர்மாமீட்டர். வெளி உலக உஷ்ணநிலையைச் சொல்கிறது. உடல் உஷ்ணத்தையும் தெரிவிக்கிறது!

    ஆக நரம்பு மண்டலத்திலிருந்து எப்படி தகவல்களைப் பெறலாம் அந்தத் தகவல்களை வைத்து என்ன செய்யலாம் என்பதை அறிந்து விட்டால் இனி நமக்கு உடலே தேவை இல்லை!

இந்த விஷயம், நமது அன்றாட வாழ்க்கையில் என்னென்ன ஜாலங்கள் செய்யப் போகிறது?

அது தான் சுவையான செய்தி!!

நமது உடலில் காயத்தாலோ அல்லது வியாதியினாலோ ஒரு அங்கம் பழுதுபட்டு விட்டது, இயங்க மாட்டேன் என்கிறது. கவலையை விட்டு விடலாம், இருக்கவே இருக்கிறது பி.சி.ஐ.

முதுகு தண்டுவடத்தில் ஒரு பிரச்சினை. அதனால் உணர்வே இல்லாமல் போய் விடுகிறது. உடலை இயக்கவே முடியவில்லை. என்ன செய்வது?

விபத்து ஒன்றில் மூளையில் காயம். உடலால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பக்கவாதம் வந்து விட்டது; டயபடீஸ் விபரீதம்- காலை துண்டிக்க வேண்டுமென்கிறார் டாக்டர்.

ஜுரத்திலிருந்து கான்சர் வரை, அதிக ஓசையினால் காது கேட்கவில்லை என்பதிலிருந்து நகர முடியவில்லை என்பது வரை ஒவ்வொருவருக்கும் ஒரு மெடிகல் பிரச்சினை!

பி.சி.ஐ.கருவிகள் உடலுடன் இணைக்கப்பட்டால் பார்வை தெரியும்; உடல் அங்கங்கள் இயங்கும்.உடல் இயக்கம் ‘லாக்’ செய்யப்பட்டவர்கள் மற்றவர்களுடன் இப்போது தொடர்பு கொள்ள முடியாது தவிப்பது போலல்லாமல் தான் சொல்ல வேண்டியதை மற்றவர்களிடம் சொல்லலாம்; தேவையானதைப் பெறலாம்.

         இந்த பி.சி.ஐ.சாதனங்கள் இப்போது உடலில் பதிக்கப்படுகின்றன (Implant).ஆனால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியால் இதை உடம்புடன் தொட்டால் போதும் (இப்போது ஆப்பிள் வாட்சை கையில் கட்டிக் கொள்வது போல) என்ற நிலையும் வந்து விடும்.

அப்போது உடல் குறைகளை இயல்பாக உடையவர்களும் திடீரென ஏற்பட்ட விபத்துக்களினால் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டோரும் ஒருவித கஷ்டமும் இன்றித் தங்கள் வாழ்க்கையை எப்போதும் போலத் தொடர முடியும்.

        இரண்டு விஷயங்கள் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, இப்படிப்பட்ட சாதனங்களின் அதீத விலை! இன்னொன்று நிச்சயமாக இவை இயற்கையான உடல் உறுப்புகள் போல அச்சு அசலாக இருக்காது.

ஆனாலும் என்ன, பெரிய பாதிப்பிற்கு சரியான நிவாரணமாக இது அமைகிறதே!

ஆக எதிர்கால உலகில் ஆளுக்கு ஒரு பி.சி.ஐ இணைப்புடன் இருப்போமோ, என்னவோ!

நமது உடலின் நரம்பு மண்டலத்திற்கும் வெளி உலகத்திற்கும் தொடர்பைத் தரும் பி.சி.ஐ – மூளை கணினி தொடர்பு சாதனத்தை வரவேற்கத் தயாராக இருப்போம்.

மாறிக் கொண்டே இருக்கும் உலகில் மாறாதது மாற்றம் ஒன்று தான்! மாற்றத்தை வரவேற்போம்!

அறிவியல் அறிவில் வாழ்வில் .. ..

உலகின் பிரபலமான மூளை இயல் கேஸ் இது:

1935ஆம் ஆண்டு, குஸ்டாவ் மொலைஸன் (Henry Gustav Molaison) என்னும் பையன் ஒரு நாள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது ஒரு சைக்கிள் மோதி விழுந்து விட்டான். ஐந்து நிமிடம்  உணர்ச்சியற்று இருந்தான். அவனுக்கு பத்து வயதான போது வலிப்பு வர ஆரம்பித்தது. இது தொடரவே 1953ஆம் ஆண்டில் அவனது 27ஆம் வயதில் மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் நிச்சயித்தார்.

மூளை அறுவையைச் செய்தவர் பிரபல டாக்டர் வில்லியம் பீச்சர் ஸ்காவில்லி Dr.William Beecher Scoville).

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. வலிப்பும் நின்றது.ஆனால் மொலைஸனுக்கு புதிய பிரச்சினை ஒன்று வந்தது. பேசிக்கொண்டே இருக்கும் போது புதிய விஷயம் பற்றிப் பேசினால் அதுவரை பேசி வந்த விஷயம் மொலைஸனுக்கு மறந்து போனது.

அவருக்கு பழைய விஷயங்கள் ஞாபகத்தில் இருந்தாலும் புதிய விஷயம் எதுவும் மூளையில் ஏறவில்லை; நிற்கவில்லை.

2008ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அவர் இறந்தார். அவரது மூளை எடுக்கப்பட்டு  2401 துண்டுகளாக ஆக்கப்பட்டு அந்தத் துண்டுகளை முப்பரிமாணப் படங்களாக எடுத்தனர்;ஆராய்ந்தனர்.

அதிலிருந்து ஒரு பெரிய விஷயத்தை விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர். மூளை இரண்டு விதமான நினைவுகளைக் கொண்டுள்ளது என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒன்று பெயர்கள், தேதிகள் பற்றியது. இன்னொன்று  சைக்கிளை ஓட்டிக் கொண்டே போவது போன்ற தானியங்கிச் செயல்கள்!    

       அடுத்து  செரிப்ரல் கார்டெக்ஸ் எனப்படும் மூளை மேலுறையின் பாகங்கள் எல்லா நினைவுகளையும் சமமாகப் பாதுகாக்கிறது என்ற விஞ்ஞானிகளின் இதுவரை கொண்டிருந்த எண்ணம் தவறு என்பது தெரிய வந்தது.

     மொலைஸனின் மூளைத் துண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில், உடனடியாக அப்போது தான் தெரிய வரும் ஒரு விஷயத்தைப் பற்றிய நினைவுக்குக் காரணம்  ஹிப்போகாம்பஸும் (மூளைப் பின்மேடு), அமிக்தலாவும் (அச்சம் மகிழ்ச்சி ஆகியவற்றை உணர்த்தும் வாதுமை வடிவ மூளைப் பகுதி) தான் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதைத் தெரிந்து கொண்டதிலிருந்து இப்போது மூளையின் ஒரு பக்கத்தில் மட்டுமே அறுவை சிகிச்சையை மூளை இயல் டாக்டர்கள் மேற்கொள்கின்றனர்.

     மொலைஸனுக்கு மூளையின் இரண்டு பக்கமும் நடந்த அறுவையினால் பாவம், அவரால் புது விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அவரது மூளை பற்றிய ஆய்வு உலகில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது!

கெட்டதிலும் ஒரு நல்லது விளைந்தது!

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: