
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 6 April 2019
British Summer Time uploaded in London – 8-13 am
Post No. 6230
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 3-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஆயுளில் பத்து ஆண்டுகளை இழக்கிறோம்!
ச.நாகராஜன்
சமீபத்தில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் எனர்ஜி பாலிஸி இன்ஸ்டிடியூட்டில் (Energy Policy Institute) மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஒரு மனிதன் தனது ஆயுளில் பத்து ஆண்டுகளை இழக்கிறான் என்பதைத் தெரிவிக்கிறது.
சுற்றுப்புறச் சூழல் மாசினால் ஏற்படும் இந்த அபாயம் சீனா மற்றும் இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை உள்ள நாடுகளில் அதிகமாக இருக்கிறது.
இந்தக் காற்று மாசுபாட்டினால் உலகில் ஏற்படும் ஆயுள் இழப்பில் 73 விழுக்காடு சீனாவிலும் இந்தியாவிலும் ஏற்படுவதாக சிகாகோ அறிக்கை தெரிவிக்கிறது.
உலகில் உள்ள அனைத்து நிபுணர்களும் புகைபிடிப்பதனால் ஏற்படும் தீங்கை விட சுற்றுப்புறச் சூழல் மாசானது இன்னும் பெரிய ஆட்கொல்லி என ஏகமனதாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் ஏற்படும் மாசானது ஒரு சிறிய மணல் துகளை விட இன்னும் சிறியதாக இருப்பதால் இயற்கையாக உடலில் உள்ள தற்காப்பு அமைப்பையும் தாண்டி நுரையீரலுக்குள் நுழைவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நுரையீரலிலிருந்து சிறு துகள்கள் இரத்த ஓட்டத்தில் கலப்பது எளிதாகிறது.
இதன் விளைவாக நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கான்ஸர், மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்பட்டு அல்லலுக்கு ஆளாக நேரிடுகிறது.
இத்துடன் மட்டுமன்றி மூளைச் செயல்பாட்டுத் திறனும் குறைவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தேவையற்ற குப்பைகளை சாலையின் நடுவில் போட்டு எரிப்பதை ஆங்காங்கே கண்கூடாகப் பார்க்கிறோம். மனதை வேதனைப்படுத்தும் ஒரு செயல் இது. இதனால் வளிமண்டலம் அசுத்தமாகி காற்றும் அசுத்தமாகி ஏராளமானோரின் நுரையீரல்களைப் பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
இங்கிலாந்தின் மன்னரான முதலாம் எட்வர்ட் தனது ராஜ்யத்தில் பொது இடங்களில் கரியை எரியவிடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அறிவித்தார். சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவோருக்கு சமீப காலத்தில் கடுமையான தண்டனையை அறிவித்த முதல் அரசர் இவர் தான்! அரசு இயற்றும் தண்டனைகளைச் சுயக்கட்டுப்பாட்டின் மூலமாகத் தவிர்ப்போம்.
சுத்தமான காற்றைச் சுவாசிப்போம்; அதற்காக காற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அனைத்து வழிமுறைகளையும் கையாளுவோம்.
தனிமனிதனின் ஒழுக்கமே நாட்டின் ஒழுக்கமாக மிளிரும்.
ஆகவே சுற்றுப்புறச் சூழலை தனி நபர் என்றை முறையில் காப்போம்; நாட்டையும் உலகத்தையும் காப்போம்!
***
